வேதத்தின் ஞானங்களை மறைப்பது

You are currently viewing வேதத்தின் ஞானங்களை மறைப்பது

அடுத்து வரும் வசனம் ஸஃபா, மர்வா மலைக் குன்றுகளுக்கு மத்தியில் மெதுவாக ஓடுவதைக்(சயீ செய்வதை) குறித்துப் பேசுகிறது. வெளிப்படையாகப் பார்க்கும்போது இந்த வசனம் மையக் கருத்தை விட்டு விலகியதாக, ஓர் இடையீடாகத் தோன்றும். கொஞ்சம் கவனித்துப் பார்க்கும்போது மையக்கருத்துடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பான இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீயின் ஆய்வு நூல் الراي الصحيح فيمن هو الذبيح அற்புதமானது. இப்ராஹீம் நபி தம்முடைய மகன் இஸ்ஹாக்கையே அறுப்பதற்காக அழைத்துச் சென்றார் என்றும் அது ஜெருசலமில் உள்ள மலைப்பகுதிதான் என்றும் யூதர்கள் கூறி வந்தார்கள். அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டவரின் பரம்பரையில் இருந்துதான் இறுதித்தூதர் தோன்றுவார் என்று தவ்ராத்தில் இருப்பதால் அவர்கள் இவ்வாறு திரித்து கூறி வந்தார்கள். அவர்களின் வேதமான தவ்ராத்தில் அறுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மாயீல்தான் என்பதும் கஅபாவுக்கு அருகிலுள்ள மர்வா மலைக்குன்றுக்குதான் அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தெளிவாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திரித்து மறைத்து வந்தார்கள். இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீயின் நூல் அவர்களின் வாதங்கள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மையை தக்க சான்றுகளுடன் நிறுவுகிறது. நபியவர்களை நிராகரிக்கும்பொருட்டே அவர்கள் கஅபாவையும் அதனோடு தொடர்புடைய அடையாளச் சின்னங்கள் அனைத்தையும் மறைத்து வந்தார்கள். இவ்வாறு அவர்கள் மறைப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் அதன் மோசமான விளைவையும் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் அடுத்து வரும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.    

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللهَ شَاكِرٌ عَلِيمٌ

2:158.  “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும். யார் கஅபாவுக்கு ஹஜ் அல்லது உம்ரா செய்ய வருகின்றாரோ அவர் அவற்றை சயீ செய்வது குற்றமாகாது. யாரேனும் ஆர்வத்துடன் நன்மைகள் புரிந்தால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் நன்றியை ஏற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”

ஹஜ் செய்வது என்பது துல்ஹஜ் மாதத்தில் குறிப்பிட்ட தினங்களில் கஅபாவுக்குச் சென்று குறிப்பிட்ட வகையான வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். உம்ரா என்பது இன்னபிற மாதங்களில் கஅபாவுக்குச் சென்று குறிப்பிட்ட வகையான வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். ஸஃபாவும் மர்வாவும் கஅபாவுக்கு அருகில் இருக்கின்ற இரு மலைக்குன்றுகள். இரு மலைகளுக்கு மத்தியில் மெதுவாக ஓடுவது ஹஜ்ஜின், உம்ராவின் வழிபாடுகளில் ஒன்றாகும். இப்ராஹீம் நபியின் காலம்தொட்டு இது ஹஜ்ஜின், உம்ராவின் வழிபாடுகளில் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. வழிபாடுகள், அடையாளச் சின்னங்கள் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்படுபவையாகும். மனிதர்களில் யாருக்கும் புதிதாக ஒரு வழிபாட்டையோ அடையாளச் சின்னத்தையோ ஏற்படுத்தும் உரிமை இல்லை.

இப்ராஹீம் நபி தம்முடைய மகன் இஸ்மாயீலை அறுப்பதற்காக அழைத்துச் சென்ற இடம் மர்வாதான் என்று இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீ குறிப்பிடுகிறார். தவ்ராத்திலும் மர்வா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் யூதர்கள் அந்த வார்த்தையை திரித்து வேறு ஒரு வார்த்தைபோன்று ஆக்கி விட்டார்கள். இப்ராஹீமின், அவரது குடும்பத்தாரின் தியாகத்தை மனிதர்கள் நினைவுகூரும்பொருட்டே இந்த இரு மலைக்குன்றுகளையும் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். அவரது மனைவி ஹாஜர் இரு மலைக்குன்றுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேடி ஏழு முறை ஓடிய ஓட்டத்தை மனிதர்கள் நினைவுகூரும்பொருட்டே அந்த இரு மலைக்குன்றுகளுக்கு மத்தியில் ஏழுமுறை ஓட வேண்டும் என்பதை ஹஜ்ஜின், உம்ராவின் வழிபாடுகளில் ஒன்றாக அவன் ஆக்கியிருக்கிறான்.

ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் மத்தியில் ஓடுவது ஹஜ்ஜின், உம்ராவின் வழிபாடுகளில் உள்ளவை எனில் இந்த வசனம் நெருடலுக்குப் பதிலளிப்பதுபோன்ற வாசகத்தை ஏன் கொண்டிருக்கிறது?

இப்ராஹீமின் நபியின் காலத்திற்குப் பிறகு வந்த இணைவைப்பாளர்கள் அந்த இரு மலைக்குன்றுகளிலும் இரு சிலைகளை ஏற்படுத்தினார்கள். மக்கா வெற்றிக்கு முன்னர்வரை அந்த இரு மலைக்குன்றுகளிலும் அந்த சிலைகள் இருந்தன. அவற்றுக்கு மத்தியில் ஓடுவது இணைவைப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதானா என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் அவற்றுக்கு மத்தியில் ஓடுவதை நெருடலுடன் நோக்கினார்கள். இந்த வசனம் அவையிரண்டும் அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளச் சின்னங்களில் உள்ளவைதான் என்பதை நிறுவி அந்த நெருடலை நீக்கி விடுகிறது.

சுஅபீ (ரஹ்) கூறுகிறார், “ஸஃபா மீது அஸாஃப் என்ற சிலை இருந்தது. மர்வா மீது நாயிலா என்ற சிலை இருந்தது. அவர்கள் அவற்றை முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பிறகு அவையிரண்டிற்கும் இடையே தவாஃப் செய்வதில் நெருடலை உணர்ந்தார்கள். பின்னர் இந்த வசனம் அருளப்பட்டது.” (புகாரீ)

யார் கடமையாக்கப்பட்ட வழிபாடுகளையும் தாண்டி ஆர்வத்துடன் கூடுதலாக வழிபாடுகளில் ஈடுபடுகிறார்களோ அல்லாஹ் அவற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதில்லை. அவன் அவர்களின் கூடுதலான செயல்களுக்கேற்ப கூலி வழங்குபவனாக இருக்கின்றான். அவன் அவர்களின் செயல்பாடுகளை ஏற்று தகுந்த வெகுமதி அளிப்பவனாகவும் அவர்களைக் குறித்த ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.  

إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ أُولَئِكَ يَلْعَنُهُمُ اللهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَئِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ

2:159-162. “நாம் வேதத்தில் மக்களுக்குத் தெளிவுபடுத்திய பிறகு யார் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும் வழிகாட்டலையும் மறைக்கின்றனரோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். சபிக்கின்றவர்களும் அவர்களைச் சபிக்கின்றார்கள். ஆயினும் யார் மன்னிப்புக்கோரி, தம்மைச் சீர்திருத்தி தெளிவாக எடுத்துரைத்து விட்டார்களோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றேன். யார் நிராகரித்து அதே நிலையிலேயே மரணித்தும் விடுகிறார்களோ அவர்கள்மீதுதான் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபமும் உண்டாகும். அதே நிலையிலேயே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் தண்டனை இலேசாக்கப்படாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது.”

இந்த வசனம் யூத அறிஞர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் கண்டிக்கின்றது. அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமான தவ்ராத்தில் இறுதி தூதுத்துவம் குறித்தும் நபியவர்களைக் குறித்தும், கஅபா கிப்லாவாக ஆக்கப்படுவது குறித்தும் தெளிவான முன்னறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அல்லாஹ் வேதத்தில் தெளிவுபடுத்தியுள்ள கட்டளைகளை, முன்னறிவிப்புகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டியது அவர்களின் பணியாகும். ஆனால் அவர்கள் வேதத்தின் ஞானங்களை தங்களுக்குள், தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டார்கள். விளைவாக மக்களுக்கு மத்தியில் மார்க்கம் குறித்த அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகளும் பரவின. அந்தச் செயல்பாடுகளைக் கண்டித்தால் மக்கள் தங்களை எதிர்ப்பார்கள் என்பதாலும் மக்களுக்கு மத்தியில் தங்களின் செல்வாக்கு இல்லாமாகி விடும் என்பதாலும் மார்க்கத்தின் ஆதாரங்களைக் கொண்டே அவற்றை நியாயப்படுத்தினார்கள் அல்லது அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் வழிகேடு பரவியதற்கு இதுதான் முதன்மையான காரணம்.

செல்வத்தை செலவு செய்யாமல் கஞ்சத்தனம் செய்வதைப்போல அறிவை வெளிப்படுத்தாமல் மறைத்து கஞ்சத்தனம் செய்யும் அறிஞர்களும் இருக்கிறார்கள். இதுவும் உள்ளத்தின் கருமித்தனத்தின் அடையாளம்தான். இதனோடு பொறாமையும் கலந்து விடும்போது அது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மோசமான ஒரு பண்பாக மாறிவிடுகிறது. நபியவர்கள் மீதும் அறபுக்கள் மீதும் யூதர்கள் கொண்ட பொறாமைதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பாதையில் அவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது.

வேதத்தை கற்பதும் கற்பிப்பதும் மிக உன்னதமான, மிகச் சிறந்த பணி. வேதம் கற்றவர்கள் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளதுபோன்றே மக்களுக்குத் தெளிவுபடுத்திவிட வேண்டும். அவர்கள் தாங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் உலகியல் ஆதாயம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால் வெளிப்படுத்த வேண்டிய எதையும் மறைத்துவிடக்கூடாது. உண்மையை வெளிப்படுத்திப் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் குற்றம்தான். அவர்கள் அல்லாஹ்வின் விசயத்தில் எதையும் பொருட்படுத்தக்கூடாது. கண்ணியம் என்பது அவன் அளிப்பதுதான். அவனுடைய மார்க்கத்திற்குச் சேவை செய்வதன்மூலமே அவர்கள் அந்தக் கண்ணியத்தைப் பெற முடியும்.

அல்லாஹ் சபிக்கிறான் என்றால் அவன் தன் அருளைவிட்டு அவர்களை அகற்றி விடுகிறான் என்று பொருள். அவனுடைய அருளைவிட்டு தூரமாக்கப்படுபவர்கள் அவனுடைய கோபத்திற்கு ஆளாவார்கள். இங்கு எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் அருளைவிட்டு தூரமாகி அவனுடைய கோபத்திற்கு ஆளாகுபவர்களைவிட பெரும் துரதிஷ்டசாலிகள் வேறு யார் இருக்க முடியும்? அறியாத மூடர்கள் அவனைப் பகைத்துவிட்டு வேறு எங்கு செல்வார்கள்? விண்ணில் உள்ள வானவர்கள், பூமியில் உள்ள மனிதர்கள், இன்னபிற உயிரினங்கள், படைப்பினங்கள் அனைத்தும் அவர்களைச் சபித்துக் கொண்டிருக்கும். இங்கு அவர்களின் வாழ்க்கை அந்நியமான ஒன்றாக ஆகிவிடும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் அற்புதமான ஒத்திசைவை விட்டு விலகியவர்களாக, அதனை உணர முடியாத அந்நியர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.

இது பெரும் குற்றம்தான் என்றாலும் அல்லாஹ் பாவமன்னிப்பின் வாசலை திறந்தே வைத்திருக்கிறான். யார் மனம் வருந்தி செய்த பாவத்திற்காக மன்னிப்புக் கோருகிறார்களோ அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். ஆனாலும் அதற்கான நிபந்தனைகள் இருக்கின்றன. செய்த தவறுகளுக்கு அவர்கள் பரிகாரம் செய்தே தீர வேண்டும். மறைத்த உண்மையை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். தெளிவுபடுத்த வேண்டியதை அவர்கள் தெளிவுபடுத்திவிட வேண்டும். அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் மன்னித்து அவர்கள் மீது கருணை காட்டுகிறான். அவன் மன்னிப்பாளன் மட்டுமல்ல, கருணையாளனும்தான். அவர்கள் கேட்ட பாவமன்னிப்பும் செய்த பரிகாரமும் அவர்களை அவனுடைய அருளுக்கும் கருணைக்கும் உரியவர்களாக ஆக்கி விடுகின்றன.

இந்தப் பாவம் மட்டுமல்ல, எந்தவொரு பாவத்திற்கும் இதுதான் நிபந்தனை. அவன் தன் பாவத்தின்மூலம் மற்றவர்களுக்கோ அல்லாஹ்வின் மார்க்கத்திற்கோ அநீதி இழைத்திருந்தால் அதற்கான பரிகாரத்தில் அவன் ஈடுபட வேண்டும். இதுதான் அவன் தன்னை சீர்படுத்திக் கொண்டான் என்பதற்கான அடையாளம்.

ஆனால் யார் அல்லாஹ்வின் கட்டளைகளை நிராகரித்து அந்த நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருந்து அதே நிலையிலேயே மரணித்தும் விடுகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பின், கருணையின் வாசல் முழுமையாக மூடப்பட்டு விடும். அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு முழுமையாக விலக்கப்படுவார்கள். விண்ணில் உள்ள வானவர்கள், பூமியில் உள்ள மனிதர்கள், இன்னபிற படைப்புகள் ஆகிய அனைவரின் சாபத்திற்கும் அவர்கள் ஆளாவார்கள். அவர்கள் அந்த சாபத்தில், பெரும் தண்டனையில் நிரந்தரமாக நிலைத்திருப்பார்கள். அவர்கள் மீது கருணை காட்டப்படாது. அதற்குப் பிறகு அவர்களுக்கு எந்த அவகாசமும் அளிக்கப்படாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply