மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு விட்டது, தாங்கள் மட்டுமே நேர்வழியில இருக்கிறோம் என்று எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பவர்களும் இந்த வகையான மனிதர்களே.
ஆரோக்கியமான இயல்பில் இருக்கும் மனிதன் தன்னால் இயன்ற அளவு தன்னையும் பிறகு மற்றவர்களையும் சீர்படுத்த முயற்சிப்பான். தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத விசயங்களைக் குறித்து அவன் அலட்டிக் கொள்ள மாட்டான். தன் விசயத்தில் அவன் மற்றவர்களைக் குறைகூட மாட்டான்.
மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழ்கிறார்கள். ஒருவரின் தேவை இன்னொருவரின் தேவையோடு ஒத்துப்போகும்போது இருவரும் ஒத்துழைக்கிறார்கள். ஒருவரின் தேவை மற்றவரின் தேவையோடு முரண்டும்போது, ஒருவர் மற்றவருக்குத் தேவையில்லாதபோது இருவரும் முரண்படுகிறார்கள். இங்குள்ள நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நாம் யாரையும் பழிக்க மாட்டோம்.
அல்லாஹ் யார் மீதும் அநீதி இழைப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு அவர்கள்தாம் பொறுப்பு. எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. நாம் சம்பாதித்த பாவத்தின் விளைவு நம் வாழ்வில் வேறு எங்கோ வெளிப்படலாம். நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நாம் புலம்பலாம். மனதின் அடியாழத்தில் சேகரமாகியிருக்கும் நினைவுகள் அது எதன் விளைவு என்பதை நமக்கு உணர்த்தி விடும், நாம் அதன் குரலை செவிமடுக்க நினைத்தால்.
இங்கு எதுவுமே தொடர்பற்று இல்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஆச்சரியமான முறையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கும். கவனிப்பவர்கள் அதை உணராமலிருக்க முடியாது. மனித மனம் நியாய வாதங்களை கச்சிதமாக அடுக்கக்கூடியது. மனதின் கஞ்சத்தனத்தை, சுயநலத்தன்மையை அடையாளம் காண்பவர்களே தங்களின் தவறுகளை, பாவங்களை ஒத்துக் கொண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறார்கள். அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள்.
