முறியடிக்க முடியாத சவால்

You are currently viewing முறியடிக்க முடியாத சவால்

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். அடுத்து வரக்கூடிய வசனங்கள் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பதற்கும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்பதற்குமான ஆதாரங்களை முன்வைக்கின்றன.   

 يَاأَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ

2:21,22. “மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். அதனால் நீங்கள் தக்வா உடையவர்களாகலாம். அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே வானத்திலிருந்து மழை பொழியச்செய்து அதனைக்கொண்டு உங்களுக்கு உணவாக அமையும்பொருட்டு விளைச்சல்களை வெளிப்படுத்துகிறான். அறிந்துகொண்டே நீங்கள் அவனுக்கு இணைகளை ஏற்படுத்திவிடாதீர்கள்.”

நீங்கள் யாரை வணங்க வேண்டும்? வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் யார்? யார் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்தானோ யார் நீங்கள் இங்கு வாழ்வதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தானோ அவன்தான் நீங்கள் வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன். அவனை மட்டுமே நீங்கள் வணங்க வேண்டும்.

இறைவழிகாட்டலைவிட்டு தூரமான மனிதர்கள் இறைவனை மறந்து விடுகிறார்கள். அவனை மறந்து அவர்கள் செய்யும் பாவங்களால் அப்பட்டமான, தெளிவான உண்மைகள்கூட அவர்களுக்கு மங்கலானவையாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. ஷைத்தான் பொய்யான நம்பிக்கைகளை, சந்தேகங்களை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுக்கிறான். அவர்கள் அவனுடைய சதிவலைகளில் சிக்கி விடுகிறார்கள். விளைவாக, அவர்கள் தங்களைப் படைத்த, தங்களுக்கு எல்லாமும் அளித்துக் கொண்டிருக்கிற ஒரே இறைவனை மறந்து விட்டு அவனுக்கு இணையாக போலியான தெய்வங்களை ஏற்படுத்துகிறார்கள்.

அன்றைய அறபுக்களிடம் முன்னோர் வழிபாடு இருந்தது. தங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான் என்பதை அவர்கள் ஒத்துக் கொண்டிருந்தாலும் தங்களின் முன்னோர் விசயத்தில் வேறு வகையான நிலைப்பாடு கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெய்வீகத்தன்மை இருக்கிறது என்று நம்பி அவர்களை வழிபடவும் செய்தார்கள். முன்னோர் வழிபாடு பல்வேறு சமூகங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. மனிதர்களை வழிகெடுப்பதற்கு ஷைத்தான் பயன்படுத்தும் முக்கியமான வழிமுறை இது. மனிதர்கள் தங்களின் முன்னோர் விசயத்தில் கொண்டிருக்கும் கண்ணியத்தைப் பயன்படுத்தி அதில் வரம்புமீறலைப் புகுத்தி அவர்களை வழிகெடுக்க முயற்சிக்கிறான் ஷைத்தான். இந்த வசனத்தில் இருக்கும் நினைவூட்டல் அந்த வழிகெடுத்தலுக்கு எதிரான வலுவான ஆதாரமாக அமைந்து விடுகிறது.   

இங்கு அல்லாஹ் மனிதர்களுக்கு அவர்கள் அறிந்த, அவர்களால் மறுக்க முடியாத உண்மையை நினைவூட்டுகிறான். அவன்தான் அவர்களைப் படைத்துப் பராமரிக்கும் ‘ரப்பாக’ இருக்கிறான் என்பதுதான் அது. இந்த நினைவூட்டல் அவர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. இதைவிட இயல்பான, தெளிவான வேறு ஆதாரம் இருக்க முடியுமா என்ன?

அவனை வணங்கி வழிபடுவதன்மூலமே, அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன்மூலமே தக்வா என்னும் உயர்நிலையை அடைய முடியும்; அவன் நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள நரக நெருப்பின் வேதனையிலிருந்து அவர்கள் தங்களை காத்துக் கொள்ளவும் முடியும்.

இந்த பூமி மனித வாழ்வுக்காக வசப்படுத்தப்பட்டிருக்கிறது. அது அவர்கள் வாழ்வதற்கேற்றவாறு வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறது. மழைதான் இங்குள்ள அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன்மூலமே மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் அல்லாஹ் வெளிப்படுத்திக் கொடுக்கிறான். இங்குள்ள ஒவ்வொன்றும் மனித வாழ்வுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒன்று அல்ல. கொஞ்சம் கவனம் செலுத்தினாலே இந்த உண்மையை எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.

وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ

2:23,24. “நாம் நம்முடைய அடியாரின் மீது இறக்கிய குர்ஆனின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தால் அந்த சந்தேகத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். அதற்காக அல்லாஹ்வைத் தவிர உங்களின் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். “நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் – உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது – மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக்கொண்டு எரிக்கப்படுகின்ற நரகத்தின் நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது.”

இது நம்முடைய அடியார் முஹம்மது மீது நாம் இறக்கிய வேதம். இது நம்மிடமிருந்து வந்துள்ள வேதம் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. இது நம்மிடமிருந்து வந்துள்ள வேதம் என்பதில் நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தால், அந்த சந்தேகத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வேதத்தில் உள்ள அத்தியாயத்தைப் போல ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டு வாருங்கள். இதற்காக நீங்கள் அல்லாஹ்வைத் தவிர அழைக்க முடிந்தவர்களை எல்லாம் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். இதிலுள்ள அத்தியாயத்தைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக்கூட உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது. ஆகவே மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்டு எரிக்கப்படுகின்ற நரகத்தின் நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டுள்ளது. உங்களின் நிராகரிப்பை கைவிட்டு விட்டு இந்த தூதரின் மீது, இந்த மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள شُهَدَاءَ  என்ற வார்த்தை சமூகத்தின் தலைவர்கள், அதன் சார்பாக நின்று பேசக்கூடிய பிரதிநிதிகளான கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைக் குறிக்கும். நாம் இங்கு ‘உதவியாளர்கள்’ என்ற மொழிபெயர்ப்பை தெரிவு செய்துள்ளோம்.

இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மையான மார்க்கம் என்பதற்கும் முஹம்மது நபியவர்கள் அவனுடைய தூதர் என்பதற்குமான தெளிவான ஆதாரம் இந்தக் குர்ஆன்தான். இது நபியவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமாகவும் இந்த சமூகத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான கொடையாகவும் இருக்கின்றது. நபியவர்கள் மறுமை நாள்வரை வரக்கூடிய மனிதர்கள் அனைவருக்குமான தூதர் என்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமும் கால, இட வரம்புகளைத் தாண்டிய, நிரந்தரத்துவத்தை உள்ளடக்கிய மகத்தான அற்புதமாக இருக்கிறது. இந்த வசனத்தில் விடுக்கப்பட்டுள்ள சவால் அன்றைய அறபுக்களுக்கு மட்டுமல்ல மறுமைநாள்வரை வரக்கூடிய மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய சவாலாக இருக்கிறது. இந்த மார்க்கம் இறைவன் புறத்திலிருந்து வந்த மார்க்கம் அல்ல என்று கூறுபவர்கள் தங்களின் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இந்த சவாலை முறியடித்துக் காட்டட்டும்.  

அன்றைய அறபுக்கள் மொழியைக் கொண்டு பெருமிதம் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களின் கவிஞர்களைக் கொண்டாடினார்கள். தங்களை மீறிய ஒன்று கவிஞர்களின் வழியாக வெளிப்படுவதாக அவர்கள் கருதினார்கள். ஒவ்வொரு கவிஞனுடனும் ஒரு ஜின் இருக்கிறது என்றும் அதுதான் அவனுக்கு இது போன்ற அழகான, விசித்திரமான விசயங்களை அவனுடைய காதில் போடுகிறது என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஜோதிடர்களுக்கும் ஜின்கள்தாம் மறைமுகமான செய்திகளை அறிவிக்கின்றன என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். தங்களின் ஆற்றலை மீறிய ஒவ்வொன்றையும் ஜின்களுடன் அவர்கள் இணைத்துக் கொண்டார்கள். நபியவர்களிடமிருந்து வெளிப்பட்ட இந்தக் குர்ஆனையும் அவர்கள் அப்படித்தான் கருதினார்கள். அவர் ஜின்களிடமிருந்து செய்திகளைப் பெறும் கவிஞராக அல்லது சூனியக்காரராக அல்லது மனப்பிறழ்வு கொண்டவராக இருக்கலாம் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உங்களின் குற்றச்சாட்டில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்களாலும் இதைப் போன்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டு வர முடியும் என்ற உங்களின் கருத்தில் நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் இந்த வேதத்தில் இருக்கும் அத்தியாயங்களில் ஏதேனும் ஒரு அத்தியாயத்தைப் போன்ற ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டு வாருங்கள். இதற்காக நீங்கள் ஜின்கள், மனிதர்கள் என்று யாரையெல்லாம் உதவிக்கு அழைக்க முடியுமோ அவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.

இங்கு அல்லாஹ் இன்னொன்றையும் தெளிவுபடுத்துகிறான். உங்களால் ஒருபோதும் அப்படியான ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வர முடியாது. ஆகவே நிராகரிப்பாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பின் வேதனையை அஞ்சுங்கள் என்று அவன் அவர்களை எச்சரிக்கிறான். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருள்கள். இங்கு கற்கள் என்பது அவர்கள் வணங்கக்கூடிய சிலைகளைக் குறிக்கிறது. அல்அன்பியா அத்தியாயத்தில் இடம்பெறும் பின்வரும் வசனம் இதனைத் தெளிவுபடுத்தி விடுகிறது: “நீங்களும் நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவையும் நரகத்தின் எரிபொருள்களாக இருப்பீர்கள்…” (21:98)

அன்றைய அறபுக்களில் யாரும் இந்த சவாலை முடியடிக்கவில்லை. முறியடிக்க முடியும் என்று அவர்கள் எண்ணவும் இல்லை. அவர்களில் அறிவாளிகள் இந்தக் குர்ஆன் மேலோங்கிய தீரும் என்பதையும் இது யாராலும் முறியடிக்க முடியாதது என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார்கள். வலீத் இப்னு முகீராவின் கருத்து இதற்கு ஒரு சான்று. பிற்காலத்தில் நிகழ்ந்த சிறுசிறு முயற்சிகள் சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளாகவே எஞ்சி நின்றன.

திருக்குர்ஆன் எந்த வகையில் எல்லாம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அற்புதமாக இருக்கிறது? அது பல்வேறு வகையில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அற்புதமாகவே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகைகள்கூட இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

  • எழுதவோ படிக்கவோ தெரியாத ஒரு நபியிடமிருந்து மொழியில் தேர்ச்சி பெற்ற ஜாம்பவான்களிடமிருந்து வெளிப்பட முடியாத உன்னதமான இலக்கியம் வெளிப்பட்டிருப்பது அதன் மாபெரும் அற்புதம். கச்சிதமான, உன்னதமான அதே சமயம் இலகுவான, இனிமையான அதன் மொழிக்கட்டமைப்பு ஈர்ப்பையும் ஆச்சரியத்தையும் ஒருசேர ஏற்படுத்தக்கூடியவை.  அதன் மொழி மட்டுமல்ல  அதன் ஒலி அமைப்புகூட அற்புதமே. அதன் மொழி புரியாமல் அதன் ஒலி அமைப்பால் மட்டுமே கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அதனால்தான் அன்றைய நிராகரிப்பாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களிடம் இப்படி கூறி வந்தார்கள்: “நீங்கள் இந்தக் குர்ஆனைச் செவியேற்காதீர்கள். இது படிக்கப்பட்டால் நீங்கள் மிகைத்து விடும்பொருட்டு கூச்சலிடுங்கள்.”  (41:26)
  • இந்தக் குர்ஆன் ஒரேயடியாக அருளப்படவில்லை. அது இருபத்து மூன்று வருட காலத்தில் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் அருளப்பட்டது. அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்தை வலுப்படுத்தக்கூடியதாகவும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கிறதே தவிர வசனங்களுக்கு மத்தியில் எந்த மோதலும் முரண்பாடும் இல்லை. மனிதர்கள் முரண்படக்கூடியவர்கள். முரண்படுவது மனித இயல்பு. அவர்கள் எழுதியவை முரண்பாடுகள் இன்றி இருக்காது. அவர்கள் ஆரம்ப கட்டத்தில் கூறியதை மத்திய பகுதியில் அல்லது இறுதிக் கட்டத்தில் நிராகரிக்கலாம். அவர்கள் இளமையில் தீவிரமாக நம்பியதை நாற்பதைக் கடந்த பிறகு அல்லது முதுமையில் மறுக்கலாம். இந்தக் குர்ஆன் முரண்பாடுகள் அற்ற வேதமாக இருக்கிறது. இதில் ஆழ்ந்து கவனம் செலுத்துபவர்கள் அதனுடைய இந்த தனித்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். “அவர்கள் இந்தக் குர்ஆனை ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாத வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அவர்கள் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.” (4:82)
  • குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட மக்களுக்கு அருளப்பட்ட இந்தக் குர்ஆன் கால, இட வரம்புகளைத் தாண்டி மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பது அதன் மகத்தான அற்புதங்களில் ஒன்றாகும். மனிதர்களால் கால, இட வரம்புகளைத் தாண்டி சிந்திக்க முடியாது. மனிதர்கள் உருவாக்கும் சட்டங்கள் கால, இட வரம்புகளுக்கு உட்பட்டவை. அவை காலவதியாகக்கூடியவை. சூழல் மாறும்போது, காலம் மாறும்போது அவர்கள் உருவாக்கிய சட்டங்களும் மாறக்கூடியவை. மனிதர்களைப் படைத்த, மனித இயல்பைப் படைத்த இறைவனால் மட்டுமே அவர்களின் இயல்புக்கு உகந்த, கால, இட வரம்புகளைத் தாண்டி அனைவருக்கும் உகந்த அறிவுரைகளை, சட்டங்களை, வழிகாட்டல்களை வழங்க முடியும். இந்தக் குர்ஆன் அத்தகைய அறிவுரைகளை, விழுமியங்களை, கண்ணோட்டங்களை, வழிகாட்டல்களை, சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

செய்யத் குதுப் எழுதுகிறார்:

“மனிதர்களின் மொழிநடைகளைக் குறித்து, பிரபஞ்சம் மற்றும் பொருள்களைக் குறித்த மனிதர்களின் கண்ணோட்டங்களைக் குறித்து நன்கறிந்தவர், மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் வழிமுறைகள் சமூகவியல், உளவியல் கண்ணோட்டங்கள் ஆகியவற்றில் போதிய அனுபவமுடையவர் சந்தேகமின்றி உறுதியாக அறிந்துகொள்வார், இந்த தளத்தில் குர்ஆன் கொண்டுவந்தவை யாவும் மனிதர்களால் உருவாக்கப்படக்கூடியவை அல்ல. அவை வேறொன்றாகும். அறியாதவர்கள் அல்லது சத்தியத்தை அசத்தியத்தோடு கலக்க நினைக்கும் உள்நோக்கம் கொண்டவர்கள்தாம் இந்த விசயத்தில் தர்க்கம் புரிவார்கள்.”

உண்மையை உண்மை என அறிந்தும் நிராகரிப்பவர்கள் கற்களைப் போன்றவர்கள். அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாவர். உண்மையை உண்மையை என அறிந்த பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு அதன்வழி நடப்பவர்கள் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்காகத்தான் சுவனம் காத்திருக்கிறது.

وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ

2:25. “நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிபவர்களுக்கு சுவனங்கள் உண்டு என்னும் நற்செய்தியைக் கூறுவீராக. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு அங்கிருந்து ஏதேனும் கனி உணவாக வழங்கப்படும்போதெல்லாம், “இதற்கு முன்னரும் இதுபோன்றுதானே எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று கூறுவார்கள். ஒன்றுக்கொன்று ஒத்தவையாக அவர்களுக்கு வழங்கப்படும். தூய்மையான மனைவியரும் அங்கு அவர்களுக்கு உண்டு. அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.”

யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் அனுப்பிய தூதரை ஏற்றுக் கொண்டு அவன் அளித்த வழிகாட்டலின்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்களோ அவர்களுக்கு ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் தோட்டங்கள் உண்டு. அங்கு அவர்களுக்கு ஏதேனும் கனி உணவாக வழங்கப்படும்போது உலகிலும் – அல்லது சுவனத்தில் இதற்கு முன்னரும் – இதுபோன்றுதானே வழங்கப்பட்டது என்று அவர்கள் கூறுவார்கள். அது தோற்றத்தில், வடிவத்தில் உலகத்தில் உண்ட கனியைப் போல இருந்தாலும் சுவையில் வேறுபட்டிருக்கும். அங்கு அவர்களுக்காகவே பராமரிக்கப்பட்ட, குறைபாடுகள் அற்ற தூய மனைவியர் இருப்பார்கள். அந்த தோட்டம் என்றும் அழியாதது, நிரந்தரமானது. அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply