ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்

You are currently viewing ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்
என் உள்ளத்தில் ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களை நான் எப்படி அறிந்து கொள்வது? அவற்றின் பிடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் அது அவற்றை எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அது அவற்றைப் பொருட்படுத்துகிறது.

நன்றாக தூங்கி எழுந்த பிறகு காலையில் மனம் பலத்தோடும் புத்துணர்வோடும் செயல்படத் தொடங்குகிறது. இந்தச் சமயத்தில் அது ஊசலாட்டங்களை எளிதாக அடையாளம் கண்டு புறக்கணித்து விடுகிறது. இரவில் நன்றாகத் தூங்கவில்லை எனில் மனம் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். எழுந்தவுடன் மனதிற்குள் இருக்கும் பயமும் சந்தேகமும் வெளிப்படத் துவங்கும். அதேபோன்று சூரியன் மறைவதற்கு முந்தைய நேரத்திலும் மறைந்த பிறகு தூங்கும் நேரம் வரையிலும் பலவீனமாகத்தான் இருக்கும். அந்தச் சமயங்களிலும் அது ஊசலாட்டங்களை, சந்தேகங்களைப் பொருட்படுத்தும். அந்தச் சமயங்களில் எதிர்மறையான செய்திகளிலிருந்து விலகியிருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடு. நிம்மதியான, ஆழமான உறக்கம் மனதிற்கான இளைப்பாறுதலாகவும் அதனைப் பலப்படுத்தும் ஊட்டமாகவும் இருக்கின்றது. எதற்காகவும் அந்த உறக்கத்தை நாம் இழந்துவிடக்கூடாது.

ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களும் சந்தேகங்களும் மனதில் அரிப்பை ஏற்படுத்துபவை. அவை தேவையற்ற கவலையைக் கொண்டு வரக்கூடியவை. அவை உறவுகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்துபவை. நாம் சட்டென அடையாளம் கண்டு அல்லாஹ்விடம் அவற்றின் தீங்குகளிலிருந்து பாதுகாவல் கோர வேண்டும். முடிந்த மட்டும் ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருகிறேன்’ என்று கூறி அந்த எண்ணங்களிலிருந்து விலகிவிட வேண்டும். அவற்றுக்கு விடைகள் தேடி செல்லக்கூடாது. ஊசலாட்டங்கள் புண்களில் ஏற்படும் அரிப்பு போன்றவை. சொறியச் சொறிய பாதிப்புகளை ஏற்படுத்துபவை.

பேராற்றல்மிக்க படைப்பாளனுடன் தொடர்பு கொள்வதன் வழியாகவே மனம் பலமடைய முடியும். அவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பதன் வழியாகவே மனம் பலமடைய முடியும். அவன் அளித்த வழிகாட்டல்களை பின்பற்றுவதன் வழியாகவே மனம் பலமடைய முடியும். அவனுடைய நினைவைக் கொண்டு பலமடையும் மனதில் ஷைத்தான் குடியிருக்க முடியாது.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply