தக்வா என்பது

You are currently viewing தக்வா என்பது

“யார் தக்வாவோடு நடந்து கொள்வாரோ நாம் அவருக்கு ஒரு வெளியேறுமிடத்தை ஏற்படுத்துவோம். அவர் அறியாத புறத்திலிருந்து அவருக்கு நாம் வாழ்வாதாரம் வழங்குவோம்.” (65:2,3)

இந்த வசனத்தை படித்த நாளிலிருந்து நான் மறக்கவேயில்லை. அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு திறப்பு, ஒரு மகிழ்ச்சி இன்றளவும் அப்படியே நினைவிருக்கிறது. பிரச்சனைகளில், சிரமங்களில் சிக்கிக் கொள்ளும்போதெல்லாம் இந்த வசனத்தை நினைத்துப் பார்ப்பேன். சட்டென நம்பிக்கையின் கீற்றுகள் மனம் முழுவதும் பரவி விடும். நிராசையின் சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். மனதில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளைப் பரவச் செய்யும் எந்தவொன்றும் நமக்கு மாபெரும் பொக்கிஷங்கள்தாம். அது சிறிய அளவிலான ஒரு வசனமாக இருந்தாலும் சரியே. மனம் எளிதில் பலவீனமடைந்து விடுவதைப்போல எளிதில் தன்னை மீட்டுக் கொள்ளவும் செய்யும். தேவை, நம்பிக்கையின் விதைகளை முளைத்தெழச் செய்யும் நல்ல வார்த்தைகள்.

நாலாபுறமும் துன்பங்களால் சூழப்படும்போதுதான் நமக்கு நம்முடைய இயலாமை நினைவுக்கு வருகிறது. நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகள் எதுவும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது அப்போதுதான் நமக்கு புரியத் தொடங்குகிறது.

தக்வா என்பது இறைசார்ந்த வாழ்க்கை. தக்வா என்பது இறைவனின் அறிவுரைகளை, சட்டங்களைப் பின்பற்றி வாழ்வது. அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்துவது; அவன் தவிர்ந்திருக்க வேண்டும் என்று கூறியவற்றிலிருந்து தவிர்ந்திருப்பது. இந்த வசனத்தில் வரக்கூடிய ‘ரிஸ்க்’ என்ற வார்த்தையும் செறிவான பொருளைத் தரக்கூடியது. அவனுக்குக் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு அருட்கொடையும் துன்பத்திலிருந்து இருக்கும் விடுதலையும் ‘ரிஸ்க்‘தான். தமிழில் சில மொழிபெயர்ப்பாளர்கள் வாழ்வாதாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் அந்தச் சொல்லில் முழுமை இல்லாததுபோன்று எனக்குத் தெரிகிறது.

உண்மையில் வாழ்பவனுங்களின் வழி புரிந்துகொள்ளக்கூடிய வசனம் இது. தக்வாவோடு வாழும்போது நம் வாழ்க்கையில் நிகழும் அற்புதங்களை, எதிர்பாராத புறத்திலிருந்து கிடைக்கும் உதவிகளை நாம் கண்டுகொள்ள முடியும். தக்வாவோடு வாழ்பவர்களால் நிச்சயம் இந்த வசனத்தின் முழுப் பொருளையும் புரிந்துகொள்ள முடியும். ஈமானிய வாழ்வு என்பது செயல்பாடுகளால் ஆனது. சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் இடைவெளியை அங்கு காண முடியாது.

இந்த அனுபவங்களை தங்களின் வாழ்க்கையில் அனுபவித்தவர்கள் நிச்சயம் நேரான வழியிலிருந்து பிறழ மாட்டார்கள். அவை அவர்களை இறைவனை நோக்கி நெருக்கமாக்கிக் கொண்டே செல்லும்; வீணான தர்க்கங்களிலிருந்து அவர்களை தூரப்படுத்தி விடும்.

இந்த உலகம் நாம் புரிந்துகொள்ளக்கூடிய நியதிகளால் ஆனதுதான். அந்த நியதிகளைப் புரிந்துகொள்வது மிக எளிதுதான். ஆனாலும் தேவையற்ற தர்க்கங்களைக் கொண்டு மனிதர்கள் தங்களைத் தாங்களே குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.

என்னை இந்தப் பாதையில் நிலைநிறுத்துவதும் இந்த அனுபவங்கள்தாம். அவைதாம் சக மனிதர்களின் அச்சுறுத்தல்களினால் பாதிப்படையாமல் என்னைப் பாதுகாக்கின்றன. நம்பிக்கையாளர்கள் தங்களின் வாழ்க்கையில் அற்புதங்களைக் காண்கிறார்கள். அவற்றை அவர்கள் கண்டும் காணாமல் கடந்து விடுவதில்லை அல்லது அவை தற்செயல் நிகழ்வுகள்தாம் என்று எண்ணுவதும் இல்லை. பேரளுளாளனின் அருட்கொடைகள் தங்கள் மீது பொழிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் தக்க சமயத்தில் வரக்கூடிய எதிர்பாராத உதவிகள் அவன் புறத்திலிருந்தே வருகின்றன என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply