நட்பின், உறவின் கடமைகளில் ஒன்று, நண்பரின் மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் பங்குகொள்வது. உங்கள் நண்பர் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்குபெறுவது அவரது மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர் துன்பத்தில் இருக்கும்போது அவரது அருகில் இருப்பது, அவருக்கு ஆறுதல் கூறுவது அவரது பாரத்தை ஓரளவு குறைக்கும். மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். துக்கத்தைக் கடப்பதற்கும் நண்பர்கள் தேவைப்படுகிறார்கள். மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள். சார்பு வாழ்க்கையே அவர்களை கட்டுப்பாடுகள் கொண்டவர்களாக, விட்டுக்கொடுக்கும் பண்புடையவர்களாக ஆக்குகிறது. சக மனிதர்களைவிட்டு விலகி தனித்து வாழும் ஆபத்தானவர்கள்.
உங்கள் நண்பரின் மகிழ்ச்சியில் நீங்கள் மகிழ்ச்சியடையாவிட்டாலும் மகிழ்ச்சியடைந்தவர் போன்று உங்களைக் காட்டிக் கொள்வதும் அவரது துக்கத்தில் உளரீதியாக நீங்கள் பங்குபெறாவிட்டாலும் அப்படி அடைந்தவர் போன்று காட்டிக் கொள்வதும் தவறாகாது. அவ்வாறு செய்வது நட்பு நீடிப்பதற்கு அவசியமானதும்கூட. உங்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகளையே உங்கள் நண்பர் கவனிக்கிறார். உங்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அவர் உற்றுப் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்ப்பதற்கு யாரும் விரும்புவதும் இல்லை.
பிறரது துன்பத்தைப் பார்த்து ஏளனம் செய்வது இழிகுணங்களில் ஒன்று. அதுவும் உறவினரின், நண்பர்களின் துன்பத்தைப் பார்த்து ஏளனம் செய்வது ஆறாதை வடுவை, காழ்ப்பை விதைக்கும் மோசமான செயல். ஏளனம் என்பது வார்த்தையால் மட்டுமல்ல, நடத்தையாலும் செய்கையாலும் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மனிதன் தன்னை உயர்த்தவே மற்றவர்களை தாழ்த்த எண்ணுகிறான். தனக்கு நெருக்கமானவர்களின் உயர்வை தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக, தன்னுடைய இழிவாக அவன் எண்ணுகிறான். இந்த எண்ணமே அவனுடைய பொறாமைத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது.
