தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

You are currently viewing தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

தெளிவான இந்த சான்றுகளைக் காணாதவர்கள், இந்த சான்றுகளுக்குப் பின்னால் இருக்கும் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட இறைவனை உணராதவர்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துகிறார்கள். அவனை நேசிப்பதுபோன்று மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். அவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் அவனை விடுத்து மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا كَذَلِكَ يُرِيهِمُ اللهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ

2:165-167. “மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அவனுக்கு இணையாக ஆக்குகிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பதுபோன்றே அவர்களையும் நேசிக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் அனைத்தையும்விட அல்லாஹ்வையே அதிகம் நேசிக்கிறார்கள். அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும்போது, வல்லமை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, அவன் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்துகொள்வார்கள். பின்பற்றப்பட்ட தலைவர்கள் தங்களைப் பின்பற்றியவர்களைவிட்டு விலகிவிடுவார்கள். அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையே இருந்த தொடர்புகள் அறுபட்டு விடும். பின்பற்றிச் சென்றவர்கள், “நாங்கள் மீண்டும் உலகத்திற்குத் திரும்பிச் செல்ல நேர்ந்தால் இவர்கள் நம்மைவிட்டு விலகிவிட்டதைப்போன்று நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்” என்று கூறுவார்கள். இவ்வாறு அவர்களின் செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு வருத்தம் அளிப்பவையாக எடுத்துக் காட்டுவான். அவர்கள் நெருப்பைவிட்டும் வெளியேற முடியாது.”

 அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துவது மிகப் பெரிய அநியாயம். அவர்கள்தாம் இங்கு கொட்டிக் கிடக்கும் ஆதாரங்களை காண மறுக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வேதனையைக் கண்கூடாகக் காணும்போதுதான் இங்கு அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, அவன் பேராற்றல் மிக்கவன் என்பதையும் அவன் தங்களின் அநியாயத்திற்கு தக்க தண்டனை அளித்தே தீருவான் என்பதையும் அறிந்து கொள்வார்கள். அந்தச் சமயத்தில் அவர்களின் இந்த அறிதலால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அந்த அறிதல் இங்கு நிகழ வேண்டும். கொட்டிக் கிடக்கும் அவனுடைய சான்றுகளைக் கண்டு அவர்களுக்கு இந்த அறிதல் நிகழ வேண்டும். அதுதான் பயனளிக்கும் அறிதல்.

மனிதர்களைப் படைத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் படைத்து அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்த அல்லாஹ்தான் நேசத்திற்குத் தகுதியானவன். அவனுக்கு இணையாக யாரையும் நேசிக்கக்கூடாது. அவன்தான் நம்முடைய உள்ளத்தில் நேசத்தை ஏற்படுத்தினான். நாம் நம்முடைய பிள்ளைகளின் மீது, நமக்கு நெருக்கமானவர்களின் மீது, சக மனிதர்களின் மீது, ஏனைய உயிரினங்களின் மீது கொண்டிருக்கும் நேசம் அவனுடைய நேசத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் நேசம் அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதற்கு நம்மைத் தூண்டினால் அது அநியாயம், நன்றிகெட்டத்தனம்.

நம்பிக்கையாளர்கள் அனைவரையும்விட அல்லாஹ்வை அதிகம் நேசிப்பார்கள். அவர்கள் மனிதர்களின் மீது கொண்டிருக்கும் நேசம் அவன் மீது கொண்டிருக்கும் நேசத்திற்கு உட்பட்டதாக, அவனுடைய நேசத்தைப் பெறுவதற்கான நேசமாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வுக்காக எதையும் இழக்கவோ அர்ப்பணிக்கவோ தயங்க மாட்டார்கள்.

நன்றிகெட்ட அநியாயக்காரர்கள் வேதனையைக் கண்கூடாகக் காணும் அந்த நாளில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். வழிகெடுத்த தலைவர்கள் தங்களுக்கும் தங்களைப் பின்பற்றியவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுப் போகும். இவர்கள்தாம் இந்த உலகில் “எங்களைப் பின்பற்றுங்கள். நாங்கள் உங்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம்” என்று கூறிக் கொண்டிருந்தவர்கள்.

அவர்களின் பேச்சைக் கேட்டு அவர்களைப் பின்பற்றிய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தவாறு கூறுவார்கள், “மீண்டும் உலகிற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தால் இவர்கள் எங்களைவிட்டு விலகி விடுவதைப்போல நாங்களுக்கும் அவர்களைவிட்டு விலகி விடுவோம்”. இது அவர்களின் நிறைவேறாத ஆசை. அங்கு திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அந்த உலகின் காட்சி இந்த உலகில் இப்போது நம் முன்னால் காட்டப்படுகிறது, மோசமான அந்த நிலையில் நாம் சிக்கி விடாமல் இருப்பதற்காக.

அவர்கள் உலகில் செய்த செயல்பாடுகள் அவர்களுக்கு வருத்தம் அளிப்பவையாக, கவலை அளிப்பவையாக இருக்கும். அந்தச் சமயத்தில் அவர்கள் அடையும் வருத்தத்தினால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையினால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. அதனால் அவர்களின் நரக நெருப்பின் வேதனையிலிருந்து தப்ப முடியாது.

இந்தக் காட்சி சிந்திக்காமல் வழிகெட்ட தலைவர்களைப் பின்பற்றிச் செல்லும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.

يَاأَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ إِنَّمَا يَأْمُرُكُمْ بِالسُّوءِ وَالْفَحْشَاءِ وَأَنْ تَقُولُوا عَلَى اللهِ مَا لَا تَعْلَمُونَ وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ

2:168-171. “மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்டவையும் நல்லவையுமான பொருள்களையே உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீயவையும் மானக்கேடானவையும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது புனைந்து கூறுவதையும்தான். “அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள் எங்களின் முன்னோர் எவ்வழியில் கண்டோமோ அவ்வழியைத்தான் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களின் முன்னோர் எதையும் புரிந்துகொள்ளாதவர்களாவும் நேர்வழியில் இல்லாதவர்களாகவும் இருந்தாலுமா? நிராகரிப்பாளர்களுக்கு உதாரணம், கூப்பாடு போடுபவனின் வெறும் கூப்பாட்டையும் அழைப்பொலியையும் தவிர வேறெதையும் புரிந்துகொள்ள முடியாத கால்நடையைப் போன்றதாகும். அவர்கள் செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.”

ஹலால், ஹராம் நிர்ணயிக்கும் உரிமை அல்லாஹ்வின் உரிமைகளில் ஒன்றாகும். ஒரு பொருளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதும் ஒரு பொருளை தடைசெய்யப்பட்டதாக ஆக்குவதும் அவனுக்கு மட்டுமே உரித்தான உரிமைகளில் ஒன்றாகும். அவனுக்கு மட்டுமே உரித்தான உரிமையை மற்றவர்களுக்கு வழங்குவது ஷிர்க் என்னும் இணைவைப்பாகும். கடந்த வசனங்கள் இந்த இணைவைப்பைக் குறித்துதான் பேசியுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த வசனங்கள் இடம்பெறுகின்றன. அந்தச் சமயத்தில் அறபு இணைவைப்பாளர்களிடமும் யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் இந்த வகையான இணைவைப்பும் பரவியிருந்தன. இந்த வகையான இணைவைப்பு இன்றும் பரவலாகத்தான் இருக்கிறது. அல்லாஹ்வின் வழிகாட்டல்களைப் பின்பற்றாதவர்கள் தங்களைப் போன்ற மனிதர்களின் வழிகாட்டல்களையே பின்பற்றுவார்கள். வேதனையைக் காணும் அந்த நாளில் வழிகாட்டிய தலைவர்கள் தங்களின் தொண்டர்களை விட்டு பிரிந்து விடுவார்கள். அவர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிடுவார்கள்.

இந்த உலகிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காக, அவர்களின் பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டு வசப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அல்லாஹ் தடை செய்திருக்கிறான், அவை அவர்களுக்குத் தீங்களிக்கும் என்பதால். அவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை. அவற்றைத் தடை செய்யும் உரிமை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.  

ஷைத்தான் மனிதர்களிடம் வந்து அல்லாஹ் அனுமதித்த நல்லவற்றை தடை செய்யத் தூண்டுகிறான். மனிதர்கள் நல்லவற்றை விட்டுவிட்டால் அவர்களை தீயவற்றில் ஈடுபடுத்துவது அவனுக்கு இலகுவான ஒன்றாகி விடுகிறது. நாம் தேவையில்லாத, செய்யக்கூடாத செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவசியமான, செய்ய வேண்டிய செயல்பாடுகளை விட்டுவிடுவோம். இதுவும் ஷைத்தான் மனிதர்களிடம் ஊடுருவும் வழிகளில் ஒன்று. சில சமயங்களில் அதீத பேணுதல் ஆபத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் மீது திருமணத்தை தடை செய்து கொள்பவர்கள் எளிதால் விபச்சாரத்தில் அல்லது அது போன்ற ஒரு மானக்கேடான காரியத்தில் எளிதில் வீழ்ந்து விடுகிறார்கள். கிருஸ்தவர்களின் துறவறம் இதற்கான மோசமான ஒரு முன்னுதாரணம்.

இந்த வசனம் மனிதர்கள் அனைவரையும் விளித்து உரையாடுகிறது. ஒரு பொருள் அனுமதிக்கப்பட்டதாகவும் நல்லதாகவும் இருக்கிறது இருக்கிறது அதனை நீங்கள் உண்ணுங்கள். இந்த விசயத்தில் ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களை, சந்தேகங்களைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரி. அவனிடமிருந்து நல்ல ஆலோசனை எதுவும் வெளிப்படாது. உங்களை வழிகெடுப்பதுதான் அவனுடைய நோக்கம். அவனுடைய ஆலோசனைக்குப் பின்னால் அப்பட்டமான வழிகெடுத்தல் இருக்கிறது. தீய காரியங்களிலும் மானக்கேடான காரியங்களிலும் நீங்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காக அவன் உங்களைத் தூண்டிக் கொண்டே இருப்பான். சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் அவன் உங்களுக்கு முன்னால் வந்து நிற்பான். அல்லாஹ்வின் பெயரைக் கூறியும் அவன் உங்களை வழிகெடுப்பான்.

மனிதர்களிலும் ஜின்களிலும் உள்ள இந்த ஷைத்தான்கள் ஆபத்தானவர்கள்; தீய நோக்கம் கொண்டவர்கள். இந்த ஷைத்தான்கள் மனித நேயத்தின் குரலில் பேசுவார்கள்; பெண்ணுரிமையின் குரலில் பேசுவார்கள்; விலங்குரிமையின் குரலில் பேசுவார்கள்; கருத்துச் சுதந்திரத்தின் குரலில் பேசுவார்கள். அவர்களின் நோக்கம் உங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு தூரப்படுத்தி தவறான வழியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்காது.

ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்கிறான். அவர்களுக்குப் பிறகு வரக்கூடியவர்கள் வழிகெட்ட அந்த மனிதர்களை அப்படியே பின்பற்றுகிறார்கள். முந்தையவர்களின் செயல்பாடு பிந்தையவர்களுக்கு ஆதாரமாகி விடுகிறது. தலைவர்களின் செயல்பாடு தொண்டர்களுக்கு ஆதாரமாகி விடுகிறது. பெரும் அறிஞர்களின் செயல்பாடு பொதுமக்களுக்கு ஆதாரமாகி விடுகிறது. ஒருவரை எந்த ஆதாரமும் இன்றி கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது பேராபத்து. நபியவர்கள் இந்தக் குர்ஆன் என்னும் தெளிவான ஆதாரத்தை முன்வைத்தே மனிதர்களை அழைத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த குர்ஆனும் அவர்களின் வாழ்க்கையும் நமக்கு முன்னால் இருக்கும் பெரும் ஆதாரங்கள். அந்த ஆதாரங்களைக் கொண்டு இஸ்லாத்தை அறிந்து கொண்டவர்களே யாராலும் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையைப் பெறுகிறார்கள்.  

சத்தியம் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் “எங்களின் முன்னோர்களின் செயல்பாடு எங்களுக்குப் போதுமானது. நாங்கள் அவர்களைப் பின்பற்றுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அந்த முன்னோர்கள் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்களாக, எதையும் புரியாமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவர்களாக, நேர்வழியை அடையாதவர்களாக இருந்தாலுமாக இவர்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தை அறிந்துகொள்ளும் பாதையில் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவை பயன்படுத்த மறுக்கிறார்கள். அந்த அறிவுதான் அவர்களையும் விலங்குகளையும் வேறுபடுத்துகிறது. அவர்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்தாததனால் அந்த விலங்குகளைப் போன்றவர்களாகி விடுகிறார்கள் அல்லது அவற்றைவிட மோசமான நிலையை அடைந்து விடுகிறார்கள். அவர்கள் சத்தியத்தை கேட்க முடியாத செவிடர்கள்; சத்தியத்தைப் பேச முடியாத ஊமையர்கள்; சத்தியத்தைப் பார்க்க முடியாத குருடர்கள். அவர்கள் புரிந்துகொள்ள விரும்பாததனால் புரிந்துகொள்ள மாட்டார்கள்.                   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply