மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

You are currently viewing மனக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும்

நாம் மனதின் இச்சைகளுக்கு எப்போது கட்டுப்படுகின்றோம்? மனம் பலவீனமடைந்திருக்கும்போது மனதின் இச்சைகளுக்கு எளிதாக கட்டுப்பட்டு விடுகிறோம். அந்தச் சமயத்தில் இச்சைகளுக்குக் கட்டுப்படுவது ஏதோ ஒரு வகையான விடுதலைபோல தெரிகிறது. ஆகவே எளிதில் வீழ்ந்து விடுகின்றோம்.

மதுவுக்கும் விபச்சாரத்திற்கும் அடிமையானவர்களைப் பாருங்கள். அவர்களின் ஆரம்ப கட்டம் மன அழுத்தத்திலிருந்து அல்லது மனச் சோர்விலிருந்து தொடங்கி இருக்கும். மனச் சோர்வும் வெறுமையும் பாவங்களின் பக்கமோ உயிரையும் பொருட்படுத்தாத பைத்தியக்காரத்தனமான செயல்பாடுகளின் பக்கமோ இட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது. சில இளைஞர்கள் கடும்போக்குவாத, பயங்கரவாத இயக்கங்களில் சிக்கிக் கொள்வதற்கு அவர்களிடம் காணப்படும் மனச் சோர்வும் மனச்சிக்கலும் முதன்மையான காரணியாக இருக்கிறது.  

மனம் பலவீனமடைந்திருக்கும்போது சொல்லப்படும் அனைத்தையும் நம்புகிறோம். அந்தச் சமயத்தில் அறிவின் ஆலோசனைகளை புறந்தள்ளி விடுகின்றோம். அறிவுஜீவிகள் என்று பெயர் எடுத்தவர்களிடம்கூட          மூடநம்பிக்கைகள் இந்தச் சமயத்தில்தான் ஊடுருவுகின்றன. அறிவுஜீவிகள் வேறு, மனக்கட்டுப்பாடு கொண்டவர்கள் வேறு. அறிவுஜீவிகளிடம் சின்னத்தனங்கள் அதிகமாக வெளிப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவர்களிடம் அவை அரிதாக வெளிப்படும்.  

மனச் சோர்வையும் வெறுமையையும் எதிர்கொள்வதற்கு சரியான வழிகளைப் பெறாதவர்கள் தவறான வழிகளில் சிக்கிக் கொள்கிறார்கள். நவீன வாழ்வு மன அழுத்தத்தை, மனச் சோர்வை ஏற்படுத்தும் காரணிகளால் நிரம்பி வழிகிறது. நவீன வாழ்வின் அலங்காரங்களில் மயங்குபவர்கள் விரைவாக மனச்சோர்வுக்கும் உள்ளாகி விடுவார்கள்.  மனதளவில் நாம் பலமடைதல் என்பது நம்முடைய இச்சைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதையே குறிக்கிறது. மனக்கட்டுப்பாடு கொண்டவர்கள் குறைவானவர்கள்தாம். பெரும்பாலான மனிதர்கள் மனதின் இச்சைகளுக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள்.

மனக்கட்டுப்பாடு வழியாகவே மனதின் தூய்மை சாத்தியமாகிறது. அதுதான் இவ்வுலக வாழ்வின் வெற்றிக்கும் மறுவுலக வாழ்வின் வெற்றிக்கும் அடிப்படையானதாக இருக்கிறது. மனதின் இச்சைகளுக்குக் கட்டுப்படுதல் என்பது மனதை அழுக்குகளால் களங்கப்படுத்துவதாகும். உண்மையில் அதுதான் நாம் அடையும் தோல்வி. அதுதான் நமக்கு நாமே செய்யும் அநியாயம்.

.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply