நான் அவரை சந்தித்து பதினைந்து வருடங்களாவது இருக்கும். தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அது. நான் வழக்கமாக அமரும் இடத்திற்கு அருகே வந்து அவரும் அமர்ந்தபோது அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று நான் நினைக்கவில்லை.
அவர் என் அருகே அமர்ந்தபோது குழப்பமான, சோகமான மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரது முகம் காட்டியது. நான் பேச்சைத் தொடங்கினேனா அல்லது அவர்தாம் பேச்சை தொடங்கினாரா என்று எனக்கு நினைவில் இல்லை. எப்படியோ இருவருக்கும் பேச்சு தொடங்கியது.
எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அந்தச் சமயத்தில் புதிய மனிதர்களுடன் உரையாடுவதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. புதிய மனிதர்களுடன் உரையாடுவது நமக்கு புதிய திறப்புகளை அளிக்கலாம். அது நம்முடைய உலகை விசாலப்படுத்திக் கொண்டே செல்லலாம். சில சமயங்களில் மனிதர்கள் அறிமுகமற்றவர்களுடன் தடையில்லாமல் உரையாடுகிறார்கள். தங்கள் மனதின் பாரங்களை, அழுத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அதன்மூலமாக ஏதோ ஒரு வகையில் அவற்றிலிருந்து விடுபடுகிறார்கள்.
அந்தச் சமயத்தில் என் உரையாடல் அவரை ஆற்றுப்படுத்தியதுபோலும். அவர் தெளிவடைந்தார். சட்டென்று உற்சாகமாகி விட்டார். அருகே இருந்த அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது மனைவியிடம் அறிமுகப்படுத்தினார். விருந்தளித்து உபசரித்தார். கடும் குழப்பத்தில் இருந்தேன். இவரது பேச்சு எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது என்று அவரது மனைவியிடம் கூறினார். அந்தச் சமயத்தில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். மறுநாள் அவரது வீட்டிற்குச் சென்று என்னிடம் இருந்த குர்ஆனை வழங்கினேன். அவ்வளவுதான் அவருக்கும் எனக்குமான தொடர்பு முடிந்து விட்டது.
நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு அவரை தற்செயலாக வேறொரு ஊரில் சந்திக்க நேர்ந்தது. தான் ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் இணைந்து விட்டதாகவும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது வருவதாகவும் என்னிடம் கூறினார். அதற்குப் பிறகு ஓரிரு முறை வழியில் சந்தித்தாக நினைவு. அதற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கவேயில்லை.
பிறகு மரண அறிவிப்பைத் தாங்கி வந்த ஒரு வாட்ஸ்அப் செய்தியில் அவரது முகத்தைக் கண்டேன். அது பொலிவிழந்த, நோயின் கடுமைகளை அனுபவித்த முகம்போன்று தெரிந்தது. பெரும் நோயினால் அவதிப்பட்டு இறந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டேன். அந்த முகமும் என் நினைவில் இருக்கின்ற உற்சாகமான அவரது பழைய முகமும் என் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டேயிருந்தன
