இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான்.
إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا مَا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِ إِلَّا الْفَاسِقِينَ الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
2:26,27. “அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டவர்கள் அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியம் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால் நிராகரிப்பாளர்கள், “இந்த உதாரணத்தின்மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகின்றான்?” என்று கேட்கிறார்கள். இதன்மூலம் அல்லாஹ் பலரை வழிதவறச் செய்கிறான். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். தன் கட்டளையை மீறுபவர்களைத்தான் அவன் வழிதவறச் செய்கிறான். அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுகிறார்கள்; அவன் இணைத்து வைக்குமாறு கட்டளையிட்டதைத் துண்டித்துவிடுகிறார்கள்; பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.”
மனிதர்களுக்கு விசயங்களைப் புரிய வைக்க உதாரணங்கள் அவசியமானவை. வெறுமனே சொல்லப்படும் விசயங்களைவிட உதாரணங்களின் வழியாக தெளிவுபடுத்தப்படும் விசயங்களை அவர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். திருக்குர்ஆனில் அல்லாஹ் உதாரணங்களின் வழியாகப் பல விசயங்களைப் புரிய வைக்கிறான். இணைவைப்பாளர்கள் வழிபடும் தெய்வங்கள் எந்த அளவு பலவீனமானவை என்பதைப் புரிய வைக்க அல்லாஹ் ஈயைக் கொண்டு உதாரணம் கூறியிருக்கிறான். நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் ஒரு ஈயைக்கூட படைக்க முடியாது. அவற்றின் மீதுள்ள எதையேனும் ஈ பிடுங்கி விட்டால் அதைக்கூட அவற்றால் மீட்டிக் கொள்ள முடியாது என்பதுதான் அது. இங்கு கவனிக்க வேண்டியது அந்த உதாரணத்திலிருந்து தெரிய வரும் கருத்துதான். ஆனால் யூதர்கள் அந்த கருத்தை கவனிக்காமல் உதாரணமாகச் சொல்லப்பட்டதை முன்வைத்து ஆட்சேபனை எழுப்பினார்கள். நம்பிக்கையாளர்கள் அது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிந்து கொள்கிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் கருத்தைக் கவனித்துப் படிப்பினை பெறுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைப் பின்பற்றும் பாக்கியம் அளிக்கிறான். புரிந்துகொள்ள விரும்பாத நிராகரிப்பாளர்கள் அதன் வடிவத்தில் ஏதேனும் ஒரு அம்சத்தைப் பிடித்துக் கொண்டு அதில் குறைகாண முயற்சிக்கிறார்கள். பிரச்சனை அவர்களின் பார்வையில்தான் இருக்கிறது. அவர்கள் நேர்வழியை விரும்பாததனால், அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட மறுப்பதனால் வழிகெடுக்கப்படுகிறார்கள். நேர்வழியை விரும்பக்கூடிய யாரையும் அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவதில்லை.
இந்த உதாரணத்தின்மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? என்று அவர்கள் அலட்சியமாகக் கேட்பது மற்றவர்களின் உள்ளங்களில் இந்தக் குர்ஆனைக் குறித்து சந்தேகம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் அவர்கள் உண்மையாகவே சந்தேகம் கொண்டிருந்தால் அது முன்வைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டு முறியடிக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் வேறு. அவர்கள் திருக்குர்ஆனின் நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்பி மற்றவர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு தடுக்க நாடுகிறார்கள். அவர்கள் குழப்பவாதிகள்.
அல்லாஹ் எங்களுக்கு மத்தியில் இவரைத்தான் தூதராகத் தேர்ந்தெடுத்தானா? என்று அன்றைய மக்காவின் இணைவைப்பாளர்கள் கூறிவந்தார்கள். இந்த வகையான உதாரணங்களின்மூலம் அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? என்று அன்றைய மதீனாவின் யூதர்கள் கூறிவந்தார்கள். கிட்டத்தட்ட இந்த இரண்டு கருத்துகளும் ஒரே மனநிலையிலிருந்து வெளிப்பட்டவைதாம். அல்லாஹ் எங்களிடம் பேச விரும்பினால் நாங்கள் யாரைப் பெரிதாகக் கருதுகிறோமோ அவர் வழியாகவே பேச வேண்டும் என்பதும் நாங்கள் எந்த வடிவத்தை சிறந்ததென எண்ணுகிறோமோ அந்த வடிவத்தின் வழியாகவே எங்களுடன் உரையாட வேண்டும் என்பதும் ஒரே மனநிலையின் வெளிப்பாடுதான். நம்மிடையேயும் இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அல்லாஹ் மனிதர்களுக்கு அளிக்க விரும்பும் ஞானத்தை யார் வழியாகவும் கொடுக்கலாம். அவனுக்குத் தெரியும், யார் வழியாக கொடுக்க வேண்டும் என்று. அவனுக்குத் தெரியும், எந்தெந்த வடிவங்களில் வழங்க வேண்டும் என்று. மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட போலியான மதிப்பீடுகளுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை.
அவன் யாரை வழிகெடுக்கிறான்? யார் அவன் அளித்த உள்ளுணர்வை, அறிவைப் பயன்படுத்தி இந்த மார்க்கத்தை உண்மையென அறிந்த பின்னரும் தங்களின் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்களோ, அந்த நிராகரிப்பை பொய்யான வாதங்களைக் கொண்டு நியாயப்படுத்துகிறார்களோ அவர்களைத்தான் அவன் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? “அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தியபின் முறித்துவிடுகிறார்கள்”
அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கை என்பது என்ன?
அவன் அவர்களுக்கு சரியையும் தவறையும் பிரித்து அறியக்கூடிய பக்குவத்தை கொடுத்திருக்கிறான். அவர்கள் தங்கள் இயல்பின்வழி சரியை சரியென, தவறை தவறென அறிந்துகொள்ள முடியும். அவன் அவர்களுக்கு அறிவை வழங்கியிருக்கிறான். அத்தனைக்கும் மேலாக அவன் இந்த தூதுத்துவத்தைக் கொடுத்து தூதரை (ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். அவர்தாம் உண்மையான தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளையும் கொடுத்தே அவரை அனுப்பி இருக்கிறான். அவர்கள் என்ன செய்ய வேண்டும்? தங்கள் இயல்பின் வழியும் தங்கள் அறிவைக் கொண்டும் இந்த தூதரை அறிந்துகொண்டு அவரை ஏற்றுக் கொண்டு அவர் கொண்டு வந்த மார்க்கத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும். இதுதான் அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை உள்ளுணர்வாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 38ஆவது வசனம் இந்த உடன்படிக்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்டபோதே அல்லாஹ் அவருடைய சந்ததிகளான மனிதர்களிடம் இந்த வாக்குறுதியைப் பெற்றிருக்கிறான். அல்அஃராஃப் அத்தியாயத்தின் 172, 173ஆவது வசனங்கள் இந்த வாக்குறுதியை நினைவூட்டுகின்றன:
“உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளிப்படுத்தி அவர்களையே அவர்களுக்கு சாட்சிகளாகவும் ஆக்கி “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஆம், நீதான் எங்களின் இறைவன் என்பதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள். மறுமை நாளில் “நாங்கள் இதனைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாக இருந்தோம்” என்று நீங்கள் கூறிவிடாதிருப்பதற்காகவும் அல்லது “எங்கள் மூதாதையர்தாம் இணை ஏற்படுத்தினார்கள். நாங்கள் அவர்களைப் பிறகு வந்த அவர்களின் சந்ததிகளாக இருந்தோம். அவர்கள் செய்த தவறான செயல்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காவும் நாம் இவ்வாறு செய்தோம்.”
இந்த மார்க்கம்தான் இறைவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியிலான ஒப்பந்தம். இந்த மார்க்கத்தைப் பின்பற்ற மறுப்பது ஒப்பந்தத்தை மீறுவதாகும். இது யாருக்கும் அந்நியமானதாக இருக்காது. நிராகரிப்பாளர்களிடம் காணப்படும் மீறல் மனப்பான்மைதான் இயல்பான உணர்வுகளைக்கூட மறுக்குமாறு அவர்களைத் தூண்டுகிறது.
“அவன் இணைத்து வைக்குமாறு கட்டளையிட்டதைத் துண்டித்துவிடுகிறார்கள்” எல்லாவகையான இணைப்புகளையும் உள்ளடக்கும் செறிவான வாசகம் இது. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்கள் அவன் அமைத்த உறவுமுறை முதற்கொண்டு இயல்பான இணைப்புகள் எல்லாவற்றையும் துண்டிக்கிறார்கள். அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டுமோ அவர்களுடன் சேர்ந்து வாழ்வதில்லை. யாருடன் சேர்ந்து வாழக்கூடாதோ அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள். இதன்மூலமாக அவர்கள் மனித வாழ்க்கையில், இந்த பூமியில் குழப்பம் விளைவிக்கிறார்கள். இயல்புக்கு மாறான ஒவ்வொன்றும் குழப்பத்தையே ஏற்படுத்தும். அவர்களின் இயல்புக்கு உகந்த அறிவுரைகளை, வழிகாட்டல்களை, சட்டங்களை உள்ளடக்கிய இந்த மார்க்கத்தை விட்டுவிட்டு தங்களின் மன இச்சைகளை அவர்கள் பின்பற்றுவது அவர்களின் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும். இதன்மூலம் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள்தாம் பெரும் நஷ்டவாளிகள்.
மனிதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கொண்டு மட்டுமே ஒன்றிணைய முடியும். அவர்களுக்கு மத்தியில் இருக்கும் வேறுபாடுகள், கசப்புகள் நீங்கி அவர்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமெனில் அது இந்த மார்க்கத்தின் நிழலில் மட்டுமே சாத்தியமாகும்.
كَيْفَ تَكْفُرُونَ بِاللهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
2:28,29. “எப்படி உங்களால் அல்லாஹ்வை நிராகரிக்க முடிகிறது!? நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு உயிரளித்தான். பிறகு அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு மீண்டும் உங்களுக்கு உயிர்கொடுப்பான். பிறகு நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான். பின்னர் அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி அதனை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.”
அல்லாஹ்வை நிராகரிப்பது என்பது அவனை முழுமையாக நிராகரிப்பது மட்டுமல்ல அவனுடைய பண்புகளில் எந்தவொன்றை நிராகரித்தாலும் அவனை நிராகரிப்பதுதான். அன்றைய அறபுக்கள் மனிதர்கள் மரணித்த பிறகு அல்லாஹ் அவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை மறுப்பவர்களாக இருந்தார்கள்.
நீங்கள் உயிரற்ற நிலையில்தான் இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு உயிர்கொடுத்தான். உயிரற்ற நிலையில் இருந்த உங்களுக்கு அவன் உயிர்கொடுத்திருக்கிறான் என்றால் நீங்கள் மரணித்த பிறகு மீண்டும் உங்களை ஏன் அவனால் உயிர்கொடுத்து எழுப்ப முடியாது? முந்தையது சாத்தியமானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் பிந்தையதை எதன் அடிப்படையில் நீங்கள் மறுக்க முடியும்? உங்களின் மறுப்பு ஆச்சரியமானது; எந்த ஆதாரமும் அற்றது.
“பிறகு நீங்கள் அவன் பக்கமே திரும்ப வேண்டும்” இந்த உலகில் நீங்கள் செய்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவன் உங்களை விசாரணை செய்வான்.
எதுவுமே இல்லாமல் இருந்த நீங்கள் இப்படித்தான் உருவானீர்கள், இப்படித்தான் உங்களின் முடிவும் அமையும் எனில் எந்த அடிப்படையில் நீங்கள் அவனை நிராகரிக்கிறீர்கள்? இந்த அளவு நிச்சயமின்மையினால், இயலாமையினால் சூழ்ந்திருக்கும் உங்களால் எப்படி அவனை நிராகரிக்க முடிகிறது? உங்களின் இந்த மறுப்புக்குப் பின்னால் வடிகட்டிய அறியாமையைத் தவிர வேறு என்ன இருக்கிறது?
நீங்கள் எதுவும் அறியாத நிலையில் இருந்தீர்கள். அவன்தான் உங்களுக்கு உள்ளுணர்வையும் அறிவையும் கொடுத்தான். அவன்தான் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். அவன்தான் தூதரை அனுப்பி உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்தான். பிறகு எந்த அடிப்படையில் அவனை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்?
அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்துள்ளான். இங்குள்ள அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்காகப் படைக்கப்பட்டு வசப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் உங்களின் வாழ்வோடு தொடர்பு கொண்டிருக்கிறது. அவை ஏதோ ஒரு வகையில் உங்களுக்குப் பயனளிப்பவையாக, உங்கள் வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. இங்குள்ள ஆச்சரியமான சமநிலை உங்களின் வாழ்க்கைக்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் எப்படி உங்களால் அல்லாஹ்வை நிராகரிக்க முடிகிறது? இங்கு காணப்படும் ஆச்சரியமான சமநிலை உங்களின் வாழ்வு நோக்கமுள்ளது என்பதையும் நீங்கள் இறந்த பிறகு மீண்டும் உயிர்கொடுத்து விசாரணை செய்யப்படுவீர்கள் என்பதையும் உங்களுக்கு அறிவிக்கவில்லையா?
“அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்” “இங்குள்ள அனைத்தும் மனித வாழ்வோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. இங்குள்ள அனைத்தும் மனித வாழ்வுக்காகவே படைக்கப்பட்டுள்ளன.” ஒரு முஸ்லிமுக்கு திருக்குர்ஆன் அளிக்கும் இந்தக் கண்ணோட்டம் எவ்வளவு அற்புதமானது! இந்தக் கண்ணோட்டம் அளிக்கும் மனத்தெளிவும் தைரியமும் இந்த வாழ்க்கையை குழப்பமின்றி, பதற்றமின்றி எதிர்கொள்ள அவனுக்கு உதவுகின்றன. இங்குள்ள மற்ற உயிரினங்களும் அவனும் சமமானவை அல்ல. இங்குள்ள உயிரினங்களைப் போல அவனும் ஒரு உயிரினம் அல்ல. இங்கு மனிதனே முதன்மையானவன். மற்றவை அனைத்தும் அவனுக்காகவே, அவனுடைய பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டுள்ளன. அவன் அவனைவிட பிரமாண்டமான படைப்புகளைக் கண்டு மிரள வேண்டிய அவசியம் இல்லை. அவனுடைய கண்ணுக்குத் தெரியாத படைப்புகளைக் கொண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாவற்றையும் மனிதனுக்காகப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அந்த இறைவனுக்கு மனிதன் நன்றியுள்ளவனாக, இருந்தால் அதுவே போதுமானது, அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெற.
