இஸ்லாம் சொல்லும் வழிபாடுகளின் நோக்கம் தக்வாதான். வழிபாடுகள் மனிதனின் உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அவனுடைய தீய இச்சைகளின் பிடியிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆனால் உலகியல்வாதிகளின் வழிபாடுகள் வெறும் சடங்குகளாகத்தான் இருக்கும். அவை அவர்களின் உள்ளங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் தீய இச்சைகளுக்கு அடிமையானவர்கள். அவற்றை நிறைவேற்றுவதையே தங்களின் நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்களின் ஆன்மிகம்கூட இவ்வுலக இன்பங்களை பெறும் நோக்கத்திற்காகவே இருக்கும். அல்லாஹ்வே! எங்களுக்கு இவ்வுலக இன்பங்களைக் கொடு என்பதுதான் அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். அவர்களின் அகத்திற்கும் புறத்திற்கும் மத்தியில் மிகப் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். அவர்கள் வசீகரமான, இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சு நம்மை ஆச்சரியப்படுத்தும். ஆனால் உண்மையில் அவர்கள் அதற்கு எதிர்மாறானவர்கள். நாவன்மையினால் தங்களின் அகத்தை மறைத்துக் கொள்பவர்கள். ஊரில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்கள். இன்னொரு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களே வழிபாடுகளைக் கொண்டு பயனடைந்தவர்கள். தங்களின் அகத்தை தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள்; சொல்லையும் செயலையும் ஒன்றாக்கிக் கொண்டவர்கள்; அல்லாஹ்வின் திருப்தியை நாடி செயல்படக்கூடியவர்கள். அடுத்து வரக்கூடிய வசனங்கள் இந்த இரு வகை மனிதர்களையும் குறித்துப் பேசுகின்றன.
وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللهِ وَاللهُ رَءُوفٌ بِالْعِبَادِ
2:204-207. “மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். இவ்வுலக வாழ்க்கையில் அவனது பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அவன் தன் உள்ளத்தில் உள்ள எண்ணத்திற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குவான். உண்மையில் அவன் கடும் பகைவனாவான். அவன் உங்களைவிட்டு திரும்பிச் சென்றால் பூமியில் குழப்பத்தை உண்டாக்குவதிலும் விளைநிலங்களையும் உயிர்களையும் நாசம் செய்வதிலும்தான் ஈடுபடுவான். அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை. “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்” என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தின்மீது நிலைநிறுத்தி விடுகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். மனிதர்களில் இப்படியும் சிலர் இருக்கின்றனர், அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதில் தம் உயிரையே அர்ப்பணித்து விடுகிறார்கள். தன் அடியார்களின்மீது அல்லாஹ் மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.”
இந்த வசனத்திற்கு விளக்கமாக செய்யத் குதுப் எழுதிய வரிகள் என்னைப் பெரிய அளவில் ஈர்க்கின்றன. அந்த வரிகளை அப்படியே குறிப்பிட்டு விட்டு பிறகு என் கருத்துகளை எழுதுகிறேன்:
“மனித உள்ளத்தின் குறிப்பிட்ட ஒரு தன்மையை அப்படியே துல்லியமாக வரைந்து காட்டும் இந்த வரிகள், அற்புதமான இந்தக் கூற்று ஒரு மனிதனிடமிருந்து வெளிப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றன. மனிதனால் இவ்வளவு துல்லியமாக, தெளிவாக, முழுமையாக மனிதனின் இந்த ஆழமான இயல்பை இவ்வளவு குறுகிய வார்த்தைகளில் கூறிவிடமுடியாது.
வரிகளிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மனிதனின் தன்மைகளை சித்திரமாக வரைந்து காட்டுகின்றன. திடீரென நமக்கு முன்னால் குறிப்பிட்ட பண்புகளையுடைய உயிருள்ள மனிதன் எழுந்து நிற்பதைப் போன்று உணர்கிறோம். இலட்சக்கணக்கான மனிதர்களில் குர்ஆன் கூறும் மனிதன் இவன்தான் என்று உங்களால் கைகாட்டி குறிப்பிட்டுச் சொல்ல முடியும். நிச்சயமாக இது படைப்பாளனிடமிருந்து ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டுக் கொண்டிக்கும் படைப்புச் செயல்பாட்டைப் போன்ற ஒரு படைப்புச் செயல்பாடு.
இங்கு பேசப்படும் மனிதன், தன்னை நன்மையின், உளத்தூய்மையின், அன்பின், உயர்வின் வடிவமாகவும் நன்மைகளைப் பரப்புவதற்கும் மக்களிடையே தூய்மையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கும் பாடுபடும் ஒரு மனிதனாகவும் சித்தரித்துக் காட்டுகிறான். அவனது பேச்சும் நாவன்மையும் நன்மையான, நேர்மையான விசயங்களில் அவன் வெளிப்படுத்தும் அக்கறையும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தன் உள்ளத்தில் உள்ளதற்கு அவன் அல்லாஹ்வை சாட்சியாக்குவான். தன் பேச்சின் தாக்கத்தை அதிகரிக்கவும் இறையச்சத்தைக் காட்டிக்கொள்ளவும் அவன் அவ்வாறு செய்வான். ”ஆனால் அவன் கடும் பகைவனாவான்” அவனது உள்ளம் பகைமையால் நிரம்பியுள்ளது. அதில் நன்மைக்கும் அன்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இடமேயில்லை.
அவனது வெளித்தோற்றமும் அந்தரங்கமும் முரண்படும். அவன் பேசும் வார்த்தைகள் நம்பும்படியாக இருக்கும். அவன் பொய் சொல்லும் கலையை கற்றுத் தேர்ந்தவன். ஆனால் செயற்களத்தில் அவனது அந்தரங்கம் வெளிப்பட்டுவிடும். அதில் மறைந்திருக்கும் குரோதமும் பொறாமையும் தீங்கும் குழப்பமும் அம்பலமாகிவிடும்.”
அல்முனாஃபிகூன் என்ற அத்தியாயம் இப்படிப்பட்ட நயவஞ்சகர்களைக் குறித்துதான் பேசுகிறது. உலகியல் ஆதாயமே அவர்களின் குறிக்கோள். அந்த ஆதாயத்தைப் பெற வேண்டும் எனில் இஸ்லாத்திற்குச் சாதகமாக பேசுவார்கள். அதே ஆதாயத்திற்காக இஸ்லாத்திற்கு எதிராக திரைமறைவில் குழிபறிக்கவும் செய்வார்கள். அவர்களின் வசீகரமான, இனிமையான பேச்சு உங்களை ஏமாற்றிவிடக்கூடும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.
பொதுவாக அதிகம் சத்தியம் செய்பவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. அகத்திற்கும் புறத்திற்கும் மத்தியில் முரண்பாடுகளைக் கொண்டவர்களே அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களை, அவர்களின் இயல்பான செயல்பாடுகளின் வழியாகவே தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அவர்களின் வார்த்தைகளைக் கொண்டு அல்ல. வார்த்தைகள் எண்ணங்களின் வெளிப்பாடுகளாகவும் இருக்கலாம். அதற்கு மாறாகவும் இருக்கலாம்.
நாம் வெளித்தோற்றங்களைப் பார்த்து ஏமாந்து விடுகிறோம். தூய்மையான ஆடை, இனிமையான வார்த்தை, வசீகரமான தோற்றம்… இவை போன்ற வெளித்தோற்றங்களைப் பார்த்து நாம் ஏமாந்து விடுகிறோம். ஆன்மீக உடையில் திரிந்து கொண்டிருக்கும் உலகியல்வாதிகளை நாம் எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
“அவன் உங்களைவிட்டு திரும்பிச் சென்றால் பூமியில் குழப்பத்தை உண்டாக்குவதிலும் விளைநிலங்களையும் உயிர்களையும் நாசம் செய்வதிலும்தான் ஈடுபடுவான்”
பூமியில் குழப்பம் செய்வது என்றால் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மாறாக, எதிராகச் செயல்படுவதாகும். அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உட்பட்டு மனித வாழ்க்கை அமையும்போதுதான் அங்கு இணக்கமும் அமைதியும் பாதுகாப்பும் நிம்மதியும் ஏற்படும். இல்லையெனில் பெரும் குழப்பமே எஞ்சி நிற்கும். அவர்கள் ஒரு பக்கம் தங்களை சிறந்தவர்களாகக் காட்டுக் கொண்டு இன்னொரு பக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள், தீமைகளைப் பரப்புகிறார்கள்; முஸ்லிம்களுக்கு மத்தியில் பலவீனத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்கள் மனித சமூகத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடுகின்றன.
இந்த வசனத்திற்கு தஃப்ஸீருல் மனாரில் இன்னொரு விளக்கமும் இடம்பெற்றுள்ளது. அந்த விளக்கத்தின்படி, இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹர்ஸ்’ என்ற வார்த்தை பெண்களையும் ‘நஸல்’ என்ற வார்த்தை குழந்தைகளையும் குறிக்கிறது. இந்த பொருளுக்கு அல்பகரா அத்தியாயத்தின் 223ஆவது வசனத்தை ஆதாரமாகக் கொள்கிறார்கள். அந்த விளக்கத்தின்படி, அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் நாசம் செய்கிறார்கள். அதன் வழியாக அவர்கள் குடும்ப அமைப்பை சீர்குலைக்கிறார்கள். குடும்ப அமைப்பை சீர்குலைப்பதன்மூலம் மனித சமூகத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமைகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ்வைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டால், அது அவர்களின் ஆணவத்தை சீண்டுகிறது. அந்த ஆணவம் அவர்களை பாவத்தின் மீது நிலைநிறுத்தி விடுகிறது. அவர்களால் தங்களின் தவறுகளை ஒத்துக்கொள்ள முடியாது. அவர்கள் அடுக்கடுக்கான நியாய வாதங்களைக் கொண்டு தங்களின் தவறுகளை நியாயப்படுத்துவார்கள் அல்லது கூறுபவர்களின் மீது சேற்றை வாரி இறைப்பார்கள். அவர்களை அவர்களின் நிலையில் விட்டுவிடுங்கள். அவர்களே நரகமே போதுமானது. அது அவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மோசமான இருப்பிடமாக அமையும்.
மனிதர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்களின் வழிபாடுகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அவை உயிரோட்டம் அற்ற வெற்று சடங்குகளாக அமைந்து விடுவதில்லை. அவர்கள் உலகியல் ஆதாயத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவனுடைய திருப்தியை அடைதலையே நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள்தாம் மனித சமூகத்தின் முன்மாதிரிகள். அல்லாஹ் இப்படிப்பட்ட அடியார்களின் மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான். அவர்களிடமிருந்து வெளிப்படும் தவறுகளை அவன் மன்னித்து விடுகிறான்.
முதல் வகையினர் மோசமான இயல்பைக் கொண்ட நயவஞ்சர்கள். இரண்டாவது வகையினர் தூய இயல்பில் நீடித்திருக்கும் நம்பிக்கையாளர்கள். இந்த இரு வகை மனிதர்களையும் நமக்கு மத்தியில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவர்கள் இரு தரப்பினரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் காணப்படக்கூடிய நிலையான கதாபாத்திரங்கள் ஆவர். இதுபோன்ற நிலையான கதாபாத்திரங்களின் வழியேயும் திருக்குர்ஆனின் நிரந்தரத்துவம் நிலைபெறுகிறது.
