“உம் இறைவன் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவன் தன் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (17:30)
இப்போதெல்லாம் என்னைச் சுற்றி வாழ்பவர்களை, அவர்கள் அடையும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்கிறேன். எந்தவொருவரையும் உடனடியாக அவர் இப்படித்தான் என்று முத்திரை குத்த முடியாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். மனிதர்கள் தொடர்ந்து ஓர் நிலையிலிருந்து இன்னொரு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கக்கூடியவர்கள். எந்தவொரு நிலையும் அவர்களுக்கு நிரந்தரமானது அல்ல.
வாழ்ந்து கெட்டவர்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. வியக்கும் அளவு செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எப்படி இப்படியொரு அடையாளமற்ற நிலையை அடைந்தார்கள் என்பதை நம்ப முடியாமல் திகைக்கிறேன்.
செல்வமும் செல்வாக்கும் நம்மிடம் எப்படி வந்தடைகின்றன என்பதையும் அவை எப்படி நம்மைவிட்டு விலகிச் செல்கின்றன என்பதையும் நாம் அறிய மாட்டோம். குறுகிய காலத்தில் நாம் செல்வந்தர்களாக அல்லது செல்வாக்கு மிகுந்தவர்களாக ஆகிவிடலாம். நம்முடைய உள்ளம் அறியும், அவை நம்மை வந்தடைவதற்கு நாம் காரணமானவர்கள் அல்ல என்பதை. ஆனாலும் நமக்குக் கிடைக்கும் வெற்றியால் நாம் முன்மாதிரியாக ஆக்கப்படுவோம். அதேபோன்று அவை நம்மைவிட்டு விலகிச் செல்வதையும் நாம் அறிய மாட்டோம். நம்முடைய செயல்கள் நம் தோல்விக்குக் காரணமானவையாக சுட்டப்படும்.
ஒரு மனிதனுக்கு செல்வ வளம் வழங்கப்படுவது குறித்து பேசும் திருக்குர்ஆனின் வசனங்களைப் படிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவை மனிதனின் நிலையை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டக்கூடியவையாக எனக்குத் தெரிகிறது. அவை இந்த விசயத்தில் மனிதர்களின் பலம், பலவீனத்தைத் தாண்டி மறைவான இறைகரம் செயல்படுவதை சுட்டிக்காட்டக்கூடியவையாக இருக்கின்றன.
இறைகரம் செயல்படுவதை உணர்பவர்கள் இங்கு கர்வம் கொள்வதற்கோ நிராசையடைவதற்கோ எதுவும் இல்லை என்பதையும் ஒவ்வொன்றும் தங்களுக்கான சோதனையே என்பதையும் கொடுக்கப்படும்போது நன்றியுணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும், பறிக்கப்படும்போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.

May ALLAH bless you & increase your Faith Aameen