இஸ்ரவேல் சமூகத்தினர்

You are currently viewing இஸ்ரவேல் சமூகத்தினர்

இதுவரையிலான வசனங்களில் யூதர்கள் மறைமுகமாக சுட்டப்பட்டிருந்தார்கள்.  அடுத்து வரக்கூடிய வசனங்கள் நேரடியாக யூதர்களை விளித்துப் பேசுகின்றன. அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நினைவூட்டப்படுகின்றன. இந்த வசனங்கள் அவர்களுக்கான நேரடியான அழைப்பையும் அவர்களைப் போன்ற இயல்புடையவர்களுக்கான மறைமுகமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. அவர்களைப் போன்ற இயல்புடையவர்கள் அவர்கள் அடைந்த அதே விளைவுகளையே அடைவார்கள் என்பதுதான் இந்த வசனங்களில் கிடைக்கும் மிகப் பெரிய பாடம். அவர்களைப் போன்ற மனிதர்கள் நமக்கு மத்தியிலும் இருக்கிறார்கள். அவர்களின் மதகுருமார்கள் எப்படி இருந்தார்களோ அதே போன்ற மதகுருமார்கள் நமக்கு மத்தியிலும் காணப்படுகிறார்கள். அவர்கள் முன்வைத்த வாதங்களும் இவர்கள் முன்வைக்கும் வாதங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன. காலம், இடம் என்ற வரம்புகளைத் தாண்டி மனிதர்கள் ஒத்த இயல்புடையவர்களாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். வெளித்தோற்றங்களிலும் வடிவங்களிலும்தான் மாற்றம் ஏற்படுகின்றன. ஆனால் மனிதர்கள் அன்று இருந்த அதே மனிதர்கள்தாம்.      

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ وَآمِنُوا بِمَا أَنْزَلْتُ مُصَدِّقًا لِمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ  تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

2:40-46. “இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுகூருங்கள். நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள். நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள். என்னையே அஞ்சுங்கள். அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். ருகூஃ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா? நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா? பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக நம்புவார்கள்.”

இஸ்ராயீல் என்பது இறைத்தூதர் யஃகூப் அவர்களின் புனைப்பெயர். இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். அவரது மகன் யஅகூப் ஆவார். இஸ்ஹாக்கும் அவரது மகன் யஃகூபும் இறைத்தூதர்கள்தாம்.

இமாம் ஹமீதுத்தீன் ஃபராஹீ யூதர்களின் எபிரேயு மொழியை நன்கறிந்தவர். அவர் கூறுகிறார்: எபிரேயு மொழியில் இஸ்ரா என்றால் அடிமை என்று பொருள். யீல் என்றால் இறைவன் என்று பொருள். இரு வார்த்தைகளையும் சேர்த்து இறைவனின் அடிமை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் யூதர்கள் இதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள்.

மற்ற சமூகங்களைக் காட்டிலும் யூத சமூகத்தில் தொடர்ந்து இறைத்தூதர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களிலிருந்து தூதர்களையும் அரசர்களையும் ஏற்படுத்தியதாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். இது அவன் அவர்கள் மீது பொழிந்த பேரருளாகும். ஆனாலும் அவர்கள் நன்றியுடன் நடந்து கொள்ளவில்லை. தாங்கள் இந்த அருட்கொடைகளுக்குத் தகுதியானவர்கள் என்பதனால்தான் இவையெல்லாம் கிடைக்கிறது என்றும் தாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தினர் என்றும் கர்வம் கொண்டார்கள். இவை தங்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அவர்கள் கருதினார்கள். இதனால்தான் அவர்கள் இஸ்மாயில் நபியின் பரம்பரைத் தொடரில் வந்த முஹம்மது நபியவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதமுக்குக் கட்டுப்பட மறுத்த இப்லீஸிடம் காணப்பட்ட பொறாமையும் கர்வமும்தான் நபியவர்களுக்குக் கட்டுப்படவிடாமல் யூதர்களைத் தடுத்தன.

அல்லாஹ் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைக்கிறான். அது யஃகூப் நபி அல்லாஹ்விடம் பெற்றிருந்த கண்ணியமான இடத்தைக் காட்டுகிறது. யஃகூப் நபியின் சந்ததியினரே! நீங்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர் வழிவந்த நீங்கள் அவரைப் போன்று நன்றியுள்ளவர்களாக, நன்மையின் பாதையில் முன்னேறிச் செல்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

“நான் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூருங்கள்” மற்ற சமூகத்தினருக்கு வழங்காத அருட்கொடைகளை எல்லாம் நான் உங்களுக்கு வழங்கி இருந்தேன். அப்படி எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நன்றியுள்ளவர்களாக இருப்பதில் மற்றவர்களைவிட நீங்கள்தாம் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் நான் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பார்க்கவில்லை. உங்களிடமிருந்து நன்றிகெட்டத்தனமும் நிராகரிப்பும் வெளிப்படுகின்றன.

அல்லாஹ் தங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். நன்றிகெட்டவர்கள் எல்லாவற்றையும் தற்செயல் நிகழ்வுகள் என்றோ அதிர்ஷடம் என்றோ கூறி கடந்து விடுகிறார்கள்.     

“நீங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்” இந்த வாசகம் அல்லாஹ் மனிதர்களிடம் வாங்கிய பொதுவான வாக்குறுதியையும் குறிக்கும். யூதர்களிடம் வாங்கிய குறிப்பான வாக்குறுதியையும் குறிக்கும். பொதுவான வாக்குறுதி அனைத்து வகையான வாக்குறுதிகளையும் உள்ளடக்கியதுதான். 

மனிதர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதி பழமையானது. அவர்களின் தந்தை ஆதம் படைக்கப்பட்டபோதே அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்து விட்டார்கள். அவனை மட்டுமே ரப்பாக ஏற்றுக் கொண்டு வணங்கி வழிபடுவோம் என்பதுதான் அவர்கள் அளித்த வாக்குறுதி. அந்த வாக்குறுதிக்கு அவர்களே சாட்சியாளர்களாகவும் இருந்தார்கள். அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே இஸ்லாத்தை அறிந்து கொள்கிறான். அது அவனுக்கு அந்நியமான ஒன்றாக இருப்பதில்லை. இஸ்லாம் என்பதே மனிதர்கள் அல்லாஹ்வுக்கு அளிக்கும் வாக்குறுதிதான். அவனுடைய கட்டளைகள் அனைத்திற்கும் கட்டுப்படுவோம், அவனுடைய மார்க்கத்தையே பின்பற்றுவோம் என்று அவர்கள் வாக்குறுதி அளிக்கிறார்கள்.  

அல்லாஹ் யூதர்களிடம் பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறான். அவற்றில் ஒன்று இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்களை ஏற்றுக் கொண்டு உண்மைப்படுத்த வேண்டும் என்பது. அவர்களின் வேதத்தில் இது குறித்து தெளிவான முன்னறிவிப்புகள் இருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அவற்றுக்கு வேறு விளக்கம் அளித்து அல்லது அவற்றைத் திரித்து நபியவர்களை நிராகரித்தார்கள்.

தன் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை, வாழ்க்கை வசதிகளை, அதிகாரத்தை, வெற்றியை, தக்க சமயத்தில் உதவியை, பாதுகாப்பை அளிப்பதாக அவன் வாக்குறுதி அளிக்கிறான். அவன் முஸ்லிம்களைக் கைவிட்டு விடுவதில்லை. இங்கு செயல்படும் நியதி இதுதான்: மனிதர்கள் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்போது அவன் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறான்.     

“என்னையே அஞ்சுங்கள்” நீங்கள் உண்மையைச் சொன்னால், இந்த மார்க்கத்தைப் பின்பற்றினால் உங்களுக்கு இழப்புகள் ஏற்படும் என்றோ மக்கள் உங்களை வெறுப்பார்கள் என்றோ உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பவை உங்களைவிட்டு சென்று விடுமோ என்றோ உங்களின் சிறப்புகள் பறிபோய்விடும் என்றோ நீங்கள் அஞ்சினால் நீங்கள் அஞ்சுவதற்குத் தகுதியானவன் நான்தான்.  உங்களுக்கு நன்மை செய்யவோ தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கவோ சக்தி பெற்றவன் நான்தான். நீங்கள் என்னையே அஞ்ச வேண்டும். நீங்கள் நான் அளிக்கும் தண்டனையைத்தான் அஞ்ச வேண்டும். அனைத்து அதிகாரமும் என் கைவசமே உள்ளன. இங்கு என் கட்டுப்பாட்டை மீறி எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை.

இங்கு  فَارْهَبُونِ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘ரஹ்பத்’ என்ற வேர்ச்சொல்லிருந்து உருவாகும் வார்த்தையாகும். அது ஒருவர் மீது கொண்டிருக்கும் கண்ணியத்தின் காரணமாக உள்ளத்தில் உருவாகும் அச்சத்தைக் குறிக்கிறது.   

“நான் அருளியுள்ள குர்ஆனின்மீது நம்பிக்கைகொள்ளுங்கள். அது உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்துகிறது. அதனை மறுப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். என் வசனங்களை அற்ப ஆதாயத்திற்கு விற்றுவிடாதீர்கள்.”

நான் அருளியுள்ள இந்தக் குர்ஆனை நம்புங்கள். அது உங்களிடம் உள்ள தவ்ராத்தின் போதனைகளை, இறுதித்தூதுத்துவம், இறுதித்தூதர் தொடர்பான அதன் முன்னறிவிப்புகளை உண்மைப்படுத்துகிறது. மற்றவர்களைவிட நீங்கள்தான் விரைந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது குறித்து அறிந்தவர்களாகவும் அதனை எதிர்பார்த்துக் கொண்டும் நீங்கள் இருந்தீர்கள். அதனை ஏற்றுக்கொள்பவர்களில் நீங்கள்தாம் முன்னணியில் இருக்க வேண்டும். அதனை விரைந்து மறுப்பவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் உலகியல் ஆதாயங்கள் பறிபோய்விடும் என்று பயந்து நீங்கள் அறிந்த உண்மையை மறைக்காதீர்கள். இந்த நபியை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ் அளித்துள்ள இந்த மார்க்கத்தை விட்டுவிட்டு நீங்கள் பெறக்கூடிய அனைத்தும் அற்ப ஆதாயங்கள்தாம்.  அற்ப ஆதாயங்களைப் பெறுவதற்காக என் சான்றுகளை மறுத்து விடாதீர்கள்.

இஸ்லாம் முன்வைத்த போதனைகளை அன்றைய அறபுக்களைவிட  அவர்களுடன் இருந்த யூதர்கள்தாம் நன்கறிந்தவர்களாக இருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த தவ்ராத்தின் போதனைகள்தாம். தவ்ஹீத், தூதுத்துவம், மறுமை வாழ்வு ஆகியவை அவர்களிடம் நன்கு அறியப்பட்டவையாக இருந்தன. இந்த மார்க்கத்தை அவர்கள்தாம் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அவர்களிடமிருந்து மிக மோசமான நிராகரிப்பு வெளிப்பட்டது. அவர்கள் நிராகரிப்பில் முந்திச் சென்றார்கள்.

“என்னையே அஞ்சுங்கள்” இங்கு தக்வா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என் கோபத்திற்கு, நான் அளிக்கும் தண்டனைக்கு நீங்கள் அஞ்சுங்கள். நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் அற்ப ஆதாயங்களுக்காக இந்தக் குர்ஆனை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் என் கோபத்தை, என் தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.    

“அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்காதீர்கள்”

இங்கு யூத மதகுருமார்கள் பொதுமக்களைக் குழப்புவதற்குக் கடைப்பிடித்த வழிமுறை சுட்டிக்காட்டப்படுகிறது. அவர்கள் மக்களைக் குழப்பும்பொருட்டு உண்மையோடு பொய்யையும் கலந்தார்கள். அதன்மூலம் உண்மையை மறைத்தார்கள். இது மிக மோசமான, தந்திரமான வழிமுறை. பொய்கள் எளிதாக அம்பலப்பட்டு அல்லது அம்பலப்படுத்தப்பட்டு விடும். ஆனால் உண்மைகளோடு கலந்துவிட்ட பொய்கள் அவ்வளவு எளிதாக அம்பலப்படுத்த முடியாதவை. அவர்கள் விளக்கம் என்ற பெயரில் வேதத்தின் கருத்துகளோடு அவற்றுக்கு முரணான தங்களின் கருத்துகளையும் கலந்தார்கள். அவையும் வேதத்தின் கருத்துகள்தாம் என்ற ஒரு தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். செல்வந்தர்களை திருப்திபடுத்துதல், பொதுமக்களை திருப்திபடுத்துதல், அதன்மூலம் தங்களுக்கான ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ளுதல், தங்களின் கீழான இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்ற செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்.

“தொழுகையைப் கடைப்பிடித்து ஸகாத்தையும் கொடுத்துவாருங்கள். ருகூஃ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் கீழ்ப்படியுங்கள்.”

அவர்களின் மோசமான செயல்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை அல்லாஹ் இங்கு முன்வைக்கிறான். ஒன்று, தொழுகையை அதற்கேயுரிய சரியான முறையில் நிறைவேற்றுங்கள். இரண்டு, ஸகாத்தை கொடுத்து வாருங்கள். மூன்று, ருகூஃ செய்பவர்களுடன் (தொழுபவர்களுடன்) இணைந்து நீங்களும் தொழுங்கள். இவை உள்ளங்கள் கடினமாகி பாவங்களில் மூழ்கி இருப்பவர்கள் அனைவருக்குமான வழிமுறைகள். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம் அவர்கள் பாவங்களிலிருந்து விடுபட முடியும்.

தொழுகை அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்கான, அவனை நினைவு கூருவதற்கான முதன்மையான வழிமுறை. தொழுகையை அதற்கேயுரிய உயிரோட்டத்துடன் நிறைவேற்றாமல் இருப்பதும் அதனைக் கைவிட்டு விடுதலும் மனிதர்களின் மீது ஷைத்தானின் ஆதிக்கம் ஏற்பட காரணமாக அமைந்து விடுபவையாகும்.

 தொழுகை மனிதர்களைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புக் கவசம். அது அவர்களின் உள்ளங்களில் இறையுணர்வை பசுமையாக வைத்திருக்கச் செய்கிறது. தொழுகை விபச்சாரம் போன்ற மானக்கேடான காரியங்களிலிருந்தும் இன்னபிற தீங்குகளிலிருந்தும் மனிதர்களைத் தடுக்கிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தொழுகையின் வழியாக அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் ஷைத்தானின் சதிவலைகளை அடையாளம் காணுகிறார்கள். அவன் உள்ளத்தில் உருவாக்கும் சந்தேகங்களை, குழப்பங்களை, அச்சுறுத்தல்களை அவர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு எளிதாக வீழ்த்தப்பட்டு விடுவதில்லை. சில சமயங்களில் அவர்கள் வீழ்த்தப்பட்டாலும் உடனே விழிப்படைந்து மீண்டு விடுகிறார்கள். அவர்கள் செய்யும் பாவங்கள்கூட அவர்கள் அதிகமதிகம் நற்செயல்களில் ஈடுபடுவதற்கும் இன்னும் அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.

யூதர்களின் வழிகேடு தொழுகையைக் கைவிடுவதிலிருந்தே தொடங்கியது. மர்யம் அத்தியாயத்தின் 59ஆவது வசனம் இந்த விசயத்தைத் தெளிவுபடுத்துகிறது:

“அவர்களுக்குப் பின்வந்தவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள், மன இச்சைகளைப் பின்பற்றினார்கள். அவர்கள் விரைவில் பெரும் அழிவை சந்திப்பார்கள்.”

தொழுகையைக் கைவிடுதலும் இச்சைகளைப் பின்பற்றுதலும் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. தொழுகையைக் கைவிட்டவர்கள் தங்களின் தீய இச்சைகளைப் பின்பற்றுவார்கள். அவர்கள் பாவங்களில் மூழ்குவார்கள். மனம் எல்லாவற்றையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும். தொழுகையைக் கைவிட்டவர்கள் நிராகரித்து விட்டார்கள் என்று நபியவர்கள் கூறியிருப்பது இந்தப் பொருளில்தான் என்று நான் கருதுகிறேன்.  

இரண்டாவது வழிமுறை, ஸகாத்தை கொடுத்து வாருங்கள். ஸகாத் யூதர்களிடம் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருந்தது. அவ்வாறு வசூலிக்கப்படும் பணமும் யூதமதகுருமார்களுக்கான உரிமையாகக் கருதப்பட்டது.

ஸகாத் என்ற வார்த்தைக்கு தூய்மையாகுதல் என்று பொருள். ஸகாத் வழங்கப்பட்ட செல்வம் தூய்மையடைகிறது. அதன்மூலம் மனித உள்ளமும், மட்டுமீறிய சுயநலனிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் தூய்மையடைகிறது. மனதின் கஞ்சத்தனம் அடையாளம் காணப்படாமல் விட்டுவிடப்பட்டால், அது அதற்குரிய நியாயவாதங்களைக் கொண்டு ஊட்டி வளர்க்கப்பட்டால் மனம் இறுகி விடுகிறது; அதன் மிருக குணம் மிகைத்து விடுகிறது. மனிதன் மிருகமாக மாறிவிடுகிறான்.

ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்கள், அச்சுறுத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி மனிதன் அல்லாஹ்வின் பாதையில் தன் செல்வத்தை செலவு செய்யும்போது அவனது மனம் தூய்மையடைந்து இலகுவாகி விடுகிறது. அவன் ஷைத்தானின் சதிவலைகளில் சிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் முன்னேறிச் செல்கிறான்

“ருகூஃ செய்பவர்களுடன் இணைந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்” இந்த வாசகம் தொழுகையை ஜமாஅத்தாக, கூட்டாக நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. தொழுகையை கூட்டாகத் தொழுவதற்கும் தனியாகத் தொழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பள்ளிவாசலுக்குச் சென்று கூட்டாக தொழுகையை நிறைவேற்றுபவர்கள் சக மனிதர்களிடம் நெருங்குகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் வெறுப்பு நீங்கி சகோதரத்துவம், இணக்கம், பயன் பெற்று பயனடைதல் போன்ற பண்புகள் உருவாகின்றன. பணக்காரன், ஏழை, அறிஞன், சாமானியன், உயர்ந்தவன், தாழ்ந்தவன்… இப்படியான வேறுபாடுகள் பெரிதாகத் தலைதூக்குவதில்லை. அப்படியான சூழலில் தொழ வேண்டும் என்ற எண்ணமும் தொழுகையை விட்டுவிடக்கூடாது என்ற உணர்வும் ஆதிக்கம் பெறுகின்றன.  ஜமாஅத் தொழுகையை விடுபவர்கள் நாளடைவில் தனியாகத் தொழுவதில் சோம்பேறித்தனம் காட்டுவார்கள். ஒரு கட்டத்தில் தனியாகத் தொழுவதையும் விட்டுவிடுவார்கள். தொழுகையை விட்டுவிடும்போது ஏனைய தீமைகளும் அவர்களிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. பாதுகாப்பு அரண் தகர்ப்பட்டால் என்ன நிகழுமோ அதுதான் இங்கும் நிகழ்கிறது. அவர்கள் ஷைத்தான்களால் கவரப்பட்டு அவர்களின் கூட்டாளிகளாக மாறிவிடுவார்கள். யூதர்களின் விசயத்திலும் அப்படித்தான் நிகழ்ந்தது. இங்கு அல்லாஹ் அவர்கள் திரும்பி இஸ்லாத்தின் பக்கம், இயல்பின் பக்கம் வருவதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறான்.  

“பிற மக்களை நன்மை செய்யும்படித் தூண்டிவிட்டு உங்களை நீங்களே மறந்து விடுகிறிர்களா? நீங்களோ வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா?” இந்த வாசகம் யூதமதகுருமார்களை விளித்துப் பேசுகிறது. ஒரு சமூகத்தின் வழிகேடு அதன் அறிஞர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் காணப்படும் முரண்பாடு சாமானியர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பத்தை, மோசமான முன்மாதிரியை ஏற்படுத்துகிறது. வேதம்கற்ற அறிஞர்களே அப்படி இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று பொதுமக்கள் தங்களின் தவறுகளை, பாவங்களை நியாயப்படுத்துகிறார்கள். இது வெறுமனே யூதமதகுருமார்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டதல்ல. இது ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் இப்படிப்பட்ட அறிஞர்களுக்கானதாகும். நம்முடைய சமூகத்திலும் இப்படியான அறிஞர்கள் நிரம்பியிருப்பதைக் காணலாம். தினமும் திருக்குர்ஆனின் வசனங்களை படித்துக் கொண்டே அவற்றுக்கு முரணாகச் செயல்படக்கூடிய, பேசக்கூடிய எத்தனை மனிதர்கள் நமக்கு மத்தியில் இருக்கிறார்கள். இதுதான் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நிரந்தரத்தன்மையை அளிக்கிறது.

சொற்களுக்கு உயிர் இருக்கிறதா? ஆம், உயிரோட்டம் கொண்ட உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொற்களுக்கு உயிர் இருக்கிறது. அவை எவ்வித தடுப்பும் இன்றி நேரடியாக உள்ளங்களை நோக்கிச் செல்லக்கூடியவை. தொழில்முறை அறிஞர்களின் சொற்கள் எவ்வளவு வசீகரமானவையாக இருந்தாலும் அவை உள்ளங்களுக்குள் ஊடுருவதில்லை. அவை பொழுதுபோக்கும் அம்சங்களாக கருதப்பட்டு வெறுமனே ரசிக்கப்படுகின்றன என்பதைத் தாண்டி அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.  உங்கள் சொற்களுக்கும் செயல்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழி என்ன? நீங்கள் உங்களின் இந்த பலவீனத்திலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன?

“பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான்” இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஸப்ர்’ என்ற வார்த்தைக்கு தடுத்தல் என்று பொருள். மனதை அதன் பதற்றத்திலிருந்து, அச்சத்திலிருந்து தடுத்தல், மனதின் இச்சைகளுக்குக் கட்டுப்படாமல் பொறுமையாக இருத்தல் என்று பொருள். ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களுக்கு, சந்தேகங்களுக்கு, அச்சுறுத்தல்களுக்குக் கட்டுப்படாமல் இருங்கள். தொழுகையைக் கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்.

தொழுகையைக் கொண்டு எப்படி உதவி தேடுவது?

தொழுகையின்மூலமே பலவீனமான மனிதன் பேராற்றல்கொண்ட அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்கிறான். அந்த தொடர்பு அவனைப் பலம்கொண்ட, ஆன்ம பலம் கொண்ட மனிதனாக மாற்றுகிறது. ஆன்ம பலமே அனைத்திற்குமான ஊற்றுக்கண். முன்மாதிரி மனிதர் முஹம்மது நபியவர்கள் தொழுகையைக் கொண்டே தங்களுக்கான பலத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு சிறிய அளவில் கவலை ஏற்பட்டால்கூட உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்.

மனதின் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தொழுகைக்கும் தொடர்பு இருக்கிறது. முறையாகத் தொழுபவர்களும் தொழாதவர்களும் சமமானவர்கள் அல்ல. இருவரின் மனநிலையும் வேறுவேறானவை. முந்தையவர்கள் எளிதாகக் கடந்து செல்லும் விசயங்களைப் பிந்தையவர்கள் கடக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.

ஷைத்தான் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களுக்குப் பயப்படாதீர்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டியவை உங்களைவிட்டும் சென்று விடாது. பொறுமையாக இருங்கள். அல்லாஹ்விடம் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். யாருக்கு உண்மையாகவே அல்லாஹ்வின் மீது அச்சம் இருக்கிறதோ அவர்களால்தான் இப்படிச் செய்ய முடியும். அவர்களால்தான் மனக்கட்டுப்பாடு கொண்டவர்களாக இருக்க முடியும். அவர்கள்தாம் தொழுகையைக் கொண்டு பலமடைவார்கள். அவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திப்போம் என்பதை உறுதியாக நம்புபவர்கள். மற்றவர்களுக்கு அது கடினமான ஒன்று. அவர்கள் தங்களின் கீழான இச்சைகளில் மூழ்கி விடுவார்கள்.

“நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பாரமான ஒன்றுதான். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்பதை உறுதியாக நம்புவார்கள்.”

மறுமையின் மீதான உறுதியான நம்பிக்கை, இறைவனைச் சந்திக்க வேண்டும், அவன் பக்கமே திரும்ப வேண்டும் என்ற எண்ணம் ஆகியவையே இவ்வுலகின் இன்பங்களை அற்பங்களாகக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர்கள் இவ்வுலகின் ஆதாயங்களுக்கு, இன்பங்களுக்கு அடிமையாகி சத்தியத்தை மறைக்கவோ விட்டுவிடவோ மாட்டார்கள். மறுமை வாழ்வை மறந்து இவ்வுலக இன்பங்களில் மூழ்கி விடுபவர்களுக்கு இஸ்லாத்தின் போதனைகள் சிரமமானவையாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அந்த சிரமங்களைத் தாண்ட வேண்டும் என்ற உறுதியான எண்ணமும்  அதற்கான செயல்பாடுகளும் இருக்கும்பட்சத்தில் அவர்களால் அந்த சிரமங்களைக் கடந்து நன்மையின் பாதையை வந்தடைய முடியும்.                 

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

This Post Has 4 Comments

  1. அ.முகமது அமீன்.

    இந்தக் கட்டுரையின் முதல் பத்தியின் முதல் வார்த்தையே முந்தைய அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்திவிட்டது. இது நல்லதுதான்; ஆனாலும் ‘இதுவரையிலான வசனங்களில்’ என்ற இடத்தில் கூடுதலாக
    (குர்ஆன்: சூரா : ஆயத்.) இலக்கம் இடம்பெற்றால் இன்னும் வாசிப்பவர்களுக்கு இலகுவாக அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது…

    தங்களுடைய பணியை இந்த சமூகத்திற்கு பயனுள்ளதாக அல்லாஹ் ஆக்குவானாக- ஆமின்.

      1. sadik ali

        அல்ஹம்துலில்லாஹ்

    1. Zafar Rahmani

      //சொற்களுக்கு உயிர் இருக்கிறதா? ஆம், உயிரோட்டம் கொண்ட உள்ளத்திலிருந்து வெளிப்படும் சொற்களுக்கு உயிர் இருக்கிறது. அவை எவ்வித தடுப்பும் இன்றி நேரடியாக உள்ளங்களை நோக்கிச் செல்லக்கூடியவை. தொழில்முறை அறிஞர்களின் சொற்கள் எவ்வளவு வசீகரமானவையாக இருந்தாலும் அவை உள்ளங்களுக்குள் ஊடுருவதில்லை. அவை பொழுதுபோக்கும் அம்சங்களாக கருதப்பட்டு வெறுமனே ரசிக்கப்படுகின்றன என்பதைத் தாண்டி அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. உங்கள் சொற்களுக்கும் செயல்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வழி என்ன? நீங்கள் உங்களின் இந்த பலவீனத்திலிருந்து விடுபடுவதற்கான வழி என்ன?//
      அற்புதமான வரிகள். சிந்திக்க தூண்டுகின்றன.

Leave a Reply