“நீ ஒரு விசயத்தை உண்மையிலேயே விரும்பினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதை நோக்கி உன்னை நகர்த்திச் செல்லும்.”
இது ரசவாதி என்ற நூலில் இடம்பெறும் வாசகம். இது இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த நியதிகளுள் ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதுவும் தராது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் ஏற்படுத்திய விதிகளுள் ஒன்றுதான் இது. இறைநம்பிக்கையற்ற மனிதர்கள் மூலத்தை நோக்கி பார்ப்பதும் இல்லை, பார்க்க விரும்புவதும் இல்லை. அவர்கள் தங்களின் சொற்களின்மூலம் இந்தப் பிரபஞ்சம் இயல்பாகவே ஆற்றல் கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இறைவன் என்று கூறுவதற்குப் பதிலாகவே அவர்கள் இயற்கை, பிரபஞ்சம் என்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு மனிதன் செய்ய வேண்டிய பணி, அடைய வேண்டிய இலக்கு அவனுடைய உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது. அது அவனுடைய பிறப்புடன் இணைந்த ஒன்று. அதற்கான ஆர்வம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அவன் செல்லும் பாதை இலகுபடுத்தப்படுகிறது. அவனுக்குத் தேவையான மனிதர்கள், தேவையான உதவிகள், தேவையான பொருட்கள் என ஒவ்வொன்றும் தக்க சமயத்தில் வந்து சேர்கின்றன. மட்டுமீறிய ஆர்வம் கொடுக்கப்படுதல், சூழல் இசைவாக அமைக்கப்படுதல், பாதை இலகுபடுத்தப்படுதல்… இவையெல்லாவற்றையும் மனிதன் அனுபவித்துக் கொண்டு இது என் முயற்சியின், திறமையின் விளைவு, நான் இதற்குத் தகுதியானவன்தான் என்று கூறுவானென்றால் அவனைவிட நன்றிகெட்ட மனிதன் வேறு யாரும் இல்லை. அவன் கண்ணிருந்தும் குருடன்.
