“அல்லாஹ்வே! பயனற்ற கல்வி, உன்னை அஞ்சாத உள்ளம், நிறைவடையாத மனம், ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” (முஸ்லிம்)
இதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளில் ஒன்று. இதில் சொல்லப்பட்டுள்ள நான்கு விசயங்களும் நம் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துபவை. கல்வியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பயனுள்ள கல்வி. மற்றொன்று, பயனற்ற கல்வி. பயனுள்ள கல்வியைக் கேட்கும்படியும் பயனற்ற கல்வியிலிருந்து பாதுகாவல் கோரும்படியும் நபியவர்கள் கற்றுத் தருகிறார்கள். பயனற்ற கல்வி என்பது தீங்களிக்கும் கல்வியாகக்கூட இருக்கலாம். வாசிப்பை நாம் முறைப்படுத்தவில்லையெனில் அது நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லலாம்; தேவையற்ற விவகாரங்களில் நம் நேரங்களை வீணடித்து விடலாம்; அழிவு சக்திக்கு நம் ஆற்றல்கள் பயன்படுத்தப்பட்டுவிடலாம். நாம் வாழும் இக்காலம் பயனற்ற கல்வியின் வரையறையை தெள்ளத் தெளிவாக நம் முன்னால் கொண்டு வந்து விடுகிறது. மனிதர்கள் உடலளவில் அடிமைப்படுத்தப்பட்ட காலம் கடந்துவிட்டது. ஆனால் தற்காலத்தில் அவர்கள் மனதளவில் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். மனிதர்களை கவர்தற்கு, அவர்களை அடிமைப்படுத்துவதற்கு புதிய புதிய வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
இறையச்சமற்ற உள்ளம் என்பது இறைவழிகாட்டல்களை, அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாத இறுகிய உள்ளம். இறுகிய உள்ளத்திற்கு முன்னால் அறிவுரைகள் தோல்வியடைந்து விடும். இறையச்சமுள்ள உள்ளம் என்பது மென்னுணர்வுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள உள்ளம். மென்னுணர்வுகளைக் கொண்டிருக்கும் உள்ளமே அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளும். மென்னுணர்வுகள் கொண்ட மனிதர்களே சக வாழ்வுக்கு உகந்த மனிதர்கள். இறைவனை அஞ்சும் உள்ளம் மென்னுணர்வுகள் கொண்ட உள்ளமாகும். இறையச்சமற்ற உள்ளம் மிக இலகுவாக கர்வத்தால், பொறாமையால், வெறுப்பால், காழ்ப்பால் வழிநடத்தப்படலாம். மென்னுணர்வுகள் இல்லாத இடத்தில் தீய உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவது இயல்பானது.
நிறைவடையாத மனம் பெரும் துன்பம். அது தீராத தாகம் போன்றது. அது இடைவிடாமல் மனிதனை ஓடிக் கொண்டே இருக்கச் செய்யும். அவர்கள் செக்குமாடுகளைப் போன்று எதற்காக இயங்குகிறோம் என்று தெரியாமல் இயங்கிக் கொண்டேயிருப்பார்கள். மனம் ஒரு கட்டத்தில் நிறைவடைய வேண்டும். நிறைவடையாத மனம் எப்போதும் தம்மிடம் இல்லாதவற்றைக் குறித்தே யோசித்துக் கொண்டிருக்கும். தம்மிடம் இருப்பதைக் கொண்டு அது நிறைவடையாது. அது நிறைகளைவிட குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும். மனம் நிறைவடைவதற்கு ஈமான் அவசியம். ஈமான் அளிக்கும் பார்வைகளைக் கொண்டே மனிதன் பேராசைக்குக் கடிவாளம் இட முடியும்.
இறைவன் மனிதர்களின் பிரார்த்தனைகளைச் செவியேற்கக்கூடியவன். ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை ஒருவனை நிராசையில் ஆழ்த்தலாம். பிரார்த்தனையின் மூலமே மனிதன் தன் இயலாமையைக் கடக்கிறான். ஏற்றுக்கொள்ளப்படும் பிரார்த்தனை அவனுக்குப் பெரும் பலம். ஏற்றுக்கொள்ளப்படாத பிரார்த்தனை என்பது அவனுடைய தீய சம்பாத்தியத்தின் வெளிப்பாடு. உங்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இறைவன் தடுத்துள்ளவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும். இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவனுடைய வழிகாட்டல்களுக்கு உட்பட்டவர்களாக நீங்கள் உங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
