“அல்லாஹ்வே! கவலை, துக்கம், இயலாமை, சோம்பேறித்தனம், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மனிதர்களின் ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (புகாரீ)
இதுவும் நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளில் ஒன்றுதான். இந்த பிரார்த்தனையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் கவனிக்கத்தக்கவை. இவை மனித வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை; மனிதனைச் செயல்பட விடாமல் தடுப்பவை; மனதளவிலும் உடலளவிலும் அவனுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது இவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகள் போன்று தெரிகின்றன. நம்முடைய மனம் இந்தப் பண்புகளிலிருந்து விடுபடவே விரும்புகிறது.
எதிர்காலம் முழுக்க முழுக்க மறைவானது. அதனைக் குறித்து எதுவும் நாம் அறிய மாட்டோம். எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஏதேனும் ஒன்றைக் குறித்து கவலைகொள்வதாலும் கடந்த காலத்தில் நிகழ்ந்த ஏதேனும் ஒன்றை எண்ணி வருந்துவதாலும் இழப்பைத் தவிர நமக்கு வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை. இந்தக் கவலைகள் நம்மை பலவீனப்படுத்தவே செய்யும். இந்தப் பிரார்த்தனையில் இந்தக் கவலைகள் நமக்கு அடையாளம் காட்டப்பட்டு அவற்றிலிருந்து விடுபட வேண்டிய அவசியம் உணர்த்தப்படுகிறது.
மனதின் ஒரு பகுதியில் செயல்பட வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகிறது. இன்னொரு பகுதியில் அதற்கு எதிரான விசயமும் காணப்படுகிறது. சோம்பேறித்தனமும் கஞ்சத்தனமும் கோழைத்தனமும் அதற்குப் பெரும் தடைகளாக அமைந்து விடுகின்றன. இவை தற்காலிகமான பண்புகள்தாம். மனிதனால் அவற்றை மிகைக்க முடியும். தன் பலவீனங்களை உணரும், அவற்றிலிருந்து விடுபட விரும்பும் மனிதன் அதற்கான வழிகளையும் கண்டுகொள்வான்.
கடன் சுமை மனதை அரித்துக் கொண்டேயிருக்கும் விசயம். அது ஏதோ ஒரு வகையில் நிம்மதிக்குத் தடையாக, ஒரு பாரமாக மனதில் அமர்ந்து கொண்டிருக்கும். கடன் சுமைக்கும் மனிதர்களின் ஆதிக்கத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோன்று தெரிகிறது. மற்ற மனிதர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவதில்லை. பல சமயங்களில் நிர்ப்பந்தம் காரணமாக அதனை நாம் சகித்துக் கொண்டாலும் உள்ளத்தில் வெறுப்பையும் காழ்ப்பையும் பொறாமையையும் சேகரித்துக் கொண்டுதான் செல்வோம். தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு வகையில் அவற்றை நாம் வெளிப்படுத்தியே தீருவோம். அவை நமக்கோ மற்றவர்களுக்கோ தீங்குதரக்கூடியவையாய் அமைந்துவிடலாம்.
