யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

You are currently viewing யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு விசயத்தை தெளிவுபடுத்த நேரிட்டால் அது தொடர்பான அத்தனை விசயங்களையும் தெளிவுபடுத்தி விடுவது திருக்குர்ஆனின் பாணி. இந்தப் பகுதி யூதர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைக் கொண்டு தொடங்குகிறது. அந்த இரண்டு சம்பவங்களும் முஸ்லிம்களுக்குத் தேவையான பல பாடங்களையுயும் படிப்பினைகளையும் கொண்டிருக்கின்றன.       

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُوفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللهُ مُوتُوا ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ وَقَاتِلُوا فِي سَبِيلِ اللهِ وَاعْلَمُوا أَنَّ اللهَ سَمِيعٌ عَلِيمٌ

2:243,244. மரண பயத்தினால் தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களிடம் அல்லாஹ் கூறினான்: “நீங்கள் மரணித்து விடுங்கள்.” பின்னர் அவன் அவர்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின்மீது பேரருள் புரிபவனாக இருக்கின்றான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றிசெலுத்துவதில்லை. அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.    

நீங்கள் பார்க்கவில்லையா என்ற வாசகம் நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா? நீங்கள் கேள்விப்படவில்லையா? என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு நன்கு அறியப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுவதற்கு திருக்குர்ஆன் இந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிறது.     

இது கடந்த கால யூதர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வாகும். அது எப்போது நிகழ்ந்தது, எந்த ஊரில் நிகழ்ந்தது என்பதை திருக்குர்ஆன் குறிப்பிடவில்லை. சம்பவத்திலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மட்டுமே முதன்மையான நோக்கமாக கொள்ளப்பட வேண்டும் என்பதால் திருக்குர்ஆன் தேவையான தகவல்களைத் தவிர கூடுதலாக எதையும் முன்வைப்பதில்லை.

அவர்கள் எதிரிகளுடன் போரிட வேண்டும் என்ற நிர்ப்பந்தமான சூழல் உருவானபோது அவர்களை எதிர்கொள்ள திராணியில்லாமல் உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடினார்கள். ஆனால் அந்த ஓட்டம் அவர்களைக் காப்பாற்றவில்லை. அதுவே அவர்கள் மரணிப்பதற்குக் காரணமாக அமைந்து விட்டது. போர் மரணத்தைக் கொண்டு வராது. கோழைத்தனம் மரணத்தை தடுத்து விடாது. மரணம் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், நிர்ணயிக்கப்பட்ட சமயத்தில் வந்தே தீரும். எந்த மருத்துவனாலும் மாந்தரீகனாலும் அதனைத் தடுத்துவிட முடியாது.

அவர்கள் பயந்து ஓடினார்கள். பயம் அவர்களைக் கொன்றுவிட்டது. பயம் அவர்களை உயிருள்ள உடல்களாக மாற்றி விட்டது. அடிமைப்பட்டு இழிவான ஒரு வாழ்க்கையை வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். இதுதான் சமூகத்தின் மரணம். நீங்கள் மரணித்து விடுங்கள் என்று அல்லாஹ் அவர்களிடம் கூறினான் என்ற வாசகத்திற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம். அடுத்து வரக்கூடிய வசனங்களை வைத்துப் பார்க்கும்போது இவ்வாறு பொருள்கொள்ளுதலே பொருத்தமானதாகத் தென்படுகிறது. பிறகு அவர்களுக்கு மத்தியில் இருந்த நபி அவர்களைத் தட்டி எழுப்பினார். மார்க்கத்திற்கு முரணான காரியங்களிலிருந்து அவர்களை விடுவித்து பாவக்கறைகளிலிருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களுக்கு மத்தியில் புதியதொரு உயிரோட்டத்தை, எழுச்சியை ஏற்படுத்தினார். அவர்கள் உத்வேகம் பெற்று பலமடைந்து எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இவ்வாறு அந்த சமூகத்தை அல்லாஹ் உயிர்த்தெழச் செய்தான். உண்மையில் அவன் மனிதர்களைக் கைவிடுவதில்லை. அவர்கள் மீது அருள்புரிந்து கொண்டே இருக்கிறான். ஆனாலும் மனிதர்களின் அதிகமானோர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.   

இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட்ட பிறகு அடுத்த வசனம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள் என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. முந்தையவர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு நீங்கள் இந்தப் பாதையில் முன்னேறுங்கள். உயிருக்குப் பயந்து பின்வாங்கி விடாதீர்கள். இது அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக செய்யப்படும் போர். ஆகவே அவனுடைய உதவியும் பாதுகாப்பும் உங்களுக்கு இருக்கிறது. அவன் உங்களின் கோரிக்கைகளை, பிரார்த்தனைகளை செவியேற்கிறான். உங்களைக் குறித்தும் உங்கள் எதிரிகளைக் குறித்தும் அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்யும் சூழ்ச்சிகள் குறித்தும் அவன் நன்கறிந்தவன்.

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ  

2:245. “அல்லாஹ்வுக்கு அழகிய கடன் அளிப்பவர் யார்? அவன் அதனை அவருக்குப் பன்மடங்காக பெருக்கித் தருவான். அல்லாஹ்வே குறைவாகவும் தாராளமாகவும் வழங்குகிறான். நீங்கள் அவன் பக்கமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.”

அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். அந்தப் பாதையில் உங்களின் உயிரை அர்ப்பணிக்கத் தயங்காதீர்கள். ஏனெனில் வாழ்க்கையும் மரணமும் அவன் கைவசம்தான் உள்ளன. அவனுடைய அனுமதியின்றி உங்களுக்கு எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அடுத்து அவனுடைய பாதையில் செலவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. அவனுடைய பாதையில் செய்யப்படும் செலவு அவனுக்கு அளிக்கப்படும் கடனாகும். அவன் அந்தக் கடனை பன்மடங்காகப் பெருக்கி திருப்பித் தருவான் என்று இந்த வசனம் வாக்குறுதி அளிக்கிறது.

இங்கு மனித வாழ்க்கையில் செயல்படும் இன்னொரு நியதி தெளிவுபடுத்தப்படுகிறது. அவன் கைவசமே செல்வத்தை வழங்கும் அதிகாரம் உள்ளது. தான் நாடியவர்களுக்கு அவன் தாராளமாக, கணக்கில்லாமல் வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு அவன் குறைவாக, அளவோடு வழங்குகிறான். நீங்கள் அவனுடைய பாதையில் செய்யும் செலவினால் உங்களின் செல்வம் குறைந்துவிடப் போவதில்லை. அது பன்மடங்காகப் பெருகி உங்களிடமே வந்து வரும். அவனுடைய பாதையில் நீங்கள் செலவு செய்யவில்லை எனில் நினைவில் வையுங்கள், அவனிடமே நீங்கள் திரும்பியாக வேண்டும். அவன் உங்களுக்கு வழங்கிய செல்வம் குறித்தும் அதை நீங்கள் எப்படி செலவு செய்தீர்கள் என்பது குறித்தும் அவனிடம் நீங்கள் பதில் சொல்லியாகி வேண்டும்.

அழகிய கடன் என்பது என்ன? நெருக்கடியான மனநிலையில் இருந்து அல்லாமல் திறந்த மனதோடு அவனுடைய பாதையில் செய்யப்படும் செலவு. செல்வம் அவனிடமே இருக்கின்றது. அவன்தான் செல்வம் அளிக்கிறான். அவன் அளித்த செல்வத்தை அவனுடைய பாதையில் நாம் செலவு செய்வதை அவனுக்கு அளிக்கும் கடன் என்கிறான். அந்தக் கடனை பன்மடங்காக திருப்பித் தருவதாக வாக்களிக்கவும் செய்கிறான். உண்மையில் இதைவிட பெரும் கருணை, பெரும் கிருபை வேறு என்ன இருக்க முடியும்?  

திருக்குர்ஆன் அளிக்கும் இத்தகைய கண்ணோட்டங்கள் முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்து கோழைத்தனத்தையும் கஞ்சத்தனத்தையும் அகற்றுகின்றன. வாழ்வும் மரணமும் அவன் கையில்தான் இருக்கிறது எனில் அவன் கையில்தான் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்கிறது எனில் அவர்கள் எதை நினைத்து பயப்பட வேண்டும்? இந்த கண்ணோட்டங்களைக் கொண்டே அவர்கள் கோழைத்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் விடுபடுகிறார்கள். இவைதாம் தேவையற்ற பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்தும் நம்பிக்கையாளர்களை விடுவிக்கின்றன.

أَلَمْ تَرَ إِلَى الْمَلَأِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ قَالَ إِنَّ اللهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللهُ وَاسِعٌ عَلِيمٌ 

2:246,247. மூசாவுக்குப் பிறகு வந்த இஸ்ராயீலின் மக்களிலுள்ள தலைவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் தம் தூதரிடம், “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக எங்களுக்கு ஒரு அரசரை நியமியுங்கள்” என்று கேட்டபோது அவர், “உங்களுக்குப் போர் புரிவதற்கான கட்டளை இடப்பட்டும் நீங்கள் போரிடாமல் இருந்து விட்டால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் எப்படி இருக்க முடியும்? நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறோம், எங்கள் பிள்ளைகளைவிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். ஆனாலும் அவர்களுக்குப் போரிடுமாறு கட்டளையிடப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்ற அனைவரும் பின்வாங்கி விட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிவான்.

அவர்களின் தூதர் அவர்களிடம், “தாலூத் என்பவரை அல்லாஹ் உங்களுக்கு அரசராக நியமித்துள்ளான்” என்று கூறியபோது அவர்கள், “எங்கள்மீது ஆட்சி புரிய அவருக்கு என்ன தகுதியிருக்கிறது? அவரைவிட நாங்கள்தாம் ஆட்சிபுரிய அதிகத் தகுதியுடையோராக இருக்கின்றோம். அவருக்குச் செல்வ வளமும் வழங்கப்படவில்லையே!” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ் உங்கள் மீது ஆட்சி புரிய அவரைத் தேர்ந்தெடுத்துள்ளான். அவருக்கு அறிவாற்றலையும் உடல் வலிமையையும் அதிகமாக வழங்கியுள்ளான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே தன் ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அவன் தாராளமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.

யூதர்களின் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு சம்பவம் இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. பைபிளில் சாமுவேல் என்ற அத்தியாயத்தின் 9 லிருந்து 14 வரையிலான பாடங்களில் இந்தச் சம்பவம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் ஒரு சம்பவத்தை எடுத்துரைக்கும் விதம் முற்றிலும் தனித்துவமானது. அது அந்த சம்பவம் தொடர்பான அத்தனை விவரங்களையும் குறிப்பிடுவதில்லை. அவற்றில் பாடம் பெறுவதற்கும் படிப்பினை பெறுவதற்கும் மிக அவசியமான விவரங்களை மட்டுமே குறிப்பிடுகிறது.

அது அவர்கள் தங்களின் எதிரிகளால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். அவர்களிலுள்ள முக்கிய பிரமுகர்கள், குலத் தலைவர்கள் அவர்களுக்கான நபியிடம் வந்து, “நாங்கள் எதிரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அவர்களை எதிர்த்து அல்லாஹ்வின் பாதையில் போரிட விரும்புகிறோம். எங்களை வழிநடத்திச் செல்லும் ஓர் அரசரை ஏற்படுத்துங்கள்” என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்கள்தாம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அவர்களைத்தான் திருக்குர்ஆன் ‘அல்மலவு‘ என்ற வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுகிறது.   

அந்த நபி அவர்களின் இயல்பை நன்கறிந்தவராக இருந்தார். அவர்களுக்கு ஓர் அரசர் இல்லாமல் இருப்பது அல்ல அவர்களின் முதன்மையான பிரச்சனை. தங்களின் கோழைத்தனத்திலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் புறப்படாமல் இருப்பதே அவர்களின் முதன்மையான பிரச்சனையாக இருந்தது. அவர் அவர்களிடம் தம்முடைய அச்சத்தை வெளிப்படுத்தினார்,  “அல்லாஹ் உங்களுக்கு ஓர் அரசரை ஏற்படுத்தி உங்கள் மீது போரைக் கடமையாக்கிய பிறகு நீங்கள் போரிடாமல் இருந்து விட்டால் அது மிகப் பெரிய குற்றமாகி விடுமே!” அதற்கு அவர்கள் உணர்ச்சி வேகத்துடன் பதிலளித்தார்கள்: “நாங்கள் ஏன் போரிடாமல் இருக்க வேண்டும்? போர் புரிவதற்கான அத்தனை காரணிகளையும் நாம் கொண்டிருக்கிறாமே!” அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கும் அதில் உறுதியாக நிற்பதற்கும் இந்த உணர்ச்சி வேகம் மட்டும் போதாது. தெளிவான கண்ணோட்டமும் மனக்கட்டுப்பாடும் நீடித்த பொறுமையும் இருக்க வேண்டும்.

அவர்கள் மீது போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களே தங்களின் வாக்குறுதியில் நிலைத்திருந்தார்கள். மற்றவர்கள் பயந்து பின்வாங்கி விட்டார்கள். அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் அநியாயக்காரர்களவார். அவர்கள் அதன்மூலம் தங்கள் மீதும் தங்கள் சமூகத்தின் மீதும் அநியாயம் இழைத்து இழிவடைகிறார்கள். அவர்களின் விசயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் நன்கறிவான். அடுத்தடுத்த வசனங்கள் அவர்கள் எவ்வாறு அநியாயம் இழைத்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.  

அவர்களின் தூதர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். தாலூத் என்பவரை அவர் அவர்களுக்கு அரசராக நியமித்தார். அது அல்லாஹ்வின் தெரிவு என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். ஆனால் அவர்களால் அவரை தங்களுக்கான அரசராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைவிட தங்களுக்கே அதிகம் தகுதி இருக்கிறது என்று வாதிட்டார்கள். அவர்களின் பார்வை குறுகிய உலகியல்வாதப் பார்வை. தலைமைத்துவ பதவிக்கு வலுவான குடும்பப் பின்னணி கொண்டவர்களும் செல்வந்தர்களும்தான் தகுதி படைத்தவர்கள் என்று அவர்கள் கருதினார்கள். தூதர் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்: “உங்களின் இந்தப் பார்வை தவறானது. இது அல்லாஹ்வின் தெரிவு. அவன் அதற்கான தகுதிகளை அவருக்கு வழங்கியுள்ளான். அறிவு பலத்திலும் உடல் பலத்திலும் அவர் உங்களைவிட மேலானவர். இவையே தலைமைத்துவத்திற்கு தகுதியான பண்புகள். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்குகிறான். அவன் உங்களைப் போல குறுகிய உலகியல்வாதப் பார்வை கொண்டவன் அல்ல. அவன் தாராளமானவன். எல்லாவற்றையும் குறித்து நன்கறிந்தவன்.”    

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

2:248. “அவர்களின் தூதர் அவர்களிடம் கூறினார்: “தாலூத்தின் அரசாட்சிக்கு சான்று, உங்களிடம் அந்தப் பேழை வருவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து நிம்மதிக்குரிய விசயங்களும் மூசா, ஹாரூனின் குடும்பத்தினர் விட்டுச் சென்றவையும் இருக்கும். அந்தப் பேழையை வானவர்கள் கொண்டு வருவார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் அதில் உங்களுக்குப் பெரும் சான்று உள்ளது.”

தாலூத் அல்லாஹ்வினால் தெரிவு செய்யப்பட்டவர் என்பதற்கான சான்றினை தூதர் அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். அது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட அவர்களின் புனிதமான பெட்டி ஆச்சரியமான முறையில் அவர்களுக்குத் திரும்பக் கிடைப்பதாகும். அந்தப் பெட்டியை அவர்கள் புனிதமான ஒன்றாகக் கருதி வந்தார்கள். சிரமமான சந்தர்ப்பங்களில் அதனைக் கொண்டே அவர்கள் ஊக்கம் பெறுபவர்களாக இருந்தார்கள். பைத்துல் முக்கத்தஸ் கட்டுப்படுவதற்கு முன்னால் அதனையே அவர்கள் கிப்லாக முன்னோக்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெட்டியை எதிரிகள் அவர்களிடமிருந்து பிடுங்கிச் சென்று விட்டதனால் ஊக்கம் குன்றினார்கள். பரக்கத்தின், வெற்றியின் வாசல் தங்களுக்கு மூடப்பட்டு விட்டதாக, தங்களிடமிருந்த அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது அவர்களின் எவ்வித முயற்சியும் இன்றி அற்புதமான முறையில் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது. இதையே வசனம் வானவர்கள் அதனை சுமந்து வருவார்கள் என்று கூறுகிறது.

இவ்வாறு ஆச்சரியமான முறையில் அந்தப் பெட்டி உங்களிடம் வந்து சேர்வதில் பெரும் சான்று இருக்கிறது. ஆகவே நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல் தாலூத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். அதன்மூலம் இழந்த எல்லாவற்றையும் நீங்கள் மீண்டும் பெற முடியும்.

 فَلَمَا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُوا اللهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللهِ وَاللهُ مَعَ الصَّابِرِينَ وَلَمَّا بَرَزُوا لِجَالُوتَ وَجُنُودِهِ قَالُوا رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ فَهَزَمُوهُمْ بِإِذْنِ اللهِ وَقَتَلَ دَاوُدُ جَالُوتَ وَآتَاهُ اللهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ وَلَوْلَا دَفْعُ اللهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَفَسَدَتِ الْأَرْضُ وَلَكِنَّ اللهَ ذُو فَضْلٍ عَلَى الْعَالَمَيْنِ تِلْكَ آيَاتُ اللهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ   

2:249-252 “தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது கூறினார்: “அல்லாஹ் உங்களை ஒரு நதியின்மூலம் சோதிப்பான். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல. யார் அதன் நீரை சுவைக்கவில்லயோ அவரே என்னைச் சார்ந்தவராவார், ஒரு கையளவு நீரை அருந்தியவரைத் தவிர”. ஆயினும் அவர்களில் குறைவானவர்களைத் தவிர மற்றவர்கள் அதிலிருந்து தாராளமாக அருந்தினார்கள். தாலூத்தும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் ஆற்றைக் கடந்தபோது, “இன்று ஜாலூத்துடனும் அவனது படைகளுடனுடம் போரிடும் சக்தி எங்களுக்கு இல்லை” என்று கூறினார்கள். ஆனால் தாங்கள் அல்லாஹ்வை உறுதியாகச் சந்திப்போம் என்பதை அறிந்தவர்கள், “எத்தனையோ சிறுபடைகள் அல்லாஹ்வின் கட்டளை கொண்டு பெரும் படைகளை வென்றிருக்கின்றன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.  ஜாலூத்தையும் அவனது படைகளையும் அவர்கள் எதிர்கொண்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக. எங்களை உறுதிப்படுத்துவாயாக. நிராகரிப்பாளர்களை வென்றிட எங்களுக்கு உதவிபுரிவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள். ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு ஜாலூத்தின் படைகளை தோல்வியுறச் செய்தார்கள். தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் தாவூதுக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். இவ்வாறு அல்லாஹ் மனிதர்களில் சிலரை சிலரைக் கொண்டு தடுக்காவிட்டால் பூமி குழப்பத்தால் சீர்குலைந்து போயிருக்கும். ஆயினும் அல்லாஹ் அகிலத்தாரின்மீது பேரருள் புரிபவனாக இருக்கின்றான்.  இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். இவற்றை நாம் உமக்கு சத்தியத்துடன் எடுத்துரைக்கின்றோம். நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர்”

அவர்கள் தாலூத்தை அரசராக ஏற்றுக் கொண்டார்கள். எந்த நோக்கத்திற்காக அவர் அரசராக நியமிக்கப்பட்டரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் தம் படையினரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். எதிரிப்படையினரை எதிர்கொள்வதற்கு முன்னர் தம் படையினர் எந்த அளவு மனக்கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் இருக்கின்றார்கள் என்பதை, எந்த அளவு அவர்கள் தம்முடைய கட்டளைக்குக் கட்டுப்படுகின்றார்கள் என்பதை சோதிக்க நாடினார். ஒரு படையின் பலம் அதன் அதிக எண்ணிக்கையைக் கொண்டு அளவிடப்படுவதில்லை. அவர்களிடம் காணப்படும் மனக்கட்டுப்பாடு, உறுதி, பொறுமை, தலைமைக்கு கட்டுப்படும் தன்மை ஆகிய பண்புகளைக் கொண்டே அளவிடப்படுகிறது.

நாம் செல்லும் வழியில் ஒரு நதி வரவிருக்கிறது. அந்த நதியைக் கொண்டு அல்லாஹ் உங்களை சோதிப்பான். யார் அந்த நதியில் தாகம் தீர தண்ணீர் அருந்துகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல. யார் அந்த நதியிலிருந்து தண்ணீர் அருந்தவில்லையோ அவரே என்னைச் சேர்ந்தவர். ஆனாலும் நீங்கள் அருந்தியே தீர வேண்டும் எனில் ஒரு கையளவு தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

இந்தச் சோதனையில் அந்தப் படையில் இருந்த பெரும்பாலானவர்கள் தோல்வியடைந்தார்கள். அவர்கள் அந்த நதியைக் கண்டதும் தாகம்தீர தண்ணீர் குடித்தார்கள். தங்கள் தலைவரின் கட்டளையை அவர்கள் மீறினார்கள். மனக்கட்டுப்பாடு இன்மை, கோழைத்தனம் அவர்களைத் தடுத்து நிறுத்தின. பயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. நயவஞ்சகம் அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. ஜாலூத்தையும் அவனது படையினரையும் எதிர்கொள்ள எங்களிடம் எந்த சக்தியும் இல்லை என்று கூறினார்கள். கோழைகள் கோழைத்தனத்தை தூண்டுகிறார்கள். அவர்கள் அந்தப் படையில் நீடிப்பது படையில் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுத்து விடும். அல்லாஹ் இந்த சோதனையைக் கொண்டு அந்தப் படையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தினான். சிரமங்களே நம்பிக்கையாளர்களையும் போலிகளையும் வேறுபடுத்துகின்றன. சோதனைகள் நம்பிக்கையாளர்களை வலுப்படுத்துகின்றன. மற்றவர்களை பாதையிலிருந்து அகற்றி விடுகின்றன.

அல்லாஹ்வின் சந்திப்பை உறுதியாக நம்பியவர்கள் கூறினார்கள், “வெற்றி என்பது அதிக எண்ணிக்கையினரைக் கொண்டு அல்ல. வெற்றி என்பது பெரும் ஆயுத பலத்தால் அடையக்கூடிய அல்ல. அது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட, அவனுடைய பாதையில் உறுதியாக நிலைத்து நிற்கின்றன சிறு கூட்டத்தினரால் பெறப்படுவது. அதுதான் நீடித்த வெற்றி. அவர்கள் சிறு கூட்டத்தினராக இருந்த போதிலும் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். வரலாறு முழுவதும் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் திரும்பிச் சென்றாலும் பரவாயில்லை. நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். நாங்கள் உறுதியுடன் முன்னேறுவோம். உறுதியும் பொறுமையும் கொண்டவர்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் பாதுகாப்பும் இருக்கிறது.”

அந்த சிறு கூட்டத்தினர் போர்க்களத்தில் ஜாலுத்தையும் அவனது படையினரையும் நேருக்கு நேர் எதிர்கொண்டபோது தங்களுக்கு பொறுமையை தந்தருளும்படி, தங்களை உறுதிப்படுத்தும்படி, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக தங்களுக்கு உதவி செய்யும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்கள் தங்களின் பலத்தை நம்பவில்லை. பேராற்றல்மிக்க அல்லாஹ்வின் உதவியை நம்பினார்கள். களத்தில் இருந்து கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைக்குத்தான் வலிமை இருக்கிறது.

அல்லாஹ்வின் உதவி கொண்டு அவர்கள் பெரும் பலம் கொண்ட எதிரிகளை தோற்கடித்தார்கள். சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் கூட்டத்தினரை வெல்ல முடியும். எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்கு உதவி செய்தால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது. மனிதர்கள் பலவீனர்கள். அவர்களால் பேராற்றல் மிக்க படைப்பாளனை எதிர்த்து நிற்க முடியுமா என்ன!? உண்மையில் அறிவு மழுங்கடிக்கப்பட்ட மூடர்களால்தான் அப்படியொரு மடத்தனமான காரியத்தில் ஈடுபட முடியும்.

அந்தப் போரில்தான் அறியப்படாத இளைஞனாக இருந்த தாவூத் அறியப்படுகிறார். அவர் பெரும் பலசாலியாக அறியப்பட்டிருந்த ஜாலுத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு அவனை வீழ்த்தினார். தாலூத் அவரைக் கண்ணியப்படுத்தினார். அவரை தமக்கு நெருக்கமானவராக ஆக்கிக் கொண்டு அல்லாஹ் தாவூதுக்கு ஆட்சியதிகாரத்தையும் ஞானத்தையும் வழங்கினான். அவர் அரசராகவும் நபியாகவும் இருந்தார். அவருக்குப் பின் அவரது மகன் சுலைமானும் அரசராகவும் நபியாகவும் இருந்தார். இந்த இருவரின் காலகட்டங்களும் இஸ்ரவேல் சமூகத்தினரின் பொற்காலங்களாக கருதப்படுகிறது.

அதற்குப் பிறகு வசனம் போரின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. இந்த உலகம் சீர்குலையாமல் இருப்பதற்குக் காரணம், இங்கு அல்லாஹ் அநியாயக்காரர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை. நம்பிக்கையாளர்களைக் கொண்டு, நல்லவர்களைக் கொண்டு அவன் அவர்களைத் தடுக்கிறான். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்குமான மோதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இறுதியாக தக்வா உடையவர்கள் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி பெறுவார்கள். அநியாயக்காரர்கள் தங்கள் அநியாயத்தின் காரணமாக அழிந்து விடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறான். ஆனால் அவர்கள் அந்த அவகாசத்தை தங்களின் பலத்தினால் கிடைத்த வெற்றி என்று எண்ணிக் கொள்கிறார்கள். திடீரென அவர்களே எதிரபாராத புறத்திலிருந்து அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடைகிறது. அவர்களின் ஒட்டுமொத்த திட்டமும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது.

நம்பிக்கையாளர்கள் எந்தச் சமயத்திலும் அநியாயத்தைப் பொறுத்துக் கொள்ளக்கூடாது. அந்த அநியாயத்தை அகற்றுவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களைக் கொண்டு அல்லாஹ் அநியாயக்காரர்களை தண்டிப்பான். அவர்கள் அநியாயத்தை சகித்துக் கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொண்டால் அவர்களும் அநியாயக்காரர்களாக மாறிவிடுவார்கள். அல்லாஹ் வேறொரு கூட்டத்தினரை உருவாக்கி அவர்கள் அனைவரையும் தண்டிப்பான். அநியாயத்திற்கு ஆயுள் குறைவு. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட, உறுதியும் பொறுமையும் கொண்டு சிறு கூட்டம் போதும், அந்த அநியாயக்காரர்களை வீழ்த்துவதற்கு.

அல்லாஹ் இந்த அற்புதமான ஏற்பாட்டை அமைத்திருக்கிறான். அதனால்தான் இங்கு அநியாயக்காரர்களால் நீண்ட காலம் நீடிக்க முடிவதில்லை. அவர்கள் நீடித்திருந்தால் இந்த உலகம் எப்போதோ சீர்குலைந்து போயிருக்கும். இது உண்மையில் அல்லாஹ் மனிதர்கள் அனைவரின் மீதும் செய்யும் பேரருளும் பெரும் கிருபையும் ஆகும்.

இந்த தொகுதி வசனங்களின் கடைசி வசனம் நபியவர்களை விளித்து உரையாடுகிறது. இந்த சம்பவங்கள் அல்லாஹ் உமக்கு எடுத்துரைக்கும் சான்றுகளாகும். இவற்றை நாம் உமக்கு உண்மையுடன், நோக்கத்துடன் எடுத்துரைக்கின்றோம். இவற்றை எந்த வகையிலும் உம்மால் அறிந்துகொள்ள முடியாது. வேதக்காரர்கள் இந்த சம்பவங்களை நோக்கமற்றவையாகவும் பொய்யுடன் கலந்தவையாகவும் ஆக்கி விட்டார்கள். நீங்கள் பாடங்களும் படிப்பினைகளும் பெற வேண்டும் என்பதற்காக சரியான வடிவில் நாம் உங்களுக்கு எடுத்துரைக்கின்றோம். இந்த சம்பவங்களை நீர் சரியான வடிவில் அவர்களுக்கு எடுத்துரைப்பது உம்முடைய தூதுத்துவத்திற்கான சான்றுகளில் உள்ளதாகும். நிச்சயமாக நீர் அவனுடைய தூதர்களில் உள்ளவராவீர்.                                   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply