அவரது பேச்சு மக்களுக்கு மத்தியில் பெரும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து அவர் பல வருடங்கள் மக்களுக்கு மத்தியில் பேசுபொருளாக இருந்தவர். அவரது மொழியும் பேசும் தொனியும் முன்வைத்த உதாரணங்களும் மக்களிடையே மிகவும் பிரபல்யமாகியிருந்தன. இனி தம்மால் முடியாதது எதுவும் இல்லை, தாம் நினைப்பதை மக்களுக்கு மத்தியில் எளிதில் பரப்ப முடியும் என்ற எண்ணம் அவருக்கு அவ்வப்போது என்று தொடங்கி அடிக்கடி ஏற்படத் தொடங்கியது.
ஒரு கட்டத்தில் மக்கள் அவரைக் கைவிட்டார்கள். அல்லது வேறு ஒருவர் அவரது இடத்தை நிரப்பினார். அல்லது அவரது பேச்சிலிருந்த ஈர்ப்பு குறைந்தது. அல்லது அவரது பேச்சிலிருந்து ஈர்ப்பு காணாமல் போனது. மக்களுக்கு அவரது பேச்சுகள் சலிப்பு தட்டத் தொடங்கின. ஆனாலும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். தம் பேச்சை மதிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்று அவருக்குத் தெரிந்தபோது மக்களின் மீது கோபம் கொள்ளத் தொடங்கினார். ஒரு கட்டத்திற்குப் பிறகு கர்வம் வற்றிப் போய் கழிவிரக்கம் அவரிடமிருந்து வழியத் தொடங்கியது.
அவர் மட்டுமல்ல. ஒவ்வொருவரும் அப்படித்தான் ஆகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் அப்படித்தான் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொன்றும் கடந்து கொண்டேயிருக்கின்றன. நிலையானவை என்று எதுவும் இல்லை. மதிப்பானவை மதிப்பிழக்கின்றன. மதிப்பற்றவை மதிப்பானவையாக மாறுகின்றன. ஒருவர் திடீரென பிரபல்யமடைகிறார். அந்த பிரபல்யம் வேறொரு மனநிலையை அவருக்குள் உருவாக்குகிறது. சட்டென அவர் மறக்கடிக்கப்படுகிறார். அந்த மனநிலையிலிருந்து மீள முடியாமல் திணறுகிறார்.
கடந்து செல்லுதல் என்பது ஒரு கலை. வெறுமனே கடந்து செல்ல முடியாது. இங்கு செயல்படும் நியதிகளை உணர்ந்தவாறு, அடுத்தடுத்த நிலைகளை எதிர்பார்த்தவாறு, இறைவனிடம் கூலியை எதிர்பார்த்தவாறு, அவன் அளித்த அருட்கொடைகளை நினைத்தவாறு கடந்து செல்ல வேண்டும். ஒரு மனிதன் இறைவனுக்காக செயல்படும்போது மனிதர்களின் மீது தேவையற்ற எதிர்பார்ப்புகளை உருவாக்குவதை அவன் தவிர்க்க முடியும்
