பொறுப்புகளும் விதிகளும்

You are currently viewing பொறுப்புகளும் விதிகளும்

பொறுப்புகளையும் சமூக வாழ்க்கைக்கான விதிகளையும் வெறுப்பவர்கள் வெகு விரைவில் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள் அல்லது சமூகத்திற்கோ சக மனிதர்களுக்கோ பயனற்ற, தீங்கு விளைவிக்கின்ற சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள். மட்டுமீறிய சுயநலமும் தன்னைக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கும் எதற்கும் இல்லை என்ற ஆணவப்போக்குமே அதற்குப் பின்னால் இருக்கும் காரணங்கள். நாத்திகம் இந்த இரு பண்புகளையும் கூர்தீட்டுகிறது.

மனிதன் தனியன் அல்ல. அவனுடைய வாழ்வு சக மனிதர்களோடு கலந்திருக்கிறது. பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் சமூக, குடும்ப வாழ்க்கைக்கான விதிகளைப் பேணுவதிலும் அவனுக்கும் சக மனிதர்களுக்கும் நன்மையும் மகிழ்ச்சியும் இருக்கின்றன. அவன் மகிழ்ச்சி அளித்து மகிழ்ச்சி அடையக்கூடியவன். அவன் பயனளித்து பயனடையக்கூடியவன். சமூகத்தைவிட்டு, குடும்பத்தைவிட்டு விலகிச் செல்லும் மனிதன் பார்ப்பதற்கு சுதந்திரமானவனாகத் தெரிந்தாலும் வெறுமையால் சூழப்பட்ட வெற்று மனிதனாக, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மனிதனாக மாறிவிடுவான்.

இஸ்லாம் சொல்லும் போதனைகள் மனிதர்களை இணைப்பவை. அவர்களுக்கு மத்தியில் அன்பையும் இணக்கத்தையும் இரக்கத்தையும் உருவாக்குபவை. இஸ்லாம் முன்வைக்கும் விதிகள், சட்டங்கள் மனித வாழ்வை சீர்குலையாமல் பாதுகாக்கும் கேடயங்கள். அவை தனிமனித உள்ளத்தின் அமைதியை, நிம்மதியைப் பாதுகாக்கின்றன. அவை குடும்ப அமைப்பை சிதையாமல் பாதுகாக்கின்றன. அவை ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் மனிதர்களைக் கொண்ட சமூக அமைப்பை உருவாக்குகின்றன.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply