இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

You are currently viewing இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

முஸ்லிம் சமூகத்திற்கு மனித சமூகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு அது அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பாதையில் வரக்கூடிய சவால்களை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிப்லா மாற்றத்திற்குப் பிறகுதான் பத்ருப்போர் நிகழ்ந்தது. பத்ருப்போர் நிகழும் என்று தெரிந்துதான் அதற்கு முன்னரே அதனால் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வதற்கான கண்ணோட்டங்களை அல்லாஹ் வழங்கியிருக்கிறான். மெளாலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “பத்ருப்போரில் மதீனாவின் யூதர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அவர்கள்தாம் மக்காவின் இணைவைப்பாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டி வரும்படித் தூண்டினார்கள்.”

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِنْ رَبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ

2:153-157. “நம்பிக்கையாளர்களே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை  மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக அவர்கள் உயிருடன் உள்ளார்கள். ஆனால் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் இழப்புகளை ஏற்படுத்தியும் நிச்சயம் நாம் உங்களை சோதிப்போம். இதில் பொறுமையுடன் இருப்போருக்கு நற்செய்தி கூறுவீராக. அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவன் பக்கமே செல்லக்கூடியவர்கள்” என்று கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் அருளும் இறங்குகின்றன. அவர்கள்தாம் நேர்வழிபெற்றவர்கள்.”

வசனங்களை அவற்றின் முன், பின் தொடர்புகளை துண்டித்து விட்டு பொருள்கொள்ளக்கூடாது. ஒரு வசனம் அதன் முன், பின் வசனங்களுடன் ஆழமாகவும் நுட்பமாகவும் தொடர்பு கொண்டிருக்கும். ஆழ்ந்து கவனிக்கும்போதுதான் இந்த தொடர்பு புலப்படத் தொடங்கும். நுட்பமான இந்த தொடர்பு திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்று. திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. வசனங்களுக்கு மத்தியிலான தொடர்பைக் கண்டறிவதன்மூலமே நாம் அவற்றைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த வசனத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கிப்லா மாற்றம், மனித சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு, யூதர்களின் வெறுப்பு, கஅபாவின் அதிகாரம் தங்களை விட்டுப் போய்விடுமோ என்ற இணைவைப்பாளர்களின் அச்சம், பத்ருப்போர் ஆகியவற்றை முன்வைத்தே இந்த இடத்தில் இந்த வசனங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.      

இந்தப் பாதையில் பயணிக்க வேண்டுமெனில் பொறுமை, தொழுகை என்ற இரண்டு பண்புகளும் மிக மிக அவசியம். பொறுமை என்பது மனக்கட்டுப்பாட்டை, மனவுறுதியைக் குறிக்கிறது. பாவங்களிலிருந்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதிலிருந்து விலகியிருப்பதும் அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதும் அவனுடைய பாதையில் வரக்கூடிய சிரமங்களை பொறுத்துக் கொண்டு உறுதியாக நிற்பதும் பொறுமையாகும். இந்தப் பொறுமையைக் கொண்டே அல்லாஹ்விடம் உதவி தேட வேண்டும். அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டும் பாதையில் இந்த வகையான பொறுமை அடிப்படையான, அவசியமான ஒன்றாக இருக்கிறது. பொறுமை இல்லாதவர்கள் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு விடுவார்கள். அவர்களால் இந்தப் பாதையில் உறுதியுடன் நிலைத்திருக்க முடியாது.

இந்த வசனத்திற்கு விளக்கமாக செய்யத் குதுப் எழுதிய கவித்துவமான வரிகள் என்னை ஈர்க்கின்றன. அந்த வரிகளை அப்படியே இங்கே குறிப்பிடுகின்றேன்:

“திருக்குர்ஆனில் பொறுமையைக் குறித்து அதிகமாகவே கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பெறும் பொறுப்பு பாதையின் இடையூறுகளுக்கும் திசைதிருப்பும் காரணிகளுக்கும் மத்தியில் நிலைகுலையாமையை வேண்டி நிற்கிறது என்பதையும் தன் பக்கம் மக்களை அழைக்கும் இந்தப் பணி பல்வேறு தடைகளுக்கு மத்தியில்தான் நிலைபெற வேண்டியுள்ளது என்பதையும் உறுதியான உள்ளத்தோடு, பலத்தோடு ஷைத்தான் ஊடுருவும் வழிகளைக் குறித்த எச்சரிக்கையோடு நம்பிக்கையாளன் இந்தப் பாதையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் அறிவான். இவையனைத்திற்கும் பொறுமை மிக அவசியமாகிறது. நம்பிக்கையாளன் இறைவனுக்குக் கீழ்ப்படிவதிலும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்திருப்பதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். அல்லாஹ்வுக்காக செய்யப்படும் போர்களிலும் பல்வேறு வகையான சூழ்ச்சிகளை எதிர்கொள்வதிலும் உதவி கிடைப்பது தாமதமாகும்போதும் சிரமங்கள் சூழ்ந்துகொள்ளும்போதும் அசத்தியம் ஊதிப் பெரிதாக்கி தன்னைப் பலமானதாகக் காட்டும்போதும் உதவியாளர்கள் குறைந்துவிடும்போதும் முட்கள்சூழ்ந்த பாதைகளில் பயணிக்கும்போதும் கோணலான, வழிகேடான, பிடிவாதம் கொண்ட மனிதர்களை சந்திக்கும்போதும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

நாட்கள் செல்லச் செல்ல, சுமைகள் அதிகமாக அதிகமாக பொறுமை என்னும் ஆயுதம் மழுங்கி விடுகிறது அல்லது உடைந்துவிடுகிறது, போதுமான அளவு கட்டுச் சாதமும் முன்னேற்பாடும் இல்லையெனில். ஆகவேதான் தொழுகை பொறுமையோடு இணைக்கப்படுகிறது. அது என்றும் வற்றாத ஊற்று, முடிவடையாத கட்டுச் சாதம். அது ஆற்றலை புதுப்பித்துக் கொண்டேயிருக்கும் ஊற்று, உள்ளத்தை பலப்படுத்திக் கொண்டேயிருக்கும் கட்டுச் சாதம். அதனால் பொறுமை என்னும் கயிறு அறுபடாத உறுதியான கயிறாக மாறுகிறது. அதனோடு அல்லாஹ்வின் திருப்தியும் உறுதியான நம்பிக்கையும் நிம்மதியும் இணைக்கப்படுகிறது.

நிச்சயமாக அழியக்கூடிய மனிதன் என்றும் நிலைத்திருக்கும் பேராற்றலுடன் தொடர்பு கொண்டேயாக வேண்டும். அசத்தியத்தின் வெளிப்படையான, மறைமுகமான சக்திகள் அவனை எதிர்கொள்ளும்போதும் வரம்புக்குட்பட்ட அவனுடைய ஆற்றல் முடிவடையும்போதும் பாதையின் இடையூறுகளும் திசைதிருப்பும் காரணிகளும் அவனுடைய முயற்சிக்குத் தடையாக நிற்கும்போதும் அநியாயத்தின், குழப்பத்தின் முயற்சியால் அவன் அழுத்தப்படும்போதும் பாதை நீளமாகி தன்னுடைய வரம்புக்குட்பட்ட வாழ்நாளுக்குள் இலக்கை அடைய முடியாமல் போகும்போதும் நன்மையின் ஒளியை மறைத்துவிட்டு தீமையின் இருள் பரவிவிடும்போதும் அவன் அந்தப் பேராற்றலுடன் தொடர்பு கொண்டு தனக்கான உதவியைப் பெற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இங்குதான் தொழுகையின் அவசியம் புலப்படுகிறது. அது அழியக்கூடிய மனிதன் என்றும் நிலைத்திருக்கும் பேராற்றலுடன் தொடர்புகொள்ளும் இடம். அது பிரிந்த நீர்த்துளி என்றும் வற்றாத நீருற்றுடன் இணைவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம். அது தன்னிறைவு அளிக்கும் பொக்கிஷங்களின் திறவுகோல். அது மிகச்சிறிய எல்லையைக் கொண்ட நிலம் மிகப் பெரும் பிரபஞ்சத்துடன் இணைவதற்கான புறப்பாடு. அது கொதிக்கும் பாலைவனத்தின் நிழல், மழைத்துளி. அது களைத்துப்போன உள்ளம் அன்பான அரவணைப் பெறுமிடம். ஆகவேதான் நபியவர்கள் தங்களுக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால் “பிலாலே, தொழுகையைக் கொண்டு எங்களுக்கு நிம்மதியளிப்பீராக” என்று கூறுவார்கள். ஏதேனும் ஒரு காரியம் சிக்கலாகிவிட்டால் அதிகமாகத் தொழுவார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாட்டு மார்க்கமாகும். அதன் வணக்க வழிபாடுகள் இரகசியங்களைக்கொண்டவை. அவை பாதையின் கட்டுச் சாதம்; ஆன்மாவிற்கான ஊட்டம்; உள்ளத்திற்கான ஒளி. பொறுப்புகள் எவ்வளவுதான் கடினமானவையாக இருந்தாலும் வணக்க வழிபாடுகள் உள்ளத்தின் சாவியாகச் செயல்பட்டு அவற்றை இனிமையாகவும் இலகுவாகவும் நிறைவேற்றச் செய்கின்றன. கடினமான பெரும் பொறுப்பை வழங்குவதற்காக அல்லாஹ் நபியவர்களை அழைத்தபோது அவர்களுக்குக் கூறினான்:

“போர்த்தப்பட்டவரே! இரவின் ஒரு பகுதியில் நின்று தொழுவீராக. பாதி இரவு அல்லது அதைவிட சிறிது குறைத்துக் கொள்வீராக. அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக. குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக. நாம் உம்மீது ஒரு கனமான விசயத்தைச் சுமத்தப் போகின்றோம்” அவர்கள் பெரும் பொறுப்பைச் சுமப்பதற்காக தயார்படுத்தப்பட்டார்கள். அது இரவில் எழுந்து தொழுவதும் குர்ஆனை நிதானமாக ஓதுவதும் ஆகும். அது உள்ளத்தைத் திறக்கும், இறைவனுடனான தொடர்பை வலுப்படுத்தும், விசயங்களை இலகுபடுத்தும் உள்ளத்திற்கு ஒளியையும் ஆறுதலையும் நிம்மதியையும் வழங்கும் வணக்கமாகும்.” (பார்க்க, செய்யத் குதுப் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில், முதல் பாகம்)

கடந்த வசனத்தில் அல்லாஹ்வை நினைவு கூருமாறும் அவனுக்கு நன்றி செலுத்துமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது. இந்த வசனம் அதற்குரிய ஒரு நடைமுறை வடிவத்தை முன்வைக்கிறது. தொழுகை அவனை நினைவு கூருவதற்கான, அவனுக்கு நன்றி செலுத்துவதற்கான முதன்மையான வடிவம். தொழுகை அவனை நெருங்குவதற்கான, அவனுடைய உதவியையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான முதன்மையான வழி. நம்பிக்கையாளர்கள் தொழுகையின்மூலமாகவே பொறுமை என்னும் உன்னதமான பண்பைப் பெற முடியும். அப்படிப்பட்ட உன்னதமான பண்பைப் பெற்றவர்களுடன் பேராற்றல்கொண்ட, எல்லாவற்றையும் அடக்கியாளும் அல்லாஹ் இருக்கிறான். அவர்களை ஒருபோதும் யாராலும் தோற்கடித்துவிட முடியாது. இப்படித்தான் நம்பிக்கையாளர்கள் பலம்மிக்கவர்களாக மாறுகிறார்கள்.

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை  மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள்…”

 இந்தப் பாதையில் நீங்கள் கொல்லப்படலாம், உயிர்ச்சேதங்களை எதிர்கொள்ளலாம். இந்தப் பாதையில் கொல்லப்படுபவர்கள் மரணித்தவர்கள் அல்ல. அவர்கள் நீங்கள் அறியாத இன்னொரு உலகில் உயிருடன் உள்ளார்கள்; உணவளிக்கப்படுகிறார்கள். ஆனால் உங்களால் அதை உணர்ந்துகொள்ள முடியாது. தங்கள் உயிரை அர்ப்பணித்து அவர்கள் அளிக்கும் சாட்சியத்தின்மூலம் அவர்கள் மரணமில்லா நிரந்தரமான வாழ்வைப் பெறுகிறார்கள்.     

“ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் இழப்புகளை ஏற்படுத்தியும் நிச்சயம் நாம் உங்களை சோதிப்போம்…”

இந்தப் பாதையில் சோதனை ஏற்படுவது இயல்பு. ஆனாலும் அது உங்களின் தாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவே இருக்கும். எதிரிகள் உங்களைத் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தைக் கொண்டும் வறுமை, பஞ்சத்தைக் கொண்டும் உங்களின் செல்வங்களில் இழப்புகளை ஏற்படுத்தியும் உங்களுக்கு நெருக்கமானவர்கள், உறவுகள், நண்பர்கள் போரில் கொல்லப்படுவதைக் கொண்டும் உங்களின் வியாபாரம், விளைச்சல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தியும் அல்லாஹ் உங்களை சோதிப்பான். இதுபோன்ற இழப்புகள், சோதனைகள் மற்றவர்களுக்கும் ஏற்படும், உங்களுக்கும் ஏற்படும். அவர்கள் உதவியின்றி கைவிடப்படலாம். அவை அவர்களை நிராசையில் ஆழ்த்திவிடக்கூடும். ஆனால் நீங்கள் கைவிடப்பட மாட்டீர்கள். தக்க சமயத்தில் அல்லாஹ்வின் உதவி உங்களை வந்தடையும். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அந்த சோதனைகளை உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அத்தகைய பொறுமையாளர்களுக்குத்தான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்செய்தி காத்திருக்கிறது.

நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்வதனால் உங்களுக்குத் துன்பமே வராது என்றில்லை. அவை மற்றவர்களை வந்தடைவதுபோல உங்களையும் வந்தடையும். மற்றவர்களுக்கு அவை தண்டனையாக அமைந்து விடும். உங்களுக்கு அவை சோதனைகள். அவற்றின்மூலம் அல்லாஹ் உங்களின் படித்தரத்தை உயர்த்துகிறான். நீங்கள் அறியாத புறத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கிறான்.

பத்ருப்போருக்கு முன்னால் அந்த ஆரம்பகட்ட முஸ்லிம்கள் மனதளவில் தயார்படுத்தப்படுகிறார்கள்.  இந்தப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன் அளிக்கும் இந்தக் கண்ணோட்டம் இன்றி துன்பங்களை மனிதர்களால் எதிர்கொள்ள முடியாது. துன்பங்கள், இழப்புகள் அவர்களை உருக்குலைத்து நிராசையடையச் செய்து விடுகின்றன. ஆனால் நம்பிக்கையாளர்கள் இந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டு எந்தவொரு துன்பத்தையும் எளிதாகக் கடந்து விடுகிறார்கள். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், அவனுடைய அடிமைகள், அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். இந்த வாழ்வு அவன் தந்தது. அவனுக்கு உரியதை எடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறது. நாம் அவன் அழைக்கும்போது அவன் பக்கமே திரும்புபவர்களாக இருக்கின்றோம். இங்கு நம்முடையது என்று எதுவும் இல்லை. அவன் அளித்ததை அவன் எடுத்துக் கொண்டான். நம் விசயத்தில் அவனுடைய நாட்டம் மட்டுமே நிறைவேறும். இங்கு இழப்பதற்கோ கவலைப்படுவதற்கோ என்ன இருக்கிறது? அவன் அளித்ததை அவனுடைய பாதையில் அர்ப்பணிப்பதைவிட பெரும் பேறு வேறு என்ன இருக்க முடியும்?

இப்படிப்பட்டவர்களே அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பையும் அருளையும் கருணையையும் பெறுவார்கள். இந்த பண்புகள் கொண்டவர்கள்தாம் அவன் பக்கம் செல்லக்கூடிய நேரான பாதையில் இருப்பவர்கள்.    

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply