‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’
‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’
‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’
‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’
இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும் மீண்டும் அந்த கசப்புணர்வில் மூழ்கிக் கொண்டே போவதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்து விடப் போகிறது? உண்மையில் இது அல்லாஹ் ஏற்படுத்திய விதியை ஏற்றுக் கொள்ளாமையினால் ஏற்படும் விளைவுகள் அன்றி வேறில்லை. ஏற்றுக்கொள்ளாமை கசப்பையும் நிராசையையும் அதிகரிக்கும். அது நமக்குள் இருக்கும் ஆற்றல்களைத் தின்று விடும். அது எதிர்மறைத்தன்மை கொண்ட மனிதர்களாக நம்மை மாற்றிவிடும்.
நிகழ்ந்து முடிந்து விட்டதை ஏற்றுக்கொள்வது அதிலிருந்து விடுபடுவதற்கான முதல் நிலை. காலப்போக்கில் காயம் ஆறிவிடும். ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த நிகழ்வு சரிதான், அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை மனது ஏற்றுக் கொள்ளும். நம்முடைய குறையறிவு எந்தவொன்றையும் உடனடியாகப் புரிந்து கொள்ளாது. காலம் அதற்கான பதில்களைக் கொண்டு வந்து சேர்க்கும்போதுதான் அது அமைதியடையும்.
ஒரு நம்பிக்கையாளனிடம் இப்படியான புலம்பல் வார்த்தைகள் வெளிப்படாது. அவன் அவனுடைய குறையறிவை நம்பி இருப்பதில்லை. எல்லாவற்றையும் முழுமையாக அறிந்திருக்கின்ற அல்லாஹ்வின் அறிவை நம்பி இருக்கிறான். ஆகவே அவன் நிகழ்ந்து முடிந்து விட்ட ஒன்றை எண்ணி கவலைப்படுவதில்லை. “அல்லாஹ் நாடியது நிகழ்ந்து விட்டது. அவன் நாடியதுதான் நிகழும். அவனுடைய நாட்டத்தை மீறி எந்தவொன்றும் நிகழ்ந்துவிட முடியாது” இதுதான் அவன் கொண்டிருக்கும் அடிப்படையான கண்ணோட்டம். தேவையற்ற கவலைகளிலிருந்தும் பாரங்களிலிருந்தும் அவனை விடுவிக்கும் அருமருந்து.
நான் ஏன் இப்படிச் செய்தேன் என்று அவன் தன்னைத் தானே நொந்து கொள்வதில்லை. அவன் அவனை மீறியும் அவனுக்கு எதிராகச் செயல்படக்கூடிய தன்மை கொண்டவன், விதியை நோக்கி இழுத்துச் செல்லப்படக்கூடியவன் என்பதையும் அவன் அறிவான். அதே சமயம் அவன் முடக்குவாத சிந்தனையால் பாதிக்கப்பட்டு செயலின்மை என்னும் போதையில் வீழ்ந்து விடுவதும் இல்லை. தன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் சிறந்த முறையில் நிறைவேற்றி விட்டு எந்த முடிவு ஏற்பட்டாலும் அதனை முழு மனதோடு ஏற்றுக் கொள்வான். அவனுடைய கட்டுப்பாட்டை மீறி நடப்பதற்கு அவன் பொறுப்பல்ல என்பதையும் அதில் ஏதேனும் நன்மை இருக்கலாம் என்பதையும் அவன் அறிவான்.
இந்தக் கண்ணோட்டம்தான் அவனை மனவலிமை கொண்டவனாக மாற்றுகிறது. இதுதான் அவன் வாழ்க்கையை இலகுவானதாக ஆக்குகிறது.
