அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் தக்வாதான். தக்வாதான் குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படையான தகுதி.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
2:183-185. “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் தக்வா உடையவர்களாகலாம். இது குறிப்பிட்ட சில நாட்களிலாகும். உங்களில் யாரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். யார் ஓர் ஏழைக்கு உணவளிக்க சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். யாரேனும் அதிக நன்மைகள் புரிந்தால் அது அவருக்குச் சிறந்ததாகும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும். ரமலான் மாதத்தில்தான் குர்ஆன் அருளப்பட்டது. அது மக்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியைத் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கின்றது. ஆகவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும். உங்களில் யாரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலவையே நாடுகிறான். அவன் உங்களைச் சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. ஆகவே எண்ணிக்கையை நிறைவு செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனைப் பெருமைப்படுத்துங்கள். அதனால் நீங்கள் நன்றியுள்ளவர்களாக ஆவீர்கள்.”
நோன்பு என்பதற்கு இந்த வசனத்தில் ‘சௌம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒன்றிலிருந்து விலகிக் கொள்ளுதல், அதை விட்டுவிடுதல் என்று பொருள். இந்த வார்த்தையின் பயன்பாடு தொடர்பாக மௌலானா ஹமீதுத்தீன் ஃபராஹீ இப்படிக் கூறுகிறார்: “அறபுக்கள் தங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் பட்டினி போட்டு பழக்கப்படுத்துபவர்களாக இருந்தார்கள், அவை கஷ்ட காலங்களில் கஷ்டங்களை சகித்துக் கொள்பவையாக இருக்க வேண்டும் என்பதற்காக. அவர்கள் சௌம் என்ற வார்த்தையை இதற்குத்தான் பயன்படுத்தினார்கள்”
இந்த வசனத்திலும் அப்படியான ஒரு பொருளில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. நோன்புக் காலங்களில் நாம் உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் உறவு கொள்வதிலிருந்தும் விலகி இருக்கின்றோம். அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வழங்கப்படும் அற்புதமான பயிற்சி. அது பொறுத்திருப்பதற்கு, மனக்கட்டுப்பாட்டோடு வாழ்வதற்கு, அல்லாஹ் அளித்த மார்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கு நமக்கு வழங்கப்படும் பயிற்சி. அது தக்வா என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயற்சி.
பொறுமையும் மனக்கட்டுப்பாடும் மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கும் பண்புகள் அல்ல. அவை சம்பாதிக்கப்பட வேண்டிய, ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய பண்புகள். ஒரு மனிதன் பொறுத்திருந்து பொறுத்திருந்து பொறுத்திருப்பதற்குப் பழக வேண்டும். மனம் எந்தவொன்றையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது. அது எந்தவொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்றுக் கொள்ளும். அது இச்சைகளின் பக்கம் விரைந்து செல்லும். அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும் அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி. நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.
நோன்பு அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்கான வழிபாடுகளில் ஒன்று. அதன்மூலம் மனதுக்கும் உடலுக்கும் பல்வேறு நன்மைகள் பெறப்பட்டாலும் அது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்கான வழிபாடுகளில் ஒன்று என்ற அளவில்தான் அது அணுகப்பட வேண்டும். அவனுடைய கட்டளையை நிறைவேற்றுதல், அவனுடைய திருப்தியைப் பெறுதல், அவனுக்கு நன்றி செலுத்துதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காகவே அது நிறைவேற்றப்பட வேண்டும். உன்னதமான நோக்கத்தை அடையும் பாதையில் பெறப்படும் உபரியான நன்மைகள் ஒருபோதும் நோக்கங்களாக மாறிவிடக்கூடாது.
இது காலம் காலமாக இருந்து வருகின்ற ஒன்றுதான். இன்றும் வெவ்வேறு சமூகங்களில் நோன்பு ஒரு வழிபாடாகவே காணப்படுகிறது. முந்தைய சமூகங்களின் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே நம் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
“இது குறிப்பிட்ட சில நாட்களிலாகும். உங்களில் யாரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். யார் ஓர் ஏழைக்கு உணவளிக்க சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். யாரேனும் அதிக நன்மைகள் புரிந்தால் அது அவருக்குச் சிறந்ததாகும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்”
வருடத்தில் ரமலான் மாதத்தில் மட்டுமே இந்த நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பயணத்தில் இருந்தால் அல்லது நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும். வேறு நாட்களில் நோன்பு நோற்பது சிரமமாக இருந்தால் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கும் வசதி பெற்றிருப்பின் அவ்வாறு ஓர் ஏழைக்கு உணவளியுங்கள். தன்னார்வத்துடன் கூடுதலாக நீங்கள் பலருக்கும் உணவளித்தால் அது உங்களுக்குச் சிறந்ததுதான். உங்களின் கூடுதலான ஒவ்வொரு செயலும் உங்களுக்குக் கூடுதல் நன்மைகளைப் பெற்றுத் தரும். ஆனாலும் சிரமமாக இருந்தாலும் விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் கணக்கிட்டு நோற்பதுதான் உங்களுக்குச் சிறந்தது.
இந்த வசனத்தில் ரமலான் மாதத்தில் பயணத்தின் காரணமாக அல்லது நோயின் காரணமாக நோன்பு நோற்க இயலாதவர்கள் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும் அவ்வாறு நோற்பது சிரமமாக இருந்தால் அவர்கள் விடுபட்ட ஒரு நோன்புக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்ற சலுகை தரப்பட்டுள்ளது. ஆனாலும் வசனத்தில் இறுதியாக இடம்பெறும் வாசகம் அந்த சலுகையை பயன்படுத்துவதைவிட நோன்பு நோற்பதே சிறந்தது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அடுத்து வரும் வசனம் ஆரம்ப கட்டத்தில் தரப்பட்ட இந்த சலுகையையும் ரத்து செய்து விடுகிறது. இனி ரமலான் மாதத்தை அடைபவர் கட்டாயமாக நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் அந்த நாட்களில் பயணத்தின் காரணமாக அல்லது நோயின் காரணமாக நோன்பு நோற்க முடியவில்லையெனில் அவர்கள் வேறு நாட்களில் கணக்கிட்டு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறி விடுகிறது.
இந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் என்னும் மகத்தான அருட்கொடை மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த மாதத்தில்தான் அது விண்ணுலகிலிருந்து ஜிப்ரீல் வழியாக நபியவர்களின் உள்ளத்தில் அருளப்படத் தொடங்கியது. அது மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியாக இருக்கின்றது. அது தமக்குள் நேர்வழிக்கான ஆதாரங்களையும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஆதாரங்களையும் கொண்டிருக்கின்றது. இந்த மகத்தான வேதத்தை உங்களுக்குத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்பொருட்டு வேதம் அருளப்பட்ட இந்த மாதத்தில் நீங்கள் நோன்பு வையுங்கள். பயணத்தின் காரணமாக அல்லது நோன்பின் காரணமாக இந்த மாதத்தில் உங்களால் நோன்பு நோற்க முடியவில்லை எனில் வேறு நாட்களில் கணக்கிட்டு விடுபட்ட நோன்புகளை வைத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். அவன் உங்களை சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. இந்த வேதத்தை அளித்து உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன்மூலம் அவனுக்கு நன்றியுள்ள அடியார்களாக நீங்கள் மாறலாம்.
நோன்பு என்பது கொண்டாட்டத்தின் வடிவம். நோன்பு என்பது நன்றி செலுத்துவதற்கான வடிவம். அது தண்டனையின் வடிவம் அல்ல. அருள்வளமிக்க இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றதற்காக இந்த மாதத்தில் நோன்பு நோற்று நாம் அவனுக்கு நன்றி செலுத்துகிறோம், அவனைப் பெருமைப்படுத்துகிறோம். நோன்பு தக்வா என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயிற்சியாகவும் அமைகிறது. தக்வா என்னும் உயர்நிலையை அடைந்தவர்கள்தாம் இந்தக் குர்ஆனைப் புரிந்து கொள்வார்கள், அதிலிருந்து பயனடைய வேண்டிய முறைப்படி பயனடைவார்கள். இது மனிதர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது. ஆனாலும் தக்வா உடையவர்களே இந்த வழிகாட்டியிலிருந்து பயனடைவார்கள்.
தக்வா அற்ற மனிதர்கள் இச்சைகளின் பிடியில் சிக்கியவர்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளிலும் இச்சைகளின் தாக்கமே மிகைத்திருக்கும். தக்வா உடைய மனிதர்களே இச்சைகளின் பிடியில் சிக்காமல் இருக்கும் சுதந்திரமான மனிதர்கள்.
