யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ
2:177. “நன்மை என்பது உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக நன்மை என்பது ஒருவர் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் வானவர்களின் மீதும் வேதத்தின் மீதும் தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்வதும் தம் செல்வத்தின்மீது ஆசையிருந்தும் அதனை உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் செலவு செய்வதும் தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தை அளிப்பதும் வாக்குறுதி அளித்தால் அதனை முழுமையாக நிறைவேற்றுவதும் வறுமையிலும் சிரமத்திலும் போர் சமயத்திலும் பொறுமை காப்பதும் ஆகும். இவர்கள்தாம் உண்மையாளர்கள்; இவர்கள்தாம் இறையச்சமுடையவர்கள்.”
கிப்லாவை முன்னோக்குதல் தொடர்பான விசயத்தில் யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த ஒரு கருத்து வேறுபாடு இங்கு சுட்டப்படுகிறது. யூதர்கள் பைத்துல் மக்திஸை அதன் மேற்குத்திசையின் வழியாக முன்னோக்கி வந்தார்கள். கிருஸ்தவர்கள் பைத்துல் மக்திஸை அதன் கிழக்குத் திசையின் வழியாக முன்னோக்கி வந்தார்கள். கஅபா கிப்லாக மாற்றப்பட்டபோதும் யூதர்கள் அந்த நிகழ்வை முன்வைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களை, தேவையற்ற விவாதங்களை உருவாக்கினார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் மார்க்கத்தின் அசலான அம்சத்தை விட்டுவிட்டு சடங்குகளை பற்றிக் கொண்டார்கள். அந்த சடங்குகளை சரியாக பின்பற்றுவதன்மூலமே அல்லாஹ்வின் திருப்தியை, வெற்றியை பெற முடியும் என்ற ஒரு தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். விளைவாக, தேவையற்ற மயிர்பிளக்கும் விவாதங்களில் ஈடுபடுட்டார்கள். தேவையான, கவனம் செலுத்த வேண்டிய மார்க்கத்தின் உயிரோட்டத்தை கைவிட்டார்கள். பொதுவாக இப்படித்தான் நிகழும். தேவையற்ற தர்க்கங்களில் நாம் ஈடுபட்டால் அது அவசியம் நிறைவேற்ற வேண்டிய பணிகளைவிட்டு நம்மைத் திருப்பி விடும்.
அவர்களின் இந்த தவறை சுட்டிக்காட்டுவதன்மூலம் அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தையும் எச்சரிக்கிறான். அவர்கள் சறுக்கி விழுந்த அதே இடத்தில் நீங்களும் சறுக்கி விடாதீர்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று.
இன்று முஸ்லிம் சமூகத்திலும் இப்படியான போக்கு பெரிய அளவில் ஊடுருவி இருப்பதை நாம் காண முடியும். மார்க்கத்தின் அசலான அம்சங்களை விட்டுவிட்டு சடங்குகளை, வெளிப்படையான விசயங்களைப் பற்றிக் கொண்டு தங்களுக்குள் கருத்து முரண்பட்டுக் கொண்டிருக்கும் பிரிவினைவாத குழுக்கள் நமக்கு மத்தியிலும் காணப்படத்தான் செய்கின்றன.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள الْبِرَ என்ற வார்த்தை செறிவான பொருளைக் கொண்ட ஒரு வார்த்தையாகும். பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி அதற்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்: “ஒருவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை முழுமையாக நிறைவேற்றுவது. அது அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையாகவும் இருக்கலாம் அல்லது அவனுடைய அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகவும் இருக்கலாம். இது தவிர நாம் அளிக்கும் வாக்குறுதிகள், செய்யும் சத்தியங்கள் என அனைத்து விதமான பொறுப்புகளையும் இந்த வார்த்தை உள்ளடக்கி விடும். இது எல்லா வகையான நன்மைகளையும் உள்ளடக்கி விடக்கூடிய செறிவான ஒரு வார்த்தை.”
இந்த வசனம் மார்க்கத்தின் அசலான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள செறிவான வசனமாகும். இதன் முதல் வரிக்கு இப்படி விளக்கம் அளிக்கலாம்: “நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது உயிரோட்டமற்ற சடங்குகளில், வெளிப்படையான சில விசயங்களில் அல்ல. நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மார்க்கத்தின் அசலான அம்சங்களில்.”
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது என்பது முழுமையாக அவனிடம் சரணடைவதும் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதும் அவனுக்கு இணையாக யாரையும் ஆக்காமலிருப்பதும் ஆகும். இதுதான் நன்மைகள் அனைத்திலும் முதன்மையானது. இந்த நம்பிக்கை சரியாக இருக்கும்பட்சத்தில்தான் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் செயல்பாடுகள் சரியானவையாகவும் நன்மையானவையாகவும் இருக்கும்.
மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்வது என்பது மனிதன் மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுவான் என்பதையும் இந்த உலகில் அவன் செய்த செயல்கள் அனைத்திற்கும் அல்லாஹ்வுக்கு முன்னால் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதையும் நம்புவதாகும். இது இந்த வாழ்வு நோக்கமுள்ளது என்பதையும் அல்லாஹ் பெரும் நீதியாளன் என்பதையும் நமக்கு உணர்த்தி விடுகிறது.
வானவர்கள் மீது நம்பிக்கை கொள்வது அவர்கள் அல்லாஹ்வின் கண்ணியமான படைப்பு என்பதையும் அவர்கள் வஹியை சுமந்து இறைத்தூதர்களிடம் வருகிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்வதாகும். அவர்கள்தாம் இறைத்தூதர்களுக்கும் இறைவனுக்கும் மத்தியில் இருக்கும் தூதர்கள். அவர்கள்தாம் வானத்தின் செய்திகளை பூமிக்குக் கொண்டு வருபவர்கள்.
வேதங்களின் மீது நம்பிக்கை கொள்வது அல்லாஹ் தன் தூதர்களுக்கு வானவர்களின் வழியாக வேதங்களை வழங்குகிறான் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். அவற்றின் வழியாகவே மனித சமூகத்திற்கு வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. அவற்றின் வழியாகவே அல்லாஹ் மனிதர்களுடன் உரையாடுகிறான்.
தூதர்களின் மீது நம்பிக்கை கொள்வது என்பது அல்லாஹ் மனிதர்களிலிருந்து தான் விரும்புவோரை தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் வஹியின் வழியாக உரையாடுகிறான் என்பதை நம்புவதாகும். இதுவரை வந்துள்ள தூதர்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் காட்டாமல் அவர்களை ஏற்றுக்கொள்வதாகும்.
மனிதர்களில் பெரும்பாலோர் இறைவன் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அறிவுள்ள, சிந்திக்கக்கூடிய எந்த மனிதனும் இறைவனின் இருப்பை மறுக்க முடியாது. இறைவன் எப்படி மனிதர்களுடன் தொடர்பு கொள்வான் என்ற விசயத்தில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள். இந்த விசயத்தில் அவர்களுக்கு மத்தியில் காணப்படும் விவாதங்கள் முடிவிலியாகச் சென்று கொண்டேயிருப்பவை. வானவர்கள், வேதங்கள், தூதர்கள் இந்த வரிசைதான் இறைவன் மனிதர்களுடன் உரையாடுவதற்கான ஒரே வழிமுறை. அவன் மனிதர்களுடன் நேரடியாக உரையாடுவதில்லை. அவன் அவர்களில் தான் நாடியவர்களை தூதர்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அப்படி தேர்ந்தெடுத்த தூதர்களிடம் வானவர்கள் வழியாக உரையாடுகிறான். வானவர்களின் வழியாக அவர்களுக்கு வேதங்களை வழங்குகிறான்.
இறைவனையும் அவனுடைய பண்புகளையும் அவன் மனிதர்களை என்ன நோக்கத்திற்காகப் படைத்தான் என்பதையும் அவன் மனிதர்களுக்கு வழங்கும் வழிகாட்டல்கள் என்ன என்பதையும் அவன் மனிதர்களிடம் என்ன விரும்புகிறான் என்பதையும் வஹியின் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். வஹிதான் அவையனைத்தையும் அறிந்துகொள்வதற்கான ஒரே வழிமுறை. வஹியைத் தவிர்த்து வேறு எந்த வழிமுறையைக் கொண்டும் மனிதர்கள் இறைவனைக் குறித்தோ தங்களைக் குறித்தோ முழுமையாக அறிந்துகொள்ள முடியாது.
“தம் செல்வத்தின்மீது ஆசையிருந்தும்…” மனித மனம் கஞ்சத்தனத்தை தூண்டக்கூடியது. அது தன்னிடம் இருக்கும் செல்வத்தை அவ்வளவு எளிதாக மற்றவர்களுக்கு அளித்து விடாது. சாக்குப்போக்குகளையும் தேவையற்ற அச்சத்தையும் முன்வைத்து அது எளிதாக தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக் கொள்ளும். தன் மனதின் கஞ்சத்தனத்தை வெல்பவனே உண்மையான நம்பிக்கையாளன். அவன் செல்வத்தின் மீது ஆசை கொண்டிருந்தாலும் அதனை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்வான். ஒரு மனிதன் அவனுக்கு விருப்பமான செல்வத்தை நல்வழியில் செலவு செய்வதன்மூலமே நன்மையின் உயர்நிலையை அடைய முடியும்.
இது ஸகாத் அல்லாத வேறொரு கடமையாகும். ஒருவனிடம் இருக்கும் வசதிக்கேற்ப இது கடமையாகிறது. அவன் செலவு செய்ய வேண்டியவர்களில் முதலில் இடம்பெறுபவர்கள் உறவினர்கள் ஆவர். உறவைப் பேணுவது என்பதில் உறவினர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவி செய்வதும் உள்ளடங்கும். அவர்கள் நமக்கு எதிராக வெறுப்பைக் கொண்டிருந்தாலும் சரியே. இரத்த உறவு எந்த விசயத்தைக் கொண்டும் முறிந்து விடாது. இந்த இடத்தில் நபியவர்களின் ஒரு ஹதீஸைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். “உறவைப் பேணுவது என்பது யார் நம்முடைய உறவைப் பேணுகிறார்களோ அவர்களின் உறவைப் பேணுவது மட்டுமல்ல. யார் நம்முடைய உறவைத் துண்டிருக்கிறார்களோ அவர்களின் உறவையும் பேணுவதாகும்” (புகாரீ)
அவன் செலவு செய்ய வேண்டியவர்களில் இரண்டாவதாக இடம்பெறுபவர்கள், அநாதைகள் ஆவர். பருவ வயதுக்கு முன்னரே தந்தையை இழந்தவர்கள்தாம் அநாதைகள். அவர்கள் சமூகத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளவர்கள் ஆவர். அநாதைகளைக் கண்டு கொள்ளாத, பொறுப்பெடுக்காத சமூகம் அதற்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
அவன் செலவு செய்ய வேண்டியவர்களில் மூன்றாவதாக இடம்பெறுபவர்கள் ஏழைகள். அவர்கள் தங்களுக்குத் தேவையான போதுமான செல்வத்தைப் பெறாதவர்கள். ஆனாலும் இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொண்டவர்கள். மக்களிடம் கையேந்தாதவர்கள். அவர்கள் சமூகத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளார்கள். சமூகத்தில் செல்வந்தர்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும்.
அடுத்தத்தாக இடம்பெறுபவர்கள் வழிப்போக்கர்கள். பயணம் அவர்களை அவர்களின் குடும்பத்தாரைவிட்டு பிரித்து விட்டது. பயணத்தினால் அவர்கள் தங்களின் சுற்றத்தாரை விட்டு தனிமைப்பட்டு விடுகிறார்கள். அவர்களும் உதவி செய்யப்படத் தகுதியானவர்கள்.
அடுத்தத்தாக இடம்பெறுபவர்கள், யாசிப்பவர்கள். நிர்ப்பந்தமான சூழலில் உதவி கேட்பதற்கு அனுமதி இருக்கிறது. உதவி கேட்பவர்கள் உதவி செய்யப்பட வேண்டும். உதவி கேட்டு வருபவர்கள் உதவி செய்யப்படத் தகுதியானவர்கள். அவர்கள் தேவையுடையவர்களா? இல்லையா? என்பதைக் குறித்து நாம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை நாம் விரட்டி விடவோ அவர்களைப் பார்த்து கடும்சொற்கள் கூறிவிடவோ கூடாது.
அடுத்தத்தாக அடிமையை விடுதலை செய்வதற்காக செலவு செய்வது. அந்தக் காலகட்டத்தில் அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்வதும் விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு பண உதவி வழங்குவதும் மிகச் சிறந்த நற்செயல்களாக இஸ்லாம் முன்வைத்தது. இப்படித்தான் இஸ்லாம் அடிமை முறையை ஒழித்தது. அது அந்தக் காலகட்டத்தில் இருந்த அடிமை முறையை ஒரேயடியாக நீக்கவில்லை. அது அடிமைகளை விடுதலை செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி சமூகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அடிமை முறையை ஒழித்தது. இந்தக் காலகட்டத்தில் இதற்கு இணையாக நாம் எதைச் சொல்ல முடியும்? அடிமைகளைப் போல ஏதோ ஒன்றால் கட்டுண்டு சிக்கிக் கிடப்பவர்களை மீட்பதை அதற்கு இணையாகச் சொல்ல முடியும். பேரறிஞர் அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “கடனால் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டவர்கள், அடமானத்தால் வீடுகளை, நிலங்களை இழந்தவர்கள், அநியாயமாக சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்கள் ஆகியோருக்கு உதவி செய்து அவர்களை மீட்பது அடிமைகளை விடுதலை செய்வது போன்ற நன்மைகளை பெற்றுத் தரலாம், இன்ஷாஅல்லாஹ்.”
அடுத்தது, தொழுகையை நிலைநிறுத்துவதும் ஸகாத் வழங்குவதும்… குர்ஆனில் பல இடங்களில் இந்த இரண்டும் ஒருசேர குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இரண்டும் இஸ்லாத்தின் வெளிப்படையான அடையாளங்கள். தொழுகையை நிலைநிறுத்துவது என்பது தொழுகையை அதற்கேயுரிய முறைப்படி உயிரோட்டத்துடன் நிறைவேற்றுவது. அப்படிப்பட்ட தொழுகையே மனிதனுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தும். அது அவனை பெரும் பாவங்களை விட்டுத் தடுக்கும். அதுதான் அவனுக்கும் இறைவனுக்குமான தொடர்பை என்றும் அறுபடாமல் வைத்திருக்கும். அந்த தொடர்புதான் மனிதனை பயத்திலிருந்தும் தேவையற்ற பதற்றத்திலிருந்தும் பாதுகாக்கும். ஸகாத் என்பது அவன் கட்டாயமாக வழங்க வேண்டிய தர்மமாகும். இதைத் தவிர்த்து அவன் செய்ய வேண்டிய தர்மங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுவும் சரி, அதுவும் சரி இரண்டும் மனிதனை மனதின் கஞ்சத்தனத்திலிருந்து விடுவிக்கின்றன.
அடுத்து இடம்பெறுவது முக்கியமான இரு பண்புகள். இந்த இரு பண்புகளையும் நற்பண்புகளின் சாரம்சமாக முன்வைக்கலாம். ஒன்று, அளித்த வாக்குறுதிகளை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவது. இரண்டு, பொறுமை காப்பது.
முன்னர் இடம்பெற்றிருக்கும் செயல்பாடுகள் அனைத்தும் வினைச்சொல் வாக்கியங்களாக இடம்பெற்றிருக்கின்றன. இப்போது இடம்பெறும் இந்த இரு பண்புகளும் பெயர்ச்சொல் வாக்கியங்களாக தனித்துக் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிலும் குறிப்பாக இரண்டாவது பண்பு பொறுமை இன்னும் தனித்துவத்துடன் குறிப்பிடப்படுகிறது.
வாக்குறுதியில் ஒரு நம்பிக்கையாளன் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியும் அவன் சக மனிதனுக்கு அளித்த வாக்குறுதிகளும் உள்ளடங்கி விடும். இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்வது என்பதே இந்த மார்க்கத்தின்படி முழுமையாகச் செயல்படுவேன் என்று மனிதன் அல்லாஹ்வுக்கு அளிக்கும் வாக்குறுதிதான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அளிக்கும் வாக்குறுதி என்பது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.
மனித வாழ்வு வாக்குறுதியின் அடிப்படையில்தான் நிலைபெறுகிறது. இந்த வாக்குறுதியில் அடிப்படையில்தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நம்புகிறான். கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலான ஒப்பந்தம், உறவின் அடிப்படையிலான ஒப்பந்தம், வியாபார அடிப்படையிலான ஒப்பந்தம், நட்பு அடிப்படையிலான ஒப்பந்தம், தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் மத்தியிலான ஒப்பந்தம், ஒரு சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்குமான ஒப்பந்தம், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்குமான ஒப்பந்தம்… எத்தனை வகையான ஒப்பந்தங்கள் மனித வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத சமூகத்தில் மனித வாழ்வு சீர்கெட்டு சிக்கலான ஒன்றாக மாறிவிடும்.
அடுத்த ஒரு பண்பு, வறுமையினால் ஏற்படும் துன்பத்தின் போதும் நோயினால் ஏற்படும் சிரமத்தின்போதும் போரினால், போர்ச் சூழலினால் ஏற்படும் பாதிப்புகளின்போதும் நிலைகுலையாமல், நிராசையடையாமல் பொறுமையுடன் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்திருப்பது. வறுமை, நோய், போர்ச்சூழல் இந்த மூன்றுமே மனிதனின் நடத்தையை தலைகீழாக மாற்றும் அளவுக்கு வலிமையானவை. இந்த சூழல்கள் மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடியவைதாம். அல்லாஹ் செல்வத்தைக் கொண்டும் சோதிப்பான், வறுமையைக் கொண்டும் சோதிப்பான். அவன் ஆரோக்கியத்தை அளித்தும் சோதிப்பான், நோயை அளித்தும் சோதிப்போன். அவன் அமைதியான சூழலை அளித்தும் சோதிப்பான், போர்ச் சூழலில் சிக்க வைத்தும் சோதிப்பான். வாழ்க்கையில் முரணான இரு நிலைகளையும் நாம் எதிர்கொள்ள நேரிடலாம். மனக்கட்டுப்பாடு என்பது பழக வேண்டிய ஒரு பண்பு. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிலையை மனிதர்களால் அடைய முடியும். உயிரோட்டமான வணக்க வழிபாடுகள் மனக்கட்டுப்பாட்டை கொண்டு வரக்கூடியவை. மனக்கட்டுப்பாடு கொண்டவர்களால்தான் சிரமமான சூழல்களில் உறுதியுடன் பொறுமையாக நிலைத்திருக்க முடியும்.
இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்கள்தாம் உண்மையாளர்கள். அவர்களின் சொற்களுக்கும் செயல்களுக்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இருக்காது. அவர்கள்தாம் தக்வா என்னும் உயர்நிலையை அடைந்தவர்கள்.
