ஒரு மனிதனுடன் தனியாக விவாதிப்பது வேறு. ஒரு சபையில் மக்களுக்கு முன்னிலையில் அவனுடன் விவாதிப்பது வேறு. ஒரு மனிதனுக்கு தனியாக அறிவுரை கூறுவது வேறு. மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவனுக்கு அறிவுரை கூறுவது வேறு. தனியாக விவாதிக்கும்போது அவனுக்கு பெரிய அளவில் நிர்ப்பந்தம் இருப்பதில்லை. அவனுடைய ஈகோ கூர்மையாகவும் இருப்பதில்லை. அவன் உண்மையை உண்மை என உணர்ந்தால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு அவனுக்கு முன்னால் எந்த தடையும் இருப்பதில்லை.
மக்களுக்கு முன்னிலையில் நாம் அவனுடன் விவாதிக்கும்போது அவன் தன் கருத்தை வலுப்படுத்தும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகிறான். அந்த கருத்தோடு அவனுடைய தன்மானமும் ஈகோவும் இணைந்து கொள்கின்றன. ஆகவே தன் கருத்தை வலுப்படுத்தும் வலுவான தர்க்கங்களை அவன் தேடுகிறான். முடியாத பட்சத்தில் அவனிடம் வாதம் புரிபவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்தி அவர்களை மட்டம் தட்டி விடலாம் என்று கருதுகிறான். ஆகவே சத்தியத்தை அறிதல் என்ற நிலையிலிருந்து விடுபட்ட தர்க்கப்போர் என்ற நிலையை அது அடைந்து விடுகிறது.
விவகாரம் விவாதம் என்ற நிலையை அடைந்து விட்டால் தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசுவதே சிறந்தது. ஆனால் விவகாரம் பொதுமக்களுக்கு மத்தியில் பரவிவிட்டால் அழகிய முறையில் ஆதாரங்களை எடுத்து வைக்கலாம். அவ்வாறு எடுத்து வைப்பதன்மூலம் பொதுமக்கள் அந்த விவகாரத்தின்மூலம் பாதிப்படைவதிலிருந்து தடுக்கலாம்.
விவாதம் உங்களுக்குள் கோபத்தை, காழ்ப்பை, வெறுப்பை, பொறாமையை ஏற்படுத்துகிறது எனில் நீங்கள் உடனடியாக அந்த விவாதத்தை விட்டு விடுவதே சிறப்பு. அது உங்களை வேறு திசையின் பக்கம் கொண்டு சென்று விடும். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். விவாதத்தின் நோக்கம் சத்தியத்தை தெளிவுபடுத்துவதாகவே இருக்க வேண்டும். எதிர்த்தரப்பினரை வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருக்கக்கூடாது.
