وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيْاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِنْ عِنْدِ اللهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ
2:101-103. “அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து வந்தபோது வேதம் வழங்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் எதுவும் அறியாதவர்களைப் போன்று அல்லாஹ்வின் வேதத்தை தங்களின் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். அவர்கள் சுலைமானுடைய ஆட்சிக்காலத்தில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஆனால் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். அவர்கள்தாம் மக்களுக்கு சூனியத்தையும் பாபில் நகரத்தில் இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்கள் மீது இறக்கப்பட்டதையும் கற்றுக்கொடுத்தார்கள். அந்த இரு வானவர்களும் யாருக்கேனும் இதனைக் கற்றுக்கொடுக்க நேர்ந்தால், ‘நாங்கள் மக்களுக்கு சோதனையாகவே இருக்கின்றோம். ஆகவே நீங்கள் நிராகரித்து விடாதீர்கள்’ என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிடுவார்கள். ஆயினும் அவர்கள் அவ்விருவரிடமிருந்து கணவன், மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தக்கூடிய விசயத்தைக் கற்றுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பயனளிக்காத, தீங்கிழைக்கும் விஷயத்தையே அவர்கள் கற்றுக் கொண்டார்கள். யார் இதனை வாங்கிக் கொண்டாரோ அவருக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தார்கள். தங்களை விற்று இவர்கள் பெற்றுக்கொண்டது எவ்வளவு மோசமானது! இதனை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! அவர்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனை அஞ்சி நடந்திருந்தால் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் கூலி மேலானதாக இருந்திருக்கும். இதனை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!”
யூதர்கள் தங்களிடம் உள்ள வேதமான தவ்ராத்தின் முன்னறிவிப்புப்படி இறுதித்தூதரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தைக் கொண்டு அவர் வந்தபோது அவர்கள் அவரை நிராகரித்து விட்டார்கள். அல்லாஹ்வின் வேதம் குறித்து எதுவும் அறியாதவர்களைப் போன்று அதனைப் புறக்கணித்து விட்டார்கள். எங்களுக்கு தவ்ராத் மட்டுமே போதுமானது, வேறு வேதம் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறிய அவர்கள் தவ்ராத்தையாவது பின்பற்றினார்களா என்றால் அதுவும் இல்லை. உண்மையில் அவர்கள் எந்த வேதத்தையும் பின்பற்றவில்லை. தவ்ராத்தைப் புறக்கணித்து விட்டு சுலைமானின் ஆட்சிக்காலத்தில் ஷைத்தான்கள் உருவாக்கிய சூனியத்தை அவர்கள் பின்பற்றினார்கள். சுலைமானும் சூனியத்தின் உதவியினால்தான் ஜின்களை வசப்படுத்தினார், இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டார் என்று இட்டுக்கட்டி தங்களின் பிறழ்வுக்கு சுலைமானையே ஆதாரமாக்கினார்கள். மதகுருமார்கள் வழிகெட்டால் அவர்கள் தங்களின் வழிகேட்டுக்கேற்ப மார்க்கத்தின் போதனைகளை திரித்து விடுவார்கள். தங்களின் வழிகேட்டுக்கு மார்க்கத்தின் மூலாதாரங்களிலிருந்தே ஆதாரங்களை முன்வைப்பார்கள்.
இந்த வசனத்தில் அல்லாஹ் அவர்களின் இந்த இட்டுக்கட்டலுக்குப் பதிலளிக்கிறான். சூனியத்தில் ஈடுபட்டு சுலைமான் நிராகரிக்கவில்லை, ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள் என்பதை அவன் தெளிவுபடுத்துகிறான். ஷைத்தான்கள் என்றால் மனித, ஜின் இனத்தின் தீயவர்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் நேர்வழியை விரும்பாத தீயவர்கள்தாம் இத்தகைய இழிசெயலில் ஈடுபடுகிறார்கள். இந்த வசனத்தில் அல்லாஹ் அளித்த பதிலிலிருந்து சூனியம் என்பது தெளிவான நிராகரிப்பு என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது தீய ஜின்களை திருப்திபடுத்தி அவர்களின் உதவியினால் செய்யப்படும் இழிவான ஒரு செயல்பாடு. ஒரு நபி ஒருபோதும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட மாட்டார். தங்களின் இழிசெயலை நபியின் மீது இட்டுக்கட்டி அவர்கள் இன்னும் ஒரு பாவத்தை செய்து விட்டார்கள்.
ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டது எது? குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் அது சூனியம்தான் என்று கூறுகிறார்கள். இந்த விளக்கத்தின்படி, பாபில் நகரத்தில் சூனியம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அல்லாஹ் யூதர்களை சோதிக்கும்பொருட்டு ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் சூனியத்தைக் கொடுத்து அவர்களிடம் அனுப்பி வைத்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இடத்தில், வானவர்கள் நன்மைக்காகவே படைக்கப்பட்டவர்கள், அவர்கள் எப்படி சூனியத்தைக் கொண்டு வர முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கு மௌலானா அபுல் அஃலா மௌதூதி சொல்லும் கருத்து கவனிக்கத்தக்கது. அவர் கூறுகிறார்: “லூத் நபியின் சமூகத்தாரை சோதிப்பதற்காக அழகான இளைஞர்கள் வடிவில் வானவர்கள் அனுப்பபட்டதைப் போன்றே யூதர்களைச் சோதிப்பதற்காக ஹாரூத், மாரூத் என்ற வானவர்கள் சூனியத்தைக் கொண்டு அனுப்பப்பட்டார்கள்.”
இது தொடர்பாக ஷைய்க் இப்னு ஆஷுர், மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி ஆகியோர் வேறொரு கருத்தை முன்வைக்கிறார்கள். ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டது சூனியத்தை முறியடிக்கும் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள். ஈராக்கிலுள்ள பாபில் நகரத்தில் சூனியக்கலை பரவியிருந்தபோது, அதன்மூலமாக அங்குள்ள நிராகரிப்பாளர்களான கல்தானியர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தபோது அதனை முறியடிக்கும்பொருட்டு அல்லாஹ் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இந்தக் கலையைக் கொடுத்து அனுப்பி இருக்கலாம். ஆனாலும் இந்தக் கலை முள்ளை முள்ளால் எடுப்பதுபோல சூனியத்தை முறியடிக்கும் சூனியத்தைப் போன்ற ஒரு கலையாகவே இருந்திருக்கக்கூடும். அதனை தவறாகப் பயன்படுத்தும்பட்சத்தில் அது சூனியமாகவே மாறிவிடக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கக்கூடும். அது இன்றைய நம்முடைய சூஃபியாக்களிடம் இருக்கும் மந்திரிக்கும் முறையைப் போன்ற ஒன்றாக இருந்திக்க வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் யூத மதகுருமார்களிடம் சூனியத்திற்கு எதிராக இப்படியான மந்திரிக்கும் முறையே இருந்திருக்கிறது. போகப் போக அவர்கள் அதனை சூனியமாகவே மாற்றி விட்டார்கள்.
இந்த வசனத்தின் வாசக அமைப்பை கவனித்துப் பார்க்கும்போது மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹியின் இந்தக் கருத்து வலுவானதாகவே தென்படுகிறது. ஏற்கனவே அல்லாஹ் சூனியத்தை குறிப்பிட்டு விட்டான். பிறகு அதனைத் தொடர்ந்து ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு இறக்கப்பட்டது என்று கூறுகிறான். அது முந்தையது அல்லாத வேறொன்று என்றே புரிந்துகொள்ள முடிகிறது.
அந்த இரு வானவர்களும் யாருக்கேனும் இந்தக் கலையை கற்றுக் கொடுக்க நேர்ந்தால் “நாங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு சோதனையாகவே அனுப்பப்பட்டுள்ளோம். இந்தக் கலையைக் கற்று இதனை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் நிராகரிப்பாளர்களாகி விடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்து விடுவார்கள். ஆனாலும் மக்கள் அவர்களிடமிருந்து கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் அம்சத்தை கற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு வைக்கப்பட்ட சோதனையில் அவர்கள் தோல்வியடைந்தார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவது குடும்பத்தை உடைப்பதாகும். சமூகம் என்பது குடும்பங்களின் தொகுப்புதான். குடும்பங்கள் உடைக்கப்பட்டால் சமூகம் சீரழிந்து விடும். ஷைத்தானுக்கு மிகவும் பிடித்தமான செயல்பாடு கணவன், மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதுதான். ஹதீஸில் வருகிறது, இப்லீஸ் மனிதர்களை வழிகெடுப்பதற்காக தன் படையினரை அனுப்புகிறான். ஒவ்வொருவரும் நான் இன்ன காரியம் செய்தேன், நான் இன்ன காரியம் செய்தேன் என்று அவனிடம் வந்து கூறுகிறார்கள். ஆனால் அவன் கணவன், மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தியவர்களைப் பார்த்து ‘சபாஷ் இதுதான் செய்ய வேண்டிய பணி’ என்று பாராட்டுகிறான்.
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் எந்த அம்சத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? அது குறித்து அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் அது அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியது என்பது மட்டும் தெளிவாகத் தெரிய வருகிறது. தாங்கள் கற்றுக் கொண்டது தங்களுக்குத் தீங்கிழைக்கக்கூடியது என்பதையும் மறுமை நாளில் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். தெரிந்தே அவர்கள் கீழ்மையில் விழுந்தார்கள். அவர்கள் தங்களுக்கென பெற்றுக் கொண்டது எவ்வளவு மோசமானது! உன்னதத்தை விட்டுவிட்டு கீழ்மையை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்து விட்டு சூனியத்தை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். உண்மையில் அவர்களின் இந்த வியாபாரம் மோசமான வியாபாரம்.
“அல்லாஹ்வின் அனுமதியின்றி இந்த சூனியக்காரர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைத்துவிட முடியாது” சூனியத்தின் தீங்கினைப் பற்றிப் பேசும் இந்த வசனத்தினூடே மனித வாழ்வில் செயல்படும் பொதுவான இந்த நியதியும் இடம்பெறுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய தன்மையை கொடுத்தவன் அவனே. நெருப்புக்கு சுடும் தன்மையை, தண்ணீருக்கு தாகத்தை தீர்க்கும் தன்மையை, மருந்துக்கு குணப்படுத்தும் தன்மையை அளித்தவன் அவனே. அவன் நாடினால் அந்த தன்மையை இல்லாமலாக்கி விடுவான். இங்கு ஒவ்வொன்றும் அவனுடைய நாட்டத்துடன்தான் இணைந்துள்ளது. ஒவ்வொன்றும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவனுடைய கட்டுப்பாட்டை மீறி இங்கு எதுவும் இல்லை. நம்பிக்கையாளர்களுக்கு பெரும் தைரியத்தையும் நிம்மதியையும் அளிக்கும் வாசகம் இது. அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவனுடைய பாதுகாப்பில் இருப்பவர்களை இந்த சூனியக்காரர்கள் எதுவும் செய்துவிட முடியாது. நம்பிக்கையாளர்களின் விசயத்தில் ஷைத்தான்களின் அதிகாரம் செல்லுபடியாகாது.
இன்றும் ஆன்மீகம் என்ற பெயரில் இப்படியான சூனியம் சமூகத்தில் பரவியிருப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். சூனியக்காரர்கள் ஆன்மீக உடையை அணிந்தவர்களாக, ஆன்மீகவாதிகளைப் போன்றே பேசுபவர்களாக இருக்கிறார்கள். மந்திரித்தல், ஓதிப்பார்த்தல் என்ற பெயரில் அவர்கள் செய்யும் செயல்பாடுகள் ஷைத்தான்களை திருப்திபடுத்தும் அப்பட்டமான சூனியச் செயல்பாடுகளாகவே இருக்கின்றன. அன்றைய யூதகுருமார்களைப் போன்றவர்கள் இன்று நமக்கு மத்தியிலும் இருக்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனுடைய வேதமான தவ்ராத்தின் போதனைகளின்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனிடமிருந்து கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்திருக்கும். தன் மார்க்கத்தின்படி நடப்பவர்கள் அல்லாஹ் கைவிட்டு விடுவதில்லை. அவன் மறுவுலகில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகிலும் ஏரளாமாக வழங்குகிறான். தக்வாவுடைய வாழ்க்கை பெரும் பரக்கத்துகளை கொண்டு வரும் வாழ்க்கை.
இந்த இடத்தில் சூனியம் குறித்து தெளிவுபடுத்துவது இந்த வசனத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் என்று கருதுகிறேன்.
சூனியம் என்பதற்கு அறபு மொழியில் ‘ஸிஹ்ர்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஸிஹ்ர் என்றால் மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்துதல் என்று பொருள். இது கண்கட்டி வித்தை, ஏமாற்றுதல் என்ற அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம் அறிஞர்களில் சிலர், குறிப்பாக முஃதஸிலாக்கள் இது வெறுமனே கண்கட்டி வித்தைதான், வெறும் தந்திரம்தான் என்று கூறுகிறார்கள். பெரும்பாலான அறிஞர்கள் இது இரு பொருள்களிலும் பயன்படுத்தப்படும் வார்த்தைதான், திருக்குர்ஆனில் இந்த இரு பொருள்களிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்கள். இந்த வசனம்கூட இதற்கு சான்றுதான்.
சூனியம் என்பது கிட்டத்தட்ட எல்லா சமூகங்களிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான். யூத சமூகத்தில் அது இன்னும் கூடுதலாக இருக்கிறது. யூதர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் சூனியமும் அதிகமாக இருக்கிறது. இன்றும் யூதர்கள் சூனியத்திற்குப் பின்னால்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நேரடியாக மோதுவதற்குத் திராணியற்ற சமூகத்தினர் பின்வாசல் வழியாக தங்கள் எதிரிகளை தாக்க முனைகிறார்கள். சூனியம் எப்போதும் கீழ்மைகளில் உழக்கூடிய பலவீனர்களின் ஆயுதமாகவே இருந்து வருகிறது.
சூனியம் என்பது தடைசெய்யப்பட்ட ஒரு கலை. அது பயனற்ற கல்வி என்ற வகையில் உள்ளடங்கும் ஒரு வகையான கல்வி. இதில் தீய ஜின்களே பயன்படுத்தப்படுகிறார்கள். ஜின்களை வசப்படுத்த முடியாது. சூனியக்காரர்கள் ஜின்களை வணங்குதல், அவற்றுக்காக அறுத்துப் பலியிடுதல், அல்லாஹ் தடைவிதித்த அசுத்தமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்ற ஜின்களை திருப்திபடுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டு அவற்றை வரவழைக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் என்ற வகையில் மனிதர்களிலுள்ள இந்த தீயவர்கள் ஜின்களிலுள்ள தீயவர்களோடு இணைகிறார்கள். இந்த இரு சாராரையும் ஒன்றிணைத்தே ஷைத்தான்கள் என்ற வார்த்தையை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது.
இங்கு இந்தியாவில் சூனியம் ஆன்மீகத்தோடு கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. இங்கு ஆன்மீகவாதிகள் என்று அறியப்படுபவர்கள் சித்து வேலைகளில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இங்கு சூனியத்தின் மூலமாக நிகழ்த்தப்படும் ஷைத்தானிய செயல்பாடுகள் ஆன்மீக அற்புதங்களாகக் கருதப்படுகின்றன. சூனியக்காரர்கள் ஆன்மீகவாதிகளாக அறியப்படுவது சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. அவர்கள் மனிதர்களை வழிகெடுக்கும் கேடுகெட்ட ஷைத்தான்கள். நாம் சூனியத்தை, அது ஏற்படுத்தும் பாதிப்புகளை தெளிவாக அறிந்துகொண்டால் சூனியக்காரர்களிடமிருந்து வெளிப்படும் வழக்கத்திற்கு மாறான விசித்திரமான செயல்பாடுகளை அற்புதங்களாகக் கருத மாட்டோம்.
ஆலயங்களிலும் தர்ஹாக்களிலும் நிகழும் வழக்கத்திற்கு மாறான விசித்திரமான செயல்பாடுகளுக்குப் பின்னால் ஷைத்தான்களே இருக்கின்றன என்கிறார் இப்னு தைமிய்யா. பொதுமக்கள் அந்த ஷைத்தான்களை தேவதைகள், தெய்வங்கள் என்று எண்ணி அவற்றை வழிபடுகிறார்கள். அவர் கூறுகிறார்: “ஷைத்தான் மனிதனை அவனுடைய ஆற்றலுக்கேற்ப வழிகெடுக்கிறான். யார் சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் மீது ஷைத்தான் இறங்கி அவர்களுடன் சில விசயங்களைக் குறித்துப் பேசுகிறான். அவர்கள் அவனை நட்சத்திரங்களில் வாழும் ஆன்மாக்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இவ்வாறே சிலைகளை வழிபடுபவர்களுடன் ஷைத்தான் பேசுகிறான். இவ்வாறே இறந்தவர்களை அழைப்பவர்களுடன் அவன் பேசுகிறான். அதனால்தான் அவர்கள் வீடுகளில், பள்ளிவாசல்களில் பிரார்த்தனை செய்வதைவிட அடக்கஸ்தலத்தில் பிரார்த்தனை செய்வது சிறந்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஷைத்தான்கள் சிலைகளுக்குள் நுழைந்து சிலைகளை வழிபடுபவர்களின் சில தேவைகளை நிறைவேற்றுகிறான். அவ்வாறே சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் சில தேவைகளை நிறைவேற்றுகிறான்…”
மனிதர்களைப் படைத்த இறைவனை விட்டு திருப்புவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை காரியங்களிலும் ஷைத்தான் ஈடுபடுகிறான். இங்கு ஆன்மீகம் என்ற பெயரில் காணப்படும் சூனியத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை எனில் ஷைத்தான் விரிக்கும் சதிவலையில் சிக்கி விடுவோம்.

Alhamdulillah