உண்மையை அறிந்து கொண்டே அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அப்படித்தான். அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களுக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அதில்தான் அவர்கள் செல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு உங்களை ஈடுபடுத்துவதுதான். இதுதான் சரியான பாதை என்று தெளிவான பிறகு அதில் செல்ல வேண்டியதுதான் உங்களின் பொறுப்பு.
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَمَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللهُ جَمِيعًا إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَإِنَّهُ لَلْحَقُّ مِنْ رَبِّكَ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُمَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِأُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
2:148-152. “ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அதையே அவர் முன்னோக்குவார். நீங்கள் நன்மைகளின் பக்கம் விரையுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக. நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் முகங்களை அதன் பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள். ஏனெனில் அநியாயக்காரர்களைத்தவிர மற்ற மக்களிடம் உங்களுக்கு எதிராக வாதம்புரிய எந்த ஆதாரமும் இருக்கக் கூடாது. நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சுங்கள். இது நான் உங்கள்மீது பொழிந்த அருட்கொடையை நிறைவுசெய்வதற்காகவும் நீங்கள் நேர்வழிபெற வேண்டும் என்பதற்காகவுமேயாகும். இவ்வாறே நாம் உங்களிலிருந்து ஒரு தூதரை உங்களிடையே அனுப்பியுள்ளோம். அவர் நம் வசனங்களை உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்; உங்களைத் தூய்மைப்படுத்துகின்றார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிக்கின்றார்; நீங்கள் அறியாதிருந்தவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றார். ஆகவே நீங்கள் என்னை நினைவுகூருங்கள், நானும் உங்களை நினைவுகூருகிறேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்.”
ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு திசையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதைத்தான் அவர்கள் முன்னோக்குவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட விரும்பவில்லை. அவர்களுடன் விவாதித்தோ அவர்களுக்காக வருத்தப்பட்டோ நீங்கள் உங்களின் ஆற்றலை வீணடிக்காதீர்கள். அவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளில் மூழ்கிக் கிடக்கட்டும். நீங்கள் நற்செயல்களின் பக்கம் விரையுங்கள். நல்வழிகளில் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுங்கள். இதுதான் நீங்கள் செயல்பட வேண்டிய, போட்டியிட வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய களம். உங்களைக் குறித்துதான் நீங்கள் கவலைப்பட வேண்டும், மற்றவர்களைக் குறித்து அல்ல. நீங்கள் உலகின் எந்த இடத்தில் வசித்தாலும் மறுமைநாளில் உங்கள் அனைவரையும் விசாரணை செய்யும்பொருட்டு அவன் ஒன்றுதிரட்டுவான். உங்கள் செயல்களின் அடிப்படையில்தான் நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள். உங்கள் அனைவரையும் நீங்கள் பல்வேறு இடங்களில் வசித்தாலும் ஒன்றுதிரட்டுவது அவனுக்கு இலகுவான ஒன்றுதான். அவனால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
இந்த வசனம் கிப்லா மாற்றம் தொடர்பானதாக இருந்தாலும் இது முன்வைக்கும் கருத்து பொதுவானது. மனிதர்கள் தங்களின் மன விருப்பங்களைப் பின்பற்றி பலவாறாகப் பிரிந்து கிடக்கும்போது, தங்களுக்குள் கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருக்கும்போது நாம் செய்ய வேண்டியது இதுதான்: அவர்களுக்கு சத்தியத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட விரும்புபவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள் நிராகரிப்பார்கள். நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு நம்மை திசைதிருப்பி விடக்கூடாது. அது நம்மை எந்த வகையிலும் பாதித்துவிடக்கூடாது. அவர்களுடன் நாம் செய்யும் தேவையற்ற விவாதங்கள் ஏதோ ஒரு வகையில் நம்மை பாதித்துவிடக்கூடும். ஆகவே அவர்களுடன் விவாதிப்பதை விட்டுவிட்டு நாம் செய்ய வேண்டிய பணிகளில் மும்முரமாக கவனம் செலுத்த வேண்டும்.
“நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக”
முந்தைய கட்டளை சிறிய அளவு மாற்றத்துடன் மீண்டும் இடம்பெறுகிறது. இந்தக் கட்டளையில் நீங்கள் எங்கிருந்து புறப்பட்டாலும் அதாவது நீங்கள் பயணத்தில் இருந்தாலும் நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமையே கிப்லாவாக முன்னோக்க வேண்டும் என்பது கூடுதலாக இடம்பெறுகிறது. பயணத்தில் கிப்லாவை முன்னோக்குவது சிரமமான ஒன்று. அந்தச் சமயத்திலும் கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்ற கட்டளை கிப்லா எந்த அளவு அவசியமான ஒன்று என்பதையே காட்டுகிறது. இதுதான் உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியம். இந்த சத்தியத்தைப் பின்பற்றும் விசயத்தில் உங்களிடமிருந்து எந்தச் சாக்குப்போக்கும் வெளிப்படக்கூடது. உங்களின் செயல்கள் அனைத்தையும் அவன் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான். உங்களின் நோக்கங்களோ செயல்பாடுகளோ எந்தவொன்றையும் அவன் அறியாமல் இல்லை.
அடுத்து வரும் வசனத்திலும் இந்த வாசகம் இடம்பெறுகிறது. கூடுதலாக “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் முகங்களை அதன் பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்” என்ற வாசகம் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை வேறு சில நோக்கங்களை தெளிவுபடுத்தும்பொருட்டு இந்த வாசகங்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. அந்த நோக்கங்கள் தெளிவுபடுத்தப்பட இந்த இடத்தில் அந்த வாசகங்கள் மீண்டும் இடம்பெறுவது அவசியமாகிறது. அது கூறியது கூறலாகாது. ஒரு விசயம் பல்வேறு நோக்கங்களைத் தெளிவுபடுத்தும்பொருட்டு மீண்டும் மீண்டும் கூறப்படுவது கூறியது கூறல் என்ற வட்டத்திற்குள் அடங்காது. அது அந்த நோக்கங்கள் தெளிவாக புரிந்து கொள்ளப்படுவதற்காக முன்வைக்கப்படும் மிகச் சிறந்த வழிமுறையேயாகும்.
இந்தக் கட்டளைக்குப் பின்னாலிருக்கும் மூன்று நோக்கங்கள்:
1. உங்களுக்கு எதிராக வாதம் புரிய மக்களிடம் எந்த ஆதாரமும் இருக்கக் கூடாது. இந்த வாசகத்தில் மக்கள் என்பது வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக முஸ்லிம்களிடம் பல்வேறு விதமான ஆட்சேபனைகளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். முஹம்மது எங்களின் கிப்லாவை முன்னோக்குகிறார் என்றால் ஏன் எங்களின் வழிபாடுகளுக்கு மாற்றமான வழிபாடுகளை முன்வைக்கிறார்? ஏன் எங்கள் மார்க்கத்தின் சட்டங்களுக்கு மாறான சட்டங்களை முன்வைக்கிறார்? ஏன் நாங்கள் செயல்படுவதுபோன்று செயல்படுவதில்லை? ஏன் நாங்கள் நம்புவதுபோன்று நம்புவதில்லை?… இதுபோன்ற ஆட்சேபனைகளை யூதர்கள் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த ஆட்சேபனைகளின்மூலம் அவர்கள் முன்வைக்க விரும்பியது, முஹம்மது தம் புறத்திலிருந்து இந்த சட்டங்களை புனைந்து கொண்டு வருகிறார், அவர் இறைவனின் தூதர் அல்ல என்றுதான். இங்கு ஒரு விசயம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக முன்வைக்கப்படுகிறது: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இப்ராஹீமிய மார்க்கம். உங்களின் யூதத்தையோ, கிருஸ்தவத்தையோ அல்ல. நீங்கள் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணித்து விட்டீர்கள். உங்களிடம் இருப்பது அல்லாஹ்வின் மார்க்கம் அல்ல. இப்ராஹீம் முன்னோக்கிய கிப்லாதான் அவர் முன்னோக்க வேண்டிய கிப்லா. கிப்லா மாற்றம் யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் எந்தச் சிறப்பும் இல்லை என்பதையும் அவர்களிடமிருந்து வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பு பறிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறது. இனி அவர்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு முஸ்லிம்களிடம் வாதம் புரிய முடியாது.
நீங்கள் அவர்கள் கூறுவதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முன்வைக்கும் ஆட்சேபனைகளைக் கண்டு அஞ்சாதீர்கள். இதுதான் உண்மை என்பது தெளிவான பிறகு இந்த உண்மையைப் பின்பற்றும் விசயத்தில் உங்களிடம் எந்தத் தயக்கமும் பயமும் வெளிப்பட்டு விடக்கூடாது. இந்த உண்மையைப் பின்பற்றாமல் இருந்தால் நான் அளிக்கும் தண்டனையைக் கொண்டுதான் நீங்கள் பயப்பட வேண்டும். இந்தக் கட்டளையின்மூலம் நம்பிக்கையாளர்கள் அமைதியடைந்து விடுவார்கள். இந்த விசயத்தில் அவர்கள் கருத்து வேறுபடுவதற்கான வாய்ப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. அநியாயக்காரர்கள் தொடர்ந்து ஆட்சேபனைகள் எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.
2. இது நான் உங்கள்மீது பொழிந்த அருட்கொடையை நிறைவுசெய்வதற்காகவும்… இந்த தூதரின் வழியாக உங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்னும் இந்த அருட்கொடையை முழுமைப்படுத்துவதற்காக. கிப்லா மாற்றம் உங்களுக்கு வழங்கப்பட்ட மனித சமூகத்தை வழிநடத்தும் தலைமைத்துவ பொறுப்பிற்கான அடையாளமாக இருக்கிறது. இதன்மூலம் உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை முழுமையடைகிறது.
3. “நீங்கள் நேர்வழிபெற வேண்டும் என்பதற்காகவும்…” இந்த கிப்லா அல்லாஹ் உங்களுக்கு, மனித சமூகத்திற்கு வாக்களித்த இப்ராஹீமிய மார்க்கத்தின் பக்கம் உங்களை இட்டுச் செல்கிறது. அது ஒன்றுதான் அல்லாஹ்வின் பக்கம் செல்வதற்கான ஒரே வழி.
“இவ்வாறே நாம் உங்களிலிருந்து ஒரு தூதரை உங்களிடையே அனுப்பியுள்ளோம்…”
இப்படித்தான் நாம் உங்களுக்கு இந்த அருட்கொடைகள் வழங்கியதுபோன்று உங்களிலிருந்தே ஒரு தூதரை உங்களிடையே அனுப்பியுள்ளோம்.
கிப்லா மாற்றம் தொடர்பான இந்த வசனங்ளுடன் இப்ராஹீம் செய்த பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளித்து இஸ்மாயீலின் வழிவந்தவர்களுக்கு, மனித சமூகத்திற்கு அவன் வழங்கிய மகத்தான அருட்கொடை நினைவுகூரப்படுகிறது. உங்களுக்கு மத்தியில் உங்கள் இனத்திலிருந்தே இந்த தூதர் அனுப்பப்பட்டுள்ளதும் அவர் அல்லாஹ்வின் வசனங்களை, சான்றுகளை உங்களுக்கு எடுத்துரைப்பதும் உங்களின் ஆன்ம அழுக்குகளிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்துவதும் உங்களுக்கு இந்த வேதத்தையும் அதன்வழி ஞானத்தையும் போதிப்பதும் வஹியின் வழியாக நீங்கள் அறியாதவற்றை எல்லாம் அவர் உங்களுக்குக் கற்றுத் தருவதும் அவன் உங்கள் மீது பொழிந்த மகத்தான அருட்கொடைகளேயாகும். அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். அவனை நினைவுகூருங்கள். அவனுடன் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.
“நீங்கள் என்னை நினைவுகூருங்கள், நானும் உங்களை நினைவுகூருகிறேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்”
இந்த அருட்கொடைகள் வழங்கிய அருட்கொடையாளனை நினைவுகூருவது அந்த அருட்கொடைகள் நிலைபெறுவதற்கான, அவற்றில் மேலும் மேலும் பரக்கத்துகள் கிடைப்பதற்கான, அவனுடைய உதவியும் பாதுகாப்பும் கிடைப்பதற்கான வழி.
அல்லாஹ்வை நினைவுகூருபவர் கைவிடப்படுவதில்லை.
அவன் அளித்த மகத்தான அருட்கொடைதான் இந்த மார்க்கம். இந்த மார்க்கத்தின்படி செயல்படுவதுதான் அதற்கு நன்றி செலுத்துவது. இந்த மார்க்கத்தின் கட்டளைகளைப் புறக்கணிப்பவர் அவன் அளித்த மகத்தான அருட்கொடையை உதாசீனப்படுத்தியவர் ஆவர். அது அவனுடைய தண்டனையைப் பெற்றுத் தரும் நன்றிகெட்டத்தனம். நன்றி செலுத்தப்படாத அருட்கொடை பறிக்கப்பட்டு விடும். இந்த மார்க்கத்தின் கட்டளைகளின்படி செயல்படாதவர்களின் உள்ளம் இந்த மார்க்கத்தை வெறுக்கக்கூடியதாக மாறிவிடும். இதனடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவர்களுக்குக் கடினமான ஒன்றாக மாறிவிடும்.
அல்லாஹ் எப்படி மனிதர்களை நினைவு கூருவான்?
இந்த மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவர்களுக்கு கண்ணியமும் உதவியும் பாதுகாப்பும் அளிப்பதைக் கொண்டு அவன் அவர்களை நினைவு கூருகிறான். அவனுடைய பாதையில் செயல்படக்கூடியவர்களுக்கு, அவனுடைய மார்க்கத்திற்காக பாடுபடக்கூடியவர்களுக்கு இதைவிட பெரும் கண்ணியம் வேறு எதுவாக இருக்க முடியும்?
அவனை நினைவு கூருவது என்பது வெறுமனே அவனது பெயரை உச்சரிப்பது அல்ல.
அவனை நினைவு கூருவது என்பது அவன் அளித்த அருட்கொடைகளை நினைத்துப் பார்ப்பது; நன்றிப்பெருக்கால் உள்ளம் நிரம்புவது
அவனை நினைவு கூருவது என்பது அவன் அளித்த மார்க்கத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
அவனை நினைவு கூருவது என்பது அவனுடைய மார்க்கத்தை மனித சமூகத்தில் நிலைநாட்டுவதற்காகப் பாடுபடுவது.
