விதியை நாம் எப்படி புரிந்துகொள்வது?

You are currently viewing விதியை நாம் எப்படி புரிந்துகொள்வது?

என் வாழ்வின் நிகழ்ந்த சில நிகழ்வுகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கின்றன. சில சமயங்களில் எப்போதோ நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்கும் அது நிகழ்ந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நிகழ்ந்த சில நிகழ்வுகளுக்கும் மத்தியிலுள்ள தொடர்பு என்னை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுண்டு. சில சமயங்களில் நிகழ்வுகளுக்கு மத்தியில் அறுபடாமல் சில கண்ணிகளும் தென்படுவதையும் நான் உணர்ந்ததுண்டு. எவற்றை தற்செயல்கள் என்று நான் கருதினேனோ அவையும் ஏதோ ஒரு வகையில் அறுபடாத கண்ணிகளோடு தொடர்பு கொண்டிருந்ததையும் உணர்ந்ததுண்டு.

ஒவ்வொன்றும் நம்மை விதிக்கப்பட்ட ஏதோ ஒன்றை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் அதனை தெளிவாக உணர்கிறோம். சில சமயங்களில் மூட்டமாக அது நமக்குத் தென்படுவதுண்டு. சில சமயங்களில் எல்லாவற்றையும் தற்செயல்கள் என்று எண்ணியும் விடுகின்றோம். லௌகீக விசயங்களில் மூழ்கிவிடும்போது எல்லாவற்றையும் புறக்காரணிகள் கொண்டே விளங்க முற்படுகின்றோம். அகப்பார்வை கூர்மையடைந்திருக்கும் சமயத்தில் அறுபடாத கண்ணிகளை கண்டுகொள்கின்றோம். ‘ஒவ்வொருவரும் தாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நோக்கி செலுத்தப்படுவார்கள்’ என்ற நபிமொழியின் வாசகம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு.

ஆரம்பத்தில் விதியை எப்படி புரிந்துகொள்வது என்று தெரியாமல் குழம்பியதுண்டு. பல சமயங்களில் விதி குறித்த நினைவும் பேச்சும் என்னை பயத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. விதிக்கும் நீதிக்கும் மத்தியில் இருக்கும் தொடர்புகள் ஏன் தென்படுவதில்லை என்றும் யோசித்ததுண்டு. விதியை உள்ளபடியே புரிந்துகொண்டால் பல குழப்பங்கள் தாமாகவே நீங்கிவிடும் என்பதை நீண்ட காலத்திற்குப் பின்னரே உணர்ந்தேன். என்னிடம் இருந்த தர்க்கப்பார்வை முனைமழுங்கி அகப்பார்வை கூர்மையடைந்தபோதுதான் விதியை சரியான அடிப்படையில் உணரத் தொடங்கினேன். தர்க்கப்பார்வை கொண்டு நாம் விதியை அணுகும்போது அது விடைதெரியா கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்லும். அவை காரிருள் சூழ்ந்த வழிதெரியா காட்டிற்குள் நம்மை விட்டுவிட்டுச் சென்றுவிடும். நாத்திகர்கள் தங்களின் நாத்திகத்திற்கு ஆதாரங்களாக முன்வைப்பது பெரும்பாலும் இத்தகைய விடைதெரியாத கேள்விகளையே. நிச்சயம் அவை ஆதாரங்கள் அல்ல. அவர்களை காரிருக்குள் கொண்டு வந்த குழப்பங்கள்.   

நாம் விதியைக் காரணம் காட்டி எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியுமா? எல்லாம் விதிப்படி நடக்கிறது என்றால் நன்மைக்கும் தீமைக்குமான அர்த்தம்தான் என்ன? விதி எப்படி செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது. அது நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத விசயங்களுள் ஒன்று. மனிதர்கள் இந்த விசயத்தில் அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி ரகமாகத்தான் இருக்கிறார்கள். ஒரு சாரார் விதியைக் காரணம் காட்டி தங்களின் சோம்பேறித்தனத்தை, இயலாமையை, செயலின்மையை நியாயப்படுத்துகிறார்கள். இன்னாரு சாராரின் கருத்து, விதி என்ற ஒன்றை முற்றிலும் மறுக்கும்விதமாக இருக்கிறது.

இங்கு புரிந்துகொள்ள முடியாது என்பது முற்றிலுமாக புரிந்துகொள்ள முடியாது என்ற பொருளில் அல்ல. அது செயல்படும்விதத்தை நம்மால் ஓரளவு கணிக்க முடியும். நம் அறிவு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது. அதற்குரிய கொள்ளளவு அவ்வளவுதான். அதற்குப் பிறகு இறைவேதம் கூறும் வழிகாட்டலை ஏற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

மனிதனுக்கு குறிப்பிட்ட அளவு தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த தெரிவு செய்யும் சுதந்திரத்தின் அடிப்படையில்தான் அவன் மறுமைநாளில் கேள்வி கேட்கப்படுவான். அவன் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டவன் அல்ல. அவனால் தன் பாதையைத் தெரிவு செய்ய முடியும். அவன் விரும்பினால் நேரான வழியைத் தேர்ந்தெடுக்கலம். விரும்பினால் தவறான வழியைத் தேர்வு செய்யலாம்.

பிறகு விதிக்கப்பட்ட விசயத்தின் பக்கம் அவன் செலுத்தப்படுவான் என்பதன் பொருள் என்ன? இங்கு இதுதான் சிக்கலே. நமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுதந்திரத்தை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். நாம் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய விதியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதைக் குறித்து சிந்திக்க வேண்டாம் என்றும் உங்களுக்கு வழங்கப்பட்டுதைக் குறித்து மட்டுமே சிந்தியுங்கள் என்று இஸ்லாம் நமக்கு அறிவுறுத்துகிறது. விதி முழுக்க முழுக்க இறைநாட்டத்திற்கு உட்பட்டது. அவன் தான் நாடியதைச் செய்கிறான். அவனது நாட்டத்திற்குக் குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது. தன் பக்கம் மீளக்கூடியவர்களுக்கு தான் நேர்வழிகாட்டுவதாக, தன்னிடம் பிரார்த்திப்பவர்களுக்குப் பதிலளிப்பதாக அவன் கூறுகிறான். நம்முடைய பணி அதனடிப்படையில் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதுதானே அன்றி நம்மால் புரிந்துகொள்ள முடியாத விசயத்தைக் குறித்து சிந்திப்பது அல்ல. 

என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நான் தேடிச் சென்ற  பல விசயங்களை என்னால் அடைய முடியாமல் போயிருக்கிறது. அதே சமயம் எந்த முயற்சியும் செய்யாமல் பல விசயங்கள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. எனக்கானதைத் தேடி நான் எங்கோ சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத புறமாக வேறு ஒன்று என்னைத் தேடிவந்து எனக்கானதாக மாறியிருப்பதை உணர்ந்திருக்கிறேன். என் முயற்சி என்பது என்ன? அதன் பெறுமதி என்ன என்று பல சமயங்களில் குழம்பியிருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல. இப்படி ஏராளமான உதாரணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

எந்தவொன்றைக் குறித்தும் இது என்னால்தான் நிகழ்ந்தது என்றோ இவை என் திறமையின் விளைவு என்றோ சொல்ல நான் வெட்கப்படுகிறேன்.  மனதளவில்கூட அப்படி நினைப்பதில்லை. சில சமயங்களில் பெருமையடிக்கும்பொருட்டு வார்த்தையளவில் அப்படி சில வார்த்தைகள் வெளிப்பட்டிருக்கலாம். பகலின் வெளிச்சம்போல என் மனம் இந்த விசயத்தைத் தெள்ளத் தெளிவாக அறிந்திருக்கிறது. இது எனக்கு செயலின்மையைத் தூண்டுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன். என்னால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படித்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். நாம் யாரும் செயல்படாமல் இருப்பதில்லை. நம்மால் இயன்றவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம் தோல்விக்குக் காரணம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே விதியின் மீது பழியைப் போடுகிறோம். இந்த விசயத்தை தர்க்கத்தை கொண்டு அணுக முடியாது. தர்க்கத்தைக் கொண்டு அணுகுபவர்கள் ஒன்று இந்தப் பக்கம் சாய்வார்கள் இல்லையெனில் அந்தப் பக்கம் சாய்வார்கள். இரண்டுமே ஆபத்தானவைதாம். ஆனாலும் நம்மால் இந்த விசயத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

நமக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு புறம் நாம் நமக்கானதை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம். இந்த இரண்டுக்கும் மத்தியில் நம்மால் விதியைப் புரிந்துகொள்ள முடியும். நமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுதந்திரத்தையும் நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இவை ஒவ்வொன்றின் உண்மை நிலையைக் குறித்து நாம் அறிய மாட்டோம். செயல்படும்படி, முயற்சி செய்யும்படி நாம் பணிக்கப்பட்டிருக்கிறோம். இந்த இடத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு நினைவுக்கு வர வேண்டும். அந்த செயல்பாட்டின், முயற்சியின் விளைவாக எது கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நாம் நமக்கானதை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம் என்பது நினைவுக்கு வர வேண்டும். செயல்படும்போது விதியை எண்ண வேண்டிய அவசியமில்லை. முடிவில் நாம் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காதபோது விதியை எண்ண வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனெனில் அந்தச் சமயத்தில் அது ஒன்றுதான் நமக்கு ஆறுதல் அளிக்க முடியும். அது ஒன்றுதான் நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply