எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்பாளர்கள் இடையன்களால் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்று தங்களின் தலைவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களைப் போன்று இருக்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளின் விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்தவற்றை மட்டுமே தடைசெய்யப்பட்டவையாகக் கருதுங்கள். அவற்றைத் தவிர மற்றவற்றை நீங்கள் தடைசெய்யப்பட்டவையாகக் கருதாதீர்கள்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ
2:172,173. “நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருங்கள். தானாகச் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றுக்காக பலியிடப்பட்டது ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்துள்ளான். ஆயினும் யாரேனும் நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டால் விரும்பாமலும் வரம்பு மீறாமலும் அதனை உண்பது அவர்மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”
இந்த உலகிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவை. அவற்றில் அசுத்தமானவற்றை, தீங்களிப்பவற்றை அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். அவற்றில் தூய்மையானவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கியிருக்கிறான். நிராகரிப்பாளர்களைப் போன்று நீங்கள் அவற்றை தடைசெய்யப்பட்டவையாக ஆக்கி விடாதீர்கள். அவற்றை உண்ணுங்கள், பயன்படுத்துங்கள். அவன் கொடுத்தவற்றை மறுப்பது நன்றிகெட்டத்தனம். அவன் வழங்கிய வழிகாட்டலை விட்டுவிட்டு மற்றவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றுவது இணைவைப்பு. நீங்கள் அவனை மட்டுமே வணங்கி வழிபடுபவர்களாக இருந்தால், அவனுக்கு மட்டுமே கட்டுப்படுபவர்களாக இருந்தால் இந்த விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்.
அவன் உங்களுக்குத் தடைசெய்தவை அசுத்தமானவை, உங்களுக்குத் தீங்களிப்பவை. தானாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுத்து பலியிடப்பட்டவை… இவைதாம் அவன் உங்களுக்குத் தடை செய்தவை. இவற்றில் சிலவற்றின் தீங்குகள் வெளிப்படையானவை. மனித அனுபவங்களும் ஆய்வுகளும் அவை தீங்களிப்பவை என்பதை ஒத்துக் கொள்கின்றன. சிலவற்றின் தீங்குகள் மறைமுகமானவை. உதாரணமாக, அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுத்து பலியிடப்பட்டவை, அல்லாஹ் அல்லாதவற்றுக்காக படைக்கப்பட்ட உணவுகள். இவை ஆன்மரீதியான தீங்குகளைக் கொண்டிருப்பவை.
ஆனாலும் வேறு வழியில்லாத நிர்ப்பந்தமான சூழலில் தடைசெய்யப்பட்டவைகூட அனுமதிக்கப்பட்டவையாக ஆகிவிடுகின்றன. அல்லாஹ் பெரும் கருணையாளன். அவன் அடியார்களின் மீது அவர்களால் தாங்க முடியாத சிரமங்களை சுமத்த மாட்டான். அவர்கள் உயிர் வாழ்வதற்கு தடைசெய்யப்பட்டப்பட்டவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றால் அவர்கள் அவற்றை விரும்பாமலும் தேவையான அளவை மீறாமலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விசயத்தில் அவர்களிடமிருந்து வெளிப்படும் தவறுகளை அவன் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ ذَلِكَ بِأَنَّ اللهَ نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِي الْكِتَابِ لَفِي شِقَاقٍ بَعِيدٍ
2:174-176. “வேதத்தில் அல்லாஹ் அருளியுள்ளதை மறைத்து அதற்கு விலையாக அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் தம் வயிற்றில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். மறுமை நாளன்று அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு. அவர்கள்தாம் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டையும் மன்னிப்பிற்குப் பகரமாக வேதனையையும் வாங்கியவர்கள். நரக நெருப்பின்மீது எவ்வளவு பொறுமை இருக்கிறது அவர்களுக்கு! இது ஏனெனில் அல்லாஹ் தன் வேதத்தை சத்தியத்துடன் அருளியுள்ளான். ஆனால் வேதத்தில் கருத்து வேறுபட்டவர்கள் எதிர்ப்பில் வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள்.”
அல்லாஹ் தடைசெய்தவற்றை அனுமதிக்கப்பட்டவையாக, அவன் அனுமதித்தவற்றை தடைசெய்யப்பட்டவையாக ஆக்கும் யூதமதகுருமார்கள், அறிஞர்கள் இங்கு குறிப்பிடப்படுகிறார்கள். தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளுக்கேற்ப அவர்கள் வேத வசனங்களை திரித்தார்கள். அவற்றுக்கு அவை குறிப்பிடாத வேறு விளக்கங்களை அளித்தார்கள். தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் தங்களுக்கு மக்களிடமிருந்து வரக்கூடிய அன்பளிப்புகளை தடுத்துவிடக்கூடாது என்பதற்காக மக்கள் விரும்பும் விளக்கங்களை அளித்தார்கள் யூத அறிஞர்கள். நபியவர்கள் குறித்தும், குர்ஆன் குறித்தும் தங்களின் வேதத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களுக்கு அவர்கள் வேறு விளக்கங்கள் அளித்தார்கள். அவர்களின் வேதத்தில் இடம்பெற்றுள்ள உண்மையை மறைத்தார்கள். ஏன்? தங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் உலகியல் ஆதாயங்கள் நின்றுவிடக்கூடாது என்பதற்காக. அல்லாஹ் தன் வேதத்தில் அருளியுள்ள உண்மைகளை மறைத்து அவற்றுக்குப் பகரமாக அவர்கள் பெறக்கூடிய உலகியல் இலாபங்கள் அனைத்தும் அற்ப ஆதாயங்கள்தாம். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள வேதம் மிக உன்னதமான, ஈடு இணையற்ற அருட்கொடை. அது இவ்வுலக நன்மைகளையும் மறுவுலக நன்மைகளையும் ஒருசேரக் கொண்டு வரக்கூடிய அருட்கொடை. அதன்மூலமாகத்தான் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெற முடியும். அதுதான் அவர்கள் கண்ணியமும் தலைமைத்துவமும் பெறுவதற்கான வழி. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த அருட்கொடையை பயன்படுத்த வேண்டிய முறைப்படி பயன்படுத்தவில்லை. அதன் வழிகாட்டல்களை மறைத்தார்கள். தங்களின் மன இச்சைகளுக்கேற்ப அதன் வசனங்களை திரித்தார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களின் வயிற்றில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். இதன்மூலம் அவர்கள் பெறக்கூடிய சம்பாத்தியம் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்தராது. அது அவர்களை நரக நெருப்பின் பக்கம் கொண்டு சேர்க்கும். தாங்கள் என்னதான் செய்தாலும் அல்லாஹ் தங்களை மன்னித்து விடுவான் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. அவன் அவர்களை கண்டு கொள்ளாமல் புறக்கணித்துவிடுவான். அவன் அவர்களிடம் பரிவுடன் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களின் மோசமான செயல்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் கொண்டு வந்து சேர்க்கும்.
எப்படிப்பட்டவர்கள் அவர்கள்! தங்களிடம் இருந்த நேர்வழியான அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கொடுத்து விட்டு தவறான வழியைப் பெற்றுக் கொண்டார்கள்! அவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்கான செயல்பாடுகளை விட்டுவிட்டு அவனுடைய தண்டனையைப் பெறுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டார்கள். நேர்வழியில் பொறுமையாக நிலைத்திருப்பதற்குப் பதிலாக நரகத்தின் பக்கம் கொண்டு சேர்க்கும் தவறான வழியில் பொறுமையுடன் நிலைத்திருக்கிறார்கள். இவர்களின் இந்த பொறுமைதான் எவ்வளவு விசித்திரமானது!
அவர்கள் கருத்து வேறுபட்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த வேதத்தை சத்தியத்தைக் கொண்டு இறக்கியிருக்கிறான். இந்த வேதம்தான் அவர்களிடம் இருக்கும் அளவுகோல். இந்த அளவுகோலைக் கொண்டு அவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள கருத்து வேறுபாடுகளை, பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். எந்த வேதத்தைக் கொண்டு தங்களுக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமோ அந்த வேதத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டார்கள். அவர்கள் அந்த வேதத்தைக் கொண்டு நேர்வழியடைய விரும்பவில்லை. அவர்கள் நேரான வழியைவிட்டு விலகி வெகுதூரம் சென்று விட்டார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படியான அறிஞர்கள் காணப்படத்தான் செய்கிறார்கள். நமக்கு மத்தியிலும் இப்படியானவர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்கள் ஆன்மிக உடையில் காணப்படும் அப்பட்டமான உலகியல்வாதிகள். தலைமைத்துத்தைப் பெற, பதவியை தக்க வைத்துக் கொள்ள, ஆட்சியாளர்களை, செல்வந்தர்களை திருப்திபடுத்த, மக்களிடம் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு தீங்கிழைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. அவர்களின் இந்த வியாபாரத்தின்மூலம் என்னதான் உலகியல் இலாபங்களைப் பெற்றாலும் உண்மையில் அது நஷ்டம் தரக்கூடிய மிக மோசமான வியாபாரம்.
