அந்த ஒரு மணி நேரம் அந்த இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நேரமாக அமையும் என்று அவர்கள் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், அது அந்த இருவரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒருவர் கண நேரத்தில் தம்மைக் காத்துக் கொண்டார். இன்னொருவர் அந்த பெரும் துன்பத்தில் அகப்பட்டுக் கொண்டார்.
தப்பியவரிடம் அந்த பதற்ற நிலை இன்னும் மாறவில்லை. அந்த ஒரு மணி நேரம் மீண்டும் மீண்டும் அவருக்கு முன்னால் தோன்றி அவரை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. உடனடியாக அவர் அங்கிருந்து கிளம்பிச் செல்ல வேண்டும் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஏனெனில் அதற்குப் பின் என்ன நிகழும் என்று எதையும் அவரால் கணிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் செய்த புண்ணியம், அது அவருக்குப் பயனளிக்கவே செய்தது. அதன்மூலம் அவர் சிறு துன்பத்தில் மாட்டிக் கொண்டாலும் அந்த பெரும் துன்பத்திலிருந்து அவர் தப்பி விட்டார். மீண்டும் மீண்டும் அந்த பெரும் துன்பம் அவரது வாசலுக்கு முன்னால் வந்து நின்று, ஏன் என்னை விட்டு தப்பிச் சென்றாய் என்று கேட்பதுபோல அவருக்கு இருந்தது. நீங்கள் செய்த நற்செயல்கள் உங்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்றேன்.
பெரும் துன்பத்தால் அடிக்கப்பட்டவரின் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிப்போனது. செல்வந்தராக இருந்தவர் கொடிய வறுமைக்கு ஆளானதோடு மட்டுமில்லாமல் பல்வேறு வகையான சிக்கல்களும் அவரை சூழ்ந்து கொண்டன. ஒன்றிலிருந்து விடுபட்டால் இன்னொன்று. பட்ட காலிலேயே படும் என்பார்கள். எங்கிருந்தோ சாபம் வந்து ஒட்டிக் கொண்டதுபோல அவர் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கை நிராசைகளால் சூழ்ந்தது. ஆச்சரியமான முறையில் அல்லாஹ் அளிக்கும் விடுதலையே அவருக்கான ஒரே அடைக்கலம்.
ஒரு மனிதரின் வாழ்க்கையில் உருவாகும் சில எதிர்பாராத ஆச்சரியமான திருப்புமுனைகள் அவர் கனவிலும் கண்டிராத வேறொரு உலகை நோக்கி அவரைக் கொண்டு செல்லலாம். இன்னொரு மனிதரின் வாழ்க்கையில் உருவாகும் அதிர்ச்சியான சில திருப்புமுனைகள் மீள முடியாத சூன்ய வெளிக்கு அவரைக் கொண்டு செல்லலாம். யாரும் எந்தவொன்றிலும் நிரந்தரமாக நீடிக்க முடியாது. ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் இங்கு செயல்படும் நிரந்தரமான விதிகளில் உள்ளவைதாம்.

இது நிரந்தரமானவன் வகுத்த விதி.