குர்ஆன் யாருக்கு வழிகாட்டும்?

You are currently viewing குர்ஆன் யாருக்கு வழிகாட்டும்?

அல்பகரா

அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது.  அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இது மதீனாவில் அருளப்பட்ட மிக நீளமான அத்தியாயமாகும். ஹிஜ்ரத்திற்கு முன்னர் அருளப்பட்ட அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்றும் ஹிஜ்ரத்திற்குப் பின்னர் அருளப்பட்ட அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை என்றும் கருதப்படுகின்றன. மக்காவில் அருளப்பட்ட அத்தியாயங்களின் மையக்கருவாக அகீதாவே இருந்தது. அகீதா என்பது அல்லாஹ் எப்படிப்பட்டவன், அவனுடைய பண்புகள் என்னென்ன? அவனுக்கும் அடியார்களுக்குமான தொடர்பு என்ன? அவன் அடியார்களிடம் என்ன எதிர்பார்க்கிறான்? மனித வாழ்வின் நோக்கம் என்ன? இவ்வுலக வாழ்வின் யதார்த்தம் என்ன? மறுமை நாள் என்பது என்ன? அங்கு என்னவெல்லாம் நிகழும்?… இப்படியான அடிப்படையான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கி விடுகிறது. மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்கள் தனிமனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான சட்டதிட்டங்களை, வழிகாட்டல்களை உள்ளடக்கி இருக்கின்றன. அவையும் அகீதாவோடு இணைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன.  

இந்த அத்தியாயம் அல்லாஹ்வின் பக்கமும் தூதுத்துவத்தின் பக்கமும் அழைப்பு விடுக்கிறது. நபியவர்களின் தூதுத்துவத்திற்கான வலுவான சான்று இந்தக் குர்ஆன்தான் என்பதை முறியடிக்க முடியாத ஒரு சவாலாக முன்வைக்கிறது. அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான சமூகத்தினர்’ யார்? அவர்களிடம் காணப்பட்ட என்னென்ன பண்புகளின் காரணமாக அவர்கள் அவனுடைய கோபத்திற்கு ஆளானார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புகள் என்னென்ன? ஏன் அவர்களிடமிருந்து தலைமைத்துவம் பறிக்கப்பட்டது? அவர்கள் நபியவர்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இப்படியான பல்வேறு கேள்விகளுக்கு இந்த அத்தியாயம் தெளிவான பதில்களை வழங்குகிறது. ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் அவசியமான பல்வேறு வகையான வழிகாட்டல்களையும் சட்ட திட்டங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.    

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الم

2:1. “அலிஃப், லாம், மீம்.”

இவை தனித்தனியாக வாசிக்கப்படும் எழுத்துகள் ஆகும். உரையின் ஆரம்பத்தில் இது போன்று கூறுவது அன்றைய அறபுக்களிடத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்றுதான். அதனால்தான் இது அவர்களுக்கு அந்நியமான, புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகத் தெரியவில்லை. நபித்தோழர்களில் யாரும் இது குறித்து நபியவர்களிடம் கேள்வி எழுப்பியதாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் அவர்களுக்குப் பின் வந்த தலைமுறையினர்களிடம் இந்த எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் உருவாகியது.

குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒரு தரப்பினர், “இது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத வசனங்களில் ஒன்று. இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறுகிறார்கள். குர்ஆனில் புரிந்து கொள்ள முடியாத வசனங்கள் இருப்பதாக நான் கருதவில்லை. இன்னொரு தரப்பினர், இதனைக் குறியீடுகளாகக் கருதி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். இதனை ஆதாரத்தின் அடிப்படையிலான விளக்கம் என்று கூற முடியாது. இது யூகத்தின் அடிப்படையிலான விளக்கமாகும். சிலர், “இவை அத்தியாயங்களின் பெயர்களைக் குறிக்கின்றன” என்று கூறுகிறார்கள்.

சிலர், “இது குர்ஆனின் அற்புதத்தை, அது அல்லாஹ்விடமிருந்து வந்த தனித்துவமான, அற்புதமான ஒன்று என்பதை எடுத்துரைக்கும் வழிமுறை” என்று கூறுகிறார்கள். அதாவது இந்த எழுத்துகளைக் கொண்டுதான் நீங்கள் வார்த்தைகளை உருவாக்குகிறீர்கள், பேசுகிறீர்கள், கவிதை பாடுகிறீர்கள், உன்னதமான இலக்கியங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் பயன்படுத்துகின்ற அதே எழுத்துகளைக் கொண்டுதான் குர்ஆனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகம் கொண்டிருந்தால், இது மனிதர்களால் உருவாக்க முடியுமான ஒன்றுதான் என்று கூறினால் இது போன்ற ஒன்றை உருவாக்கிக் காட்டுங்கள் என்ற சவாலை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் கருத்தே என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாகத் தெரிகிறது.

இது தொடர்பாக மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி குறிப்பிடும் இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீயின் ஆய்வும் கவனிக்கத்தக்கது. அதனை அறிய விரும்புபவர்கள் ததப்புருல் குர்ஆனை வாசியுங்கள்.           

ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ

2:2. “இது வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இது இறையச்சம் உடையவர்களுக்கு வழிகாட்டியாகும்.”

இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வேதமாகும். இது அவனுடைய புறத்திலிருந்து அருளப்பட்டதுதான் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இது அவனுடைய தண்டனையை அஞ்சக்கூடியவர்களுக்கு வழிகாட்டியாகும்.

ஆரம்ப வசனமே ‘இதுதான் அவன் புறத்திலிருந்து வழிகாட்டியாக வந்த வேதம்’ என்பதை உறுதியான குரலில் தெளிவான பிரகடனமாக முன்வைக்கிறது. அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் நம்பிக்கையாளர்கள் முன்வைத்த “எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக” என்ற பிரார்த்தனைக்குப் பதிலளிப்பதுபோல அமைந்திருக்கிறது இந்த வசனம். இதுதான் அந்த நேரான வழி. 

இது யாருக்கு வழிகாட்டும்? யார் அல்லாஹ்வின் வழிகாட்டலை விரும்புகிறார்களோ அவர்களுக்கு வழிகாட்டும். இது மனிதர்கள் அனைவருக்கும் வழிகாட்டிதான். ஆனாலும் யார் அவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க விரும்புவார்களோ அவர்கள்தாம் இதிலிருந்து பயனடைவார்கள்.

அவனுடைய தண்டனையிலிருந்து எப்படி தப்பிப்பது?

அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதன் வழியாகவே அவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். அவன் எதையெல்லாம் செய்யுமாறு கட்டளை இட்டுள்ளானோ அவற்றை நிறைவேற்றுவதன் வழியாக, அவன் எவற்றில் இருந்தெல்லாம் விலகி இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளானோ அவற்றிலிருந்து விலகி இருப்பதன் வழியாக அவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும். இதுதான் தக்வா.

தக்வா என்பது பேணுதலான வாழ்க்கை.

தக்வா என்பது அவனுடைய கட்டளைகளுக்கு, அவன் விதித்த வரம்புகளுக்கு உட்பட்ட வாழ்க்கை.

தக்வா என்பது அவன் அளித்த வழிகாட்டல்களுக்கு உட்பட்டு வாழும் வாழ்க்கை. 

உமர் இப்னு கத்தாப் (ரலி) உபை இப்னு கஅபிடம் கேட்டார்: ‘தக்வா’ என்றால் என்ன? பதிலளிக்கும்விதமாக கஅப் (ரலி) உமரிடம் கேட்டார்: “நீங்கள் இருபுறமும் முட்கள் சூழ்ந்த பாதையில் சென்றுள்ளீர்களா?” அதற்கு உமர், “ஆம். நான் சென்றுள்ளேன்” என்றார். அவர், “அந்தப் பாதையில் எப்படிச் செல்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு உமர், “என் ஆடைகளை கெண்டைக்காலுக்கு மேலுயர்த்தி முட்களில் பட்டுவிடாதவாறு பேணுதலாகச் செல்வேன்” என்றார். அதற்கு அவர், “அப்படித்தான் தக்வாவும்” என்றார்.

இந்தக் குர்ஆன் அவன் பக்கம் செல்லக்கூடிய, அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரக்கூடிய நேரான வழியைக் காட்டுகிறது. இது மனித சமூகத்திற்கு அவன் புறத்திலிருந்து வந்த பேரருளாக இருக்கிறது.

இறைவனை அஞ்சக்கூடிய அந்த நம்பிக்கையாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் அடையாளங்கள் என்னென்ன? அவர்கள் கொண்டிருக்கும் எந்த வகையான பண்புகள் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன?    

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏

2:3. “அவர்கள் அல்லாஹ் அறிவித்த மறைவான விசயங்களை நம்புவார்கள்; தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுவார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.”

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள الْغَيْبُ என்ற வார்த்தைக்கு நம்முடைய பார்வைக்குத் தென்படாத மறைவான விசயங்கள் என்று பொருள் கொள்ளலாம். நம்மால் அறிந்து கொள்ள முடியாதது, இரகசியமானது  ஆகிய அர்த்தங்களிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இங்கு நம் பார்வைக்குத் தென்படாத, நம் அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாத விசயங்களும் இருக்கின்றன. அவை நம்முடைய அறிவால், புலனுறுப்புகளால் அறிந்து கொள்ள முடியாதவை. அவற்றை அல்லாஹ் தூதுத்துவத்தின் வழியாக நமக்கு அறிவித்திருக்கிறான். அவை தூதுத்துவத்தின் வழியாகவே அறியப்படுகின்றன. அவை வேறு எந்த மூலத்தின் வழியாகவும் அறியப்படுவதில்லை. அவற்றை அறிவதற்கான எந்த மூலமும் மனிதர்களிடம் இல்லை. நம்பிக்கையாளர்கள் தூதுத்துவத்தின் வழியாக அல்லாஹ் அறிவித்த மறைவான விசயங்களை நம்புகிறார்கள்.

அல்லாஹ் எப்படிப்பட்டவன்? அவனை எப்படி அறிவது? அவன் மனிதனை எந்த நோக்கத்திற்காக படைத்தான்? அவனுக்கும் படைப்புகளுக்குமான தொடர்பு என்ன? வாழ்வு என்பது என்ன? மரணம் என்பது என்ன? சொர்க்கம் என்பது என்ன? நரகம் என்பது என்ன? மறுமை நாள் எப்போது நிகழும்? இவை போன்ற கேள்விகளுக்கு மனிதர்களால் பதிலளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் பதில்களும் வெறும் கணிப்புகளாகத்தான் இருக்கும். அவர்களைப் படைத்த இறைவன்தான் அவர்களுக்கு இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க முடியும். அவன் தூதுத்துவத்தின் வழியாக மனித மனதில் தோன்றும் இவை போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு தெளிவான, திருப்தியான பதில்களை அளிக்கிறான். இயல்பு நிலையில் இருக்கும் உள்ளங்கள் அந்த பதில்களைக் கொண்டு தெளிவடைகின்றன, திருப்தியடைகின்றன.

உலகியல்வாதிகள் தங்கள் பார்வைக்குத் தென்படாத, தங்கள் அறிவால் புரிந்து கொள்ள முடியாத எதையும் நம்புவதில்லை. அவற்றை அறிந்து கொள்வதற்கான எந்த வழிமுறையும் தங்களிடம் இல்லை என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ளாமல் அவையே இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் அவர்களின் இந்த நம்பிக்கையே மூட நம்பிக்கை. இதுதான் அவர்களையும் நம்பிக்கையாளர்களையும் வேறுபடுத்தும் அடிப்படையான அம்சம். இதுதான் நம்பிக்கையாளர்களை தனித்துவப்படுத்திக் காட்டும் முதலாவது பண்பு.    

“தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுவார்கள்”

  وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ என்ற வாசகத்தில் ‘இகாமத்’ என்ற சொல்லுக்கு எந்தக் கோணலும் இல்லாத வகையில் நேர்ப்படுத்துதல், சீர்படுத்துதல் என்று பொருள். தொழுகையை உயிரோட்டத்துடனும் உள்ளச்சத்துடனும் அதற்கே உரிய நிபந்தனைகளுடனும் நிறைவேற்றுதல் என்று பொருள் கொள்ளலாம். தொழுகையை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குவது, அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தோடு தொழுவது, நபியவர்கள் கற்றுத் தந்த முறைப்படி தொழுவது, அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது, கூட்டாகத் தொழுவது என அனைத்தும் இந்த வார்த்தைக்குள் அடங்கி விடும்.

“நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்”

தங்களிடம் இருக்கும் செல்வம் தங்கள் முயற்சியினால், உழைப்பினால், திறமையினால் கிடைத்தது அல்ல; அது அல்லாஹ் கொடுத்த பெரும் கொடை என்பதை அவர்கள் உணர்வார்கள். இந்த உணர்வுதான் அவர்களை அவனுடைய பாதையில், அவன் காட்டிய வழியில் செலவு செய்யத் தூண்டுகிறது. இதுதான் பேராசையிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் மட்டுமீறிய சுய நலனிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறது. இதுவும் அவர்களையும் உலகியல்வாதிகளையும் வேறுபடுத்தும் அம்சம்தான். உலகியல்வாதிகள் தங்களுக்குக் கிடைத்தவை அனைத்தும் தங்கள் முயற்சியின், உழைப்பின், திறமையின் விளைவு என்று நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் நல்வழியில் செலவு செய்யத் தயங்குகிறார்கள். பேராசையும் மட்டுமீறிய சுயநலமும் அவர்களை செலவு செய்ய விடாமல் தடுக்கின்றன.  

இங்கு அல்லாஹ் சிலருக்கு அதிகமாக வழங்குகிறான். சிலருக்கு அளவோடு வழங்குகிறான். சிலருக்கு குறைவாக வழங்குகிறான். அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொன்றும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. நோக்கமின்றி எந்தவொன்றும் அவனிடமிருந்து வெளிப்படாது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு வழங்கப்பட்டதை அவனுடைய பாதையில் செலவு செய்யுமாறு வேண்டப்படுகிறார்கள். அவன் அளித்த அருட்கொடையை அவன் காட்டிய நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற உணர்வுதான் நம்பிக்கையாளர்களை கரைந்து விடுமோ என்ற பயம் இன்றி செலவு செய்யத் தூண்டுகிறது.        

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏

2:4. “அவர்கள் உமக்கு அருளப்பட்டதையும் உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறார்கள். மறுமையின் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.”

நபியே! அவர்கள் உமக்கு அருளப்பட்ட வேதமான குர்ஆனையும் உமக்கு முன்னர் இருந்த தூதர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும் நம்புகிறார்கள். அவர்கள் தூதர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதில்லை. நாங்கள் எங்கள் சமூகத்தாருக்கு வந்த தூதரை மட்டுமே நம்புவோம், மற்றவர்களை நம்ப மாட்டோம் என்றோ நாங்கள் தூதர்களில் சிலரை மட்டுமே நம்புவோம், சிலரை நம்ப மாட்டோம் என்றோ அவர்கள் கூறுவதில்லை.

குர்ஆன் மீது நம்பிக்கை கொள்வது என்பது நபியவர்களின் தூதுத்துவம் மனித சமூகத்திற்கு மிக அவசியமானது என்பதை ஏற்றுக் கொள்வதாகும். அதன் வழியாகவே மனிதர்கள் தங்களுக்கான வழிகாட்டலை இறைவனிடமிருந்து பெற முடியும். அதைத் தவிர மனிதர்கள் இறைவனின் வழிகாட்டலை, அவனுடைய திருப்தியைப் பெறுவதற்கான வேறு வழிகள் இல்லை. “நாங்கள் ஒரு தூதரை நம்ப வேண்டும் என்று அவசியம் இல்லை, எங்களின் ஆய்வின் வழியாக இறைவனை, அவன் எங்களைப் படைத்த நோக்கத்தை கண்டடைவோம்” என்று கூறுபவர்கள் ஒரு கட்டத்தில் களைப்படைந்து எதுவும் புரியாத சூன்ய வெளியில் சிக்கிக் கொள்வார்கள்; ஆன்மீகத்தின் பெயரால் தாங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுப்பார்கள்.  

இன்னொரு தரப்பினர், தூதுத்துவம் அவசியம்தான். ஆனால் அது எங்களின் சமூகத்தாருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும். எங்களிடம் வந்த தூதர்களைத் தவிர, எங்களிடம் இருக்கும் வேதத்தைத் தவிர நாங்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள்.  யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்த தரப்பைச் சேர்ந்தவர்கள்தாம்.

நம்பிக்கையாளர்களின் ஈமான் விசாலமானது. அது இனவாதத்தினாலோ இன்னபிற குறுங்குழு வாதத்தினாலோ பாதிக்கப்படாதது. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர்கள் அனைவரையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

“மறுமையின் மீது அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்”

இந்தக் குர்ஆனின் வழியாக, மறுமை நாள் நிகழ்ந்தே தீரும் என்பதையும் அங்கு மனிதர்கள் இந்த உலகில் செய்த செயல்பாடுகளுக்காக கேள்வி கேட்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு சுவனத்திற்கோ நரகத்திற்கோ உரியவர்களாக ஆக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வார்கள். அவர்களின் இந்த நம்பிக்கை எவ்வித சந்தேகத்திற்கும் இடம்கொடுக்காத உறுதியான நம்பிக்கை. இந்த நம்பிக்கையே மறுமையை முன்னிறுத்தி வாழக்கூடியவர்களாக அவர்களை ஆக்குகிறது. அவர்கள் அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களில் மூழ்கி விடுவதில்லை. இவ்வுலக வசதிகளை, இன்பங்களை அடைவது மட்டும்தான் இலக்கு என்று வாழ்வதில்லை. அவர்கள் நிலையான மறுமையின் இன்பங்களை வேண்டியவர்களாக, இறைவனின் திருப்தியை அடைய வேண்டும் என்பதற்காக செயல்படுகிறார்கள். ஆகவே அவர்கள் உடனுக்குடன் பலன்களை எதிர்பார்ப்பதில்லை. தங்களின் செயல்பாடுகள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்ற எண்ணத்தோடுதான் அவர்கள் செயல்படுகிறார்கள்.

மறுமையின் விசயத்தில் நம்பிக்கையாளர்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கை அவர்களை தனித்துவப்படுத்திக் காட்டும் அடிப்படையான அம்சங்களில் ஒன்றாகும்.    

أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

2:5. “இவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். இவர்கள்தாம் வெற்றியாளர்கள்.”

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள் கொண்ட இந்த நம்பிக்கையாளர்களே தங்கள் இறைவனிடமிருந்து வந்த சீரான மார்க்கத்தில் நிலைத்திருக்கிறார்கள். அவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறக்கூடியவர்கள்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

This Post Has One Comment

  1. Ibrahim

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
    பாய் சூரா ஜின் உடைய தப்ஸீரை உங்களது Youtube pageல் விரைவில் பதிவிடுகிறேன் என்று சொன்னீர்கள்.அது தற்போது வரை பதிவேற்ப்படாமல் இருக்கிறது.தயவு செய்து ஜின் சூராவின் தப்ஸீரை பதிவேற்றம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.ஜஸாக்குமுல்லாஹூ ஹைர்….

Leave a Reply