யூதர்களுக்கு நபியவர்களின் தூதுத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது அவர்களின் உயர்வு மனப்பான்மைதான். தங்களின் இனம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தங்கள் இனத்தில் அவனுடைய தூதர்கள் அதிக அளவில் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு வெளியிலிருந்து வேறு ஒரு தூதுத்துவமோ தூதரோ தேவையில்லை என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இங்கு அல்லாஹ் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவத்துடன், அதன் போதனைகளுடன், அவற்றை நினைவூட்டும்பொருட்டு அடுத்தடுத்து வந்த தூதர்களுடன் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தின் போதனைகளை முறையாகப் பேணவில்லை. அந்த போதனைகளை நினைவூட்டும்பொருட்டு அடுத்தடுத்த வந்த தூதர்களுடனும் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தங்களின் மன விருப்பங்களின்படியே நடந்து கொண்டார்கள். தங்கள் மன விருப்பங்களுக்கு மாறான வழிகாட்டல்களை அவர்கள் புறக்கணித்தார்கள்.
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تَقْتُلُونَ أَنْفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِنْكُمْ مِنْ دِيَارِهِمْ تَظَاهَرُونَ عَلَيْهِمْ بِالْإِثْمِ وَالْعُدْوَانِ وَإِنْ يَأْتُوكُمْ أُسَارَى تُفَادُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُونَ
2:82-86. பின்வரும் சந்தர்ப்பத்தையும் நினைவுகூருங்கள்: நாம் இஸ்ராயீலின் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; மக்களிடம் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை முறையாக அளித்துவிடுங்கள்” என்று உறுதியான வாக்குறுதி வாங்கினோம். ஆயினும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள். உங்களில் குறைவானவர்களே வாக்குறுதியைப் பேணினார்கள். “உங்களை நீங்களே கொல்லக்கூடாது; உங்களை நீங்களே உங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது” என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். நீங்களே சாட்சியாளர்களாகவும் இருந்தீர்கள். பிறகு நீங்களே உங்களைக் கொலை செய்தீர்கள். எதிரிகளுக்கு உதவும்விதமாக உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிபட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே? வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவுதான் கிடைக்கும். அவர்கள் மறுமையில் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. இவர்கள்தாம் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகை வாங்கிக் கொண்டார்கள். மறுமையில் இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனை குறைக்கப்படாது. இவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.”
இந்த அத்தியாயத்தின் முந்தைய வசனங்களில் யூதர்களிடம் உறுதியான வாக்குறுதி பெற்றதாக அல்லாஹ் கூறியுள்ளான். இந்த வசனங்களில் ஆரம்ப கட்டத்தில் அவர்களிடம் பெற்ற உறுதிமொழிகளை அவன் முஸ்லிம்களுக்கு நினைவூட்டுகிறான்.
முதலாவது உறுதிமொழி: நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. அவனை மட்டுமே வணங்க வேண்டும். இதுதான் தவ்ஹீத். இதுதான் இந்த மார்க்கத்தின் அடிப்படை. மனித வாழ்வு இதன் அடிப்படையில்தான் நிலைபெற வேண்டும். தவ்ஹீத் என்பது அவனை மட்டுமே வணங்குவதும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படுவதும் எந்த வகையிலும் அவனுக்கு யாரையும் எதையும் இணையாக்காமல் இருப்பதும் ஆகும். இறைவன் புறத்திலிருந்து வந்த தூதர்கள் அனைவரும் இந்த தவ்ஹீதைக் கொண்டே அனுப்பப்பட்டார்கள்.
இரண்டாவது உறுதிமொழி: தாய்தந்தையருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக இந்த உலகில் உங்களின் நன்றிக்கு உரியவர்கள் உங்களின் தாய்தந்தையர்தாம். அவர்களின்மூலமாகவே நீங்கள் இந்த உலகிற்கு வந்துள்ளீர்கள். அவர்கள்தாம் பலவீனர்களாக, எதுவும் அறியாதவர்களாக இருந்த உங்களை வளர்த்து ஆளாக்கினார்கள்.
மூன்றாவது உறுதிமொழி: நெருங்கிய உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அறபு மொழியில் ‘துல் குர்பா’ என்றால் நெருக்கமானவர்கள் என்று பொருள். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்முடைய உபகாரத்திற்கு மிகவும் தகுதியானவர்கள். அதற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அதற்குப் பிறகு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இப்படி நாம் செய்யும் நன்மையும் உபகாரமும் நெருக்கமானவர்களிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். நெருங்கியவர்களுக்கு உபகாரம் செய்யும் பண்பு மனிதனின் இயல்பில் இருக்கிறது. இஸ்லாம் குடும்ப அமைப்பை சிதையாமல் பாதுகாக்கிறது. மனித சமூகம் என்பதும் குடும்பங்களால் ஆனதுதான். மனித சமூகம் சிதையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் குடும்ப அமைப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வலுவான குடும்ப அமைப்பைக் கொண்டே சமூகம் பலமடைகிறது. சமூகங்களுக்கு மத்தியிலான இணக்கத்தைக் கொண்டே மனித சமூகம் பலமடையவும் நீடிக்கவும் முடியும். தாய்தந்தையர், நெருங்கிய உறவினர் பிறகு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று அது முன்வைக்கும் வரிசை முறை அற்புதமானது.
நான்காவது உறுதிமொழி: அநாதைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். அநாதைகள் என்பவர்கள் பக்குவ வயதை அடைவதற்கு முன்னால் தந்தையை இழந்தவர்கள். அவர்களைப் பராமரிக்கும் பாதுகாக்கும் பொறுப்பு சமூகத்தினுடையது. நெருங்கிய உறவினர்களுக்கு அடுத்த நிலையில் அவர்கள்தாம் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவி, அது எதுவாக இருந்தாலும் வழங்கப்பட வேண்டும். தந்தையை இழந்த பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அவர்கள் பராமரிக்கப்படாமல், அன்பு செலுத்தப்படாமல், பாதுகாக்கப்படாமல் விட்டுவிடப்பட்டால் தங்களுக்கும் சமூகத்திற்கும் பெரும் தீங்காக அவர்கள் அமைந்து விடக்கூடும். நபியவர்கள் தம் இரு விரல்களை இணைத்துக் காட்டியவாறு இவ்வாறு நானும் அநாதையைப் பராமரிப்பவனும் மறுமையில் மிகவும் நெருக்கமாக இருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஐந்தாவது உறுதிமொழி: மிஸ்கீன்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மிஸ்கீன்கள் என்றால் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் போதுமான அளவு வருமானத்தைப் பெறாதவர்களே மிஸ்கீன்கள். வறுமை அவர்களை செயல்பட விடாமல் முடக்கி விடுகிறது. அவர்களை நல்ல நிலையில் கொண்டு வரும் பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. முடிந்த வரையில் அவர்களுக்கு உதவி செய்வதும் நல்ல வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்குப் பதிலளிப்பதும் கடும் சொற்களைக் கொண்டு அவர்களைப் புண்படுத்தாமல் இருப்பதும் அவர்களுக்குச் செய்யும் பெரும் உபகாரமாகும்.
ஆறாவது உறுதிமொழி: மக்களிடம் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். இந்த வாசகத்தை தனித்த, பொதுவான ஒரு வாசகமாகவும் புரிந்து கொள்ளலாம். முந்தைய வாசகத்தோடு இணைந்த வாசகமாகவும் புரிந்து கொள்ளலாம். முந்தைய வாசகத்தோடு இணைந்த வாசகமாகப் புரிந்து கொண்டால் இப்படி பொருள்கொள்ளலாம்: நீங்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களுடன் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவர்களின் மனம்புண்படும் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு அவர்களிடம் பேசாதீர்கள். இந்த வாசகத்தை தனித்த, பொதுவான வாசகமாகக் கொண்டால் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்: “நீங்கள் மனிதர்கள் அனைவருடனும் நல்ல வார்த்தைகளைக் கொண்டு பேச வேண்டும்.” நம்மால் குறிப்பிட்ட மனிதர்களுக்குத்தான் செயலளவில் உபகாரம் செய்ய முடியும். ஆனால் நல்ல வார்த்தைகளைக் கொண்டு மிகப் பெரிய அளவில் சக மனிதர்களுக்கு உதவி செய்ய முடியும். வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல. அவை மிகவும் கூர்மையானவை. மிக எளிதாக உள்ளங்களை வசீகரிக்கவும் செய்கின்றன. மிக எளிதாக உள்ளங்களை காயப்படுத்திவிடவும் செய்கின்றன.
ஏழாவது வாக்குறுதி: தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஸகாத்தை முறையாக அளித்து விடுங்கள். வெறுமனே தொழுங்கள் என்று கூறப்படவில்லை. தொழுகையை அதற்கேயுரிய நிபந்தனைகளுடன் உள்ளச்சத்தோடு முறையாகத் தொழுங்கள் என்றே கூறப்பட்டிருக்கிறது. உடலோடும், உள்ளச்சத்தோடும் தொழப்படும் உயிரோட்டமான தொழுகையே இங்கு வேண்டப்படுகிறது. யூதர்களிடம் முதலில் விடுபட்டது, இந்த உயிரோட்டமான தொழுகைதான். முஸ்லிம் சமூகம் என்பது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகமாகும். அங்கு செல்வந்தர்களின் செல்வம் பெறப்பட்டு ஏழைகளுக்கும், உரியவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
இவைதாம் அவர்களிடம் பெறப்பட்ட ஆரம்பகட்ட உறுதிமொழிகள். அவர்களின் இவ்வுலக நிம்மதியும் மறுவுலக வெற்றியும் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில்தான் அடங்கியிருந்தன. ஆனால் அவர்களில் குறைவானவர்களே தாங்கள் அளித்த உறுதிமொழிகளைப் பேணினார்கள். அவற்றின் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அவர்களில் அதிகமானோர் அந்த உறுதிமொழிகளை மீறினார்கள். அவர்கள் அளித்த வாக்குறுதிகளை மீறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். மீறுவது தொடர்ந்து வரக்கூடிய அவர்களின் நிரந்தரமான பண்புபோல மாறிவிட்டது.
பிறகு அவர்களிடம் பெறப்பட்ட மற்றுமொரு வாக்குறுதி நினைவூட்டப்படுகிறது. “உங்களை நீங்களே கொல்லக்கூடாது; உங்களை நீங்களே உங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது” என்பதுதான் அது. இந்த வாக்குறுதி தவ்ராத்தில் இருக்கிறது. அந்த வாக்குறுதியை நீங்கள் ஒத்துக் கொண்டீர்கள். நீங்களே அதற்கு சாட்சியாகவும் இருக்கிறீர்கள்.
உங்களை நீங்களே கொல்லக்கூடாது, உங்களை நீங்களே உங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்பது நீங்கள் உங்கள் சகோதரர்களை கொல்லக்கூடாது, நீங்கள் உங்கள் சகோதரர்களை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதைக் குறிக்கிறது. அதாவது உங்களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினருடன் போரிட்டு அவர்களைக் கொலை செய்யக்கூடாது, அவர்களை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்பதைக் குறிக்கிறது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குறுதி. இந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றினார்களா? இல்லை, அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். நிராகரிப்பாளர்களுடன் கூட்டுசேர்ந்து தங்கள் சமூகத்தாரைக் கொலை செய்தார்கள். அவர்களைக் கைதிகளாகப் பிடித்தார்கள். அவர்களை அவர்களின் ஊர்களிலிருந்து துரத்தியடித்தார்கள். பிறகு எல்லாம் முடிந்த பிறகு யூதர்கள் நிராகரிப்பாளர்களிடம் கைதிகளாகக் இருக்கக்கூடாது என்று கூறி அவர்களே ஈட்டுத்தொகை கொடுத்து கைதிகளாகப் பிடிபட்ட யூதர்களை விடுவித்தார்கள். இந்தச் சம்பவம் அவர்களின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. அன்றைய மதீனாவிலும் யூதக் குலங்கள் நிராகரிப்பாளர்களுடன் கூட்டுசேர்ந்து கொண்டு தங்கள் இனத்தாரை கொலை செய்திருக்கின்றன, கைதிகளாகப் பிடித்திருக்கின்றன. பிறகு யூதர்கள் கைதிகளாக இருக்கக்கூடாது என்று கூறி தாங்களே ஈட்டுத்தொகை கொடுத்து விடுவித்தும் இருக்கின்றன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவர்களுக்கு மத்தியில் காணப்படும் பகைமை என்றும் முடிவுறாத அளவு கடுமையானது.
இங்கு அல்லாஹ் அவர்களிடம் காணப்பட்ட முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறான். யூதர்கள் நிராகரிப்பாளர்களிடம் கைதிகளாக இருக்கக்கூடாது என்று கூறி ஈட்டுத்தொகை கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். ஆனால் அவர்களை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களின் மீது தடை செய்யப்பட்டிருந்தே! நிராகரிப்பாளர்களுடன் கூட்டுசேர்ந்து கொண்டு உங்கள் சமூகத்தாருக்கு எதிராகப் போர் புரிவதும் அவர்களைக் கைதிகளாகப் பிடிப்பதும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருக்கவில்லையா? அப்படியெனில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு உகந்த கட்டளைகளை மட்டும்தான் பின்பற்றுகிறீர்களா? உங்கள் விருப்பத்திற்கு மாறான கட்டளைகளை நிராகரிக்கிறீர்களா? வேதத்தில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகள்தாம். அவற்றில் எவை உங்களுக்கு சாதகமானவையே அவற்றை மட்டும்தான் பின்பற்றுகிறீர்களா? உங்களுக்குப் பாதகமானவற்றை விட்டுவிடுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் உங்களின் விருப்பங்களையே பின்பற்றுகிறீர்கள். வேதத்தை அல்ல.
இந்த வசனங்களைப் படிக்கும்போது எனக்கு இன்றைய முஸ்லிம் நாடுகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஒரு பக்கம் பலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகின்றன. இன்னொரு பக்கம் இஸ்ரேலுடன் கூட்டுசேர்ந்து கொண்டு அதன் அநியாயத்திற்கு துணைபோகின்றன. அல்லாஹ் அன்றைய யூதர்களிடம் கேட்ட கேள்விகள் இன்று நம்மிடம் கேட்பவைபோல இருக்கின்றன.
இஸ்லாம் என்பது அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ள மாபெரும் அருட்கொடை. அது மனித சமூகத்திற்கான முழுமையான வழிகாட்டி. அதன் சில பகுதிகளை நிராகரிப்பது அதனை முழுமையாக நிராகரிப்பதைப் போன்றதாகும். அதில் நமக்குப் பிடித்தமானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு பிடிக்காதவற்றை விட்டுவிடுவது நயவஞ்சகத்தனம் ஆகும். அப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தின் சில போதனைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதால் கண்ணியப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான் கிடைக்கும். அவர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தங்களின் விருப்பங்களையே நடைமுறைப்படுத்துகிறார்கள். மறுமையில் அவர்கள் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் இங்கு செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவனுக்குத் தெரியாமல் அவர்கள் எதையும் செய்துவிடுவதில்லை.
அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? அவர்கள் இவ்வுலகின் இலாபங்களை மட்டுமே விரும்புகிறார்கள். அவற்றைப் பெறுவதற்காக அவர்கள் மார்க்கத்தை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை சிறிதும் குறைக்கப்படாது. அந்த தண்டனையிலிருந்து காக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
