குழப்பம் விளைவிப்பவர்கள்

You are currently viewing குழப்பம் விளைவிப்பவர்கள்

நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் காணப்படுவார்கள். நமக்கு மத்தியில்கூட இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதை நாம் காண முடியும். உண்மையில் இவர்கள் மூர்க்கமான நிராகரிப்பாளர்களைவிடவும் ஆபத்தானவர்கள். அடுத்து வரக்கூடிய பதினொன்று வசனங்கள் இவர்களைக் குறித்துதான் பேசுகின்றன.

மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி, ஷைய்க் ரஷீத் ரிளா, ஷைய்க் அபூஸஹ்ரா ஆகியோர் இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருப்பவர்கள் யூதர்களில் இன்னொரு தரப்பினர் என்கிறார்கள். அவர்களிடம்தான் இந்த வகையான நயவஞ்சகத்தனம் காணப்பட்டது. அவர்களால் இஸ்லாத்தை  ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம் இஸ்லாத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்கவும் முடியவில்லை. மற்ற மார்க்கங்களைப் போல அதுவும் ஒரு மார்க்கம் என்ற அடிப்படையில் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இஸ்லாம்தான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்கான ஒரே வழி என்ற ரீதியில் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் காணப்பட்ட பொறாமையே அவர்களை நயவஞ்சகர்களாக ஆக்கியது.  

நாங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படவும் இல்லை. நபியவர்களை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. நபியவர்களின் காலத்தில் இந்த வசனங்கள் அந்த யூதர்களைக் குறித்தாலும் இவற்றில் காணப்படும் பொதுவான தன்மைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இடத்திலும் காணப்படக்கூடிய இந்த பண்புகளைக் கொண்ட மனிதர்களையும் குறிக்கும்.      

وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ   

2:8-10. “மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். “நாங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை. அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்ற முனைகிறார்கள். உண்மையில் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ் அதனை இன்னும் அதிகப்படுத்திவிட்டான். பொய்யுரைத்துக் கொண்டிருந்ததனால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.”

அவர்களின் நம்பிக்கை சொல்லளவில் மட்டுமே இருக்கும். அவர்களின் செயல்பாடுகளிலோ பண்புகளிலோ அதனுடைய எந்த அடையாளமும் இருக்காது. அவர்களின் நாவு கூறுவதை அவர்களின் உள்ளம் நிராகரிக்கும். அவர்களின் நாவு கூறுவதை அவர்களின் செயல்பாடுகள் நிராகரிக்கும்.  அவர்கள் நிராகரிப்பை மறைத்துக் கொண்டு தங்களை நம்பிக்கையாளர்கள்போல காட்டிக் கொள்கிறார்கள்.  

ஏன் அவர்கள் தங்களை இப்படிக் காட்டிக் கொள்கிறார்கள்?

இதன்மூலம் அவர்கள் என்ன நாடுகிறார்கள்?

இதன்மூலம் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அல்லாஹ்வை எப்படி ஏமாற்ற முடியும்? அவன் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் இல்லையா? உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். ஆனாலும் அதைக்கூட உணர முடியாத அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இயல்பு நிலையில் நீடிக்கும் மனிதர்களால்தான் நுட்பமான, ஆழமான விசயங்களை உணர்ந்துகொள்ள முடியும். மனதின் தீய உணர்வுகளான பொறாமையோ கர்வமோ வெறுப்போ மனிதனை மிகைத்து விட்டால் அவன் நுட்பமான விசயங்களை மட்டுமல்ல, இயல்பான உண்மைகளைக்கூட உணர முடியாதவனாகி விடுகின்றான். அது அவனது கண்களைக் குருடாக்கி விடும்; அவனது அறிவை மழுங்கடித்து விடும்.

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அது பொறாமை என்ற நோய். அது நயவஞ்சகம் என்ற நோய். அது வெறுப்பு என்ற நோய். அவர்கள் அந்த நோய்க்கான சிகிச்சையை விரும்பவில்லை. அவர்கள் அந்த நோயிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆகவே அல்லாஹ் அவர்களின் நோயை அதிகப்படுத்தி விட்டான். அவர்களின் பொறாமை, நயவஞ்சகம், வெறுப்பு இன்னும் அதிகமாகி விட்டன. அவர்கள் பொறாமையின் காரணமாக, வெறுப்பின் காரணமாக நெருங்க முடியாத அளவு தூரமாகி விட்டார்கள். அவர்கள் பொறாமையை, வெறுப்பை மறைத்துக் கொண்டு சமாதானத்தை, இணக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

ஈமான் என்பது உண்மையை அறிதல் மட்டுமல்ல. ஈமான் என்பது அறிந்த உண்மையை நாவளவில் மொழிதல் மட்டுமல்ல. ஈமான் என்பது உள்ளத்தளவில் அறிதலும் நாவளவில் மொழிதலும் அதனை செயல்பாடுகளைக் கொண்டு உண்மைப்படுத்துதலும் ஆகும்.   

உண்மையாகவே அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவன் இங்கு அமைத்த ஒழுங்குகளை மீறி குழப்பம் உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் அறிவுரை கூறப்பட்டால் அவர்களின் ஈகோ சீண்டப்பட்டு விடுகிறது. அவர்கள் நேர்வழியில் இருப்பவர்களை ‘மூடர்கள்’ என்று கூறி இழிவுபடுத்துகிறார்கள்.  

وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ

2:11-13. “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “நாங்கள்தாம் சமாதானம் செய்பவர்கள்” என்று கூறுகிறார்கள். எச்சரிக்கை! இவர்கள்தாம் குழப்பவாதிகள். ஆயினும் இவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. “மற்ற மனிதர்கள் நம்பிக்கைகொண்டதுபோன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “மூடர்கள் நம்பிக்கை கொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கைகொள்ள வேண்டுமா?” என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள்தாம் மூடர்கள். ஆயினும் இவர்கள் அறிந்துகொள்வதில்லை.”

பூமியில் குழப்பம் விளைவித்தல் என்ற சொல்லாடல் இங்கு அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராகச் செயல்படுவதைக் குறிக்கும். இந்த உலகம் எப்படி அவன் அமைத்த ஒழுங்குகளின்படி இயங்குகிறதோ அப்படித்தான் மனித வாழ்க்கையும் அவன் அளித்த வழிகாட்டலின்படியே இயங்க வேண்டும். அப்படி இயங்கும்போதுதான் மனித வாழ்க்கை சீரானதாக இருக்கும். அவன் அளித்த மார்க்கத்தை மனித வாழ்க்கையிலிருந்து அகற்ற முயற்சிப்பது மனித வாழ்க்கையைச் சீர்குலைப்பதாகும். 

அன்றைய காலகட்டத்தில் யூதர்களில் ஒரு தரப்பினர் இப்படித்தான் செய்து வந்தார்கள். இந்த மார்க்கம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த மார்க்கம், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனிடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதை அறிந்துகொண்ட பின்னரும் அவர்கள் சாக்குப்போக்குகள் கூறி தட்டிக் கழித்தார்கள். வெளிப்படையாக நிராகரிப்பதற்கும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கும் மத்தியில் ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து அதுதான் சமாதானத்திற்கும் இணக்கத்திற்கும் வழிவகுக்கும் சரியான நிலைப்பாடு என்றார்கள். இவ்வாறு மக்களைக் குழப்பாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், “நாங்கள் குழப்பம் செய்யவில்லை, சமாதானமே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

அவர்களிடம் காணப்பட்ட அளவுகோல் என்ன? எந்த அளவுகோலைக் கொண்டு அவர்கள் தங்களை சமாதானம் ஏற்படுத்துபவர்கள் என்று கூறிக் கொண்டார்கள்? அவர்களிடம் எந்த அளவுகோலும் இல்லை. அவர்கள் தங்களின் அளவுகோலை இழந்து விட்டார்கள். அவர்களின் உள்ளத்தில் காணப்படும் நோய் அவர்களின் அளவுகோலை இல்லாமல் ஆக்கி விட்டது. ஆகவே அவர்கள் குழப்பம் செய்வதை சமாதானம் ஏற்படுத்துவது என்று கருதுகிறார்கள். தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள். அவர்கள் உணர முடியாத நிலையை அடைந்து விட்டார்கள். அவர்கள் உணர முடியாத நிலையை அடைந்து விட்டதற்கு அவர்கள்தாம் காரணம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நம்பிக்கையாளர்களை அவர்கள் மூடர்களாகக் கருதினார்கள். இஸ்லாத்தின் பக்கம் அவர்கள் அழைக்கப்பட்டால் “மூடர்கள் நம்பிக்கை கொண்டதுபோன்று நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?” என்று கர்வத்துடன் கேட்கிறார்கள். உண்மையில் மூடர்கள் யார்? இஸ்லாம்தான்   உண்மையான மார்க்கம் என்பதை அறிந்து கொண்ட பின்னரும் தங்களின் தீய உணர்வினால் மிகைக்கப்பட்டு அதற்கு மாறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள்தாம் மூடர்கள். அவர்களின் பொறாமை அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. உண்மையில் அவர்கள்தாம் மூடர்கள். ஆனாலும் தங்களின் மூடத்தனத்தை புத்திசாலித்தனம் என்று நம்பும் அளவுக்கு அறிவு மழுங்கியவர்களாகி விட்டார்கள்.

 وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى فَمَا رَبِحَتْ تِجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ

2:14-16. “அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால், “நாங்களும் நம்பிக்கைகொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் தங்களின் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம். அவர்களைப் பரிகாசம் செய்கின்றோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். அவர்களின் வழிகேட்டில் தடுமாறித் திரியுமாறு அவர்களை விட்டுவிடுகிறான். அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை வாங்கிக் கொண்டார்கள். அவர்களின் வியாபாரம் பலனளிக்கவுமில்லை; அவர்கள் நேர்வழிபெறுபவர்களாகவும் இல்லை.”

இங்கு ஷைத்தான்கள் என்ற வார்த்தை நிராகரிப்பின் தலைவர்களைக் குறிக்கிறது. ஷைத்தான் என்ற வார்த்தை தீயவன், அவசரப்படுபவன், மூர்க்கமானவன் ஆகிய பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை மனிதர்கள், ஜின்கள் இரு சாராருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அவர்கள் தங்களின் நயவஞ்சகத்தனத்தை புத்திசாலித்தனம் என்று எண்ணுகிறார்கள். முஸ்லிம்களை சந்திக்கும்போது தாங்களும் முஸ்லிம்கள்தாம் என்று காட்டிக் கொள்கிறார்கள். தங்கள் தலைவர்களை, மதகுருமார்களை சந்திக்கும்போது “நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். முஸ்லிம்களைப் போல நடித்து அவர்களைப் பரிகசிக்கின்றோம்” என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான், அவர்கள் நிராகரிப்பில் இன்னும் முன்னேறிச் சென்று தடுமாறித் திரிய வேண்டும் என்பதற்காக. ஆனால் அவர்கள் அதை உணராமல் நம்பிக்கையாளர்களை பரிகசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் அவர்களின் இந்த நிலைமைதான் பரிகாசத்திற்குரியது. சட்டென எதிர்பாராதவிதத்தில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 

அவர்களின் இந்த வியாபாரம் எந்த வகையிலும் இலாபம் தரக்கூடியதாக இல்லை. அவர்கள் நல்ல பொருளைக் கொடுத்து விட்டு அதற்குப் பகரமாக மட்டமான பொருளை வாங்கி விட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கொடுத்து விட்டு அதற்குப் பகரமாக வழிகேட்டை வாங்கி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நேர்வழியை இழந்து விட்டார்கள்.  

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ

2:17,18. “அவர்களுக்கு உதாரணம் பின்வரும் உதாரணத்தைப் போன்றது: ஒருவர் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பு மூட்டினார். அது அவரைச் சுற்றிலும் ஒளிவீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் போக்கிவிட்டான். எதையும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டுவிட்டான். அவர்கள் செவிடர்கள்; ஊமையர்கள்; குருடர்கள் ஆவர். அவர்களால் வழிகேட்டிலிருந்து திரும்ப முடியாது.”

இந்த உதாரணம் நிராகரிப்பாளர்களில் முதல் வகையினருக்குச் சொல்லப்படும் உதாரணமாகும். அவர்கள் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்கள். நபியவர்கள்தாம் உண்மையான தூதர் என்பதையும் இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதையும் தங்கள் வேதத்தில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் வழியாக உறுதியாக அறிந்து கொண்ட பின்னரும் ஏற்றுக்கொள்ள மறுத்த யூத மதகுருமார்களுக்கு இந்த உதாரணம் சொல்லப்படுகிறது. அவர்களைப் போன்ற அனைவருக்கும் இந்த உதாரணம் கச்சிதமாகப் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. யாரெல்லாம் தங்கள் இயல்பின் வழி இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்பதை அறிந்துகொண்ட பின்னரும் பொறாமையினால், வெறுப்பினால், கர்வத்தினால் இஸ்லாத்தை ஏற்க மறுக்கிறார்களோ தங்களின் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த உதாரணம் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

அவர்கள் காரிருளில் இருந்தபோது இஸ்லாம் என்ற வெளிச்சத்தை ஒருவர் கொண்டு வந்தார். அவர்கள் தங்கள் இயல்பின் வழி அந்த வெளிச்சம் மட்டுமே தங்களை இருளிலிருந்து விடுவிக்கும் என்பதை அறிந்து கொண்டார்கள்.  ஆனாலும் அவர்கள் அந்த வெளிச்சத்தைக் கொண்டு பயனடையவில்லை. முஸ்லிம்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பொறாமை அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. ஆகவே அந்த வெளிச்சத்தை அவர்கள் புறக்கணித்தார்கள். விளைவாக, அந்த வெளிச்சத்தை அல்லாஹ் அணைத்து விட்டான். அவர்கள் எதையும் பார்க்க முடியாத காரிருளில் சிக்கி விட்டார்கள். அவர்கள் சத்தியத்தை செவியேற்க முடியாத செவிடர்களாக, சத்தியத்தைப் பேச முடியாத ஊமையர்களாக, சத்தியத்தைப் பார்க்க முடியாத குருடர்களாகி விட்டார்கள். ஆகவே அவர்களால் வழிகேட்டிலிருந்து திரும்பி வர முடியாது. அவர்களால் சரியான பாதையை கண்டுகொள்ள முடியாது.

மனிதர்கள் எதை விரும்புகிறார்களோ அதுதான் அவர்களுக்கு இலகுபடுத்தப்படும். அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விரும்பினால் அந்தப் பாதையை அறிந்து கொள்வதும் அந்தப் பாதையில் செல்வதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கும். அந்தப் பாதை அவர்களுக்கு இலகுபடுத்திக் கொடுக்கப்படும். அவர்கள் ஷைத்தானின் பாதையை விரும்பினால் அந்தப் பாதையில் செல்வதுதான் அவர்களுக்கு இலகுவாக இருக்கும். அல்லாஹ் தன் பக்கம் வரக்கூடிய பாதையை அவர்களுக்கு அடைத்து விடுவான்.  அதுதான் இங்கு ‘அல்லாஹ் அவர்களின் ஒளியைப் போக்கி விட்டான்’ என்ற வாசகத்தின்மூலம் உணர்த்தப்படுகிறது.     

أَوْ كَصَيِّبٍ مِنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

2:19,20. “அவர்களின் உதாரணம், காரிருளில் இடிமின்னலுடன் வானிலிருந்து பொழியும் மழையைப் போன்றது. இடிமுழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி அவர்கள் தங்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கிறார்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை சூழ்ந்துள்ளான். அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அது வெளிச்சம் தரும்போதெல்லாம் அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள். இருள் அவர்களைச் சூழ்ந்துவிடும்போது அப்படியே நின்றுவிடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிகளையும், கண்களையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.”

இது நிராகரிப்பாளர்களில் இரண்டாம் வகையினருக்குச் சொல்லப்படும் உதாரணமாகும். இதில் தடுமாற்றமும் பதற்றமும் அச்சமும் கொண்ட அவர்களின் மனநிலை கச்சிதமாக வெளிப்படுகிறது. அவர்களிடம் உறுதியும் தெளிவும் இல்லை.  

இரவில் பயணம் செய்யும் ஒரு குழுவினர் பெரும் மழையிலும் காரிருளிலும் அகப்பட்டுக் கொண்டனர். இடியுடனும் மின்னலுடனும் கூடிய பெரு மழை அது. இடி இடிக்கும்போது அதற்கு அஞ்சி அவர்கள் தங்கள் விரல்களை காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள். மின்னல் வெட்டும்போது அந்த வெளிச்சத்தில் சில அடிகள் முன்வைக்கிறார்கள்.

மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இதில் பெருமழை என்பது திருக்குர்ஆனைக் குறிக்கிறது. இருள்கள் என்பது குர்ஆனின் அழைப்பை     ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கும் விசயங்களைக் குறிக்கிறது. இடி, மின்னல் என்பது திருக்குர்ஆன் தன்னை நிராகரிப்பவர்களுக்கு முன்வைக்கும் எச்சரிக்கைகளை, அச்சுறுத்தல்களைக் குறிக்கிறது. யூதர்கள் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்பதை அறிந்திருந்ததனால் அது முன்வைக்கும் எச்சரிக்கைகள் அவர்களுக்கு சிரமம் அளிப்பவையாக இருந்தன. அதற்கான சரியான தீர்வு, திருக்குர்ஆனின் அழைப்பை ஏற்றுக் கொள்வதுதான். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக திருக்குர்ஆனை ஒரேயடியாகக் கேட்காமலிருப்பதுதான் அதற்கான தீர்வு என்று முடிவு செய்தார்கள். உண்மையில் இது முட்டாள்தனமான ஒரு தீர்வு, இடி முழக்கத்திற்கு அஞ்சி காதுகளைப் பொத்திக் கொள்வதனால் அதன் பாதிப்பிலிருந்து அவர்கள் தப்ப முடியாது. ஒரு மனிதனை சிங்கம் துரத்துகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். வெறுமனே அவன் தன் கண்களை மூடிக் கொண்டால் அதன் தாக்குதலிருந்து அவன் தப்ப முடியுமா? இப்படித்தான் இவர்களின் செயல்பாடும்.”

நிராகரிப்பாளர்களில் இந்த இரு வகையினரும் இருக்கிறார்கள். முதல் வகையினர் பிடிவாதக்காரர்கள்; தங்கள் கொள்கைக்கு எதிராக எதையும் கேட்க விரும்பாத ஆணவக்காரர்கள். ஈமான் தங்களுக்குள் ஊடுருவிச் செல்வதற்கான பாதைகள் அனைத்தையும் அவர்கள் அடைத்து விட்டார்கள். அவர்களின் உள்ளங்கள் முத்திரையிடப்பட்டு விட்டன. இரண்டாவது வகையினர், இங்கும் அங்கும் தடுமாறித் திரிபவர்கள். அவர்கள் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆனால் பொறாமையினாலோ வெறுப்பினாலோ பாதிக்கப்பட்டவர்கள். அந்தப் பொறாமை அவர்களை சிக்கலான நிலைப்பாடு கொண்டவர்களாக, தடுமாற்றம் கொண்டவர்களாக, குழப்பவாதிகளாக ஆக்கி விடுகிறது. ஆனாலும் அவர்கள் முந்தைய கூட்டத்தினரைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.  “அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிகளையும், கண்களையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.”

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply