பக்குவம்

You are currently viewing பக்குவம்

சட்டென மனதின் திரை அகன்று விட்டால் மனதில் உள்ள அனைத்தும் அப்படியே கொட்டத் தொடங்கி விட்டால் என்னாவாகும்? யாரும் யாருடனும் நட்பிலும் உறவிலும் இருக்க முடியாது. மனிதர்கள் இணைந்திருக்க முடியாது. மனித அகத்தில் கொந்தளிக்கும் உணர்வுகள் அப்படியே வெளிப்படத் தொடங்கி விடும். மனதின் ஒவ்வொன்றையும் வடிகட்டி அவசியமானதை மட்டும் வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றிருப்பதனால்தான் மனிதர்கள் பிற மனிதர்களுடன் இணைந்திருக்க முடிகிறது, சுமூகமான உறவைப் பேண முடிகிறது. அதுதான் அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

மனிதர்கள் பெற்றிருக்கும் பக்குவத்தின் அடிப்படையில் வேறுபடுகிறார்கள். சிலருக்கு அதன் அளவு குறைவாக இருக்கும். சிலர் அதற்குரிய கச்சிதமான அளவைப் பெற்றிருப்பார்கள். கச்சிதமான அளவு என்று நான் கூறுவது எதை எப்படி எந்தச் சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற தன்மையைப் பெற்றிருப்பதை. சிலருடைய வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தலாம். சிலருடைய வார்த்தைகள் உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். சிலருடைய வார்த்தைகள் உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கலாம். வார்த்தைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளே. அவற்றின் வழியாக விருப்பும் வெறுப்பும் இன்னபிற உணர்வுகளும் கடத்தப்படுகின்றன.

மனிதர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள் என்று பொதுவாகச் சொல்லலாம். அவர்களிலும் குறிப்பாக பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்கள் இந்த விசயத்தில் குறைவான அளவைக் கொண்டவர்கள். பெண்ணின் இந்த தன்மையினால் அவள் ஒரு ஆணைவிட அதிகம் ஏமாற வாய்ப்பிருக்கிறது. இது சில இடங்களில் அவளுக்குப் பெரும் நன்மையைப் பெற்றுத் தரக்கூடியதாகவும் சில இடங்களில் தீங்கினைத் தரக்கூடியதாகவும் ஆகிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய களம் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் உரிய பணிகள் இருக்கின்றன. ஒருவர் இடத்தை மற்றவர் நிரப்ப முடியாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply