சாட்சியம் கூற மறுக்கும், தாங்கள் அறிந்தவற்றுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்து வரும் வசனங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுவதையும் அந்த பொறுப்பை சுமப்பதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய அவசியமான பண்புகள் குறித்தும் அந்தப் பாதையில் எதிர்ப்படும் தடைகளை, இன்னல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசுகின்றன. கிப்லா மாற்றம் என்பது வெறுமனே பைத்துல் மக்தஸிலிருந்து கஅபாவை நோக்கிய மாற்றமாக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு சமூகத்திடமிருந்து தலைமைத்துவ பொறுப்பு பிடுங்கப்பட்டு இன்னொரு சமூகத்திடம் ஒப்படைப்பதற்கான அடையாளமாக இருந்தது. அதனால்தான் கஅபாவை நோக்கிய கிப்லா மாற்றம் யூதர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إِلَّا لِنَعْلَمَ مَنْ يَتَّبِعُ الرَّسُولَ مِمَّنْ يَنْقَلِبُ عَلَى عَقِبَيْهِ وَإِنْ كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللهُ وَمَا كَانَ اللهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ
2:142,143. மக்களில் மூடர்கள், “முஸ்லிம்களை அவர்கள் முன்னோக்கி நின்ற கிப்லாவை விட்டு திருப்பியது எது?” என்று கேட்பார்கள். நீர் கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியோருக்கு அவன் நேரான வழியைக் காட்டுகிறான். இவ்வாறே நாம் உங்களை ஒரு சமநிலைச் சமூகமாக ஆக்கினோம். அது நீங்கள் மக்களுக்கு சாட்சி கூறுபவர்களாகவும் தூதர் உங்களுக்கு சாட்சி கூறுபவராகவும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான். உங்களில் தூதரைப் பின்பற்றுபவர் யார், வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே நீர் முன்னோக்கி இருந்த கிப்லாவை கிப்லாவாக நாம் ஆக்கினோம். அல்லாஹ் நேர்வழிகாட்டியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது பாரமானதாகும். அவன் உங்களின் ஈமானை வீணாக்குபவன் அல்ல. அவன் மனிதர்களிடத்தில் மிகுந்த பரிவுடையவனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”
நபியவர்கள் மக்காவில் இருந்தபோது கஅபாவை வடக்கு திசையின் பக்கம் முன்னோக்கி அதன்மூலம் பைத்துல் மக்தஸையும் ஒருசேர முன்னோக்கி தொழுதார்கள். மக்காவில் இருந்தவரை இரண்டு கிப்லாக்களையும் ஒருசேர முன்னோக்கி தொழுவதில் நபியவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பிறகு நபியவர்கள் பைத்துல் மக்தஸை மட்டுமே முன்னோக்கினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளையிட்டிருந்தான். மக்காவில் செய்ததுபோன்று இரண்டையும் ஒருசேர முன்னோக்குவது இயலாத ஒன்றாக இருந்தது. பதினாறு அல்லது பதினேழு மாதங்கள்வரை இப்படித்தான் நபியவர்கள் தொழுதார்கள். கஅபாவை முன்னோக்க வேண்டும் என்ற விருப்பம் நபியவர்களுக்கு இருந்தது. ஆனாலும் அவர்கள் அல்லாஹ்விடம் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தத் துணியவில்லை. அவர்களையும் மீறி அவர்களின் விருப்பம் அவர்களின் முகத்தில் வெளிப்பட்டது. அவர்கள் அடிக்கடி வானத்தை நோக்கி – இது தொடர்பாக அல்லாஹ் ஏதேனும் வஹியை அருள மாட்டானா – என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அல்லாஹ் இந்த வசனங்களை அருளி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினான்.
இந்த வசனத்தில் மூடர்கள் என்பதற்கு என்ற السُّفَهَاءُ வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தை அறபு மொழியில் நிதானமாக, பொறுமையாகச் செயல்படக்கூடியவர்கள் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதமாகவே பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் கீழான இச்சைகள் அவர்களின் அறிவை மழுங்கடித்து அவர்களை மூடர்களாக ஆக்கி விட்டன. அறிவு குறைந்தவர்கள் என்ற பொருளில் அல்ல. அவர்களின் அறிவை அவர்களின் கீழான இச்சைகள் மிகைத்து விட்டதனால் அவர்கள் மூடர்களாகி விட்டார்கள் என்ற பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது.
கிப்லா மாற்றத்தை இந்த மூடர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை அல்லாஹ் அறிவிக்கிறான். இது நிகழ்வதற்கு முன்னரே சொல்லப்பட்ட ஒன்று. இந்த வசனம் கூறியதுபோன்றே அப்படியே அவர்களும் கூறினார்கள். “முஸ்லிம்களை அவர்கள் முன்னோக்கி நின்ற கிப்லாவை விட்டு திருப்பியது எது?”
கிழக்கு, மேற்கு திசைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அவன் எந்தவொரு திசையிலும் இல்லை. குறிப்பிட்ட திசையோடு அவனை மட்டுப்படுத்த நினைப்பது அறிவீனம். அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நீங்கள் நோக்கத்தை விட்டுவிட்டு வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பேண வேண்டியது அவனுடைய கட்டளையைத்தான், திசைகளை அல்ல. அவன்தான் பைத்துல் மக்தஸை முன்னோக்குமாறு கட்டளையிட்டான். அவன்தான் இப்போது கஅபாவை முன்னோக்குமாறு கட்டளையிட்டுள்ளான். அவன்தான் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தனித்தன்மைகளை, சிறப்புகளை அளிக்கிறான். அவன் தான் நாடியவர்களுக்கு இந்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கான விசாலமான உள்ளத்தை அளித்து நேரான வழியைக் காட்டுகிறான். மற்றவர்கள் குறுகிய சிந்தனையில் அடைபட்டு வழிதவறிச் செல்கிறார்கள்.
நாம் கிப்லா விசயத்தில் உங்களுக்கு வழிகாட்டியதுபோன்றே உங்களை சமநிலையான, நீதியான, சிறந்த சமூகமாக ஆக்கியிருக்கின்றோம். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘வஸத்’ وَسَطًاஎன்ற வார்த்தை செறிவான, பொருத்தமான வார்த்தையாகும். இது சமநிலையான, சிறந்த, நீதியான ஆகிய பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. தூதர் இந்த சமூகத்தில் என்ன பணி செய்தாரோ அதே பணியைத்தான் இந்த சமூகம் மனித சமூகத்தில் செய்ய வேண்டும். தூதரின் விட்டுச் சென்ற பணியை இந்த சமூகம் நிறைவேற்ற வேண்டும். இந்த சமூகம் மிகச் சிறந்த, முன்மாதிரியான, நீதியான, சமநிலையான, மனித சமூகத்தை வழிநடத்தக்கூடிய சமூகமாக இருக்க வேண்டும். தூதர் இந்த சமூகத்திற்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை கூடுதல் குறைவின்றி உள்ளபடியே எடுத்துரைத்தார். இந்த விசயத்தில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அவர் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றினார். அவர் எதன் பக்கம் மக்களை அழைத்தாரோ அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டி சிறந்த முன்மாதிரியையும் விட்டுச் சென்றுள்ளார். இப்படித்தான் அவர் இந்த சமூகத்திற்கு சாட்சியாளராக விளங்கினார். இந்த சமூகம் மனித சமூகத்துடன் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் மார்க்கத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பும் சிறந்த, முன்மாதிரியான சமூகமாக வாழ்ந்து காட்ட வேண்டிய பொறுப்பும் இந்த சமூகத்திற்கு இருக்கிறது. அது தன் சொல்லாலும் செயலாலும் மனித சமூகத்திற்கு சாட்சி கூற வேண்டும். ஏனெனில் மனித சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு அதற்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. யூத சமூகம் அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லை என்பதனால் அந்தப் பொறுப்பு அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு இந்த சமூகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
“உங்களில் தூதரைப் பின்பற்றுபவர் யார், வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காகவே நீர் முன்னோக்கி இருந்த கிப்லாவை கிப்லாவாக நாம் ஆக்கினோம்…
நபியவர்கள் மக்காவில் இருந்தபோது கஅபாவையும் பைத்துல் மக்தஸையும் ஒருசேர கிப்லாவாக முன்னோக்கினார்கள். மதீனாவில் தொழுகை கடமையாக்கப்பட்டபோது மற்ற இறைத்தூதர்கள் முன்னோக்கியதுபோன்று நபியவர்களும் பைத்துல் மக்தஸையே முன்னோக்கினார்கள். பிறகுதான் அல்லாஹ் கஅபாவை முன்னோக்குமாறு கட்டளையிடுகிறான். இது ஒரு சோதனை. உண்மையில் தூதரைப் பின்பற்றுபவர்களையும் தங்களின் முந்தைய சடங்குகளில் கட்டுண்டு தூதரை விட்டுச் செல்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காகவே அல்லாஹ் இந்த சோதனையை முன்வைத்தான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற சோதனைகளின்மூலமே நம்பிக்கையாளர்களும் மற்றவர்களும் வேறுபடுத்தப்படுகிறார்கள். சோதனைகள் போலிகளை அம்பலப்படுத்தி விடுகின்றன. தூதர் தங்களின் கிப்லாவைப் பின்பற்றுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவருடன் இணைந்தவர்கள் அவர் தங்கள் கிப்லாவை விட்டு விலகி விட்டார் என்று தெரிந்தவுடன் அவரைவிட்டு விலகி விடுகிறார்கள். உண்மையில் அவர்கள் தூதரைப் பின்பற்றவில்லை. தங்களின் முந்தைய சடங்குகளைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.
தாங்கள் விரும்பும் செயல்களையே இஸ்லாமும் கட்டளையிடுகிறது என்று கூறி இஸ்லாத்தை பின்பற்றுபவர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறான ஒன்று இஸ்லாத்தில் இருப்பதை அவர்கள் காணும்போது அவர்கள் இஸ்லாத்திலிருந்து பின்வாங்கி விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் உண்மையில் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை. அவர்களின் விருப்பங்களையே பின்பற்றினார்கள். சோதனைகளே அவர்களை அம்பலப்படுத்துகின்றன. யார் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்ற விரும்புகிறார்களோ அவர்கள் அது தங்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தாலும் பின்பற்றுவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். அவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றுவது இலகுவானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அது கடினமானது.
இதுபோன்ற சோதனைகளைக் கொண்டு அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் ஈமானை ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான். இந்தச் சோதனைகள் அவர்களை இன்னும் உறுதியானவர்களாக ஆக்குகின்றன. அவை எந்தவிதமான குறுங்குழு வாதங்களிலும் சிக்க விடாமல் அவர்களின் ஆளுமைகளைப் பட்டை தீட்டி உறுதியும் தெளிவும் கொண்டவர்களாக அவர்களை ஆக்கி விடுகின்றன. அவை அவர்களுடன் இணைந்திருக்கும் போலிகளை அம்பலப்படுத்தி அவர்களைத் தூய்மைப்படுத்துகின்றன. அவை அவன் அல்லாஹ் அவர்களின் மீது பரிவும் கருணையும் கொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமேயாகும்.
قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ
2:144-146. “தூதரே! உமது முகம் அடிக்கடி வானத்தை நோக்கித் திரும்புவதை நாம் காண்கிறோம். ஆகவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கமே நாம் உம்மைத் திருப்பி விடுவோம். நீர் உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களின் முகங்களை அதன் பக்கமே திருப்புங்கள். வேதம் வழங்கப்பட்டவர்கள், இது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைதான் என்பதை அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. நீர் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் ஆதாரங்கள் அனைத்தையும் கொண்டுவந்தாலும் அவர்கள் உம்முடைய கிப்லாவை பின்பற்ற மாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவை பின்பற்றுபவராக இல்லை. அவர்கள் ஒருவர் மற்றவரின் கிப்லாவை பின்பற்றுபவர்களாக இல்லை. உம்மிடம் வந்துள்ள இந்த ஞானத்திற்குப் பின்னரும் அவர்களின் மனவிருப்பங்களை நீர் பின்பற்றினால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். யாருக்கு நாம் வேதம் வழங்கியுள்ளோமோ அவர்கள் அதனை தம் மக்களை அறிவதைப்போல நன்றாக அறிவார்கள். அவர்களில் ஒருபிரிவினர் அறிந்துகொண்டே உண்மையை மறைக்கிறார்கள். இது உம் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். ஆகவே நீர் ஒருபோதும் சந்தேகம்கொள்பவர்களில் ஒருவராகி விட வேண்டாம்.”
கஅபாவையே கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பதே நபியவர்களின் விருப்பமாக இருந்தது. அவர்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புதுப்பிப்பதற்காகவும், அவருடைய பிரார்த்தனையின் விளைவாகவும் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த பிறகு அவர்களுக்கு இந்த ஆசை ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனாலும் நபியவர்கள் அந்த ஆசையை பிரார்த்தனையாக முன்வைக்க தயங்கினார்கள். அந்த ஆசை அவர்களின் உடல்மொழியில் வெளிப்பட்டது. அடிக்கடி வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஜிப்ரீல் இது தொடர்பாக அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் கட்டளையைக் கொண்டு வருகிறாரா என. அல்லாஹ் இந்த வசனத்தை அருளி நபியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினான். “நீர் உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்பிக் கொள்வீராக. நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களின் முகங்களை அதன் பக்கமே திருப்புங்கள்.”
கிப்லா மாற்றம் நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் யூதர்களுக்கு அது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. தங்களின் தலைமைத்துவம் பறிக்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். இந்த விசயம் தொடர்பாக முஸ்லிம்களிடையே சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்த முனைந்தார்கள். கிப்லா மாற்றம் அவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் ஒன்றல்ல. அது ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். அதுதான் இப்ராஹீம் முதன்முதலாக கட்டிய ஆலயம் என்பதையும் அதுதான் இறுதி தூதுத்துவத்திற்கான கிப்லாவாக இருக்கும் என்பதையும் அவர்கள் தங்களின் வேதம் வழியாக தெளிவாக அறிந்திருந்தார்கள். அவர்கள் நன்கு அறிந்த ஒன்று அவர்களிடம் வரும்போது அதை உண்மைப்படுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஆனால் அவர்கள் அதற்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வசனத்தின் இறுதி வாசகம் அவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக இருக்கிறது. அல்லாஹ் அவர்களின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். தங்களின் தீய செயல்களுக்கு தக்க தண்டனையை அவர்கள் பெறுவார்கள்.
அவர்கள் உம்முடைய பேச்சை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணம், போதுமான ஆதாரமின்மை அல்ல. நீங்கள் கூறுவது உண்மைதான் என்பதை அவர்கள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அவர்களின் கர்வமும் பொறாமையும்தான் உங்களின் பேச்சை ஏற்றுக்கொள்ள விடாமல் அவர்களைத் தடுக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு முன்னால் நீங்கள் ஆதாரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டினாலும் அவர்கள் ஒருபோதும் உங்களின் கிப்லாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தெளிவாக அறிந்தும் அறியாதவர்கள்போன்று இருப்பவர்களுக்கு நீங்கள் எதையும் புரிய வைக்க முடியாது. பிரச்சனை அவர்களின் உள்ளங்களில் இருக்கிறது. உண்மை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக மாறிய பிறகு இனி நீங்கள் அவர்களின் கிப்லாவை பின்பற்றப்போவதில்லை. யூதர்களும் கிருஸ்தவர்களும் ஒரே கிப்லாவைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டாலும் தங்களுக்குள் முரண்பட்டு வேறு வேறு திசைகளைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். யூதர்கள் பைத்துல் மக்திஸை மேற்கு திசையிலிருந்து முன்னோக்குகிறார்கள். கிருஸ்தவர்கள் அதனை கிழக்கு திசையிலிருந்து முன்னோக்குகிறார்கள். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து தெளிவான கட்டளை வந்து விட்டது. இதுதான் சத்தியம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகி விட்டது. இத்தனைக்குப் பிறகும் நீங்கள் அவர்களைத் திருப்திபடுத்த நாடி அவர்களின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நீங்களும் அவர்களைப் போல அநியாயக்காரர்களாக மாறி விடுவீர்கள். உண்மையை உண்மையென அறிந்தும் அதனைப் பின்பற்ற மறுப்பது பெரும் அநியாயம். இந்த வாசகம் மேலோட்டமாக நபியவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகத் தெரிந்தாலும் உண்மையில் இது யூதர்களுக்கும் அவர்களைப் போன்று தங்களின் வழிகேட்டில் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்களுக்கும் விடுக்கப்படும் எச்சரிக்கையாகும்.
“யாருக்கு நாம் வேதம் வழங்கியுள்ளோமோ அவர்கள் அதனை தம் மக்களை அறிவதைப்போல நன்றாக அறிவார்கள்…”
தம் மகன்களை அறிவதைப் போல அவர்கள் நன்கறிவார்கள் என்பது அன்றைய அறபுக்களிடையே வழக்கத்தில் இருந்த ஒரு பழமொழி. தம் பிள்ளைகளின் வருகைக்காக காத்திருப்பவர் அவர்கள் தூரத்தில் வரும்போதே அவர்களை அடையாளம் கண்டு கொள்வார். அவர்களை அறிந்துகொள்வது அவருக்குக் கடினமான ஒன்றாக இருக்காது. தெளிவாக அறிந்த ஒன்றைச் சுட்டுவதற்கு அறபுக்கள் இந்த பழிமொழியை பயன்படுத்தி வந்தார்கள். வேதக்காரர்கள் இறுதித்தூதுத்துவத்தை, இறுதித் தூதரை, அவர் வழியாக மனித சமூகத்திற்கு வழங்கப்படும் இந்தக் குர்ஆனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்து கொள்வது மிக இலகுவானது. மனிதர்கள் எதைத் தேடுகிறார்களோ அதனை எளிதாக அறிந்து கொள்வார்கள். இந்த வசனத்தின் முதல் வாசகம் வேதக்காரர்களில் முஹம்மது நபியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்கிறது. இரண்டாவது வாசகம் அவர்களில் நிராகரித்தவர்களைக் குறிக்கிறது. அவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக அறிவார்கள். ஆனால் அறிந்துகொண்ட பிறகும் அவர்கள் உண்மையை மறைத்து விடுகிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதுதான் உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். ஆகவே நீங்கள் அவர்களின் நிராகரிப்பைக் கண்டு இந்த உண்மையை சந்தேகிப்பவர்களாக மாறி விடாதீர்கள்.
