திருக்குர்ஆனுக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது. அதன் ஓலிகூட நம்மை கவர்ந்திழுக்கும். அதற்கு நம்முடைய மனதில் ஒரு வகையான அமைதியை ஏற்படுத்தும் வலிமை இருக்கிறது. முதன் முதலாக நான் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்பட்டது அதன் கிராஅத்தை கேட்டதன் வழியாகத்தான்.
அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் ஹுதைஃபியின் கிராஅத்தை உள்ளடக்கி இருந்த கேசட்டுகள் இருந்தன. அது கேசட்டுகள் வழக்கத்தில் இருந்த காலம். இந்த தலைமுறை அந்த கேசட்டுகளை அறியாது.
அது நான் இசை கேட்பதில் மூழ்கியிருந்த காலகட்டம். ஒரு கேசட்டை எடுத்து ரேடியோவில் போட்டு ஹுதைஃபியின் கிராஅத்தை கேட்கத் தொடங்கினேன். கேட்க, கேட்க ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு, ஒரு வகையான அமைதி என்னை தழுவிக் கொண்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன். கிராஅத் கேட்கும் பழக்கம் என்னை தொற்றிக் கொண்டது. குறிப்பாக, மர்யம் என்ற அத்தியாயமும் தாஹா என்ற அத்தியாயமும் என்னை மிகவும் ஈர்த்தன. ஒவ்வொரு இரவும் அந்த இரு அத்தியாயங்களையும் கேட்டுக் கொண்டேதான் தூங்குவேன்.
இதே அனுபவத்தை முஹம்மது குதுபும் கூறியிருக்கிறார். மர்யம் என்ற அத்தியாயமும் தாஹா என்ற அத்தியாயமும் தம்மை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறியிருக்கிறார். தாஹா அத்தியாயத்தை கேட்டு கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஓர் அறிவிப்பு கூறுகிறது.
திருக்குர்ஆனின் மீது இருந்த இனம்புரியாத இந்த ஈர்ப்புதான் அதனை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. இந்த ஈர்ப்புதான் பலரையும் இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை திருக்குர்ஆனைக் கேட்டு அதன் இனிமையால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம்.
திருக்குர்ஆனின் இந்த வசீகரம் அன்றைய நிராகரிப்பாளர்களை அச்சுறுத்தி இருக்கிறது. அதன் வசீகரத்தினால் மக்கள் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினார்கள். அவர்களேகூட அதன் வசீகரத்தினால் கவரப்பட்டு ஒளிந்திருந்து நபியவர்கள் ஓதுவதை செவியுற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதனைக் கேட்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “நீங்கள் இந்தக் குர்ஆனைச் செவியேற்காதீர்கள். அது ஓதப்படும்போது கூச்சலிடுங்கள். அதனால் நீங்கள் மிகைத்து விடலாம்.” (41:26)
செய்யத் குதுப் ‘திருக்குர்ஆனின் வசீகரம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். அந்த சம்பவங்களை இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் அவர் அந்த சம்பவங்களை எடுத்து வைத்த இடம் ஈர்ப்பு மிகுந்தது. என் மனதில் அந்த இடம் நிலைத்து விட்டது. அந்த இரண்டு சம்பவங்களையும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒன்று, உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சம்பவம். அவர் கூறுகிறார்: “நான் இஸ்லாத்தை விட்டு வெகு தூரமாக இருந்தேன். நான் ஜாஹிலிய்ய காலகட்டத்தில் மது அருந்துபவனாகவும் மதுவை விரும்புபவனாகவும் இருந்தேன். மது அருந்துவதற்கென நாங்கள் ஒரு சபையை உருவாக்கி வைத்திருந்தோம். அதில் குறைஷிகள் கலந்து கொள்வார்கள். ஒரு நாள் நான் மது அருந்தும் கூட்டாளிகளை தேடி புறப்பட்டேன். யாரையும் பெறவில்லை. இன்ன மது வியாபாரியிடம் செல்லலாம் என்று யோசித்து அவரை நோக்கிப் புறப்பட்டேன். அவரையும் பார்க்க முடியவில்லை. பிறகு நான் கஅபாவுக்குச் சென்று அங்கு ஏழு முறை தவாஃப் செய்ய நாடினேன். அங்கு சென்றபோது நபியவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கி தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன். இந்த இரவு முஹம்மது என்ன கூறுகிறார் என்பதை செவியேற்றால்தான் என்ன என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். நான் அவரை நெருங்கிச் சென்றால் அவரை பயமுறுத்தி விடுவேன் என்பதால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு முன்னால் வந்து கஅபாவின் திரைச் சீலைக்குள் ஒளிந்து கொண்டேன். எனக்கும் அவருக்கும் மத்தியில் கஅபாவின் திரைச் சீலையே இருந்தது. அவர் குர்ஆன் ஓதுவதை செவியுற்றபோது என் உள்ளம் உருகி விட்டது. நான் அழுதேன். அதுதான் என்னை இஸ்லாத்தில் கொண்டு சேர்த்தது.” (இந்த அறிவிப்பு இப்னு இஸ்ஹாக்கில் இடம்பெற்றுள்ளது)
இப்னு இஸ்ஹாக் என்ற நூலில் உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பாக இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பிலும் குர்ஆனே முதன்மையான காரணியாக வெளிப்படுகிறது. அந்த அறிவிப்பையும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகின்றோம்.
நபியவர்களும் அவர்களின் தோழர்களும் ஒரு வீட்டில் கூடியிருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களைக் கொலை செய்வதற்காக வாளேந்தியவாறு உமர் புறப்பட்டார். வழியில் நயீம் இப்னு அப்துல்லாஹ் என்ற நபித்தோழர் அவரைப் பார்த்து வாளேந்தியவாறு எங்கு புறப்பட்டு விட்டீர் என்று கேட்டார். உமர் தம் நோக்கத்தை அறிவித்த பிறகு நயீம் அவரை எச்சரித்தார். உங்கள் குடும்பத்தில் உங்களின் தங்கையும் அவளது கணவனும் இஸ்லாத்தை ஏற்று விட்டார்கள், முதலில் அவர்களைக் கவனியுங்கள் என்று அவரைத் திசைதிருப்பினார்.
உமர் தம் தங்கையின் வீட்டை நோக்கிச் சென்றார். அங்கு கப்பாப் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். உள்ளே நுழைந்து தங்கையையும் அவளது கணவனையும் அடிக்கத் தொடங்கினார். தங்கை காயமடைந்ததைப் பார்த்தவுடன் நிதானமடைந்து அங்கு ஏட்டில் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களைப் படித்தார். எவ்வளவு அழகான, கண்ணியமான வார்த்தைகள் இவை! என்றார். பிறகு நபியவர்களிடம் சென்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
உமர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பாக இடம்பெற்றுள்ள இந்த இரு அறிவிப்புகளும் குர்ஆனின் வசீகரத்தால் கவரப்பட்டே அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்பதையே தெளிவுபடுத்துகின்றன.
இன்னொரு சம்பவம், வலீத் இப்னு முகீராவின் சம்பவம். அவர் குர்ஆனை செவியுற்று அதன் வசீகரத்தால் கவரப்பட்டு “அதற்கு ஒரு இனிமை இருக்கிறது. அதற்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது தனக்குக் கீழுள்ளதை தகர்த்து விடும். அதுவே மிகைக்கும். எதுவும் அதனை மிகைக்க முடியாது” என்றார்.
அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் குறைஷிகளும் இஸ்லாத்தை ஏற்று விடுவார்கள் என்ற பயந்த அபூஜஹல் அவரது கர்வத்தைத் தூண்டி அவர் கூறியதற்கு மாறாகக் கூற வைத்தான். இறுதியாக அவர் “இது பாதிப்பை ஏற்படுத்தும் சூனியம்” என்றார்.
இருவரும் திருக்குர்ஆனின் வசீகரத்தால் கவரப்பட்டார்கள். ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். இன்னொருவர் நிராகரிப்பின் பாதையில் நீடித்தார்.

Maasha allah !!!