ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கு ஒருவர் மற்றவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருப்பதும் மிகவும் அவசியம். அந்த விசுவாசமே குடும்ப வாழ்வுக்கான அடித்தளம். அப்படியில்லாத பட்சத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்கவில்லையெனில் வேறு ஏதேனும் நிர்ப்பந்தம் இல்லையெனில் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். கள்ளக்காதலும் முறையற்ற உறவுகளும் குடும்ப வாழ்வின் அடித்தளத்தை தகர்க்கக்கூடியவை. மனிதர்கள் தங்களின் தவறுகளை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. ஏதேனும் ஓரிடத்தில் அவர்கள் வெளிப்பட்டுவிடுவார்கள். சிலர் தாங்களாகவே முன்வந்து எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடுவார்கள். சில இரகசியங்கள் சுமைதரக்கூடியவை. அவற்றை நீண்ட நாட்கள் சுமந்து கொண்டிருக்க முடியாது. சுமைதாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் மனிதன் எல்லாவற்றையும் கொட்டி விடுகிறான். கொட்டிவிட்ட பிறகே அவன் ஒருவகையான நிம்மதியை உணர்கிறான். குற்றவுணர்ச்சியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. குற்றவாளிகள் பல சமயங்களில் தாங்களாகவே அகப்பட்டு விடுகிறார்கள். அப்படி அகப்பட்டு விடுவதுதான் அவர்களுக்கான விடுதலையே. புற வாழ்வில் சிறைப்படுவதைவிட அந்தரங்க வாழ்வில் சிறைப்படுவது கொடியது.
துரோகத்தை மனிதர்களால் சகித்துக்கொள்ள முடியாது. அது அவர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். அது காழ்ப்புகளை சேகரித்துக் கொண்டே செல்லும். பழிவாங்குவதற்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய துரோகம் ஒட்டுமொத்த நன்மைகளையும் மறக்கடித்துவிடும் அளவுக்குக் கொடியது. மனிதர்கள் அதனை ஒருதுளி விஷமாகவே கருதுவார்கள்.
நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிடும்போது நாம் மனதளவில் பாதிக்கப்படுகிறோம். அது ஆயிரம் கேள்விகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. நிகழ சாத்தியமேயில்லாத ஒன்று நிகழ்ந்ததுபோன்று நாம் அதிர்ச்சிக்குள்ளாகிவிடுகிறோம். நம் மீது வைக்கப்படும் நம்பிக்கையும் மற்றவர்களிடத்தில் அதே அதிர்வுகளைத்தான் உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். இங்கு எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நாம் செய்த ஒரு செயல் ஏதோ ஒரு வடிவில் நமக்கும் செய்யப்பட்டுவிடுவது ஆச்சரியமான ஒன்றுதான்.
