தொடர்ந்து வரக்கூடிய வசனங்கள் யூதர்களின் தீய நோக்கங்களை, வழிகேடுகளை, அவர்கள் முஸ்லிம்களின் மீது கொண்டிருக்கும் பொறாமையை அம்பலப்படுத்துகின்றன. அவை அவர்கள் எழுப்பும் ஆட்சேபனைகளும் ஏற்படுத்தும் குழப்பங்களும் முஸ்லிம்களை அவர்களின் மார்க்கத்திலிருந்து திருப்பி அவர்களை தங்களைப் போன்ற நிராகரிப்பாளர்களாக ஆக்குவதற்கு அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள்தாம் என்பதையும் முஸ்லிம்களும் அவர்களைப் போன்று வழிகெட்டால் மட்டுமே முஸ்லிம்களின் விசயத்தில் அவர்கள் திருப்தியடைவார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. அவர்கள் கோணல்புத்திக்காரர்கள். அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்து விட்டு சூனியத்திற்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பொறாமையை, வெறுப்பை கட்டுப்படுத்த முடியாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மறைமுகமாக தங்களின் மன அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انْظُرْنَا وَاسْمَعُوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ مَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَلَا الْمُشْرِكِينَ أَنْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِنْ خَيْرٍ مِنْ رَبِّكُمْ وَاللهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَى مِنْ قَبْلُ وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللهُ بِأَمْرِهِ إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللهِ إِنَّ اللهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
2:104-110. “நம்பிக்கையாளர்களே! ‘ராயினா’ என்று கூறாதீர்கள். அதற்குப் பதிலாக ‘உன்ளுர்னா’ என்று கூறுங்கள். காதுகொடுத்துக் கேளுங்கள். நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு. வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஏதேனும் நன்மை அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் தான் நாடியவர்களையே தன் அருளுக்கு உரியவர்களாக்குகிறான். அல்லாஹ் பேரருள் புரிபவனாக இருக்கின்றான். நாம் ஏதேனும் ஒரு வசனத்தை நீக்கினால் அல்லது மறக்கடிக்கச் செய்தால் அதைவிட சிறந்த ஒன்றை அல்லது அதைப்போன்ற ஒன்றை கொண்டு வருவோம். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீங்கள் அறியவில்லையா? வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அவனைத்தவிர வேறு எந்தப் பாதுகாவலனும் உதவியாளனும் உங்களுக்கு இல்லை என்பதையும் நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் மூசாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டதுபோன்று உங்கள் தூதரிடமும் கேட்க விரும்புகிறீர்களா? எவர் நம்பிக்கையை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியைவிட்டு பிறழ்ந்துவிட்டார். வேதக்காரர்களில் பெரும்பாலோர் நீங்கள் நம்பிக்கைகொண்டபின் எப்படியாவது உங்களை நிராகரிப்பாளர்களாக்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். சத்தியம் அவர்களுக்குத் தெளிவான பின்னரும் பொறாமையினால்தான் இவ்வாறு விரும்புகிறார்கள். அல்லாஹ் அவர்களின் விசயத்தில் தீர்ப்பளிக்கும்வரை அவர்களைக் கண்டும் காணாது மன்னித்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக சேர்த்து வைக்கும் நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”
‘ராயினா’ என்றால் எங்களைக் கொஞ்சம் கவனியுங்கள் என்று பொருள். அதாவது ‘நீங்கள் சொன்ன விசயம் எங்களுக்கு சரியாகப் புரியவில்லை. இன்னும் ஒருமுறை தெளிவுபடுத்துங்கள்’ என்று பொருள்கொள்ளலாம். நபியவர்களின் அவையில் இந்த வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. தங்களை முஸ்லிம்களாகக் காட்டிக் கொண்ட யூதர்களும் நபியவர்களின் அவைக்கு வருபவர்களாக, அடிக்கடி இந்த வார்த்தையை உச்சரிப்பவர்களாக இருந்தார்கள். இந்த வார்த்தையை கொஞ்சம் நீட்டி ‘ராயீனா’ என்று சொன்னால் ‘எங்கள் ஆடுகளை மேய்க்கும் இடையனே’ என்று பொருள் வந்து விடும். யூதர்களின் எபிரேயு மொழியில் இந்த வார்த்தைக்கு ‘மூடனே’ என்ற பொருளும் உண்டு. யூதர்கள் நபியவர்களின் அவையில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி தங்களின் மன அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இதுவரை யூதர்களை விளித்து உரையாடிய அத்தியாயம் சட்டென நம்பிக்கையாளர்களை நோக்கி உரையாடுகிறது. நபியவர்களின் அவையில் இனி ‘ராயினா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக அதே பொருளைத் தரக்கூடிய ‘உன்ளுர்னா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்று அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குக் கட்டளை இடுகிறான். இதற்குப் பிறகு இந்த வார்த்தையை பயன்படுத்தும் யூதர்கள் அப்பட்டமாக வெளிப்பட்டு விடுவார்கள். இதன்மூலம் அவர்கள் மன அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருந்த வழி நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. நேரடியாக மோதுவதற்கு திராணியற்ற இழிமனிதர்கள்தாம் மறைமுகமாக தங்களின் மன அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் நிராகரிப்பாளர்களுக்கு வேதனைமிக்க தண்டனை காத்திருக்கிறது.
இங்கு நம்பிக்கையாளர்கள் நிரந்தரமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை அல்லாஹ் முன்வைக்கிறான். அவர்கள் இருபொருள் தரக்கூடிய, சிக்கலான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதுபோன்ற கீழான வழிமுறைகளைக் கொண்டு தங்களின் மன அரிப்புகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் கல்வி போதிக்கப்படும் சபையில் கலந்து கொண்டால் அங்கும் இங்கும் கவனத்தை சிதறடிக்காமல் சொல்லப்படும் விசயங்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.
அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? ஏன் இப்படி தங்களின் மன அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பொறாமையினால்தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இந்தக் குர்ஆன் அருளப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. நம்பிக்கையாளர்களுக்கு எந்தவொரு நன்மையும் அருளப்படக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள். எந்தவொரு நன்மையும் தங்களைத்தான் முதலில் வந்தடைய வேண்டும் என்றும் அது தங்களைத் தவிர வேறு யாருக்கும் உரியது அல்ல என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். இந்த மூடர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவில்லை. அல்லாஹ்வின் அருள் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். யாருக்கு எதை வழங்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அல்லாஹ்வின் விருப்பத்தில் அடிமைகள் எப்படி தலையிட முடியும்? மனிதர்கள் இந்த விசயத்தைப் புரிந்து கொண்டால் யாரும் யார் மீதும் பொறாமை கொள்ள மாட்டார்கள். பொறாமை அறிவை மழுங்கடித்து விடும்.
மனிதர்கள் அனைவரும் அல்லாஹ் படைத்த அடிமைகள்தாம். அவர்களிடம் இருக்கும் அனைத்தும் அவன் கொடுத்தவைதாம். எந்தவொன்றாகவும் இல்லாமல் இருந்த அவர்களுக்கு அவனே வாழ்வு அளித்து எல்லாவற்றையும் கொடுத்தான். அப்படி இருக்கும் சூழலில் எப்படி அவர்கள் அவனுடைய விருப்பத்தை கேள்விக்குட்படுத்த முடியும்? அது எவ்வளவு பெரிய வரம்பு மீறல்!
அடுத்து யூதர்கள் முன்வைத்த ஆட்சேபனை ஒன்றுக்கு பதிலளிக்கப்படுகிறது. உண்மையில் அது ஆட்சேபனை அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாக்கிய குழப்பம். தவ்ராத் அல்லாஹ்வின் வேதம் என்பதை குர்ஆன் ஒப்புக் கொள்கிறது எனில் ஏன் அதன் கட்டளைகளை, போதனைகளை ரத்து செய்கிறது? அல்லாஹ் முன்னர் இறக்கி வைத்ததை பின்னர் மாற்றி விடுவானா? இது போன்ற கேள்விகளின்மூலம் திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல என்ற கருத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் அவர்கள் உருவாக்க நாடினார்கள். இதுவும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை கேள்விக்குட்படுத்துவதால் ஏற்பட்ட மோசமான விளைவுதான்.
இங்கு ‘ஏதேனும் ஒரு வசனத்தை நாம் நீக்கினால்’ என்ற வாசகத்தில் வசனம் என்பது வசனத்தில் கூறப்படும் சட்டத்தை, கட்டளையைக் குறிக்கிறது. எந்தவொரு கட்டளையை, சட்டத்தை நீக்கினாலும் அதைவிட சிறந்ததை அல்லது அதைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவது அல்லாஹ்வின் பொறுப்பு. யூதர்களுக்கு உகந்த சட்டங்களை,கட்டளைகளை அவன் தவ்ராத்தில் வழங்கி இருக்கிறான். இறுதி வேதமான குர்ஆனில் மனிதர்கள் அனைவருக்கும் உகந்த சட்டங்களை, கட்டளைகளை அவன் வழங்குகிறான். ஆகவே அவன் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட சட்டங்கள் மாற்றப்பட்டு மனிதர்கள் அனைவருக்கும் உரிய சட்டங்கள் குர்ஆனின் வழியாக வழங்கப்படுகின்றன.
நீக்குதல் என்பதற்கு வேதக்காரர்கள் உருவாக்கிய, அவர்கள் தங்கள் புறத்திலிருந்து புகுத்திய விசயங்களை நீக்குதல் என்றும் பொருள்கொள்ளலாம். தவ்ராத்திலும் இன்ஜீலிலும் அவர்களின் மதகுருமார்கள் உருவாக்கிய விசயங்களும் கலந்திருந்தன. உதாரணமாக, தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், தாங்கள் மட்டுமே சுவனத்திற்கு உரியவர்கள் என்று யூதர்கள் உருவாக்கிய பொய்கள், ஈசா இறைவனின் மகன், திரித்துவம் என்று கிருஸ்தவர்கள் உருவாக்கிய பொய்கள்… அல்லாஹ் திருக்குர்ஆனின்மூலம் இவர்கள் உருவாக்கிய பொய்கள் அனைத்தையும் நீக்கி விடுகிறான்.
அல்லாஹ் பேராற்றல் கொண்டவன். வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே சொந்தம். அவனுடைய அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. அவன் நீக்க நாடியதை நீக்கி விடுகிறான். அதற்குப் பதிலாக அவன் கொண்டுவர நாடியதை கொண்டு வருகிறான். அவனே நம்பிக்கையாளர்களுக்குப் பொறுப்பாளனாக, உதவியாளனாக இருக்கின்றான். அவனுக்குத் தெரியும் எதை நீக்க வேண்டும், எதை அளிக்க வேண்டும் என்பது. அவனுக்குத் தெரியும், எது அவர்களுக்கு அவசியமானது, எது அவர்களுக்கு அவசியமற்றது என்று.
ஒட்டுமொத்த அதிகாரமும் அவன் கையில்தான் இருக்கிறது எனில், அவன்தான் உங்களின் பாதுகாவலனாக, உதவியாளனாக இருக்கிறான் எனில் ஆட்சேபனை செய்பவர்களின் ஆட்சேபனைகளை நீங்கள் ஏன் பொருட்படுத்துகிறீர்கள்? அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை. உங்களுக்குப் பயனளிக்கவோ தீங்களிக்கவோ அவர்கள் சக்திபெற மாட்டார்கள்.
யூதர்கள் மூசாவிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு அவரைச் சங்கடப்படுத்தியதுபோன்று நீங்கள் உங்கள் தூதரிடமும் தேவையற்ற கேள்விகளைக் கேட்டு அவரை சங்கடப்படுத்த விரும்புகிறீர்களா? அவர்கள் பல அற்புதங்களைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் தங்கள் தூதரிடம் தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர் இடும் கட்டளைகளை தட்டிக் கழிக்க முயன்றார்கள். தூதர் அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடை. அவர்மூலமாகத்தான் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வந்தார்கள். ஆனாலும் தங்களுக்கு அருட்கொடையாக வந்த தூதருடன் அவர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. தேவையற்ற கேள்விகளை, ஆட்சேபனைகளை முன்வைத்து அவரைச் சிரமப்படுத்தினார்கள். விளைவாக அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஈமானை விட்டுவிட்டு நிராகரிப்பை பற்றிக் கொண்டார்கள்.
இந்த வசனம் யூதர்களின் ஆட்சேபனைகளைக் காதுகொடுத்துக் கேட்டு நபியவர்களிடம் வந்து அவற்றுக்கான பதில்களை வேண்டி நின்றவர்களை கண்டித்துப் பேசுகிறது. ஒவ்வொரு ஆட்சேபனைக்கும் பதிலளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. புரிந்து கொள்ளும் எண்ணத்துடன் முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கலாம். மன அரிப்பின் காரணமாக முன்வைக்கப்படும் ஆட்சேபனைகளுக்கு பதிலளிக்கப்படக்கூடாது. அது முடிவிலியாக நீண்டு கொண்ட செல்லக்கூடியது.
எதிரிகள் முன்வைக்கும் ஆட்சேபனைகளால் நாம் பாதிக்கப்படுகிறோம் எனில் நாம் ஈமானில் பலவீனமாக இருக்கிறோம் என்றே பொருள். அவர்களின் ஆட்சேபனைகள் அவர்களுடைய மன அரிப்பின் வெளிப்பாடுகள். அது என்றும் முடிவடையப்போவதில்லை. ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த தூதரும் அவர் வழியாக நமக்கு வழங்கப்பட்ட இந்தக் குர்ஆனும் நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய அருட்கொடைகள். எதிரிகளின் மன அரிப்புகளால் நாம் பாதிக்கப்பட்டு அந்த அருட்கொடைகளை நாம் கைவிட்டு விடுவதைவிட மிகப் பெரிய இழப்பு வேறெதுவும் இல்லை.
நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அருட்கொடையை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் நம் மீது பொறாமை கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களைப்போல நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையில் அவர்கள் நம் மீதுள்ள அக்கறையினால் இந்த ஆட்சேபனைகளை முன்வைக்கவில்லை. நம் மீது கொண்டிருக்கும் கடும் பொறாமையினால்தான் அவர்களிடமிருந்து இந்த ஆட்சேபனைகள் வெளிப்படுகின்றன. பொறாமைக்காரர்கள் நலன்விரும்பிகளின் தோற்றத்திலும் வெளிப்படுவார்கள்.
ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு உண்மை தெளிவாகவில்லையா? அப்படி அல்ல. இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொண்டார்கள். இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது அவர்களின் பொறாமைதான். பொறாமை கொண்டவர்களை நாம் ஒருபோதும் திருப்திபடுத்திவிட முடியாது. அது அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும் நோய். நமக்கு ஏற்படும் இழப்புதான் அவர்களின் மனதை ஆற்றுப்படுத்தும்.
அவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டும். அவர்களின் ஆட்சேபனைகளைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடாது. அவை அவர்களுடைய மன அரிப்பின் வெளிப்பாடுகள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஆனாலும் அல்லாஹ் அவர்களை அப்படியே விட்டுவிட மாட்டான். அவர்கள் தங்கள் பொறாமையை நசுக்கவில்லை எனில் அது அவர்களை அழித்து விடும். அவர்கள் எதிர்பாராத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். ஒரு கட்டத்தில் அவன் அவர்களின் கதையை முடித்து விடுவான். அவனால் முடியாதது என்று எதுவும் இல்லை. இங்கு அனைவரும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அவன் பேராற்றல் கொண்டவன். அவன் அவர்களைத் தண்டிக்கும்வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தை கொடுத்து வர வேண்டும். நாம் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை நோக்கிய நம்முடைய பாதையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் நமக்காக நாம் சேமித்து வைக்கும் நன்மைகள் ஆகும். அல்லாஹ் எந்தவொரு நற்செயலையும் வீணாக்கிவிட மாட்டான். நம்முடைய ஒவ்வொரு செயலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்கூலிகளைப் பெற்றுத் தரும்.
தொழுகையும் ஸகாத்தும் இன்னபிற நற்செயல்களும் அல்லாஹ்வை நோக்கிய இந்தப் பாதையில் நம்மை முன்னோக்கி செலுத்துபவை. அவை நமக்கு பொறுமையையும் மனவலிமையையும் அளிப்பவை. செயலின்மை நம்மை ஷைத்தானின் பக்கம் இட்டுச் செல்லும். அது அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களை காதுகொடுத்துக் கேட்க வைக்கும். இலக்கை நோக்கிய இந்தப் பாதையில் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும் செயல்பாடுகளைக் கொண்டே நாம் தேவையற்ற விசயங்களிலிருந்து விடுபட முடியும்.
