யூதர்களின் வரம்புமீறல்கள், அவர்களின் கோணலான இயல்பு, தங்கள் தூதருடன் அவர்கள் நடந்துகொண்ட விதம், அற்புதங்களை, சான்றுகளைக் கண்டு உருகாத அவர்களின் இறுகிய உள்ளங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்திய பிறகு திருக்குர்ஆன் சட்டென முஸ்லிம்களை நோக்கி உரையாடுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு உடனே நம்பிக்கை கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் வழங்குகிறது.
أَفَتَطْمَعُونَ أَنْ يُؤْمِنُوا لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِنْ بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ أَوَ لَا يَعْلَمُونَ أَنَّ اللهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
2:75-78. உங்களின் பேச்சைக் கேட்டு அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அவர்களில் ஒரு பிரிவினர், அல்லாஹ்வின் வார்த்தைகளை செவிமடுத்து புரிந்துகொண்ட பின்னரும் அறிந்துகொண்டே அதனை மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் “நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களுக்குள் தனிமையில் சந்தித்துக்கொண்டால், “அல்லாஹ் உங்களிடம் வெளிப்படுத்தியிருப்பதை அவர்களிடம் கூறிவிடுகிறீர்களே! அவர்கள் உங்கள் இறைவனிடத்தில் உங்களுக்கு எதிராக வாதாடுவதற்காகவா?! நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா? என்று கூறுகிறார்கள். அவர்கள் மறைப்பதையும் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா என்ன? அவர்களில் படிப்பறிவற்றவர்களும் இருக்கிறார்கள். குருட்டு நம்பிக்கைகளைத் தவிர வேதம் குறித்து எதுவும் அறிய மாட்டார்கள். அவர்கள் வெறும் யூகங்களில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
அன்று இஸ்லாம் முன்வைத்த தவ்ஹீத், தூதுத்துவம், மறுமைநாள், வேதம் போன்ற அடிப்படையான விசயங்களை அறபுக்களைவிட யூதர்கள்தாம் அதிகம் அறிந்தவர்களாக இருந்தார்கள். “இறுதித் தூதர் வரக்கூடிய காலகட்டம் நெருங்கி விட்டது. அவருடன் இணைந்து உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவோம்” என்று அவர்கள் மதீனாவாசிகளை அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். மதீனாவாசிகள் நபியவர்களின் அழைப்பை செவியுற்றபோது யூதர்கள் கூறிக் கொண்டிருக்கும் இறுதித்தூதர் இவர்தான் என்பதை உறுதியாக அறிந்து கொண்டார்கள். எவ்வித தயக்கமும் இன்றி அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
நபியவர்களின் தூதுத்துவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூதர்கள் விரைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் எதிர்பார்க்கப்பட்டதாகும். அது எதார்த்தமான எதிர்பார்ப்பும்கூட. நபியவர்களுக்கு அருளப்பட்ட இந்தக் குர்ஆன் அவர்களிடம் இருக்கின்ற தவ்ராத்தின் போதனைகளை உண்மைப்படுத்தியது. இந்த மார்க்கம், இந்த வேதம் அவர்களுக்கு எந்த வகையிலும் அந்நியமானதாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர்களால் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியவில்லை. அவ்வாறு நிராகரிப்பது தங்களைத் தாங்களே நிராகரிப்பதாகும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஒரு வகையான நயவஞ்சக நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
அவர்களிடம் இந்த மார்க்கம் உள்ளபடியே முன்வைக்கப்பட்டால் அவர்கள் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நபியவர்களும் முஸ்லிம்களும் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு மாறான அவர்களின் நடத்தை முஸ்லிம்களிடம் ஆச்சரியத்தையும் பலவீனமானவர்களிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. வேதம் அறிந்த யூதர்களே பின்வாங்குகிறார்கள் என்றால் இதில் ஏதோ இருக்கிறது என்று பலவீனமான ஈமான் கொண்டவர்கள் நயவஞ்சகர்களின் பக்கம் சாய்ந்தார்கள்.
இந்த வசனத்தில் அல்லாஹ் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்களின் இயல்பை தெளிவுபடுத்துகிறான். அவர்களின் உள்ளங்களில் எந்த ஈரமும் இல்லை. அவர்களின் உள்ளங்கள் சத்தியம் ஊடுருவ முடியாத அளவு கடினமானவையாக இருக்கின்றன. அவை கற்களைவிட கடினமானவையாக இருக்கின்றன. அவர்களின் வரலாறு வரம்புமீறல்களாலும் நன்றிகெட்டத்தனத்தினாலும் நிரம்பிக் காணப்படுகிறது. அவர்களிடமிருந்து இந்த வகையான நடத்தை வெளிப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல. அவர்களின் முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள். இவர்களும் அவர்களின் அடிச்சுவட்டில், அதே வகையான இயல்புகளோடுதான் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
அவர்களிலுள்ள குருமார்கள், அறிஞர்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியுற்று தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சத்தியம் புரியாமல் இல்லை. ஆனாலும் புரிந்து கொண்ட பிறகும் தங்களின் மன இச்சைக்கேற்ப அதனை அவர்கள் திரிக்கிறார்கள். அதற்கு வேறு விளக்கங்கள் அளிக்கிறார்கள். இங்கு அவர்களில் ஒரு பிரிவினர் என்பது அவர்களில் வேதம் குறித்து நன்கறிந்த அவர்களின் குருமார்களையே குறிக்கிறது.
அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியவில்லை. இரண்டுக்கும் மத்தியில் நயவஞ்சத்தனமான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால் “நாங்களும் உங்களைப்போல நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தனிமையில் தங்களுக்குள் சந்தித்துக் கொள்ளும்போது “நீங்கள் ஏன் இப்படி கூறினீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்திருப்பதை அவர்களிடம் கூறுகிறீர்களா? அவர்கள் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக வாதாடுவதற்காகாவா இவ்வாறு கூறுகிறிர்கள்! உங்களுக்கு அறிவு இல்லையா?” என்று பழித்துக் கொள்கிறார்கள்.
இங்கு அவர்கள் அல்லாஹ்வின் விசயத்தில் கொண்டிருக்கும் பிழையான கண்ணோட்டம் வெளிப்படுகிறது. பிழையான கண்ணோட்டத்திலிருந்தே பிழையான செயல்பாடுகள் வெளிப்படுகின்றன. தாங்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே அல்லாஹ் குற்றம்பிடிப்பான் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளிப்படுத்துவதும் வெளிப்படுத்தாமல் தங்கள் உள்ளங்களில் மறைத்துக் கொள்வதும் அல்லாஹ்வைப் பொறுத்தவரை ஒன்றுதான். அவனுக்குத் தெரியாததது எதுவும் இல்லை. மனிதர்கள் வெளிப்படுத்துவதையும் வெளிப்படுத்தாமல் மறைத்து வைப்பதையும் அவன் அறிவான். அவனுக்குத் தெரியாமல் யாரும் எதையும் மறைத்துவிட முடியாது.
மனிதர்களில் இப்படியானவர்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நாம் எடுத்துரைத்த வழிமுறைதான் சரியில்லையோ என்ற எண்ணத்தைக்கூட நமக்கு ஏற்படுத்தலாம். நாம் மீண்டும் மீண்டும் பல்வேறு வழிமுறைகளில் அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க முயற்சிக்கலாம். இங்கு அல்லாஹ் நமக்கு அவர்களின் இயல்பைத் தெளிவுபடுத்கிறான். உண்மையில் அவர்கள் உள்ளத்தின் கதவுகள் அனைத்தையும் மூடிக் கொண்டு அமர்ந்திருக்கும் இறுகிய மனிதர்கள்.
அவர்களில் இன்னொரு தரப்பினர் இருக்கிறார்கள். அவர்கள் வேதம் குறித்து எதுவும் அறியாத பாமரர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். யூதராகப் பிறந்து விட்டால்போதும், சுவனம் நிச்சயம் என்றும் யூதர்கள் அல்லாஹ்வின் செல்லப்பிள்ளைகள் என்றும் அவன் அவர்களைத் தண்டிக்க மாட்டான் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மார்க்க அறிவு என்பது இதுபோன்ற அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நாட்டமும் தேடலும் அவர்களுக்கு இருந்திருந்தால் அந்தப் பாதை அவர்களுக்கு இலகுவாக்கப்பட்டிருக்கும். அவர்கள் உறுதியான அறிவைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் வெறும் யூகங்களில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குச் சாதகமான கருத்துகளை மட்டுமே நம்புகிறார்கள். அவற்றைத் தவிர வேறு எதையும் அவர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை.
ஒரு தரப்பினர் வேத வசனங்களை தங்களின் இச்சைகளுக்கேற்ப திரிப்பவர்கள். அவற்றுக்கு தாங்கள் விரும்பும் வேறு விளக்கங்களை கொடுப்பவர்கள். இன்னொரு தரப்பினர் அவர்கள் சொல்லும் அனைத்தையும் கண்களை மூடிக் கொண்டு நம்பும் பாமரர்கள். பிறகு எப்படி அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
فَوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللهِ مَا لَا تَعْلَمُونَ بَلَى مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
2:79-82. “தங்கள் கைகளாலேயே நூலை எழுதிக் கொண்டு அற்ப ஆதாயம் பெறுவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது” என்று கூறுவோருக்குக் கேடுதான். அவர்களின் கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான். அவர்கள் சம்பாதித்தனாலும் அவர்களுக்குக் கேடுதான்.” “குறிப்பிட்ட சில நாட்களைத்தவிர நரகம் எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். நீர் கேளும்: “அப்படியொரு வாக்குறுதியை நீங்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட மாட்டான் அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?” “அப்படியல்ல. யார் தீய செயல்ளை சம்பாதித்து தங்களின் பாவங்களால் சூழப்பட்டார்களோ அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். யார் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.”
அவர்களின் மதகுருமார்கள், அறிஞர்கள் புத்தகங்களை, சட்ட நூல்களை, வேத விளக்கங்களை எழுதினார்கள். தாங்கள் எழுதியவற்றை அவர்கள் அல்லாஹ்வோடு இணைத்தார்கள். அவை அல்லாஹ்விடமிருந்து வந்த சட்டங்கள், வழிகாட்டல்கள் என்று கூறினார்கள். அவர்களின் நோக்கம் என்ன? தாங்கள் எழுதியவற்றை ஏன் அவர்கள் அல்லாஹ்வோடு இணைத்தார்கள்? மக்களிடம் செல்வாக்கைப் பெற வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும், அதிகாரம் கொண்டவர்களை, செல்வந்தர்களை திருப்திபடுத்த வேண்டும்… இவை போன்ற உலகியல் ஆதாயங்களைப் பெறுவதற்காகவே அவர்கள் இப்படி எல்லாம் செய்தார்கள். இப்படி எழுதியதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவை தேடிக் கொண்டார்கள். இதன்மூலம் அவர்கள் சம்பாதித்த ஆதாயங்களின்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவை தேடிக் கொண்டார்கள். இந்த மார்க்கத்தை விற்றுவிட்டு அதற்குப் பகரமாக பெறக்கூடிய பதவி, அதிகாரம், செல்வம், மக்கள் மத்தியில் செல்வாக்கு என அனைத்தும் அற்ப ஆதாயங்கள்தாம்.
இந்த மார்க்கத்தை அழகிய முறையில் கூடுதல் குறைவு இல்லாமல் உள்ளபடியே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் மார்க்க அறிஞர்களின் பணியாக இருக்க வேண்டும். அற்ப உலகியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக மார்க்கத்தின் கருத்துகளை திரிப்பதும் தம் கருத்துகளை மார்க்கத்தின் சட்டங்களாகக் காட்டுவதும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான பாவங்கள். அதன்மூலம் அவர்கள் சம்பாதிப்பவை அவர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்தும். ஒரு சமூகத்தின் வழிகேடு அதன் அறிஞர்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதற்கான மோசமான முன்னுதாரணம் யூத அறிஞர்கள்தாம். ஆட்சியாளர்களின், செல்வந்தர்களின் துதிபாடும் அறிஞர்கள், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, புகழடைய வேண்டும் என்பதற்காக கேளிக்கையாளர்களாக மாறி நிற்கும் அழைப்பாளர்கள் என்று நமக்கு மத்தியிலும் இப்படியான அறிஞர்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நாங்கள் இப்படியெல்லாம் செய்தாலும், தொடர்ந்து அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறினாலும் அவன் எங்களை தண்டிக்க மாட்டான். அப்படியே தண்டித்தாலும் எண்ணக்கூடிய சில நாட்கள் மட்டுமே எங்களை தண்டிப்பான். நாங்கள் யூதர்கள் என்பதால், நாங்கள் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தினர் என்பதால் அவன் எங்களைத் தண்டிக்க மாட்டான் என்று அவர்கள் கூறி வந்தார்கள். அவர்களின் மதகுருமார்கள் இப்படி இட்டுக்கட்டி கூறியதை அவர்கள் நம்பினார்கள். இதுபோன்ற போலியான கண்ணோட்டங்களை, நம்பிக்கைகளை ஏற்படுத்தியே வழிகேடர்கள் தங்களின் வழிகேட்டில் நீடிக்கிறார்கள். செய்த பாவங்களை உணர்பவர்கள் மீள்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். மீள விரும்பாதவர்கள் இது போன்ற போலியான கண்ணோட்டங்களை ஏற்படுத்தி தங்களைத் தாங்களே திருப்திபடுத்திக் கொள்கிறார்கள்.
அல்லாஹ் தன் தூதரின் வழியாக அவர்களிடம் கேட்கிறான், அப்படியொரு வாக்குறுதியை அல்லாஹ்விடம் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்தாலும் அவன் உங்களை நரகத்தில் தள்ள மாட்டான் என்று அவன் உங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறானா? அவ்வாறு அவன் வாக்குறுதி அளித்திருந்தால் அவன் அதற்கு மாறாகச் செயல்பட மாட்டான். ஆனால் நீங்கள் அவன் கூறினான் என்று அவன் மீதே இட்டுக்கட்டுகிறீர்கள். எவ்வித பயமும் இன்றி அவன் மீது பொய்யுரைக்கிறீர்கள்.
அல்லாஹ் இங்கு மனித வாழ்க்கையில் செயல்படும் பொதுவான, நிரந்தரமான விதியைத் தெளிவுபடுத்துகிறான். நீங்கள் எண்ணுவது போலல்ல. யார் தொடர்ந்து பாவங்களில் ஈடுபட்டு அவற்றில் மூழ்கி விடுகிறார்களோ அவர்கள் தங்களுக்குரிய தண்டனையை அனுபவித்தே தீருவார்கள். அவர்கள் பாவங்களில் மூழ்கி இருந்ததனால் நிரந்தரமான நரக வேதனையைப் பெறுவார்கள்.
மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள்தாம். அவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருபவர்கள்தாம் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் என்றால் அவர்கள் பாவங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்கள் என்பது அல்ல. அவர்களும் பாவங்களில் ஈடுபடலாம். ஆனால் அவர்கள் செய்த பாவங்களில் நிலைத்திருக்கவோ அவற்றை நியாயப்படுத்தவோ மாட்டார்கள். அவற்றுக்காக வருத்தப்பட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவார்கள்.
இங்கு அல்லாஹ் குறிப்பிடுவது பாவம் செய்து விட்டு அதற்காக வருத்தப்படாமல், பாவமன்னிப்புக் கோராமல் தொடர்ந்து அதில் ஈடுபட்டு வருவதையும் பாவங்களுக்கு அடிமையாகி அவற்றில் மூழ்கி விடுவதையும்தான். அவர்கள் பாவங்களால் சூழப்பட்டவர்கள். அவர்கள் செய்யும் பாவங்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. அவர்கள்தாம் நரகவாசிகள். யார் நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கைக்கேற்ப நற்செயல்களிலும் ஈடுபடுகிறார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள். அவர்கள் என்றென்றும் நிரந்தரமான சுவனத்தில் தங்கி இருப்பார்கள்.
