பிடிவாதமும் பொறாமையும்

You are currently viewing பிடிவாதமும் பொறாமையும்

 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمُ اللهُ بِكُفْرِهِمْ فَقَلِيلًا مَا يُؤْمِنُونَ

2:87,88. “நாம் மூசாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப்பின் பல தூதர்களை தொடர்ந்து வரச்செய்தோம். மர்யமின் மகன் ஈசாவுக்கு தெளிவான சான்றுகளை வழங்கினோம். பரிசுத்த ஆன்மாவைக்கொண்டு அவரைப் பலப்படுத்தினோம். உங்கள் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டுவந்த போதெல்லாம் கர்வம் கொண்டீர்கள். அவர்களில் ஒரு பிரிவினரை நிராகரித்தீர்கள்; ஒரு பிரிவினரைக் கொலைசெய்தீர்கள். “எங்களுடைய உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியல்ல. அவர்களின் நிராகரிப்பினால் அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களை தூரமாக்கிவிட்டான். ஆகவே அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கைகொள்வார்கள்

ஒரு சமூகம் இறைத்தூதர்கள், அழைப்பாளர்கள் இல்லாத காலகட்டத்தில் வழிதவறிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல அது கொஞ்சம் கொஞ்சமாக நேர்வழியிலிருந்து விலகிச் செல்லலாம். ஆனால் யூதர்களின் வழிகேடு அப்படி தொடங்கியது அல்ல. அல்லாஹ் மூசாவுக்கு தவ்ராத் என்னும் வேதத்தை வழங்கினான். அவருக்குப் பிறகு அடுத்தடுத்து தூதர்களை அனுப்பிக் கொண்டேயிருந்தான். தூதர்கள் இல்லாத காலகட்டமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து அவர்களுக்கு மத்தியில் தூதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். மூசாவுக்கும் ஈசாவுக்கும் மத்தியில் ஏராளமான தூதர்கள் வந்திருக்கிறார்கள். ஈசா தெளிவான சான்றுகளைக் கொண்டு அவர்களுக்கு மத்தியில் தூதராக அனுப்பப்பட்டார்.

இத்தனை தூதர்கள் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டும் அவர்கள் ஏன் அவர்கள் வழிதவறிச் சென்றார்கள்? அவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். அவற்றுக்கு மாறான ஒவ்வொன்றையும் அவர்கள் நிராகரித்தார்கள். அவர்களின் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் கர்வம் கொண்டு அதனை நிராகரித்தார்கள். பிரச்சனை அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் தங்கள் மன இச்சைகளுக்கு மாறான எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தூதர்களில் ஒரு பிரிவினரை அவர்கள் நிராகரித்தார்கள். இன்னொரு பிரிவினரை நிராகரித்ததோடு மட்டுமில்லாமல் கொலையும் செய்தார்கள். நேர்வழியின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களைக் கொலை செய்வது கொடூரமான குற்றம்; நன்றிகெட்டத்தனத்தின் உச்சகட்டம்.

ஈசா நபி நிகழ்த்திய அற்புதங்களை அவர்கள் சூனியத்தோடு, ஷைத்தான்களோடு தொடர்படுத்தினார்கள்.  அவரை ஒரு மந்திரவாதியாகச் சித்தரித்தார்கள். ஆகவேதான் அல்லாஹ் அவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் பரிசுத்த ஆன்மா என்னும் ஜிப்ரீலைக் கொண்டு அவரை வலுப்படுத்தினோம் என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறான். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஷைத்தான்களின் துணையோடு நிகழ்த்தப்பட்டவை அல்ல; அவை அல்லாஹ் அவரிடம் அனுப்பிய ஜிப்ரீலின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்டவை.

இஸ்லாத்தை நோக்கி யூதர்கள் அழைக்கப்பட்டபோதெல்லாம் அவர்கள் கூறியது: “எங்கள் உள்ளங்கள் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளன. நீங்கள் கூறும் வீணான விசயங்கள் எதுவும் அவற்றில் நுழைய முடியாது.” இது அவர்கள் கொண்டிருந்த கர்வத்தையே காட்டுகிறது. புதிய எந்த தூதரும், புதிய எந்த மார்க்கமும் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் எங்களிடம் இருக்கின்றன. எங்களிடம் பேசி உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். விலகிச் செல்லுங்கள். கர்வத்தை ஞானமென நம்பிக் கொண்டிருக்கும் மூடர்களிடமிருந்துதான் இப்படியான வார்த்தைகள் வெளிப்படும். நீங்கள் என்ன சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறும் மனிதர்களையும் நாம் நமக்கு மத்தியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். உண்மையில் அவர்களிடம் இருப்பது கெட்டியான கர்வம்தான். அதற்கு அவர்கள் அறிவுமுலாம் பூசிக் கொள்கிறார்கள்.

இங்கு அல்லாஹ் உண்மையான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறான். எந்த அறிவுரையும் எச்சரிக்கையும் உங்களின் உள்ளத்தில் நுழையாமல் இருப்பதற்கான காரணம், நீங்கள் உங்களின் நிராகரிப்பினால், நன்றிகெட்டத்தனத்தினால் அல்லாஹ்வின் அருளைவிட்டு தூரமாகி இருக்கிறீர்கள் என்பதுதான். இத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டும், இவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் நீங்கள் நேர்வழியைவிட்டு விலகிச் சென்றதனால் உங்களின் உள்ளங்கள் முத்திரையிடப்பட்டு விட்டன. அவை நேர்வழியைப் புரிந்து கொண்டு பின்பற்றும் பக்குவத்தை இழந்து விட்டன.   

யாருக்கும் கொடுக்கப்படாத வாய்ப்புகள் நமக்குக் கொடுக்கப்படுகிறது எனில் அல்லாஹ் நம்மிடமிருந்து கூடுதல் நன்றியை எதிர்பார்க்கிறான் என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அந்த வாய்ப்புகள் நம்முடைய நன்றியுணர்ச்சியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக நம்முடைய கர்வத்தை அதிகப்படுத்தும் எனில் நாம் அல்லாஹ்வின் அருளைவிட்டு தூரமாக்கப்பட்டு விடுவோம். இப்படித்தான் யூதர்கள் அவனுடைய அருளைவிட்டு தூரமாக்கப்பட்டார்கள்.

“அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்வார்கள்” இந்த வாசகத்திற்கு இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம்.

ஒன்று: அவர்கள் மார்க்கத்தின் போதனைகளை மிகக் குறைவாகவே நம்புகிறார்கள். அவர்களின் ஈமான் என்பது வெறுமனே நாவளவில் மட்டுமே இருக்கிறது. மார்க்கத்தின் போதனைகள் அவர்களின் உள்ளங்களிலோ செயல்பாடுகளிலோ ஆதிக்கம் செலுத்துவதில்லை. தங்களின் மனம் விரும்புவதை நம்புகிறார்கள். மற்றவற்றை நிராகரிக்கிறார்கள்.

இரண்டு: அவர்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களின் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ அதே வகையான பண்புகளோடுதான் இவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

وَلَمَّا جَاءَهُمْ كِتَابٌ مِنْ عِنْدِ اللهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللهِ عَلَى الْكَافِرِينَ بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللهُ بَغْيًا أَنْ يُنَزِّلَ اللهُ مِنْ فَضْلِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ فَبَاءُوا بِغَضَبٍ عَلَى غَضَبٍ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُهِينٌ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنْزَلَ اللهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنْزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنْبِيَاءَ اللهِ مِنْ قَبْلُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

2:89-91. “அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது – அவர்கள் அதற்கு முன்னர் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக வெற்றியளிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தார்கள் – அவர்கள் அறிந்த ஒன்று அவர்களிடம் வந்தபோது அதனை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். நிராகரிப்பாளர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்கள் தங்களை விற்று எதனைப் பெற்றுக் கொண்டார்களோ அது எவ்வளவு மோசமானது!. அல்லாஹ் தன் அருளால் தான் நாடிய அடியார்களுக்கு அருளியதை அவர்கள் பொறாமையினால் நிராகரிக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.  நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தக்கூடிய தண்டனை உண்டு. “அல்லாஹ் அருளியதை நம்புங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், “எங்களுக்கு அருளப்பட்டதையே நாங்கள் நம்புவோம்” என்று கூறி அதற்குப் பிறகு வந்ததை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அது உண்மையானதாகவும் அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. நீர் கேளும்: “நீங்கள நம்பிக்கையாளர்களாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர்களை ஏன் கொலைசெய்தீர்கள்?.”

யூதர்கள் இறுதித்தூதரை, இறுதி வேதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரிகளால் துன்பம் ஏற்பட்டபோதெல்லாம் பெரும் ஆறுதலாக இருந்தது, இறுதித்தூதர் வரக்கூடிய காலகட்டம் நெருங்கி விட்டது. அவர் வந்து விட்டால் அவருடன் இணைந்து எதிரிகளை அழித்து விடலாம் என்ற எண்ணம்தான். அந்தச் சமயத்தில் மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தார் அவர்களிடமிருந்து அடிக்கடி இந்த வகையான மிரட்டலை செவியுற்றிருக்கிறார்கள். அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தார் நபியவர்களை எந்த மறுப்பும் இன்றி உடனடியாக ஏற்றுக்கொள்ள இதுவும் ஒரு காரணம்தான். யூதர்கள் எந்த நபியைக் கொண்டு நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறார்களோ அந்த நபி இவர்தாம். நாம் இந்த விசயத்தில் யூதர்களை முந்திவிட வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களை விரைந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. ஆனால் யூதர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தூதர், அந்த வேதம் அவர்களிடம் வந்தபோது அவர்தாம் இறுதித்தூதர், அதுதான் இறுதியான வேதம் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிந்து கொண்ட பின்னரும் அந்த தூதரை, அந்த வேதத்தை அவர்கள் நிராகரித்தார்கள். இப்படிப்பட்ட நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு விரட்டப்பட்டு விடுவார்கள்.

இவ்வளவு தெளிவாக அறிந்த பின்னரும் ஏன் அவர்கள் நிராகரித்தார்கள்? பொறாமையும் பிடிவாதமும்தான் அவர்களை நிராகரிக்கத் தூண்டின. தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தூதர் தங்கள் சமூகத்திலிருந்து அல்லாமல் இஸ்மாயீல் நபியின் வழிவந்த அறபுக்களிலிருந்து வந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அல்லாஹ் தான் நாடியவர்கள் மீது அருள்புரிகிறான். யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அவன் அறிவான். இறுதித் தூதுத்துவத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதை அவன் அறிவான். அவனுடைய நாட்டத்தில் யாரும் குறுக்கிட முடியாது. தாங்கள் நாடியவர்கள் மீதுதான் அல்லாஹ் அருள்புரிய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள்போலும்.  பொறாமை அவர்களின் அறிவை மழுங்கடிக்கச் செய்தது. பொறாமையினால், பிடிவாதத்தினால் அல்லாஹ் அருளிய இந்தக் குர்ஆனை அவர்கள் மறுத்தார்கள். அல்லாஹ்விடமிருந்து வந்த இந்த உண்மையை, அவர்களிடம் இருக்கின்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடிய இந்தக் குர்ஆனை பொறாமையினால், பிடிவாதத்தினால் அவர்கள் மறுத்ததனால் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்கு அவர்கள் ஆளாகி விட்டார்கள். அவர்களிடம் இருக்கக்கூடிய இந்தக் கர்வத்தினால் இழிவுபடுத்தக்கூடிய தண்டனை அவர்களை வந்தடையும்.

அல்லாஹ் அருளிய இந்தக் குர்ஆனை நம்புங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்களுக்காக அருளப்பட்ட தவ்ராத்தே எங்களுக்குப் போதுமானது” என்று கூறி அதற்குப் பிறகு வந்த, அவர்களிடம் இருக்கின்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடிய இந்த வேதத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் கேளுங்கள், “நீங்கள் தவ்ராத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பது உண்மையானால் ஏன் தவ்ராத்தின் போதனைகளை போதிக்க வந்த, அதனடிப்படையில் உங்களுக்கு வழிகாட்ட வந்த நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?” உண்மையில் அவர்கள் தவ்ராத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் இந்த தூதரை மட்டுமல்ல, எந்த தூதரையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களால் நேர்வழியின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களை சகித்துக்கொள்ள முடியவில்லை.

பொறாமை என்பது என்ன, அது என்னவெல்லாம் செய்யும் என்பதை இந்த வசனங்களிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அது உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய தடைக்கல். நாம் பொறாமையை அடையாளம் கண்டு அதனை நசுக்க முயற்சிக்கவில்லை எனில் அது நம்மை நசுக்கி விடும். இப்லீஸ் அல்லாஹ்வின் அருளைவிட்டு விரட்டப்பட்டது இந்தப் பொறாமையினால்தான். யூதர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு விரட்டப்பட்டதும் இந்தப் பொறாமையினால்தான்.

அல்லாஹ் தான் நாடியவர்கள் மீது அருள்புரிகிறான். யாருக்கு எதை கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புகளைப் பார்த்து நாம் பொறாமை கொள்வதும் அவை அழிய வேண்டும் என்று நினைப்பதும் அல்லாஹ்வின் விருப்பத்தில் தலையிடுவதைப் போன்றதாகும். 

செய்யத் குதுப் எழுதுகிறார்: “இங்கு வெளிப்படுவது யூதர்களின் நன்றிகெட்ட, சுயநலமிக்க இயல்பாகும். குலவெறி மிகுந்த குறிப்பிட்ட வட்டத்தில் இவ்வகையான இயல்பு வெளிப்படுகிறது. அவர்கள் மற்றவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை தங்களிடமிருந்து பிடுங்கப்பட்டதாக எண்ணிக் கொள்வார்கள். மனித சமூகத்துடன் சகோதரத்துவ உணர்வு கொள்ள மாட்டார்கள். இப்படித்தான் யூதர்கள் தங்களை தனித்த சமூகமாக, மனித சமூகத்திலிருந்து வேறுபட்டவர்களாக கருதி வாழ்ந்தார்கள். மனித சமூகம் துன்பத்தில் சிக்குவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். உள்ளத்தில் மற்றவர்களுக்கு எதிராக வெறுப்பையும் குரோதத்தையும் மறைத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற சமூகங்களுக்கிடையே போரையும் குழப்பத்தையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தார்கள். இவையனைத்தும் அவர்களின் சுயநலமிக்க இந்த இயல்பின் வெளிப்பாடுதான். “அல்லாஹ் தன் அருளால் தான் நாடிய அடியார்களுக்கு அருளியதை பொறாமையினால் நிராகரிக்கிறார்கள்”

وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

2:92,93. மூசா உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அதற்குப் பின்னரும் அவர் இல்லாத சமயத்தில் நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள். நீங்கள் அநியாயக்காரர்களாகி விட்டீர்கள். நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், “நாம் உங்களுக்கு வழங்கியதை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். செவிசாயுங்கள்.” ஆனால் அவர்களோ, “நாங்கள் செவியேற்றோம். மாறுசெய்தோம்” என்று கூறினார்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்றின் மீதுள்ள மோகம் அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. நீர் கூறும், “நீங்கள்  நம்பிக்கையாளர்களாக இருந்தால் இருந்தால் உங்களின் இந்த நம்பிக்கை கற்றுக்கொடுப்பது எவ்வளவு மோசமானது!” 

எங்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை நாங்கள் நம்புகிறோம். அதுவே எங்களுக்குப் போதுமானது என்று கூறிக்கொண்டிருந்த யூதர்களின் உண்மை நிலையை அல்லாஹ் இங்கு அம்பலப்படுத்துகிறான். மூசா அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். சான்றுகளை, அற்புதங்களைக் கண்ட பின்னரும் அவர்கள் அவர் தம் இறைவனிடம் தவ்ராத்தைப் பெறுவதற்காக சென்றிருந்த சமயத்தில் காளைக்கன்றை கடவுளாக்கிக் கொண்டார்கள். இதன்மூலம் அவர்கள் பெரும் அநியாயக்காரர்களானார்கள். அல்லாஹ்வுக்கு இணையாக யாரையேனும் எதையேனும் ஆக்குவது மிகப் பெரிய அநியாயமாகும்.

அதேபோன்று இன்னொரு சந்தர்ப்பம், அல்லாஹ் அவர்கள் மீது தூர் மலையை உயர்த்தி “தவ்ராத்தின் போதனைகளை முழு ஈடுபாட்டோடு செயல்படுத்துங்கள், செவிதாழ்த்திக் கேளுங்கள்” என்று அவர்களிடம் உறுதிமொழி வாங்கினான். அவர்கள் உறுதிமொழி அளித்தார்கள். ஆனால் அளித்த உறுதிமொழியைப் பின்பற்றினார்களா? “செவியேற்றோம், அதற்கு மாறாகச் செயல்பட்டோம்” என்று கூறினார்கள். அதற்கு மாறாகச் செயல்பட்டோம் என்பது அவர்கள் சொல்லளவில் கூறிய வார்த்தையல்ல. அது அவர்களின் செயல்பாட்டிலிருந்து வெளிப்பட்ட ஒன்று. அதாவது, அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டார்கள் என்பதையே இந்த வாசகம் சுட்டுகிறது. அந்தச் சமயத்தில் அவர்கள் உறுதிமொழி அளித்தார்கள். ஆனால் அந்த உறுதிமொழிக்கு மாறாக அவர்களின் செயல்பாடுகள் அமைந்து விட்டன என்ற பொருள்தான் மேற்கண்ட சொல்லாடலின் வழியாக உணர்த்தப்படுகிறது.

“அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்றின் மீதுள்ள மோகம் அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது” அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்கள் ஏன் காளைக்கன்றை வணங்கினார்கள்? அவர்களின் நிராகரிப்பினால், அவர்களின் நன்றிகெட்டத்தனத்தினால் காளைக்கன்றை வணங்குவது பிரியத்திற்குரிய ஒன்றாக அவர்களுக்கு ஆக்கப்பட்டது. அவர்களின் உள்ளம் காளைக்கன்றின் மீதுள்ள பிரியத்தினால் நிரம்பியிருக்கிறது.

அல்லாஹ்வின் மீதான நேசம், அவனை வணங்குவதில் ஏற்படும் இன்பம், அவனுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படும்போது கிடைக்கும் திருப்தியுணர்வு நம்பிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பெரும் அருட்கொடையாகும். அது இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றியையும் நிம்மதியையும் பெற்றுத் தரும் அருட்கொடை. இணைவைப்பின் மீதான நேசம், பாவங்களில் மூழ்குவதில் கிடைக்கும் ஆனந்தம் பாவிகளுக்கு வழங்கப்படும் பெரும் தண்டனையாகும். அதன்மூலம் அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்குத் தகுதியானவர்களாக மாறுகிறார்கள்.  

“நீங்கள்  நம்பிக்கையாளர்களாக இருந்தால் இருந்தால் உங்களின் இந்த நம்பிக்கை கற்றுக்கொடுப்பது எவ்வளவு மோசமானது!”  இப்படி நிராகரிக்கவும் இறைத்தூதர்களைக் கொலை செய்யவும் அளித்த வாக்குறுதிகளை மீறவும் வழிதவறிச் செல்லவும்தான் உங்களின் நம்பிக்கை உங்களுக்குக் கற்றுத் தருகிறதா? நீங்கள் உங்களுக்கு அருளப்பட்ட வேதத்தைக்கூட நம்பவில்லை. எங்களின் வேதத்தை நம்புகிறோம், எங்களின் தூதரைப் பின்பற்றுகிறோம் என்று கூறுவதெல்லாம் வெறும் பொய்தான். உங்களின் முன்னோர்கள் எப்படி இருந்தார்களோ அப்படித்தான் நீங்களும் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply