காதல் வயப்படுவது…

You are currently viewing காதல் வயப்படுவது…

மனிதர்கள் காதல்வயப்படுவது எதிர்பாராத, அற்புதமான ஒரு நிகழ்வுதான். தான் அனுபவிக்கும் ஆரம்பகட்ட இனிமையை மனிதன் மீண்டும் அனுபவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் உச்சகட்ட போதை. அந்த போதையில் பலர் தங்களின் நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை இழக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு நிகழ்வு. அதற்குப் பிறகு அவர்கள் அனுபவிக்கும் வலிகள், சுமக்கும் பொறுப்புகள், அன்றாடங்களின் சலிப்புகள் அந்த இனிமையை இல்லாமல் ஆக்கி விடுகின்றன அல்லது வெறுமனே நினைவின் நதியில் ஒரு ஓரத்தில் மிச்சம் வைக்கின்றன. இதற்குத்தானா இத்தனை இழப்புகள் என்று அவர்களே எண்ணும் அளவுக்கு காலம் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.

சிலரிடம் காதல் இரக்கமாக, பரஸ்பர புரிதலாக மாற்றமடைகிறது. சிலரிடம் கடும் வெறுப்பாக, தீராத சலிப்பாக மாற்றமடைந்து விடுகிறது. சிலருக்கு அது ஒரு வரம். சிலருக்கு அது ஒரு சாபம். சிலருக்கு அது ஒரு விடுபடல். சிலருக்கு அது ஒரு சிறைச்சாலை. மனிதர்கள் அது குறித்து உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் வேறு. எதார்த்தம் வேறு.

இங்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்பாராத முறையில் அல்லது திட்டமிட்டு இருவர் இணைகிறார்கள். குடும்பமாகிறார்கள். பெரும் குடும்பத்தை உருவாக்குகிறார்கள். சிலர் பிரிந்து விடுகிறார்கள். வாழ்வு அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்படிச் செய்திருக்கலாம், இப்படிச் செய்திருக்கக்கூடாது என்ற புலம்பலால் எதுவும் நிகழப்போவதில்லை. அறிவின் ஆலோசனைகள், நலம்விரும்பிகளின் அறிவுரைகள் மனம் இயல்பு நிலைக்கு வந்த பிறகே நினைவுக்கு வருகின்றன. விதியின் பாதையில் நிகழ வேண்டியவை நிகழ்ந்து விடுகின்றன.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply