இப்ராஹீமின் பிரார்த்தனை

You are currently viewing இப்ராஹீமின் பிரார்த்தனை

யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய மூவரும் ஒன்றிணையும் புள்ளி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம். இப்ராஹீமின் மகனான இஸ்மாயிலிடமிருந்து அறபுக்கள் உருவாகிறார்கள். அவரது இன்னொரு மகனான இஸ்ஹாக்கிடமிருந்து யூதர்கள் உருவாகிறார்கள். யூதர்கள் தங்களை இப்ராஹீமின் வாரிசு என்றும் அதனடிப்படையில் தூதுத்துவம் தங்கள் சமூகத்தாருக்கு மட்டுமே உரியது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கிருஸ்தவர்களும் தங்களை இப்ராஹீமின் வழிவந்தவர்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இணைவைப்பாளர்கள் தாங்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து வரும் வசனங்கள் இறைத்தூதர் இப்ராஹீம் குறித்தும் அவரும் அவரது மகன் இஸ்மாயீலும் சேர்ந்து கட்டியெழுப்பிய கஅபா என்னும் பழமையான ஆலயம் குறித்தும் அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் செய்த பிரார்த்தனை குறித்தும் அவர்களும் அவர்களுக்குப் பிறகு வந்த தூதர்களான யஅகூபும் இஸ்ஹாக்கும் பின்பற்றிய இஸ்லாம் குறித்தும் பேசுகின்றன. அவற்றில் இந்த மூன்று தரப்பினருக்கும் போதுமான, தெளிவான பதில்கள் இருக்கின்றன.  தங்கள் முன்னோர்களைக் கொண்டு பெருமிதம் கொள்வது எந்தப் பலனையும் தராது. ஒவ்வொருவரும் அவர்கள் செய்த செயல்கள் குறித்தே விசாரிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையான விதி தெளிவுபடுத்தப்படுகிறது. இவற்றினூடே யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தாம் அவரின் உண்மையான வாரிசுகள் என்ற கருத்தும் தெளிவாக வெளிப்பட்டு விடுகிறது. 

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

2:124. “இப்ராஹீமை அவரது இறைவன் பொறுப்புகளைக் கொடுத்து சோதித்ததை நினைவுகூருங்கள். அவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றிக் காட்டினார். அவன், “நாம் உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகின்றேன்” என்றான். அதற்கு அவர், “என் சந்ததிகளிலிருந்தும் தலைவர்களை ஏற்படுத்துவாயா” என்று கேட்டார். “என் வாக்குறுதி அநியாயக்காரர்களைச் சாராது” என்று அவன் கூறினான்.

அல்லாஹ் இப்ராஹீமை தன்னுடைய தூதுத்துவத்திற்காக தேர்ந்தெடுத்துக் கொண்டது அவன் அவருக்கு வழங்கிய மிகப் பெரிய கொடை. அது அவருக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்த ஒன்று அல்ல. அதற்கு முன்பு பல்வேறு சோதனைகளை அளித்து அவன் அவரை சோதித்தான். அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியாத கடினமான சோதனைகள் அவை. திருக்குர்ஆனில் பல இடங்களில் அந்தச் சோதனைகளை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். தன் சமூகத்தாருக்கு எதிராக தனி மனிதராக நின்று போராடினார். அவர்கள் அவரை நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசியபோதும் தன் கொள்கையிலிருந்து அவன் பின்வாங்கவில்லை. அல்லாஹ் கூறினான் என்பதற்காக உணவும் நீரும் இல்லாத பாலைவனத்தில் தன் குடும்பத்தாரை விட்டுவிட்டுச் சென்றார். தள்ளாத வயதில் கிடைத்த ஆசை மகனை அல்லாஹ் கட்டளை இட்டான் என்பதற்காக அறுக்கத் துணிந்தார். இப்படி பல்வேறு கட்டளைகளை அல்லாஹ் அவருக்கு இட்டான். அவர் எந்தத் தயக்கமும் கேள்வியும் இன்றி அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றினார்.

இந்தச் சோதனைகள் எதற்காக? பெரும் பணியை நிறைவேற்றப் போகும் அவரை தயார்படுத்துவற்காகவே இந்தச் சோதனைகள். சோதனைகளே ஒரு மனிதனைப் பண்படுத்துகின்றன. அல்லாஹ் ஒரு மனிதருக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கப் போகிறான் எனில் அப்படியே அவன் அவருக்கு வழங்கி விடுவதில்லை. சோதனைகளைக் கொண்டு அவரைப் பண்படுத்தி அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் அளவுக்கு அவரை தயார்படுத்திய பிறகே அவருக்கு அந்தப் பொறுப்பை அவன் வழங்குகிறான்.

“நான் உம்மை மனிதர்களுக்கு தலைவராக, வழிகாட்டியாக ஆக்கப் போகின்றேன்” என்று அவன் கூறியபோது மனித இயல்பு அவரை தழுவிக் கொண்டது. தனக்குக் கிடைத்தது தன் சந்ததிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மனிதர்களுக்கேயான இயல்பான விருப்பம்தானே இது! இந்த தலைமைத்துவம், வழிகாட்டும் பொறுப்பு தன் சந்ததிகளுக்கும் கிடைக்குமா? என்று அவர் கேட்டார். “நான் உமக்கு அளிக்கும் இந்த வாக்குறுதி அநியாயக்காரர்களுக்குப் பொருந்தாது” என்று அவன் கூறினான்.

இப்ராஹீமிடமிருந்து மனித சமூகத்திற்கு வழிகாட்டும் பெரும் சமூகங்கள் உருவாகும் என்பதை இந்த வாசகத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெறுமனே இப்ராஹீமின் வாரிசுகள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர்களால் அந்தப் பொறுப்பை பெற்றுவிட முடியாது. அவரது பரம்பரைத் தொடரில் அநியாயக்காரர்களும் இருப்பார்கள் என்பதையும் இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அநியாயக்காரர்கள் என்றால் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்தி அல்லது அல்லாஹ்வை மறுத்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைப்பவர்களையும் குறிக்கும். மற்றவர்கள் மீது அநீதி இழைப்பவர்களையும் குறிக்கும். இணைவைப்பாளர்களும் நிராகரிப்பாளர்களும் மிகப் பெரிய அநியாயக்காரர்கள் ஆவர்.   

இப்ராஹீமுக்கு இரண்டு மகன்கள். ஒன்று இஸ்மாயீல், இன்னொன்று இஸ்ஹாக். இருவருக்கும் அல்லாஹ் தூதுத்துவ பொறுப்பை வழங்கினான். இஸ்மாயில் நபியிடமிருந்தே அறபுக்கள் உருவாகிறார்கள். அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரே முஹம்மது (ஸல்) அவர்கள் மனித சமூகத்திற்கு உரிய இறுதித்தூதராக அனுப்பப்படுகிறார்கள். இஸ்ஹாக் நபியிடமிருந்து யூதர்கள் உருவாகிறார்கள். அவருக்குப் பிறகு தொடர்ந்து தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். தூதர்கள் இல்லாத காலகட்டமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து அவர்களுக்கு மத்தியில் தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இங்கு அல்லாஹ் ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விட்டான். வெறுமனே அவரது பரம்பரையில் நீங்கள் இருப்பதனால் மட்டும் சிறப்புகளை, தலைமைத்துவத்தை பெற்றுவிட முடியாது. இதன்மூலம் யூதர்களும் இணைவைப்பாளர்களும் அல்லாஹ் அளித்த இந்த வாக்குறுதியிலிருந்து நீங்கி விடுகிறார்கள்.     

وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

2:125. “நாம் கஅபா என்னும் ஆலயத்தை மனிதர்கள் ஒன்றுகூடும் மையமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கியதையும் நினைவு கூருங்கள். இப்ராஹீம் நின்ற இடத்தை தொழுமிடமாக ஆக்குமாறு நாம் கட்டளையிட்டோம். என் வீட்டை தவாஃப் செய்பவர்கள், இஃதிகாஃப் இருப்பவர்கள்,  ருகூஃ செய்பவர்கள், சிரம்பணிபவர்கள் ஆகியோருக்காக தூய்மையாக வைத்திருங்கள் என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்.”

இந்த வசனத்தில் அல்லாஹ் கஅபாவைக் குறித்து இரண்டு பண்புகளைக் குறிப்பிட்டுள்ளான். ஒன்று ‘மஸாபா’. இரண்டு, பாதுகாப்பான இடம். மஸாபா என்றால் திரும்பும் இடம் என்று பொருள். ஒரு முறை அங்கு சென்று வந்தவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். அங்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். அந்த வகையில் அது நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடும் மையமாக, தங்கள் தொழுகையில் முன்னோக்கும் கிப்லாவாக இருக்கிறது. போர்களாலும் வழிப்பறிக் கொள்ளைகளாலும் அறபுத் தீபகற்பம் பாதுகாப்பற்ற இடமாக இருந்தபோதும் கஅபாவின் காரணமாக மக்கா பாதுகாப்பான இடமாக இருந்தது.  அல்லாஹ்தான் அதனை பாதுகாப்பான இடமாக ஆக்கினான்.

இப்ராஹீம் நின்ற இடம் தொடர்பாக குர்ஆன் விரிவுரையாளர்களிடையே இரு கருத்துகள் காணப்படுகின்றன. ஒன்று, கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம் நின்ற கல். இன்னொன்று, அது ஒட்டுமொத்த கஅபாவையும் குறிக்கும். அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இரண்டாவது கருத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார். அதுதான் விசாலமான, முந்தைய வாசகத்தோடு ஒத்திசைந்து செல்லும் கருத்து என்கிறார்.  

தவாஃப் செய்வது என்பது கஅபாவைச் சுற்றி வருவதாகும். இது கஅபாவில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒரு வழிபாடு. இந்த வழிபாட்டை வேறு எங்கும் செய்யக்கூடாது. இஃதிகாஃப் என்பது தற்காலிகமாக உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகி பள்ளிவாசலில் தங்கியிருந்து அல்லாஹ்வை வழிபடுவதாகும். இந்த வழிபாடு கஅபாவில் மட்டுமல்ல எல்லா பள்ளிவாசல்களிலும் செய்யப்படலாம்.  ருகூஃ செய்பவர்கள், சிரம்பணிபவர்கள் என்பது தொழுபவர்களைக் குறிக்கும். தவாஃப் செய்பவர்களுக்காக, இஃதிகாஃப் இருப்பவர்களுக்காக, தொழுபவர்களுக்காக இந்த வீட்டை தூய்மையாக வைக்கும்படி அல்லாஹ் இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் கட்டளையிட்டான். தூய்மையாக வைத்திருங்கள் என்றால் அல்லாஹ் மட்டுமே அங்கு வணங்கப்பட வேண்டும், அவன் மட்டுமே அங்கு நினைவுகூரப்பட வேண்டும், அவனைத் தவிர வேறு யாரும் அங்கு வணங்கப்படக்கூடாது, அவனுடைய கட்டளைகளுக்கு மாறான எந்தச் செயலும் அங்கு நடைபெறக்கூடாது என்று பொருள். அவர்களுக்குப் பிறகு இந்த இல்லத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு அவர்களின் வழித்தோன்றல்களைச் சென்றடைகிறது. ஆனால் மக்காவாசிகள் அந்த இல்லத்தை சிலைகளைக் கொண்டு நாசம் செய்து விட்டார்கள். அவன் மட்டுமே வணங்கப்பட அந்த இல்லத்தில் அவனுக்கு இணையாக போலியான தெய்வங்களை ஏற்படுத்தி அந்த இடத்தை களங்கப்படுத்தினார்கள். அவனுடைய மார்க்கத்திற்கு முரணான பல்வேறு காரியங்களை அங்கு செயல்படுத்தினார்கள்.

நபியவர்களின்மூலமாக அல்லாஹ் தன் இல்லத்தை மீண்டும் தூய்மைப்படுத்தினான். அங்கிருந்த சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அங்கு அவனுடைய மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகள் அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டது. அந்த இல்லத்தை நெருங்கக்கூடாது என்று இணைவைப்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நபியவர்களுக்குப் பிறகு அந்த இல்லத்தை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பு முஸ்லிம்களைச் சென்றடைகிறது.       

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ

2:126. “என் இறைவனே! நீ இந்த நகரத்தை பாதுகாப்பான நகரமாக ஆக்கி வைப்பாயாக. இங்கு வசிப்பவர்களில் யார் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு எல்லா வகையான விளைச்சல்களிலிருந்தும் உணவளிப்பாயாக” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூருங்கள். அதற்கு அவன் கூறினான்: “நான் நிராகரிப்பாளனையும் சிறிது காலம்வரை அனுபவிக்கச் செய்வேன். பின்னர் அவனை நரக வேதனையில் தள்ளி விடுவேன். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.”

இப்ராஹீம் நபி அல்லாஹ்வுடைய கட்டளையின்படி தம் குடும்பத்தாரை மக்காவில் அவனுடைய இல்லத்திற்கு அருகில் குடியமர்த்தினார். விவசாய விளைநிலங்கள் இல்லாத வறண்ட பாலைவனம் அது. போர் செய்வதும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவதும்தான் அதனைச் சுற்றியிருந்தவர்களின் தொழிலாக இருந்தது. ஆகவே அது வாழ்வாதார வசதியற்ற, பாதுகாப்பற்ற பூமியாக இருந்தது. அவர் அல்லாஹ்விடம் இரண்டு பிரார்த்தனைகளை முன்வைத்தார். ஒன்று, என் இறைவனே! இந்த நகரத்தை நீ பாதுகாப்பான நகரமாக ஆக்குவாயாக. இரண்டு, விளைநிலங்கள் அற்ற இந்த நகரத்தில் எல்லா வகையான விளைச்சல்களையும் கொண்டு வந்து சேர்ப்பாயாக.

அல்லாஹ் இந்த இரு பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொண்டான் என்பதை அந்த நிலத்தின் வரலாற்றை அறிந்திருக்கின்ற ஒவ்வொருவராலும் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மக்கா பாதுகாப்பான நகரமாக ஆனது.  எதிரிகள்கூட அங்கு வரம்புமீறத் துணியவில்லை. வரம்புமீறத் துணிந்த ஓரிருவரும் முற்றிலுமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள். அப்ரஹாவின் சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். விளைநிலங்களோ உற்பத்தியோ அற்ற மக்காவில் எல்லா வகையான பழங்களும் விளைச்சல்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு வகையில் எல்லா வகையான விளைச்சல்களும் அங்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. வறண்ட அந்த பூமி கஅபாவின் காரணமாக எப்போதும் செழிப்பாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. கஅபா உலகின் ஒவ்வொரு திசையிலிருந்தும் மனிதர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது.      

இப்ராஹீம் இந்த பிரார்த்தனையில் நம்பிக்கையாளர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டார். “என் சந்ததியினருக்கும் தலைமைத்துவ பொறுப்பை வழங்குவாயாக” என்ற முந்தைய அவரது பிரார்த்தனைக்கு அல்லாஹ் அளித்த பதிலிலிருந்து அவர் விழிப்படைந்திருப்பார்போலும். ஆகவே இந்த முறை தம்முடைய பிரார்த்தனையில் நம்பிக்கையாளர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டார். அல்லாஹ் அவருக்கு இங்கு செயல்படும் தன் நியதியைத் தெளிவுபடுத்தினான்: இங்கு நிராகரிப்பாளர்களுக்கும் நான் வழங்குவேன். சிறிது காலம்வரை நான் அவர்களை இங்கு அனுபவிக்கச் செய்வேன். பிறகு நரக வேதனையின் பக்கம் அவர்களைத் தள்ளிவிடுவேன்.

உலகியல் வசதிகள் நம்பிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன, நிராகரிப்பாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. ஒருவர் பெற்றிருக்கும் உலகியல் வசதிகள் அவர் அல்லாஹ்வின் திருப்தியை, அவனிடத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதற்கான அடையாளம் அல்ல. அவற்றின் அடிப்படையில் ஒருவரின் கண்ணியம் தீர்மானிக்கப்படக்கூடாது.

இங்கு வழங்கப்படும் வசதிகள் அற்பமானவை. அவை நிலையானவை அல்ல. எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் அவை மனிதர்களிடமிருந்து பறிக்கப்படலாம். நிராகரிப்பாளர்கள் உலகியல் வசதிகளைப் பெற்றிருந்தாலும் மறுமையில் அவர்கள் கடும் தண்டனையைப் பெறுவார்கள்.   

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

 2:127-129. “இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறையில்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த சமயத்தை நினைவு கூருவீராக. அப்போது அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இந்தப் பணியை ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ செவியேற்பவனகாவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! எங்களை உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக. எங்கள் சந்ததிகளிலிருந்து உனக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு சமூகத்தை ஏற்படுத்துவாயாக. நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக. எங்களை மன்னித்து விடுவாயாக. நிச்சயமாக நீ பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! அவர்களுக்கு உன் வசனங்களை எடுத்துரைத்து வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவர்களுக்கு அனுப்புவாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்” என்று பிரார்த்தனை செய்தார்கள்.”

இப்ராஹீமும் இஸ்மாயீலும் மனித சமூகத்திற்கு கிப்லாவாக அமையவிருக்கும் கஅபாவின் அடித்தளத்தை உயர்த்திக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். திருக்குர்ஆனின் செறிவான வார்த்தைகள் ஒரு பெரும் காட்சியை நம் கண்முன்னால் கொண்டு வந்து விடுகின்றன என்கிறார் செய்யத் குதுப். இந்த வசனம் அதற்கான உதாரணங்களில் ஒன்று. அவர்கள் இருவரும் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு காட்சி, அந்தச் சமயத்தில் அவர்கள் மனமுறுகி செய்யும் பிரார்த்தனை… இப்படி குறைவான வார்த்தைகளைக் கொண்ட இந்த சிறிய வாசகத்தில் ஒரு பெரும் காட்சியை நாம் கண்டு விடுகின்றோம்.

‘ரப்பனா’ எங்களைப் படைத்துப் பராமரிக்கும், எங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எங்கள் இறைவனே! ரப்பனா என்ற வார்த்தை நம்முடைய இயலாமையையும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தையும் உணர்த்தும் அற்புதமான வார்த்தை. அது நாம் மன்றாடுவதற்கு உகந்த வார்த்தையும்கூட. எங்களிடமிருந்து இந்தப் பணியை ஏற்றுக் கொள்வாயாக அல்லது எங்களுடைய வேண்டுதல்களை ஏற்றுக் கொள்வாயாக என்று இரண்டு வகையிலும் இந்த வாசகத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. நீயே எங்களின் வேண்டுதல்களை, முறையீடுகளை செவியேற்கக்கூடியவன். எல்லாவற்றையும் குறித்து நன்கறிந்தவன்.

எங்களை – முஸ்லிம்களாக – உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்குவாயாக. எங்களிடமிருந்து உனக்குக் கட்டுப்பட்ட ஒரு சமூகத்தினரை உருவாக்குவாயாக. இஸ்லாம் என்பதற்கு முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் என்று பொருள். அதிலிருந்தே அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படக்கூடியவர்கள் என்ற பொருளில் முஸ்லிம்கள் என்ற வார்த்தை உருவாகிறது. உனக்குக் கட்டுப்பட்டு வாழும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக. உன் மார்க்கமான இஸ்லாத்தில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக.

இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்வது மிகப் பெரிய அருட்கொடை. அவனுக்குக் கட்டுப்படுவதில்தான் நமக்கு விடுதலை இருக்கிறது. அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் வேறு எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள். எதற்கும் அடிமையாகி விட மாட்டார்கள். அவனுக்குக் கட்டுப்படாதவர்கள் எதற்கும் எளிதாக அடிமையாகி விடுவார்கள். இதைத்தான் அவர்கள் முதன்மையான அருட்கொடையாகக் கருதுகிறார்கள். இதைத்தான் தங்களுக்கும் தங்களுக்குப் பின் வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கும் கேட்கிறார்கள்.

“நாங்கள் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டுவாயாக” இந்த வாசகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘மனாஸிக்’ என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்று பொருள். திருக்குர்ஆனில் அது வழிபாடுகள் என்ற பொருளில் வந்துள்ளது. வழிபாடுகள் மனிதர்களை அவர்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவதால் அதற்கு மனாஸிக் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. வஹியின்மூலமாக மட்டுமே இந்த வழிபாடுகள் காட்டித் தரப்பட முடியும். தூதுத்துவத்தின்மூலமாக மட்டுமே இந்த வழிபாடுகள் முன்வைக்கப்பட முடியும். மனிதர்கள் தங்கள் புறத்திலிருந்து இவற்றை உருவாக்கி விட முடியாது. இவை முழுக்க முழுக்க அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வர வேண்டியவை. எங்கள் குறைகளை, பாவங்களை மன்னித்து விடுவாயாக. நீயே பாவங்களை மன்னிப்பவனாகவும் தொடர்ந்து எங்கள் மீது அருள்புரிபவனாகவும் இருக்கின்றாய்.

எங்கள் வழித்தோன்றலிலிருந்து ஒரு தூதரை எழுப்புவாயாக. இப்ராஹீமும் இஸ்மாயீலும்தான் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஆகவே இது இஸ்மாயீலின்வழி இப்ராஹீமின் சந்ததியையே குறிக்கும். மனிதர்கள் அனைவருக்குமான இறுதித்தூதுத்துவம் இந்த பிரார்த்தனையின் விளைவேயாகும். இஸ்மாயீலுக்குப் பிறகு அறபுக்களிலிருந்து நீண்ட காலம்வரை எந்த தூதரும் வரவில்லை. அதற்குப் பிறகு வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதராகவும் மனிதர்கள் அனைவருக்குமான தூதராகவும் இருக்கின்றார்கள்.

அந்த தூதர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? அவர் உன் வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைப்பவராக இருக்க வேண்டும். இந்த வாசகத்தில் வசனங்கள் என்பதற்கு ‘ஆயாத்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. ஆயத் என்றால் ஆதாரம், சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் ஒரு சான்றுதான். ஒவ்வொன்றும் அது அல்லாஹ்வின் வாசகம் என்பதை அறிவிக்கும் ஆதாரம். தமிழில் வசனங்கள் என்ற வார்த்தை அதற்குப் போதுமானதாக இல்லை. தூதரின் முதல் பணி அவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மனிதர்களுக்கு எடுத்துரைத்து அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.

இரண்டாவது பணி, அவர் அவர்களுக்கு இந்த வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். இந்த வேதத்தை எப்படி அணுக வேண்டும், எப்படி புரிந்து கொள்ள வேண்டும், இதனடிப்படையில் எப்படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், இதன்மூலம் எப்படி ஞானத்தைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் அவர் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றார். இதனடிப்படையில்தான் நபியவர்கள் தங்களின் தோழர்களை பயிற்றுவித்தார்கள். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள  ‘ஹிக்மத்’ என்ற வார்த்தைக்கு விசயங்களைக் குறித்த ஆழமான, நுட்பமான அறிவு என்று கூறலாம். அது குர்ஆனிலிருந்து பெறப்படக்கூடிய ஞானமாகும். நபியவர்களின் வாழ்க்கை இந்த வகையான ஞானங்களால் நிரம்பியுள்ளது. இந்தக் குர்ஆனையும் இந்தக் குர்ஆனைக் கொண்டு விவகாரங்களை எப்படி அணுக வேண்டும் என்ற ஞானத்தையும் அவர் கற்றுக் கொடுக்கின்றார். நபியின் வாழ்க்கையிலிருந்து நாம் இந்த ஞானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.  

அவரது மூன்றாவது பணி, தஸ்கியான செய்வது. தஸ்கியா என்றால் மோசமான, தேவையில்லாத பண்புகளை நீக்குவதும் அவசியமான நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வதும் ஆகும். இப்படித்தான் நபியவர்கள் தங்களின் தோழர்களை தூய்மைப்படுத்தினார்கள். அவர்களிடம் காணப்பட்ட மோசமான பண்புகளிலிருந்து அவர்களை விடுவித்தார்கள். திருக்குர்ஆன் முன்வைக்கும் நல்ல பண்புகளைக் கொண்டு அவர்களை அலங்கரித்தார்கள்.

இவைதாம் தூதரின் பணிகள். தூதருக்குப் பிறகு இந்த பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்த சமூகத்தின் அறிஞர்களை, ஆசிரியர்களை, அழைப்பாளர்களைச் சென்றடைகிறது. இந்த பணிகளைக் கொண்டே நபியவர்கள் மிகச் சிறந்த, முன்மாதிரியான ஒரு சமூகத்தை உருவாக்கினார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த பணிகளைக் கொண்டே மனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்.     

இந்த வசனங்களில் யூதர்களுக்கான பதிலும் இருக்கிறது. முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களின் சமூகத்தினரும் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையின் விளைவேயாகும். தாங்கள்தாம் இப்ராஹீமின் வாரிசுகள். இறுதித் தூதுத்துவம் தங்களுக்கு மட்டுமே உரியது என்று யூதர்கள் கூறி வந்தார்கள். இந்த அடிப்படையில்தான் அவர்கள் இஸ்மாயீல் நபி வழிவந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை தங்களுக்கான தூதராகவும், இறுதித் தூதராகவும் ஏற்க மறுத்தார்கள். திருக்குர்ஆன் உண்மையான வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது. அது ஒன்றே அந்த வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி. தவ்ராத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும் யூதர்கள் அவற்றில் சிலவற்றை நீக்கியும் சிலவற்றுக்கு வேறு விளக்கம் அளித்தும் இந்த வரலாற்றை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டார்கள்.

“நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றாய்” உன்னை யாராலும் மிகைக்க முடியாது. உன் ஆற்றல் எல்லாவற்றையும் மிகைத்து விடும். உன் செயல்பாடுகள் ஞானம்மிக்கவை. வீணான எந்தவொன்றும் அவற்றில் இல்லை. எது எங்களுக்குத் தேவையோ, எது எங்களுக்கு உகந்ததோ அதையே நீ அளிக்கின்றாய். உன் தீர்ப்புதான் நியாயமானது. உன் தெரிவுதான் சிறந்தது.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply