சீல் வைக்கப்படும் உள்ளம்

You are currently viewing சீல் வைக்கப்படும் உள்ளம்

நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.  

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤَمِنُونَ خَتَمَ اللهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

2:6,7. “நிராகரிப்பாளர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதும் எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் ஒன்றுதான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீதும் செவிகளின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளில் திரை இருக்கிறது. அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.”

நபியே! இதுதான் தங்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த உண்மையான மார்க்கம் என்பதை உணர்ந்த பின்னரும் பிடிவாதத்தினால் இந்த மார்க்கத்தை, இந்தக் குர்ஆனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்தாலும் எச்சரிக்கை செய்யாவிட்டாலும் இரண்டும் ஒன்றுதான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் செவிகளைக் கொண்டு சத்தியத்தைக் கேட்கவோ தங்கள் பார்வைகளைக் கொண்டு சத்தியத்தைப் பார்க்கவோ தங்கள் உள்ளங்களைக் கொண்டு சத்தியத்தை உணரவோ விரும்பவில்லை. அவர்களின் விருப்பமின்மை அவர்களுக்கு முன்னால் பெரும் தடையாக, திரையாக வந்து நிற்கிறது. சத்தியத்தை அறிந்து கொள்வதற்கான வழிகள் அனைத்தையும் அவர்கள் மூடி வைத்துள்ளார்கள்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள الْكُفْرُ என்ற வார்த்தைக்கு மூடி மறைத்தல் என்று பொருள். விவசாயிக்கும் காஃபிர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அவன் விதையை மண்ணில் மூடி மறைக்கிறான் என்பதனால். குஃப்ர் என்ற வார்த்தை நன்றியோடு இருத்தல் என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்லான நன்றிகெட்டத்தனம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையை உண்மை என உணர்ந்த பின்னரும் அதை மறைப்பதற்கு, மறுப்பதற்கு இங்கு குஃப்ர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் வேதத்திலுள்ள முன்னறிவிப்புகள் வழியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த உண்மையான நபிதான் என்பதை தெளிவாக அறிந்த பின்னரும் அந்த உண்மையை மறைத்த, மறுத்த யூத மதகுருமார்களும் அவர்களைப் போன்றவர்களுமே இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள். நபித்தோழர் இப்னு அப்பாஸ் இப்படித்தான் இதற்கு விளக்கம் அளிக்கிறார். இது நிராகரிப்பாளர்கள் அனைவரையும் குறிக்கும் வாசகம் இல்லை.

அறியாமையினால் வெளிப்படும் நிராகரிப்பு அறிவின்மூலம் அகற்றப்படலாம். தகுந்த ஆதாரம் முன்வைக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படும்போது அது நீங்கி விடுகிறது. ஆனால் கர்வத்தினால், பொறாமையினால், பிடிவாதத்தினால் வெளிப்படும் நிராகரிப்பு அவ்வளவு எளிதாக அகன்று விடுவதில்லை. அது அகன்று விடக்கூடியதும் அல்ல. அது உண்மையை அறிந்த பின்னர் வெளிப்படும் நிராகரிப்பு. அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவுதான் ஆதாரங்கள் முன்வைக்கப்படாலும், அவர்களுடைய வாதங்களின் ஓட்டாண்டித்தனங்கள் அப்பட்டமான முறையில் தெளிவுபடுத்தப்பட்டாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்பதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். குறைபாடு உங்களிடம் இல்லை. குறைபாடு அவர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு முன்னால் இருக்கும் பாதைகள் அனைத்தையும் அடைத்து விட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலை விரும்பவில்லை. அவர்களை நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இது நபியவர்களுக்கும் அவர்களின் பணியை முன்னெடுக்கும் அழைப்பாளர்களுக்கும் அல்லாஹ் அளிக்கக்கூடிய தெளிவு. நீங்கள் இந்தப் பாதையில் செல்லும்போது இப்படியான மனிதர்களையும் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருப்பது உங்கள் அழைப்பின் தோல்வியல்ல. அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். அது அவர்களுடைய குறைபாடு. நேர்வழியை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் தொலைத்து விட்டார்கள். அறிதலுக்கான பாதையை அவர்கள் அடைத்து விட்டார்கள். அதனால் உண்மையை அறிந்துகொள்ள முடியாத நிலையை அடைந்து விட்டார்கள். உங்களின் கடமை தெளிவாக எடுத்துரைப்பதோடு முடிந்து விடுகிறது.   

ஒரு மனிதன் எந்தப் பாதையை விரும்புகிறானோ அந்தப் பாதையே அவனுக்கு இலகுபடுத்தப்படும். அவன் நேர்வழியில் செல்ல விரும்பினால் அந்த வழியில் செல்வது அவனுக்கு இலகுவான ஒன்றாக இருக்கும். பாதையின் அடுத்தடுத்த மைல்கற்கள் அவனுக்குத் தெளிவாகிக் கொண்டேயிருக்கும். அந்தப் பாதையை அறிந்து கொள்வதும் அதில் செல்வதும் அவனுக்கு கடினமான, அந்நியமான ஒன்றாக இருக்காது. அதேபோன்று ஒருவன் தவறான வழியை விரும்பினால் அந்த வழிதான் அவனுக்கு இலகுபடுத்தப்படும். அல்லாஹ் யார் மீதும் சிறிதும் அநீதி இழைக்க மாட்டான்.

சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவாறு உள்ளங்களிலும் செவிகளிலும் முத்திரை இடப்படுதல், பார்வைகளில் திரை ஏற்படுத்தப்படுதல் மனிதர்களின் விருப்பத்தினாலும் அவர்களுடைய செயல்பாடுகளினாலும் நிகழ்கின்ற ஒன்றாகும். இது அல்லாஹ் இங்கு அமைத்த விதிகளில் ஒன்றுதான். திருக்குர்ஆன் பல இடங்களில் இந்த விதியைத் தெளிவுபடுத்துகிறது. உதாரணமாக, அந்நிசா என்ற அத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் வசனத்தைக் கவனித்துப் பாருங்கள். அதில் அவர்களின் உள்ளங்கள் முத்திரை இடப்பட்டதற்கான காரணம் தெளிவுபடுத்தப்படுகிறது:

“அவர்கள் தங்கள் வாக்குறுதியை மீறியதனாலும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததனாலும் இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை செய்ததனாலும் ‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன’ என்று அவர்கள் கூறி வந்ததனாலும் நாம் அவர்களைச் சபித்து விட்டோம். உண்மையில் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாகவே அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரை இட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” (4:155)  

மனித உள்ளத்தில் ஓர் ஒளி இருக்கிறது. அந்த ஒளியைக் கொண்டே மனிதர்கள் சரியையும் தவறையும் அறிந்து கொள்கிறார்கள். அந்த ஒளியை இஸ்லாம் என்ற ஒளி உண்மைப்படுத்துகிறது. இயல்பு நிலையில் நீடிக்கும் உள்ளம் இஸ்லாத்தோடு முரண்படாது. ஏனெனில் அந்த உள்ளம் எதை அறிந்திருக்கிறதோ அதைத்தான் இஸ்லாமும் முன்வைக்கிறது. மனதின் தீய இச்சைகளுக்கு அடிமையாகுதலும் பாவங்களில் மூழ்குதலும் அந்த ஒளியை அணைத்து விடுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாம் அந்நியமான ஒன்றாகத் தெரிய ஆரம்பிக்கிறது. மக்காவின் நிராகரிப்பாளர்கள் குர்ஆனைக் குறித்து கூறிய குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்விதமாக அருளப்பட்ட அல்முதஃப்ஃபிஃபீன் என்ற அத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் வசனம் இதையே தெளிவுபடுத்துகிறது:

“அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அவர்களின் உள்ளங்களின் மீது துருவாகப் படிந்து விட்டன.”  (83:14)

அவர்களின் புரிதலுக்குத் தடையாக இருந்தது அவர்கள் சம்பாதித்த பாவங்கள்தாம் என்பதை இந்த வசனம் உறுதிப்படுத்துகிறது. அவை அவர்களின் உள்ளங்களில் துருவெனப் படிந்து சரியையும் தவறையும் பிரித்துக் காட்டும் பக்குவத்தை அழித்து விட்டன. அவை உள்ளத்தின் இயல்பான ஒளியை அணைத்து விட்டன.

இப்னு ஜரீர் அத்தபரீ இந்த வசனத்திற்கு விளக்கமாக நபியவர்களின் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடுகிறார்:

“நம்பிக்கையாளன் ஒரு பாவம் செய்து விட்டால் அவனுடைய உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி விழுகிறது. அவன் பாவமன்னிப்புக் கோரினால் அந்த கரும்புள்ளி நீங்கி உள்ளம் தூய்மையடைகிறது. அந்த கரும்புள்ளிகள் அதிகரித்து உள்ளத்தை மிகைத்து விட்டால் உள்ளம் பாவக்கறைகளால் துருவடைந்து விடுகிறது. இந்த கறையைக் குறித்துதான் அல்லாஹ் “அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அவர்களின் உள்ளங்களின் மீது துருவாகப் படிந்து விட்டன” என்று கூறுகிறான்.

மேலும் நபியவர்கள் கூறியதாக அவர் கூறுகிறார்: “தொடர் பாவங்கள் உள்ளத்தைப் பூட்டி விடுகின்றன. உள்ளம் பூட்டப்பட்டு விட்டால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து முத்திரை இடப்பட்டு விடுகிறது. அதில் ஈமான் உள்ளே நுழைவதற்கு எந்த வழியும் இருப்பதில்லை. நிராகரிப்பு வெளியேறுவதற்கான வாய்ப்பும் இருப்பதில்லை.”   

இயல்பு நிலையில் நீடித்தல் என்பது ஒளியாகும். ஈமான் என்பதும் ஒளியாகும். இயல்பு நிலையில் நீடிக்கும் மனிதர்கள் ஈமானிய ஒளியைப் பெறும்போது ஒளியின் மீது ஒளியைக் கொண்டவர்களாகி விடுகிறார்கள். இயல்பு நிலையைத் தொலைத்து பிறழ்நிலையை அடைந்தவர்கள் தாங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் இறுகிப் போய்விடும். அவர்களால் ஈமானியை ஒளியைப் புரிந்து கொள்ள முடியாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply