“படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”
நம்பிக்கையாளனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் இயல்பான வாசகம் இது. அவன் மீண்டும் மீண்டும் இந்த வாசகத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். நன்றியுணர்ச்சி அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்த தனக்கு அல்லாஹ்தான் இருப்பும் இங்கு வாழ்வதற்கான வசதிகள் அனைத்தும் அளித்தான் என்பதை அவனை மீண்டும் மீண்டும் நினைவுறுகிறான்.
அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லும்போது அது உயிரற்ற வெற்று வார்த்தையாக இருக்காது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவனிடமிருந்து வெளிப்படும் இந்த வார்த்தை அவனுடைய உணர்வின், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.
எத்தனை வகையான உயிரினங்கள் இருக்கின்றன இங்கு! எத்தனை வகையான படைப்பினங்கள் இருக்கின்றன இங்கு! அவனுக்கும் படைப்புகள் ஒவ்வொன்றுக்குமான தொடர்பு அறுபடாமல் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவொரு நொடியிலும் அது அறுந்து விடுவதில்லை.
அவன் படைப்புகளைப் படைத்து அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொன்றும் அவனிடமிருந்தே தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொண்டிருக்கிறது. அவனுடைய அனுமதி இன்றி இங்கு எந்தவொன்றும் நிகழ்ந்துவிட முடியாது. அவனிடம் தேவையற்று இங்கு யாரும் இருந்துவிட முடியாது. அவனிடமிருந்து ஒதுங்கி இங்கு யாரும் வாழ்ந்துவிட முடியாது. அவன் தேவைகள் அற்றவன். அனைவரும் அவனிடம் தேவையுடையவர்களே. அவனே அவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான்.
நன்றிகெட்டத்தனம் எவ்வளவு பெரிய குற்றம்? அத்தனையையும் அனுபவித்துக் கொண்டு மனிதன் படைப்பாளனை மறந்து வாழ்வது எவ்வளவு பெரிய குற்றம்? அத்தனையையும் கொடுத்த அருட்கொடையாளனை விட்டுவிட்டு போலியான தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை வணங்குவது எவ்வளவு பெரிய குற்றம்? இதனால் படைப்பாளனின் மகத்துவம் எந்த வகையிலும் குறைந்து விடுவதில்லை. அவ்வாறு செய்வதன்மூலம் மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
நன்றியுணர்ச்சியே மகிழ்ச்சியின் திறவுகோல். நன்றியுணர்ச்சியே நிம்மதியின் ஊற்று. நன்றிணர்ச்சியிலிருந்தே வணக்க வழிபாடுகள் உருவாகின்றன. அதன்மூலமே வணக்க வழிபாடுகள் உயிரோட்டம் அடைகின்றன. அதன்மூலமே அருட்கொடையாளனை நாம் நெருங்கிச் செல்கின்றோம். அதன்மூலமே நாம் உயர்வடைகிறோம்.
