“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்”
உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப் பார்த்தவுடனேயே நமக்கு ஏற்படும் உணர்வு நமக்கும் அவருக்கும் ஏற்படவிருக்கும் உறவை அல்லது விலக்கத்தை உணர்த்தலாம். அது அவரை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொள்வதற்கு உதவாது. உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் மற்றவர்களுடன் முரண்டலாம். உங்களுடன் முரண்படுபவர் மற்றவர்களுடன் ஒத்திசைந்து செல்லலாம். நாம் இந்த உலகில் வருவதற்கு முன்னரே ஆன்மாக்களின் உலகில் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக இருக்கின்றோம் என்ற பொருளில் ஒரு ஹதீஸ் இருக்கிறது. ஒருவரைப் பார்த்தவுடன் எங்கோ பார்த்ததுபோன்று, பழகியதுபோன்ற உணர்வு, இன்னொருவரைப் பார்த்தவுடன் காரணமின்றி தோன்றும் வெறுப்பு இதனடிப்படையில்தான் நிகழ்கிறது. மனிதர்கள் தங்களுக்கு உகந்தவர்களுடன் இசைந்து செல்வார்கள். மற்றவர்களைவிட்டு விலகிச் செல்வார்கள்.
ஒருவரை, அவரின் செயல்பாடுகளை கூர்ந்து அவதானிப்பதன்வழியாக அவரை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். அவரின் விசயத்தில் நம் கணிப்புகள் பெரும்பாலும் உண்மையாக ஆகிவிடுவதுண்டு. ஆனாலும் அவரை முழுமையாகப் புரிந்து கொள்வதும் அவர் இப்படித்தான் என்று உறுதியாகக் கூறுவதும் அசட்டுத்தனத்தின் விளைவேயாகும். யாரிடமிருந்து எந்தச் செயல் எப்போது வெளிப்படும் என்று யாரும் அறிய முடியாது. நாம் மட்டமாகக் கருதும் ஒருவர் நாம் அடைய முடியாத, நாம் கனவு கண்டு கொண்டிருக்கிற பெரும் உச்சத்தை இலகுவாக அடைந்து விடலாம். ஒவ்வொருவரிடமும் நாம் புரிந்துகொள்ளாத இன்னொருவர் இருக்கத்தான் செய்வார்கள். நம் பிள்ளைகளுக்கு, நம் நெருங்கிய உறவுகளுக்கு, நமக்கு நெருக்கமான நண்பர்களுக்குக்கூட நாம் அறியாத இன்னொரு உலகம் உண்டு.
