நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகி விடுகிறது; நீங்களே எதிர்பார்க்காத அளவு பெரும் வளர்ச்சியை நீங்கள் பெற்று விடுகிறீர்கள்; உங்கள் மீதான தன்னம்பிக்கை கூடி விடுகிறது; உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகளெல்லாம் உங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடுகிறது எனில் அது அல்லாஹ் உங்களுக்கு வழங்கும் பெரும் கொடை என்பதையும் அதன்மூலம் அவன் உங்களைச் சோதிக்க நாடுகிறான் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். திருக்குர்ஆன் இந்தக் கருத்தை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக எடுத்துரைக்கிறது.
அவன் உங்களிடம் நன்றியை எதிர்பார்க்கிறான். அவனை நீங்கள் அதிகமதிகம் நினைவுகூர வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறான். இவை அனைத்தும் அவன் அளித்த கொடைகள்தாம் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறான். அவன் அளித்த அருட்கொடைகளை அவன் விரும்பும் நல்வழியில் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறான்.
உங்களிடம் இருக்கும் அருட்கொடைகள் அருட்கொடையாளனை நினைவுபடுத்தினால், அந்த நினைவு உங்களை அவன் விரும்பும் பாதையில் இட்டுச் சென்றால் நீங்கள் உங்களுக்கான சோதனையில் வெற்றி பெற்று விட்டீர்கள். இந்த உலகிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மறுவுலகிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
நீங்கள் அந்த அருட்கொடையாளனை மறந்து என் முயற்சி, என் திறமை, என் உழைப்பு என்று நீங்கள் கர்வம் கொண்டால் அந்த அருட்கொடைகளை நீங்கள் தவறான வழியில் பயன்படுத்தினால், அவை உங்களின் பேராசையை, தீய உணர்வுகளை இன்னும் கூர்தீட்டினால், அவை உங்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்பாராத சமயத்தில் சட்டென அவனுடைய வேதனை உங்களை வந்தடைந்து விடும் என்று அவன் எச்சரிக்கிறான். திருக்குர்ஆன் தெளிவாகவே எச்சரிக்கிறது. அந்த எச்சரிக்கை தனி மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது. குடும்பத்திற்கும் பொருந்தக்கூடியது. சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது.
அல்லாஹ் அதிகம் கொடுத்தும் சோதிக்கிறான். அளவோடு கொடுத்தும் சோதிக்கிறான். குறைவாக கொடுத்தும் சோதிக்கிறான். ஒவ்வொன்றும் சோதனையை. ஒவ்வொன்றும் அதற்கு உகந்த முறையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த உலக வாழ்வும் மறுமை வாழ்வும் அந்த சோதனையை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது
