பிறருக்குக் காட்ட வேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பெருமையடிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருந்தால் மனிதர்கள் மிக அவசியமான பணிகளோடு மட்டும் நின்று கொள்வார்கள். அவற்றைத் தாண்டி வேறு எந்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்காக செயல்படுவதைக் காட்டிலும் தங்களை மற்றவர்களின் முன்னால் நிரூபிக்க வேண்டும், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே அதிகம் செயல்படுகிறார்கள். அப்படிச் செயல்படுவதன்மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கு எதிரான வெறுப்பை, பொறாமையை அதிகரிக்கிறது. பெருமையடிக்கும் மனிதர்களை நாம் விரும்புவதில்லை. நம் மனதில் அவர்களின் மீது ஒரு வகையான எரிச்சல் உருவாகி விடுகிறது.
ஒருவன் அடிக்கும் தற்பெருமை மற்றவர்களை மனதளவில் பாதிக்கிறது. அவர்கள் தாங்கள் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எரிச்சலடைகிறார்கள்; அவனை சிறுமைப்படுத்த எண்ணுகிறார்கள். தம்பட்டம் அடிப்பதன்மூலமாக தான் உயர்ந்து விடுவதாக ஒருவன் எண்ணிக்கொண்டாலும் அதன்மூலமாக அவன் உயர்ந்து விடுவதில்லை. சில சமயங்களில் அது அவன் தாழ்த்தப்படுவதற்கு, இழிவுபடுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இஸ்லாம் தற்பெருமையை வெறுக்கத்தக்க ஒரு பண்பாக முன்வைக்கிறது. நம்பிக்கையாளன் தம்பட்டம் அடிக்க மாட்டான். அவன் தன்னுடைய நற்செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக மட்டுமே ஆக்கிக் கொள்வான். உண்மையில் ஒருவன் இறைதிருப்தியை நாடி செயல்படும்போது அது மனிதர்களின் திருப்தியையும் கொண்டு வரும். ஆனால் அவன் மனிதர்களின் திருப்தியை நாடி செயல்பட்டால் அவர்களின் திருப்தியைக்கூட முழுமையாகப் பெற முடியாது. சில சமயங்களில் அது அவர்களின் அதிருப்திக்குக்கூட காரணமாக அமைந்து விடும். மனிதர்கள் நன்றிகெட்டவர்கள். அவர்கள் செய்யப்படும் உபகாரங்களை உடனுக்குடன் மறந்து விடுவார்கள். மனிதர்களுக்காக செயல்படுபவர் ஏமாற்றமடைந்து விடுவார். இறைவனுக்காக செயல்படுபவர் எந்தச் சமயத்திலும் ஏமாற்றமடைய மாட்டார்.
