நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? நண்பர் ஒருவரின் கேள்வி இது.
கோபத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. சில தற்காலிகமானவை. சில நிரந்தரமானவை. தற்காலிக காரணங்களினால் உருவாகும் கோபங்களிலிருந்து விடுபடுதல் எளிது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல் கொஞ்சம் தள்ளிப் போட்டாலே அவற்றுள் பெரும்பாலானவை கானல் நீர்போல மறைந்துவிடுகின்றன. தேவை, உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல் மனதைக் கட்டுப்படுத்தக்கூடிய பக்குவம். உண்மையில் இது பெரும் அருட்கொடைகூட. நட்புகளை, உறவுகளை தக்கவைத்துக் கொள்வதற்கு இது பெரிதும் துணைபுரிகிறது. இது மனிதனால் செய்ய முடிகின்ற ஒன்றுதான். கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இது சாத்தியமே.
ஏதேனும் ஒன்று மனதில் அழுத்திக் கொண்டிருக்கும்போதும் சம்பந்தமில்லாத வகையில் சிறு சிறு விசயங்களுக்குக்கூட மனிதன் கோபம்கொள்ளக்கூடியவனாக இருப்பான். அது பணிச்சுமையாக, கடன்சுமையாக, வடிகால் கிடைக்காத காமமாக, குற்றவுணர்வாக அல்லது ஏதேனும் ஒரு சுமையாக இருக்கலாம். அது உள்ளிருந்து அழுத்திக் கொண்டிருக்கும்போது மனிதன் ஒரு கட்டத்தில் மனிதன் சமநிலை இழக்கிறான். அந்த சமநிலை இழப்பே அவனை சட்டென கோபம் கொள்ளத் தூண்டுகிறது.
மனிதன் யார் மீது அதிகம் கோபம் கொள்கிறான்? தனக்குக் கீழ் உள்ளவர்கள், தன் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மீதுதான். தனக்கு மேலுள்ளவர்களால் அவன் பாதிக்கப்பட்டாலும் அதன் விளைவையும் தனக்குக் கீழுள்ளவர்களிடம் அவன் காட்டுகிறான். சிலர் அலுவலுகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று பெயரெடுத்திருப்பார்கள். வீட்டில் மிகவும் கெட்டவர்களாக நடந்து கொண்டிருப்பார்கள். அங்குள்ள ஒட்டுமொத்த கோபத்தையும் ஆற்றாமையையும் சேகரித்து இங்கு வந்து கொட்டிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வகையான கோபத்திலிருந்து விடுபட மனிதன் தன்னை அழுத்தும் விசயத்திலிருந்து விடுபட வேண்டும். அல்லது அதற்கான மாற்றுத் தீர்வுகளை கண்டடைய வேண்டும். அதே நிலையிலேயே அதை விட்டு வைத்துவிடக்கூடாது. அவ்வாறு விட்டு வைக்கும்போது அது நிரந்தரமான காரணியாக மாறிவிடும். மனம் சமநிலை இழந்துவிடும். எந்தவொன்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. மனதிற்கும் அப்படித்தான். ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அது தன் சமநிலையை இழந்துவிடும்.
இன்னொரு வகையான கோபம் கோபக்காரர்கள் என்று பெயரெடுத்தவர்களிடமிருந்து வெளிப்படும் கோபம். இயல்பிலேயே அவர்கள் சமநிலை இழந்தவர்கள். எந்தவொன்றையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களை புரிந்துகொள்வதன்மூலம் அவர்களுக்கு எதிர்வினையாற்றாமல் அவர்களையும் நம்மையும் பாதுகாக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்வினையாற்றுவது நம்மையும் அவர்களையும் ஒரே சமயத்தில் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.
இந்த இடத்தில் நபியவர்களின் ஒரு பொன்மொழியை நினைவுகூருவது அவசியமெனக் கருதுகிறேன். கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரனாவான் என்பதுதான் அது. உண்மையில் கோபத்தை அப்படியே வெளிப்படுத்துவதற்கு எந்தப் பயிற்சியும் வீரமும் தேவையில்லை. ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. பக்குவமும் வீரமும் தேவைப்படுகின்றன.

அல் ஹம்துலில்லாஹ்
மனதை தழவும் வார்த்தைகள்
அல்லாஹ். அருள்புரிவானாக