அவர்கள் ஏன் தாங்கள் அறிந்துகொண்ட உண்மையை மறைக்கிறார்கள்? அல்லாஹ்வின் விசயத்தில் அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம் சரியானதல்ல. அதுதான் அவர்களின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களும் தங்களுக்குப் பயனளிக்கவோ தீங்களிக்கவோ முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அவனை விடுத்து தங்களின் குருமார்களையும் அறிஞர்களையும் தங்களின் எஜமானர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அவனை அறிய வேண்டிய முறைப்படி அவனுக்கே உரிய பண்புகளோடு அறிந்திருந்தால் பிழையான இந்த கண்ணோட்டத்தில் மூழ்கி தங்களின் செயல்பாடுகளை நாசம் செய்திருக்க மாட்டார்கள். அடுத்து வரும் வசனங்கள் அல்லாஹ்வை அவனுக்கே உரிய பண்புகளோடு நினைவூட்டுவதோடு அவனை அறிந்துகொள்வதற்கான வழிமுறையையும் முன்வைக்கின்றன.
وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ
2:163-167. “உங்களின் இறைவன் ஒரே இறைவன்தான். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் அளவற்ற அருளாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான். வானங்கள், பூமியின் அமைப்பிலும் இரவுபகல் மாறிமாறி வருவதிலும் மக்களுக்குப் பயன்தரக்கூடிய பொருட்களைச் சுமந்து கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் நீரிலும் பின்னர் அதன்மூலம் வறண்ட பூமியைச் செழிக்க வைப்பதிலும் அவன் பூமியில் அனைத்துவிதமான உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் காற்றுகளின் சுழற்சியிலும் வானத்திற்கும் பூமிக்குமிடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகங்களிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.”
அல்லாஹ்தான் வணங்குவதற்கும் கட்டுப்படுவதற்கும் தகுதியான ஒரே இறைவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் கட்டுப்படக்கூடாது. அவனிடம் தவிர வேறு யாரிடமும் நீங்கள் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. சட்டமியற்றும் உரிமை, வழிகாட்டல்கள் வழங்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுடைய வழிகாட்டல்களை நீங்கள் மறைக்கக்கூடாது. அவன் அளவற்ற அருளாளனாகவும் தொடர்ந்து அருள்புரியக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவனுடைய அருளும் கருணையும் கிருபையும் அளவற்றவை; தொடர்ந்து இடைவிடாமல் அடியார்கள் மீது பொழிந்து கொண்டிருப்பவை. நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் அனைத்தும் அவனிடமே இருக்கின்றன. நீங்கள் அஞ்சும் தீங்குகளிலிருந்து அவன் மட்டுமே உங்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொன்றும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவனைத் தவிர வேறு யாரும் உங்களுக்குப் பயனளிக்கவோ தீங்களிக்கவோ முடியாது. நீங்கள் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதனால் ஏதேனும் ஒன்றை இழக்க நேர்ந்தால் அவன் அதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்குத் தருவான். நீங்கள் இழந்ததைவிட பல மடங்கு அவன் திருப்பித் தருவான்.
வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுள்ள விதம், அவற்றின் அமைப்பு, அவற்றில் காணப்படும் ஆச்சரியமான ஒத்திசைவு, அவையிரண்டிலும் காணப்படும் படைப்புகள், அவை ஒவ்வொன்றும் கச்சிதமான அளவோடு அவற்றில் உருவாக்கப்பட்டிருப்பது… என ஒவ்வொன்றும் படைப்பாளனை, அவனுடைய பேராற்றலை, அவன் மனிதர்கள் மீது பொழிந்திருக்கும் பெரும் கருணையை நினைவூட்டக்கூடியவை. இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை, அதன் வசீகரத்தை, அதில் பொதிந்திருக்கும் படைப்பாளனின் பேராற்றலை உணர்ந்து கொள்வதற்கான அழைப்பு இது. நம்மைச் சுற்றிக் காணப்படும் பேரற்புதத்தை புதிய பார்வையோடு பார்ப்பதற்கான அழைப்பு இது. இந்தப் பார்வைதான் நம்முடைய அகப்பார்வையை கூர்மையாக்கும். இதுதான் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் அவன் பெரும் கருணையும் கிருபையும் கொண்டவன் என்பதையும் அவன் நம்மை ஒரு நோக்கத்திற்காகவே படைத்திருக்கிறான் என்பதையும் நமக்கு உணர்த்தும்.
இரவு பகல் மாறிமாறி வருவது தற்செயலான ஒன்றல்ல. அது மனித வாழ்க்கைக்காகவே அற்புதமான முறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக பகலும் அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக இரவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பகலின் சூழல் அவனை வேலை செய்யத் தூண்டுகிறது. இரவின் சூழல் அவனை ஓய்வெடுக்கத் தூண்டுகிறது. பகல் நிரந்தரமாக நீடித்து விட்டால் அல்லது இரவு நிரந்தரமாக நீடித்து விட்டால் மனித வாழ்க்கை சிக்கலான ஒன்றாக ஆகிவிடும்.
மக்களுக்குப் பயன்தரக்கூடிய பொருட்களைச் சுமந்து கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்கள் படைப்பாளனின் பேரருளை, அவன் அடியார்கள் மீது கொண்டிருக்கும் பெரும் கருணையை எடுத்துரைக்கும் சான்றுகளாகும். அவன் அமைத்த விதிகளைக் கொண்டே கப்பல்கள் நீரில் மிதந்தவாறு செல்கின்றன. மனிதர்களின் கடல் வாணிபம் முழுக்க முழுக்க இவற்றையே நம்பியிருக்கிறது.
அல்லாஹ் மேகத்திலிருந்து மழை பொழியச் செய்கிறான். அதன்மூலம் அவன் வறண்ட பூமியை உயிர்பெறச் செய்கிறான். காய்ந்து, வறண்டு கிடக்கும் நிலம் ஒரு மழையின்மூலம் சட்டேன உயிர்பெற்று மலர்ந்து செழிப்படைவது ஆச்சரியமான ஒரு நிகழ்வு. மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதால் அது ஆச்சரியமான ஒரு நிகழ்வு என்பதையே நாம் மறந்து விடுகிறோம். அந்த மழை நிலத்தில் செடி, கொடிகளை, மரங்களை செழித்து வளரச் செய்கிறது. அவற்றை, அவற்றின் கனிகளை உண்டு உயிரினங்கள், விலங்கினங்கள் பரவுகின்றன. அதன்மூலம் காடும் நாடும் செழிப்படைகின்றன. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஆச்சரியமான முறையில் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வாழ்வாதாரம் வந்து சேரும் வழிகளைக் குறித்து சிந்தித்தால் நிச்சயம் அல்லாஹ்வை, அவனுடைய பேராற்றலை, அவனுடைய பெரும் கருணையை உணர்ந்து கொள்வார்கள்.
அனைத்துக்கும் மூல காரணமான மழை அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளதுதான். இங்குள்ள நீரே ஆவியாகி மேலே செல்கிறது. அது குறிப்பிட்ட உயரத்தில் மேகமாக சேர்ந்து கொண்டேயிருக்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில், குறிப்பிட்ட உயரத்தில் அவனே நீரை மேகங்களாக சேர்த்து வைக்கிறான். அவை கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளன. அவை மனித வாழ்க்கைக்காக வசப்படுத்தப்பட்டுள்ளன. அவை அவனுடைய கட்டளையைக் கொண்டு இயங்குகின்றன.
இங்குள்ள நீர் எப்படி ஆவியாகிறது? ஏன் அது குறிப்பிட்ட உயரத்தில் மேகங்களாக ஒன்று சேர்கிறது? எங்கிருந்து காற்று உருவாகிறது? காற்று எவ்வாறு மேகங்களை குறிப்பிட்ட இடங்களுக்கு இழுத்துச் செல்கிறது? அது எப்படி மழையாகப் பொழிகிறது? அதன்மூலம் எவ்வாறு வறண்ட பூமி உயிர்பெற்று மலர்கிறது? அது எவ்வாறு உயிரினங்களைப் பரவச் செய்கிறது? இவையனைத்தும் எவ்வாறு மனித வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன? மனித வாழ்க்கையில் காணப்படும் இந்த ஒத்திசைவும் சமநிலையும் எப்படி உருவானது?
உண்மையில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சிந்திப்பவர்கள் ஒருபோதும் இறைமறுப்பாளர்களாக மாற மாட்டார்கள். நாத்திகம் என்பது கடைந்தெடுத்த மூடத்தனம் அல்லது அயோக்கித்தனம் அல்லது வடிகட்டிய மனநோய். இந்தப் பிரபஞ்சம் திறந்து கிடக்கும் மாபெரும் புத்தகம். வாசிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இதை வாசிக்க முடியும். இந்த வாசிப்பு நிச்சயம் அவர்களை இறைவனை நோக்கி கொண்டு செல்லும். ஆழமான வாசிப்பு இறைநம்பிக்கையை பலப்படுத்திக் கொண்டே செல்லும். மேலோட்டமான வாசிப்புதான் ஒரு மனிதனை ஏமாற்றும். அதுதான் அறியாமையை அறிவு என நம்ப வைக்கும். ஒரு மனிதனின் மேலோட்டமான வாசிப்போடு அவனுடைய கர்வமும் கலந்து விட்டால் அவன் கடைந்தெடுத்த நாத்திகனாக மாறிவிடுவான். அவனிடமிருந்து வெளிப்படும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு மூடர்கள் அவனை அறிவாளி என நம்ப ஆரம்பித்து விடுவார்கள். அவன் தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்கும் ஷைத்தானாக மாறிவிடுவான்.
