சிறப்புகளும் பொறுப்புகளும்

You are currently viewing சிறப்புகளும் பொறுப்புகளும்

மீண்டும் அல்லாஹ் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைத்து அவர்கள் மீது தான் பொழிந்த அருட்கொடையை, உலக மக்கள் அனைவரையும்விட அவர்களை சிறப்பித்ததை நினைத்துப் பார்க்குமாறு கூறுகிறான். பிறகு பல்வேறு காலகட்டங்களில் அவன் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் அவன் நினைவூட்டுகிறான். மற்ற மனிதர்களைவிட சிறப்பிக்கப்பட்ட அவர்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்களாக, நன்றியுள்ளவர்களாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் வரலாறு நன்றிகெட்டத்தனத்தால் நிரம்பிக் காணப்படுகிறது. சிறப்புகள் செயல்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். சிறப்புகள் வெறுமனே வழங்கப்படுவதில்லை. அவை கூடுதல் பொறுப்புகளையும் வேண்டி நிற்கின்றன. பொறுப்புகள் அற்ற சிறப்புகள் பறிக்கப்பட்டு விடுகின்றன. யூதர்களின் வரலாறு அதற்கு ஒரு சான்று.                  

يَابَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ

2:47,48. “இஸ்ராயீலின் மக்களே! நான் உங்கள்மீது பொழிந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களைச்  சிறப்பாக்கி வைத்ததையும் நினைவுகூருங்கள். நீங்கள் ஒருநாளை அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் மற்றொரு உயிருக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது; யாரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; யாரிடமிருந்தும் ஈடாக எதுவும் பெறப்பட மாட்டாது. அவர்கள் எவ்வித உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.” 

அவர்களின் காலத்தில் அவர்களைச் சுற்றியிருந்த மற்ற சமூகங்களுக்கு வழங்கப்படாத பல்வேறு சிறப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த சிறப்புகள் அவர்கள் யூதர்கள் என்பதனால் வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் யூதர்கள் என்பதனால்தான் சிறப்பிக்கப்பட்டுள்ளோம் என்றும் மற்றவர்களைவிட தாங்களே சிறந்தவர்கள் என்றும் புரிந்து கொண்டார்கள். தாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத்தினர், அவனுடைய பிள்ளைகள் என்று கர்வத்துடன் கூறினார்கள். சிறப்புகள் எப்போதும் அவற்றுக்கான பொறுப்புகளோடு இணைந்தே காணப்படுகின்றன.  பொறுப்புகளைக் கொண்டு வராத சிறப்புகள் பறிக்கப்படுவதோடு நன்றிகெட்டத்தனத்தினால் தண்டனையையும் கொண்டு வருகின்றன.

அந்தச் சமயத்தில் அவர்களிடம் அல்லாஹ்வின் மார்க்கம் இருந்தது. வழிகாட்டக்கூடிய வேதம் இருந்தது. அவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து தூதர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். மற்ற சமூகங்களுக்கு வழிகாட்டியாக, முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை சிறப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அல்லாஹ் தான் நாடியவர்களை சிறப்பிக்கிறான். சிறப்புகள் அனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவை குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டும் உரித்தானவை அல்ல. அவை எந்த நோக்கமும் இன்றி வெறுமனே வழங்கப்படுவதில்லை. சிறப்புகள் வழங்கப்பட்டவர்கள் நன்மையின் பாதையில் முன்னணியில் இருக்க வேண்டும்.

தாங்கள் சிறப்பிக்கப்பட்ட சமூகத்தினர் என்பதனால் தங்கள் பாவங்களுக்காக தண்டிக்கப்பட மாட்டோம் என்றும் தங்களிலுள்ள இறைத்தூதர்கள், இறைநேசர்கள், அழைப்பாளர்கள், நல்லோர்கள், உண்மையாளர்கள் ஆகியோரின் பொருட்டால் தாங்கள் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பி விடுவோம் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சிறப்புகள் நினைவூட்டப்பட்டவுடன் அவர்களின் இந்த தவறான எண்ணத்திற்கு பதிலளிக்கப்படுகிறது. அந்த நாள் நீங்கள் எண்ணிக் கொள்வது போல இலகுவான நாளாக இருக்காது. அந்த நாளின் தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் யாரும் யாருக்கும் பயனளிக்க முடியாது. யாரிடமிருந்து எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யாரும் ஈட்டுத்தொகை கொடுத்து தப்பிக்கவும் முடியாது. யாருக்கும் எந்த வகையிலும் உதவி கிடைக்காது. செயல்பாடுகள் அற்ற வெற்று நம்பிக்கைகள் அந்த நாளில் எந்தப் பயனும் அளிக்காது.  

இங்கு ஒருவர் மற்றவருக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்க முடிகிறது. பெரிய மனிதர்களின் பரிந்துரைகளின்மூலம் பல்வேறு காரியங்கள் சாதிக்கப்படுகின்றன. செல்வந்தர்களால், அதிகாரம் உள்ளவர்களால் ஈட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து தப்பவும் முடிகிறது.  இவ்வுலகில் இப்படியெல்லாம் செய்ய முடியும் எனில் மறுவுலகிலும் செய்ய முடியும் என்று இணைவைப்பாளர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைதான் அவர்களை அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தத் தூண்டுகிறது. பிழையான இந்த நம்பிக்கை யூதர்களிடமும் ஊடுருவியது. தாங்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் என்பதால் அவர்களின் பரிந்துரைகளின் வழியாக அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பி விடலாம் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களிடத்திலும்கூட இவ்வாறான நம்பிக்கைகள் பரவியிருப்பதைக் காண முடியும். இந்த வசனம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் தெளிவான மொழியில் அவர்களின் தப்பெண்ணத்திற்கு பதிலளித்து விடுகிறது.

இதற்குப் பிறகு வரக்கூடிய வசனங்களில் அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகள் ஒவ்வொன்றாக நினைவூட்டப்படுகின்றன.  

وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِنْ رَبِّكُمْ عَظِيمٌ  وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

 (2:49-54) “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களைக் கொடிய வேதனையில் ஆழ்த்தி வைத்திருந்தார்கள். அவர்கள் உங்களுடைய ஆண்மக்களைக் கொலை செய்துகொண்டும் உங்கள் பெண்களை உயிருடன் விட்டுவைத்துக் கொண்டும் இருந்தார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரும் சோதனை இருந்தது. நாம் உங்களுக்காகக் கடலைப் பிளந்து உங்களைக் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை மூழ்கடித்ததையும்  நினைவுகூருங்கள். நாம் மூசாவுக்கு, வேதத்தை அருள்வதற்காக நாற்பது இரவுகளை வாக்களித்தையும் நினைவுகூருங்கள். ஆனால் அவர் இல்லாத சமயத்தில் நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கிக் கொண்டீர்கள். நீங்கள் அக்கிரமக்காரர்களாக இருந்தீர்கள். அதன் பிறகு நீங்கள் நன்றி செலுத்தும்பொருட்டு நாம் உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் நேர்வழியடைய வேண்டும் என்பதற்காக நாம் மூசாவுக்கு வேதத்தை, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடியதை வழங்கியதையும் நீங்கள் நினைவுகூருங்கள்.”

ஃபிர்அவ்ன் எகிப்தில் ஆட்சி செய்த மன்னர்களுக்கு வழங்கப்படும் பெயர். யூசுஃப் நபியின் காலத்தில்தான் யூதர்கள் எகிப்திற்கு வந்து குடியேறினார்கள். ஆரம்பத்தில் அவர்கள் கண்ணியமாகத்தான் நடத்தப்பட்டார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அங்கு இருந்த கிப்தீ சமூகத்தினருக்கு அந்நியர்களான அவர்கள் தங்களை மிகைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சம்தான் அவர்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கிப்திகளுக்கு ஏற்படுத்தியது. அவர்களின் அரசனான ஃபிர்அவ்ன் பெரும் அநியாயக்காரனாக இருந்தான். ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் யூதர்கள் மீது இழைத்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் யூதர்களை நிரந்தரமான, கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கிட்டத்தட்ட அடிமைகள்போன்றே நடத்தப்பட்டார்கள். கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களின் பலம் எந்தச் சமயத்திலும் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆண்மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் பலவீனம் அதிகரிக்கும்பொருட்டும் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரின் இன்னபிற தேவைகளுக்காகவும் அவர்களின் பெண்கள் கொலை செய்யப்படாமல் உயிருடன் விட்டுவிடப்பட்டார்கள். ஒரு சமூகத்தில் ஆண்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டே செல்வதும் அதன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதும் அந்தச் சமூகத்தை எல்லா வகையிலும் பலவீனப்படுத்தி விடும்.    

இது அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த மிகப் பெரிய சோதனையாக இருந்தது. அவர்கள் அந்தச் சோதனையை எதிர்கொண்டார்கள். முடிவில், அவன் அவர்களுக்கு வெற்றி அளித்தான். அவன் நம்பிக்கையாளர்களைச் சோதிப்பான். ஆனால் அவன் அவர்களைக் கைவிட மாட்டான். தக்க சமயத்தில் எதிர்பாரா புறத்திலிருந்து அற்புதமான முறையில் உதவி செய்து அவர்களைக் காப்பாற்றி விடுவான். அவன் அருட்கொடைகள் அளித்தும் சோதிப்பான். துன்பங்களைக் கொடுத்தும் சோதிப்பான். இரண்டு சந்தர்ப்பங்களும் சோதனைகள்தாம்.

அல்லாஹ் மூசாவை தூதராக அனுப்பி அவர்களை ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து விடுவித்தான். அவர் அல்லாஹ்வுடைய கட்டளையின்பேரில் இரவில் அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் அவர்களைப் பிடிப்பதற்காக பின்தொடர்ந்து சென்றார்கள். முன்னால் கடல் பின்னால் ஃபிர்அவ்னும் அவனது படையினரும் என்ற இக்கட்டான சூழல் வந்தபோது ஆச்சரியமான முறையில் அல்லாஹ்வின் உதவி அவர்களை வந்தடைந்தது. அவனுடைய கட்டளையின்படி மூசா தம் கைத்தடியால் கடலை அடித்தார். கடல் பிளந்து பல வழிகளாக ஆனது. மூசாவும் அவரது சமூகத்தாரும் அந்த வழிகளில் நடந்து கடலைக் கடந்து சென்றார்கள். ஃபிர்அவ்னும் அவனது கூட்டத்தாரும் அந்த வழிகளில் அவர்களை துரத்திச் சென்றார்கள். சட்டென அந்த வழிகள் மறைந்து அது மறுபடியும் கடலாக மாறியது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் மூழ்கடிக்கப்பட்டார்கள்.   

கடலைக் கடந்து ஸினாய் என்ற பூமியில் யூதர்கள் தங்கினார்கள். அல்லாஹ் அவர்கள் மீது அருள்புரிய நாடினான். அவர்களுக்கு வழிகாட்டும் வேதத்தை வழங்க நாடினான். அந்த வேதத்தை வழங்கும்பொருட்டு அவன் அவர்களின் தூதராக இருந்த மூசாவுக்கு நாற்பது இரவுகளை வாக்களித்தான். அவர் அவனிடமிருந்து அதனைப் பெறுவதற்காக தூர் ஸினா மலைக்குச் சென்றார். அவர் தம் இடத்தில் தம்முடைய பிரதிநிதியாக தம் சகோதரர் ஹாரூனை நியமித்து விட்டுத்தான் சென்றார்.   

யூதர்கள் நீண்ட காலம் அடிமைப்பட்டு கிடந்ததனால் ஆதிக்க சமூகத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். அவர்களிடமிருந்த சிலை வழிபாட்டு மோகம் இவர்களிடமும் ஊடுருவி இருந்தது. மூசா இல்லாத அந்தச் சமயத்தில் சாமிரி என்பவன் காளைக்கன்றைப் போல ஒரு வடிவத்தை உருவாக்கினான். அது உயிருள்ள காளைக்கன்றைப்போல விசித்திரமான ஒலியை எழுப்பியது. அதனால் அவர்கள் கவரப்பட்டு அதனை வழிபடத் தொடங்கினார்கள். ஹாரூன் எவ்வளவோ அவர்களைத் தடுத்துப் பார்த்தார். ஆனால் அவர்கள் அவரை மிகைத்து விட்டார்கள். தங்களின் கண் முன்னால் தங்களுக்காக ஆச்சரியமான முறையில் கடல் பிளப்பதையும் தாங்கள் அதன் வழியாக தப்பிச் சென்றதையும் தங்களின் எதிரிகள் அதில் மூழ்கடிக்கப்பட்டதையும் அவர்கள் கண்ட பிறகும் காளைக் கன்றின் விசித்திரமான ஒலியினால் கவரப்பட்டு அதனை கடவுளாக்கிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் மீதே அநியாயம் இழைத்து அநியாயக்காரர்களாக ஆன பின்னரும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அவர்கள் நன்றியுள்ள அடியார்களாக ஆக வேண்டும் என்பதற்காக தன் கருணையின் வாசல்களை அவர்களுக்குத் திறந்து விட்டான். உண்மையில் இது அவன் அவர்கள் மீது பொழிந்த மாபெரும் அருட்கொடையாகும்.

அதற்குப் பிறகு அவன் அவர்கள் மீது பொழிந்த இன்னொரு அருட்கொடை எடுத்துரைக்கப்படுகிறது. அவர்கள் நேர்வழியடையும்பொருட்டு, மீண்டும் அவர்கள் எந்தவொரு பிழையான நம்பிக்கையிலும் விழுந்து விடாதிருக்கும் பொருட்டு தவ்ராத் என்ற வேதத்தையும் ஃபுர்கானையும் அவன் வழங்கினான். ஃபுர்கான் என்றால் சத்தியத்தையும் அசத்தியத்தையும் சரியையும் தவறையும் பிரித்துக் காட்டக்கூடிய உரைகல். தவ்ராத் என்ற வேதம்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டும் உரைகல்லாகவும் இருக்கிறது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் நன்மையையும் தீமையையும் சரியையும் தவறையும் பிரித்துக்காட்டக்கூடிய அல்லாஹ்வின் வேதம் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய அருட்கொடை. அது அளிக்கும் தெளிவையும் உறுதியையும் ஆறுதலையும் பலத்தையும் வேறு எதுவும் அளிக்க முடியாது.        

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَاقَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِنْدَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ وَإِذْ قُلْتُمْ يَامُوسَى لَنْ نُؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ

2:55-57. “மூசா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் காளைக்கன்றைக் கடவுளாக்கி உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொண்டதனால், உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே கொன்றுவிடுங்கள். இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும். அவன் உங்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்” என்று கூறியதை நினைவு கூருங்கள். “மூசாவே! நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாகக் காணும்வரை உம்மை ஒருபோதும் நம்ப மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவுகூருங்கள். அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பேரிடி உங்களைத் தாக்கியது. பிறகு நீங்கள் நன்றிசெலுத்தும்பொருட்டு மரணித்துவிட்டபின்னரும் உங்களை உயிர்ப்பித்தோம். உங்கள்மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். உங்களுக்கு மன்னு, சல்வா என்னும் உணவுகளை வழங்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். அவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.”

முதலில் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை, அவர்களுக்கு வழங்கிய சிறப்புகளை குறிப்பிட்ட பிறகு அவர்கள் செய்த மிக மோசமான ஒரு பாவத்தை நினைத்துப் பார்க்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு நினைவூட்டுகிறான். திருக்குர்ஆன் சுருக்கமாகக் குறிப்பிடும் இந்த சம்பவங்கள் அனைத்தும் அவர்களுக்கு மத்தியில் நன்கு அறியப்பட்டவையாக இருந்தன. 

மூசா இல்லாத சமயத்தில் அவர்களில் ஒரு பிரிவினர் காளைக்கன்றை கடவுளாக்கிக் வழிபட்டதன்மூலம் தங்களுக்குத் தாங்களே அவர்கள் அநீதி இழைத்துக் கொண்டார்கள். அல்லாஹ்வுக்கு இணையாக யாரையேனும் எதையேனும் ஆக்குவது மாபெரும் அநீதியாகும். பெரும் அருட்கொடைகள் வழங்கப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட அவர்கள் இந்த அநீதியின்மூலம் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொண்டார்கள். இணைவைப்பு மிகப் பெரிய பாவமும் நன்றிகெட்டத்தனமும் ஆகும்.

அல்லாஹ் அவர்களை தூய்மைப்படுத்த நாடினான். அந்த பெரும் பாவத்தில் ஈடுபட்டவர்களும் அவர்களைத் தடுக்காமல் இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவன் நாடினான். சமூகத்தில் ஒரு குற்றம் பரவும்போது அதைக் கண்டும் காணாமல் தடுக்காமல் இருந்தவர்களும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையினால் பாதிக்கப்படுவார்கள். ‘உங்களை நீங்களே கொன்று விடுங்கள்’ என்ற வாசகம் உங்கள் சமூகத்தில் இந்தப் பாவத்தில் ஈடுபட்டவர்களை நீங்களே கொன்று விடுங்கள் என்ற பொருளைத் தருகிறது. அந்தப் பாவத்தில் ஈடுபட்டவர்களை அந்தந்த குலங்களைச் சேர்ந்தவர்களே கொல்ல வேண்டும் என்பதுதான் அது. ஒருவன் பாவத்தில் ஈடுபட்ட தன் சகோதரனை, தன் குடும்பத்தில் உள்ளவனைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளைதான் அது. உண்மையில் இது கடுமையான தண்டனைதான். ஆனாலும் புற்றுநோய்க்கட்டி உடலிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதுபோன்று குற்றவாளிகள் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அது எப்படி முழு உடலையும் அரித்து விடுமோ அப்படித்தான் ஒட்டுமொத்த சமூகமும் அவர்களால் பாதிக்கப்பட்டு விடும். இந்த தண்டனை பார்ப்பதற்கு கடினமானதாகத் தெரிந்தாலும் இதுதான் உங்கள் படைப்பாளனிடத்தில் சிறந்ததும் உங்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரக்கூடியதும் ஆகும். அவன் உங்களை மிகச் சிறந்த வடிவில் படைத்திருக்கிறான்.

அவர்கள் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை நிறைவேற்றினார்கள். அவர்களில் பாவம் செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லாஹ் அவர்களின் இந்த பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டான். அவன் அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்பவனாகவும் அவர்களின் விசயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். இதுவும் அவன் அவர்களின் மீது பொழிந்த அருட்கொடைதான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் நினைவூட்டப்படுகிறது. அது அவர்களிடம் காணப்பட்ட உலகியல்வாதப் பார்வையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. அத்தனை அற்புதங்களைக் கண்ட பின்னரும் “அல்லாஹ்வை கண்கூடாகக் காணும்வரை நீர் கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம்” என்று மூசாவைப் பார்த்து அவர்களில் ஒரு பிரிவினர் கூறினார்கள்.  ஏன் அல்லாஹ் உங்களுடன் மட்டும் பேசுகிறான்? ஏன் எங்களுடன் பேசுவதில்லை? நீர் கூறுவதை நாங்கள் நம்ப வேண்டும் எனில் நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாகக் காண வேண்டும் என்றார்கள் அவர்கள்.

அல்லாஹ்வைக் காண விரும்புவது தவறான ஒன்றல்ல. மூசாவும் அவனைக் காண விரும்பினார். அவரது இந்த விருப்பத்தை அவன் குறைகூறவில்லை. இந்த உலகில் தன்னைக் காண முடியாது என்பதை அவன் அவருக்குத் தெளிவுபடுத்தினான். (அல்அஃராஃப் அத்தியாயத்தின் 143ஆவது வசனம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.) ஆனால் அவர்களின் இந்தக் கோரிக்கை அவர்களின் சந்தேகத்திலிருந்து, குறுகிய உலகியல்வாதப் பார்வையிலிருந்து வெளிப்படக்கூடியது. அல்லாஹ்வின் தெளிவான சான்றுகளை, தங்களுக்காக அவன் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்ட பின்னரும் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட இந்த நம்பிக்கையின்மையும் சந்தேகமும் குறுகிய உலகியல்வாதப் பார்வையும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி விடுகின்றன. இதனால் அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளானார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே பேரிடி அவர்களைத் தாக்கியது. அவர்கள் மயக்கமடைந்து வீழ்ந்தார்கள் அல்லது செத்து மடிந்தார்கள். இந்த இரண்டு பொருள்களுக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது.   

பின்னரும் அவனுடைய கருணை அவர்களை தழுவிக் கொண்டது. அவன் அவர்களை மன்னித்தான். அவர்கள் நன்றியுள்ள அடியார்களாக ஆக வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்தான்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த மற்றுமொரு அருட்கொடையை நினைவூட்டுகிறான். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு சினாய் பாலைவனத்திற்கு வந்தபோது கொதிக்கும் வெயிலும் வறுமையும் அவர்களை வாட்டி வதைத்தன. அவர்களுக்காக அல்லாஹ் அற்புதமான முறையில் மேகங்களைக் கொண்டு நிழல் ஏற்படுத்தினான். கடும் வெயில் இதமான குளிராக மாற்றமடைந்தது. அதேபோன்று அவர்கள் உண்பதற்காக மன்னு, சல்வா என்ற இரு உணவுகளையும் வழங்கினான். மன்னு என்றால் தேன் போன்ற இனிப்பான உணவு. சல்வா என்றால் ஒரு வகையான பறவை. அது எளிதாக கூட்டம் கூட்டமாக அவர்களை வந்தடைந்தது. எவ்வித முயற்சியும் உழைப்பும் இன்றி அற்புதமான முறையில் இந்த இரு உணவுகளும் அவர்களைத் தேடி வந்தன. ஆனாலும் அவர்கள் இந்த அற்புதங்களை உணரவில்லை. அவற்றைக் கொண்டு அவனை இன்னும் அதிகம் நெருங்கிச் செல்லவில்லை. அவற்றைக் கொண்டு நன்றியுள்ள அடியார்களாக அவர்கள் மாறவில்லை. நன்றிகெட்டத்தனம் அல்லாஹ்வின் அருட்கொடை பறிக்கப்படுவதற்கு காரணமாக அமைவதோடு அவனுடைய தண்டனையையும் கொண்டு வந்து விடுகிறது. எந்தவொரு அருட்கொடையும் காரணமின்றி நமக்கு வழங்கப்படுவதும் இல்லை, காரணமின்றி நம்மிடமிருந்து பறிக்கப்படுவதும் இல்லை. அல்லாஹ் யார் மீதும் அநீதி இழைப்பதில்லை. மனிதர்கள் நன்றிகெட்டத்தனமான தங்களின் நடத்தையினாலும் பாவங்களில் மூழ்கியும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.    

இந்த வகையான அற்புதங்கள் நம் வாழ்விலும் நிகழ்கின்றன. ஆனாலும் நாம் அவற்றை தற்செயல்கள் என்றோ அதிர்ஷ்டம் என்றோ கருதி கடந்து விடுகின்றோம். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ் தங்களுக்கு வழங்கும் ஒவ்வொரு அருட்கொடையையும் உணர்ந்து  நன்றி செலுத்துவார்கள். அது அவர்களை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கும்.  

இங்கு ஒரு கேள்வி எழலாம். ஒரு சமூகத்தில் முந்தையவர்கள் செய்த பாவங்களுக்கு பிந்தையவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

மனிதன் என்பவன் தனியன் அல்ல. அவன் அவனுடைய சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவன் தன் குடும்பத்தின், சமூகத்தின் சிறப்புகளையும் பலவீனங்களையும் சுமந்தவனாகத்தான் இருக்கிறான். அவனுடைய சமூகத்தில் பரவும் நன்மைகளும் தீமைகளும் அவனுள் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. நபியவர்களின் காலகட்டத்தில் இருந்த யூதர்களிடம் அவர்களின் முன்னோர்களிடம் காணப்பட்ட அதே பலவீனங்கள் காணப்பட்டன. அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் செயல்களைக் கொண்டு பெருமிதம் கொள்பவர்களாகத்தான் இருந்தார்கள். அன்றைய காலகட்டத்தின் யூதர்கள் எப்படி தங்களுடைய தூதர்களுடன் நடந்து கொண்டார்களோ அப்படித்தான் நபியவர்களின் காலகட்டத்தில் இருந்த யூதர்கள் நபியவர்களுடன் நடந்து கொண்டார்கள். அவர்களின் காலகட்டங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்களின் மனநிலை ஒன்றுபோலவே இருந்தது.      

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply