ஒரு சமூகத்தில் உதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது அந்தச் சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. உதிரிகள் என்பவர்கள் கூட்டு வாழ்க்கையைவிட்டு ஒதுங்கி வாழ்பவர்கள்; சமூகத்தின் எந்த விதியையும் மதிக்காதவர்கள்; மீறலை விரும்பக்கூடியவர்கள்; அது தங்களின் உரிமை என்று கருதக்கூடியவர்கள்; தங்களின் மன விருப்பங்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள்.
இந்த உதிரிகளிடம் தனித்து வாழ்வதற்குத் தூண்டு கோலாக இருப்பது அவர்களிடம் காணப்படும் கூர்மையான கர்வம்தான். அதுதான் அவர்களை சமூகத்துடன் ஒட்ட விடாமல் தடுக்கிறது. அவ்வாறு தனியாக இருப்பதை கொண்டாட்டமாக கருதச் செய்கிறது. தாங்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருப்பதுபோன்று அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். தங்களின் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட தங்களைப் போன்ற ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்குமாறு மற்றவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அழைப்பும் விடுக்கிறார்கள்.
இந்த உதிரிகள் ஆரம்பத்தில் உற்சாகமாக இருப்பதுபோன்று காட்டிக் கொண்டாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஓய்ந்து விடுகிறார்கள்; நிராசை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடுகிறார்கள். அவர்களுடைய கர்வத்தின் இடத்தில் தன்னிரக்கம் வந்து அமர்ந்து கொள்கிறது. தாங்கள் ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக, சமூகம் தங்களை கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். அவர்களின் சொற்களிலும் செயல்களிலும் கழிவிரக்கத்தின் அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வாழ்வின் அர்த்தமின்மை அவர்களை வாட்டி வதைக்கிறது. வாழ்வு சித்ரவதையாக மாறி விடுகிறது.
உதிரிகள் சமூகத்திற்கும் பயனற்றவர்களாக ஆகிவிடுவார்கள். மாறாக சில சமயங்களில் சமூகத்திற்கு ஆபத்தானவர்களாகக்கூட ஆகிவிடுவார்கள். ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வது எந்தச் சமயத்திலும் கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. சிலரிடம் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். அவர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். ஒரு ஆணோ பெண்ணோ மணமுடித்து தங்களுக்கென குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குடும்பங்களைக் கொண்டே சமூகம் வலுவடைகிறது, பாதுகாப்படைகிறது. அதனால்தான் இஸ்லாம் உங்களில் திருமணமாகாதவர்களுக்கு மணமுடித்து வையுங்கள் என்று சமூகத்திற்கு கட்டளையிடுகிறது
